தோழர்களே!
இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்பட்டு வருகிறது. அப்படிக் கூடுவதில் ஆரியர்கள் முயற்சியில், ஆரியர்கள் ஆதிக்கத்தில், ஆரிய மாணவர்களால் கூட்டப்படும் மாணவர் மாநாடு என்பதாகச் சிலவும், ஆரிய முயற்சியோ, ஆரிய ஆதிக்கமோ, ஆரிய மாணவர் கலப்போ சிறிதும் இல்லாமல் திராவிட மாணவர்களாலேயே கூட்டப்படுவன பலவுமாக இருந்து வருவதைக் காண்கின்றோம். ஆரிய ஆதிக்க, ஆரிய மாணவர் பெரிதும்கொண்ட முதல் கூறப்பட்ட மாநாடுகளின் நடவடிக்கைகள் தேசியம் என்கின்ற ஆரியச் சூழ்ச்சியை அடிப்படையாய் வைத்து இந்நாட்டில் என்றும் திராவிடர்கள் மீது ஆரிய ஆதிக்கமும் சுரண்டலும் நிலைத்து வருவதற்கே பாதுகாப்பாக நடந்து வந்ததையும் - வருவதையும் காண்கின்றோம். மேலும் அந்த ஆரிய ஆதிக்க மாணவர் மாநாட்டில் திராவிட மாணவர்கள் சிலர் கலந்திருந்தாலும் அவர்களுக்கு (அத்திராவிட மாணவர்களுக்கு) தங்கள் (திராவிட) நாட்டைப் பற்றியோ தங்கள் (திராவிட) இனத்தைப் பற்றியோ கவலை இல்லாததும், அவைகளைப்பற்றி அம்மகாநாட்டில் சிறிதும் பேசக்கூடாத நிபந்தனைக்குள் அடங்கியதும் ஆன ஆரியக்கூலி, ஆரிய அடிவருடி, திராவிடத் தன்மானமற்ற தன்மை கொண்ட யோக்கியதைதான் யோக்யாம்சமாக இருந்து வருகிறது. பின்னவர்களுக்கு என்றாலோ திராவிட நாட்டுப் பற்றும், திராவிட இனப்பற்றும், தன்மானமும் முக்கிய குறிக்கோளாகக் கொண்ட யோக்கியதாம்சம் இருந்து வருகிறது.
இந்தக் குறிக்கோள் உணர்ச்சியானது இதுவரை திராவிட மக்களுக்கு அவர்களது கல்வியாலும் தேசியத் தாலும், மற்றும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆரியர்களாலும் கடுகளவுகூட ஏற்படுவதற்கு இடமில்லா மல் போனதோடு இவை அடியோடு மறந்துவிடுவதற்கு அனுகூலமாகவே செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இந்த நாட்டில் ஆரியத்திற்கும் ஆரிய தேசியத்திற்கும் எதிராக எத்தனையோ நாளாக எவ்வளவோ முயற்சிகள் செய்யப்பட்டுவந்தும் திராவிட மாணவர்களுக்கு சிறிதுகூட உணர்ச்சி ஏற்படமுடியாமலே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் நான் முன் சொன்னது போல் திராவிட மாணவர்களுக்கு இந்நிலை ஏற்பட அவர்களது கல்வி, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், கல்வி ஸ்தாபனம், அதை நடத்தும் ஆட்சி ஆகியவைகளும் காரணமாக இருந்து வருகிறது. ஏன்? மேற்கண்ட யாவற்றிலும் ஆரியம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இவைகளை எவர் மறுக்க முடியும்?
சர்க்கார் தன்மை
நம் சர்க்காருக்கு நம் கல்வியைப் பற்றி உள்ள கவலை எல்லாம், தாங்கள் இந்த நாட்டில் நிலைத்து ஆட்சி செலுத்த இந்த நாட்டு மக்களே நமக்கு நிபந்தனை இல்லாத அடிமைகளாயிருக்க போட்டி போட்டுக் கொண்டு வந்து நம் காலடியில் விழுந்து கிடக்கத் தகுதி உடைய மாதிரி கல்வி இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும். அதற்கு அவர்களுக்குத் தரகர்களாக இருந்து நடத்திக் கொடுப்பவர்கள் இந்த நாட்டு ஆரியர்களேயாகும். இதற்கு சர்க்கார் இந்த ஆரியர்களுக்குக் கொடுக்கும் பிரதிபலன் கல்வியையும், கல்வி கற்பிப்பதையும், அதை நிர்வகிப்பதையும் ஆரியரிடம் ஒப்புவித்து அவர்களுக்கு ஏராளமாக ஆசிரியர் பதவி, பாடப் புத்தகம் எழுதுதல், பரீட்சை திருத்தல், கல்வி அதிகாரி ஆகியவை பேரால் சம்பளம் சன்மானம் வருமானம் ஆகியவைகளுக்கு அள்ளிக்கொடுத்து வருவதேயாகும். ஆரியர்கள் இந்தக் காரியங்களால் இந்த நிலையைத் தங்களுக்கு ஆக்கிக் கொண்டு, இவற்றின் மூலம் சர்க்காருக்கு அடிமைகளைக் கொடுத்து உதவுவதோடு, தங்கள் ஆதிக்கத்திற்கும் வசதி செய்து கொண்டு, இந்த நாட்டு மாணவர்களை நான் மேற்சொன்னமாதிரி நாட்டுப்பற்று, இனப்பற்று, மானப்பற்று இல்லாமல் செய்து வருவதுடன் அவன் (மாணவன்) மூளையையும் கெடுத்து முட்டாள் மூடநம்பிக்கைக்காரனாக்கி, அவனை மனிதத் தன்மைக்கே இலாயக்கற்றவர்களாக ஆக்கி தங்களுக்கும் நிரந்தர அடிமையாக ஆக்கிக்கொள்ளுகிறார்கள்.
கல்வி கற்றவர் நிலை
இதனால்தான் இன்று சமீபகாலம் வரை இந்தக் கல்வி கற்ற ஒரு திராவிடனுக்குக்கூட நாட்டுப்பற்று, இனப்பற்று, மானப்பற்று இருப்பதைக் காணுவது மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது. ஆங்கிலம் கற்றவர்களுக்குள்ளும் இல்லை, தமிழ் கற்றவர்களுக்குள்ளும் இல்லை என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. உதாரணமாக, திராவிட மக்களின் ஆங்கில உயர்தரக் கல்வி கற்று உயர்ந்த பட்டம் பெற்று கல்வி இலாகா முதல், பெரும் பெரும் பதவிகள் பெற்று உயர் நிலை அனுபவித்தவர்களில் இன்று எத்தனை பேருக்கு இனப்பற்று, நாட்டுப்பற்று இருக்கிறது என்பதாகக் கணக்குப் போட்டுப் பாருங்கள். ஆனால் இவர்களில் எதிரிகளுக்கு அடிமையாய், கையாளாய், ஆதரவாளர்களாய், எதிரிகளின் ஆதிக்க ஆதாரங்களைப் பிரசாரம் செய்யும் கூலிகளாய் இல்லாதவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கணக்குப் பாருங்கள், பிந்தினவர்களில் இந்தப்படி இல்லாதவர்களைக் காண்பதே அரிதாய் இருக்கிறதா இல்லையா என்று கேட்கிறேன். கல்வியின் தன்மை இதற்கு ஆக நான் இந்தப்படியான அதாவது இக்கல்வி கற்ற திராவிட நபர்களின் மீது குற்றம் சொல்ல வரவில்லை. மற்றென்னவென்றால் அந்தக் கல்வியின் தன்மையும் பயனும் அப்படிப்பட்டதென்றும், அது இனியும் நம் மக்களைப் பெரிதும் அப்படித்தான் செய்யும் என்றும் சொல்லுவதற்காகவே இதை வலியுறுத்திக் கூறுகிறேன். இதை நீங்கள் முதலில் உணரவேண்டும். பொதுவாகவே இந்த இன்றைய கல்வியின் தன்மையையும் பயனையும் பற்றி நான் மாத்திரம் இப்படிச் சொல்லவில்லை. சுமார் 30 வருஷங்களுக்கு மேலாகவே அனேக கல்வியாளர்கள், பொதுஜனத் தலைவர்கள் என்பவர்கள், பேரறிவாளர்கள் என்பவர்கள் குறைகூறி வந்திருக்கிறார்கள். இந்தக் கல்வி அடிமைக் கல்வி என்றும், அறிவுக்கு ஏற்றதல்ல என்றும் சொல்லிவந்திருக்கிறார்கள். சமீப 30 வருஷ காலத்தில் இன்றைய கல்வியை இகழாதவர்களும், புகழ்ந்து கூறியவர்களும் மிகமிக அரிதாகும்.
காந்தியார் சொன்னதே இது
மற்றும் இன்றைக்கு 25 வருஷங்களுக்கு முன்னால் காந்தியார் மாணவர்களைப் பள்ளியைவிட்டு வெளியில் வந்து சமுதாய அரசியல் தொண்டாற்றும்படியும், சர்க்காரோடு ஒத்துழையாமையும், மறியலும், சட்டமறுப்பும் செய்யும்படியும் அழைத்த காலத்திலும் மாணவர்களுக்கு எடுத்துச் சொன்ன காரணங்களில் இந்தக் கல்வி பயனற்றது, அடிமைத்தன்மை பயக்கக்கூடியது, நாட்டுப்பற்றை மறக்கடிப்பது என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். அந்த வார்த்தையைக் கேட்டுத்தான் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளியை விட்டு வெளிவந்து காங்கிரஸ் தொண்டாற்றி, காங்கிரஸ் என்னும் ஆரிய ஸ்தாபனத்தை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆகவே இந்தக்கல்வி பயனற்றது, என்றும் இதைவிட்டு வெளிவந்து மாணவர்கள் நாட்டுக்கும், இனத்துக்கும் பாடுபட வேண்டியது மாணவர் கடமை என்றும் சொல்லுவது குற்ற முடையதாகவோ, புதியதாகவோ ஆகிவிடாது என்கிறேன்.
மாணவர்களும் பொதுநலத் தொண்டும் மாணவர்கள் பொதுநலத் தொண்டாற்றுவது கூடாது என்று யாரும் சொல்லமுடியாது. சுய நலனுக்கு ஆக தன் மகனைப் படிக்கவைக்கின்ற பெற்றோருக்கும், சுயநல வாழ்வுக்கு ஆகவே படிக்கும் மாணவனுக்கும் வேண்டுமானால் மாணவர் பொதுத்தொண்டாற்றுவது குற்றம் எனலாம். அல்லது இக்கல்வியினால் பொதுநல உணர்ச்சி அறிவுப் பெருக்கம் ஏற்படுகிறது என்றாவது ருஜுப்பிப்பதானால் இந்தப் பருவத்தைக் கல்விக்கும், பொதுநலத் தொண்டிற்கும் சேர்ந்து பயன்படுத்துவது கல்விக்குக் குந்தகமாகும் என்று சொல்லலாம்.
எப்படி இருந்த போதிலும் இன்று பொதுநலத் தொண்டாற்றுவதற்கு அதாவது நம்நாட்டின் மேன்மைக்கும், இனத்தின் தன்மானத்துடன் கூடிய உயர்வுக்கும், வெகுநாளாக நம் இனத்திற்கு இருந்துவரும் இழிவும், முற்போக்கு முட்டுக்கட்டையும், அந்நியன் சுரண்டலும், ஆதிக்கமும் ஒழியப் பாடுபடுவதற்கும் யாராவது ஒருவர் அல்லது ஒரு கூட்டம் இருந்துதானே ஆகவேண்டும்? இக்காரியத்திற்குப் பாடுபட இன்று நம்மில் யார் இருக்கிறார்கள்? முதலாளி படிப்பாளி வர்க்கம்
இராஜாக்களும், ஜமீன்தார்களும், இராஜா, சர், திவான் பகதூர் முதலிய பட்டவான்களும், கோடீஸ்வரர்களும், லட்சாதிபதிகளும், ராஜமன்னார்களும், எதிராஜுகளும், கதிரேசர்களும், கல்யாணசுந்ததிரங்களும், மீனாட்சிசுந்தரன் களும், சிதம்பரநாதர்களும் ஆகிய பட்டம், பதவி, செல்வம், வக்கீல் நிபுணத்துவம், தமிழ்ப் புலமை முதலியவைகளில் விளம்பரம் பெற்றவர்களும் பயன்படுவார்களா? முன்வரு வார்களா? அல்லது இதுவரை இக் கூட்டங்களால் தங்கள் நலனுக்கு பெருமைக்குப் பதவிக்கு அல்லாமல் வேறு காரியம் அதாவது நம் இழிவு நீங்க, நம்நாடு பெருமை பெற நம் சுரண்டல்கள் ஒழிய நம்மை இழிவுபடுத்தும் ஆதாரங்கள் ஒழிய ஏதாவது நடந்திருக்கிறதா?
கோவில் கட்டுவார்கள்; அன்னச் சத்திரம், மடம் கட்டு வார்கள். ஆரிய ஆதிக்க ஆதாரங்களுக்கும், சமயத்திற்கும், சட்டத்திற்கும் அடிமைகளாகி அவற்றைப் பெருக்கி மற்ற மக்களையும் அதில் திருப்பிவிடுவார்கள்; அல்லது தன் காரியத்திற்கு எதையும் செய்வார்கள்; அல்லது தன் காரியத்தைத் தவிர வேறு எதையும் சிந்தையில் கொள்ளார்கள். இவைதானே சாதாரணமாக இக் கூட்டத்தாரால் நடைபெற்று வருகின்றன? மில் முதலாளிகள், வர்த்தகர்கள், பாங்கர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், குட்டிப் பண்டிதர்கள், உபாத்தியாயர்கள் ஆகியவர்களில் பெரும்பான்மை மக்களைப் பாருங்கள். பிரின்ஸ்பால்கள் வைஸ்சேன்ஸ்லர்கள் அதிகாரிகள் ஆகியவர் களையும் பாருங்கள். இவர்கள் இத்தனை பேர்களிலும் திராவிடர்களைப் பிறவி இழிமக்களாய்க் கருதும்படி செய்யும் ஆரிய சமயத்தை வெறுத்தவர்கள் எத்தனைபேர்? ஆரியர்கள் ஆதிக்க ஆதாரங்களை வெறுத்தவர்கள் எத்தனை பேர்? மற்றதைச் சொல்ல வாய் கூசுகிறது.
யாருக்கு இன உணர்ச்சி இருக்கிறது?
கடைசியாகச் சொல்லுகிறேன் உங்கள் பெற்றோர்களில் தானாகட்டும் எத்தனை பேருக்கு இன உணர்ச்சியும், இன இழிவை நீக்கவேண்டும் என்கின்ற மான உணர்ச்சியும் இருக்கிறது? மற்றும் திராவிடரில் எந்தக் கூத்தாடிக்காவது, காசுக்குப் பாடுகிறவனுக்காவது எத்தனை பேருக்கு இன, மான உணர்ச்சி இருக்கிறது? இதே தன்மைகளை எடுத்துக் கொண்டு அவை ஆரியர்களுக்குள் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
உங்களைத் தவிர வேறுகதி இல்லை
இந்த நிலையில் மாணவர்களே! உங்களைத் தவிர இந்தக் கேடுகெட்ட நாட்டை, இழிவுபட்ட இனத்தை மேம்படுத்த யார் இருக்கிறார்கள்? நீங்கள் இன்றைய படிப்பைப் படித்துத் தேர்ந்து என்ன செய்யப்போகிறீர்கள்? நீ தேறுவதே கஷ்டம்; தேர்ந்த வுடன் விண்ணப்பம் எழுதிக்கொண்டு வீணர்களின் வீட்டுவாயிலுக்கு சம்பள வேலை தேடி யாத்திரை திரியப் போகிறீர்கள். அதில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? வேலை கிடைத்தால்தான் நீங்கள் சாதிக்கப்போவதென்ன? லஞ்சம் வாங்காவிட்டால் பணம் மிஞ்சுமா? மானமிழக்கா விட்டால் உத்தியோகம்தான் மிஞ்சுமா?
படித்தவர்களைப் பாருங்கள்
உங்களுக்கு முன்பு படித்து உத்தியோக வேலை பெற்று, பதவிபெற்று பிரபலமும் பணமும் பெற்ற திராவிட மக்களின் யோக்கியதையைப் பாருங்கள். முதலாவது, வேலைக்குப் போனால் நன்றியைக் கொன்று தின்றுவிட வேண்டும்; ஒரு சிறு பிரமோஷனுக்கு ஆக முன்பு வேலை வாங்கிக் கொடுத்தவன் கழுத்தைத் திருகச் சம்மதித் துப் புதுப் பிரமோஷனுக்கு சிபார்சு செய்கிறவனுடையவோ அல்லது பிரமோஷன் கொடுப்பவனுடையவோ கால் விரலை சப்பவேண்டும். இந்தப்படி நடக்காவிட்டால் (உத்தியோகத்தில்) வேலையில் முன்னேறவோ, வெற்றிபெறவோ முடியாது. இவ்வளவும் செய்து பெரிய பதவிபெற்று விட்டதாகவே வைத்துக் கொண்டாலும் அதைக் காப்பாற்றிக்கொள்ளப் பாடுபடுவதைத் தவிர மேலே போகப் பார்ப்பதைத் தவிர நாட்டுக்கு, இனத்திற்கு என்ன செய்ய முடிகிறது?
பதவியினால் நம் மக்களுக்கு, நாட்டுக்கு ஒரு நல்ல நலன் செய்த ஒரு இரண்டு மூன்று ஆளைக் காட்டுங்கள் பார்ப்போம், இன்னிலையில் நீங்களும் அதேமாதிரி படிப்புப் படித்து அதே வேலை செய்வதில் என்ன பலன்?
இதைத்தான் நான் சொல்லி உங்களைச் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேனே ஒழிய உங்களைப் படிக்காமல் செய்து கெடுப்பதற்கு ஆக அல்ல அல்ல என்று சொல்லுகிறேன்.
ஆசிரியர்கள்
ஆசிரியர்களை நான் குறைவாகப் பேசியதாக சிலரால் சொல்லப்படுகிறது. ஆசிரியர்களில் நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறவில்லை. ஆசிரியர்கள் என்றால் மேலே குறிப்பிட்ட ராஜாக்கள், சர்கள் முதலியவர்களைவிட என்ன பெரிய யோக்கியதை உடையவர்களாவார்கள். ஆசிரியர்கள் மற்ற உத்தியோகம், சேவைக்காரர்கள் போன்றவர்களைப் போல் ஊதியத்திற்கு உழைப்பவர்கள் தானே என்று சொல்லுகிறேன். இவர்கள் தனிப்பெருமை, ஆசிரம குரு பக்தி ஆகியவை களை எதற்காக உரிமை பாராட்டுகிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.
ஆசிரியர்கள் ஆசிரிய வேலைக்கென சர்க்காரால் சர்க்கார் நலனுக்குப் படிக்க வைத்து, படிக்க வைத்ததையே படிப்பிக்க பள்ளிக்கூடச் சொந்தக்காரர்களால் சம்பளத்துக்கு நியமிக்கப்படுகிறவர்கள் ஆவார்கள். இவர்களது சொந்தப் புத்திக்கு ஒப்பமுடியாத படிப்பாயிருந்தாலும் சம்பளத்துக்கு ஆக கண்டிப்பாய் கோடுதாண்டாமல் படிப்பிக்க வேண்டிய அடிமைகளேயாவார்கள். இவர்களது ஆசிரியர் வேலையும் மற்றவர்களுக்கு அவர்களது வாழ்விற்காகப் பயன்படுகிற தேடிப்பிடிக்கின்ற வேலையைப் போலவே ஒரு வாழ்வு அல்லது வயிற்றுப் பிழைப்பு வேலையாக அமைந்ததே தவிர மற்றபடி யான ஒரு பெரிய தன்னல மறுப்பு (தியாகம்) பொருந்திய சேவையும் வேலையுமல்ல.
இன்றைய படிப்பு பயனற்றது, அறிவுக்குப் பயன்படாதது, நாட்டு நல உணர்ச்சியும், இன நல உணர்ச்சியும் அற்றது. அடிமைத் தன்மையைக் கற்பிக்கக்கூடியது என்பது விவாதத் திற்கு இடமில்லாமல் இவர்களுக்கும் அதிகமாகப் படித்த, அதிகப் பெருமை உடையவர்களால் ஒப்பமுடிந்தது என்று ஆன பிறகு இந்தப் படிப்பைக் கற்றுக் கொடுத்து வாழும் வயிறு பிழைக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பும் ஆச்சாரியர் குருபட்டமும் எப்படிப் பொருந்த முடியும்? சர்க்கார் உத்தியோகமே அடிமை வேலை என்று பல அறிஞர்கள், ஏன் சர்க்கார் அதிகாரிகளே பலர் சொல்லும் போது இந்த மாதிரி அடிமைகளை தயார் பண்ணுபவர்கள் எப்படி மதிக்கப்படத் தகுதி உள்ளவர்கள் ஆகமுடியும்?
பள்ளிக்கூடமும், காப்பிக்கடையும்
பள்ளிக்கூடங்கள், இன்று காப்பி ஓட்டல்கள் முதலிய வைகள் போல் ஒரு வியாபாரி ஸ்தலமாக ஆகிவிட்டன. பெரும்பான்மையான அய்ஸ்கூல்கள் இன்று வருடம் 3,000, 4,000, 5,000 ரூபாய் இலாபத்தில் நடைபெறுகின்றன. காலேஜூகளும் பல வழிகளில் ஸ்தாபகர்களுக்கு வியா பாரத்தைப் போலவே ஆதாயத்தை கொடுத்து வருகின்றன.
இந்த காப்பிக்கடை போன்ற பள்ளிக்கூடக் கடைகளில் காப்பி வினியோகிப்பதற்குப் பதிலாக கல்வி விநியோகிக்க (பரிமார) அமர்த்தப்பட்ட நபர்கள், அதுவும் முதலாளி சொன்னபடி அவன் தயாரித்த பதார்த்தங்களை அளவுப்படி குறிப்பிட்ட விலைக்குப் பரிமாரும் நபர்கள், எப்படி அன்னசத்திரம், காப்பி பலகார சத்திரம், கல்வி சத்திரம் வைத்த (கல்வி தானம் செய்த) பெருமையை அடைய உரியவர்கள் ஆவார்கள்?
ஒருவன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்க மாதம் 6 அல்லது 7 ரூபாய் செலவு செய்ய வேண்டும். ஒருவன் எஃப்.ஏ., பி.ஏ., படிக்க மாதம் 15, 20 ரூபாய் செலவு செய்ய வேண்டும். அயலூரில் போய் படித்தால் மேற்கொண்டு மாதம் 20, 30 ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். இந்நாட்டு மக்களின் சராசரி வரும்படி மாதம் 10, 15 ரூபாய்கூட இல்லை. உபாத்தியாயர்களுக்குச் சம்பளம் எஸ்.எஸ்.எல்.சி., (அய்ஸ்கூல்) வகுப்பு உபாத்தியாயரானால் மாதம் சராசரி 100 ரூபாய், காலேஜ் உபாத்தியாயர் சம்பளமானால் மாதம் சராசரி 150 அல்லது 200 ரூபாய். இவை தவிர 500, 700, 1000 ரூபாயும் உண்டு. இப்படிச் சம்பளம் பெற்று 360 நாள்களில் 180 நாள் பள்ளிக் கூடம் திறந்து அதுவும் தொழிலாளிபெற்றோர் ஆகியவர்கள் தினம் 10 மணி நேரம் வேலை செய்தால் அவன் மக்களுக்கு சம்பளம் பெற்று 5 மணி நேரம் மாத்திரம் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிற உத்தியோகமும் நூற்றுக்கணக்கான ரூபாய் வருவாயும் உள்ளவர்கள். இந்தத் தொழிலை நல்ல வரும்படியும், சுகமும் உள்ள தொழில் என்று சொல்லலாமே தவிர இதை தெய்வீகமும் தன்னல மறுப்பும் உள்ள பாராட்டிப் பெருமைப்படுத்தி குருபீட பக்தியும் நன்றிவிசு வாமும் காட்டப்படவேண்டிய தொழில் என்று சொல்ல என்ன ஆதாரம் இருக்கிறது? எங்கே இடமிருக்கிறது என்று யோசித்துப் பார்க்கும்படி என்னைக் குறைகூறும் ஆசிரியர்களை விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன்.
ஆசிரியர் கல்வி அறிவு
இந்து தேச சரித்திரம் கற்பிக்கும் சரித்திர ஆசிரியர் சரித்திரத்தோடு சரித்திரமாய் இராமாயண பாரதத்தையும் கற்பித்துவிடுகிறார். இந்து தேச சரித்திரத்துடனே இராமா யணமும், பாரதமும் பாடமாக வைக்கப்பட்ட புத்தகங்களே இந்த ஆசிரியர்களால் எழுதப்பட்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட ஆசிரியர்கள் சரித்திர புத்தகம் எழுதின தற்காகவோ, அல்லது சரித்திரப் பாடம் கற்பிப்பதற்காகவோ எப்படிப் போற்றப்பட்டவர்கள் ஆவார்கள்? இவர்கள் எஜமானர்களுக்கு (அதாவது கல்வி இலாக்காவுக்கு) அடிமையாய் இருந்து கூலிக்குத் தொண்டாற்றுகிறவர்கள் என்றுதான் கருதும்படி நடந்து கொள்கிறார்களே ஒழிய பாடப் புத்தகத்தில் உள்ள தவறுகளைக் கண்டித்து மறுத்துப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதில்லை. கற்பிக்க உரிமை கொண்டாடுவதுமில்லை. இப்படிப்பட்ட ஊதியத் தொண்டர்கள் பணம் செலவழித்தும் நாள்கள் பல கழிந்தும் பயனேற்படுவதில்லையே என்பவர்கள் மீது கோபித்து என்ன பயன்? செய்வதையும் செய்துவிட்டு தங்கள் பரிதா பத்தைப் பற்றி நினைக்காமல் எடுத்துக்காட்டுபவர்களை கோபித்தால் கல்வியின் தரம் உயர்ந்துவிடுமா? ஆசிரியர் தன்மை மேம்பட்டு விடுமா? இப்படியே பூகோளம், வானசாஸ்திரம் ஆகியவைகளையும் எடுத்துப் பாருங்கள்.
சயன்ஸ் படித்த, உடல்கூறு, சாத்திரம் படித்த எந்த உபாத்தியாயர் கிரகணத்துக்கு தீட்டுகழிக்க முழுகாமலும் ஊறுகாய்ச் சட்டி, உப்புச்சட்டி ஆகியவைகளுக்கு சாந்தி கழிக்காமலும் வீட்டுக்கு விலக்கான பெண்களைத் தீண்டாதவர்களாய், நிழல்படாதவர்களால் பாவிக்காமலும் எத்தனை உபாத்தியாயர்கள் இருக்கிறார்கள்? புராணங் களை சமய ஆதாரமாக புராணக் கதைகளை வாழ்க்கைக்கு வழிகோலியாய் இருக்கத்தக்க விதம் படிப்பிக்காத, புராணக் கதைகள்படி கடவுள்கள், பண்டிகைகள், உற்சவங்கள், அறிகுறிகள் கொண்டாடாத உபாத்தியாயர்கள் எத்தனை பேர்கள் இருக்கக்கூடும்? இவர்களால் இவற்றால் இதனால் எல்லாம் இவ்வளவு செலவு செய்து படிக்கும் பிள்ளை களுக்கு என்ன லாபம் இருக்கிறது. இதுவரை படித்து வந்த இந்நதப் படிப்பினால் நாடும் இனமும், அடைந்த பயன் என்ன? சூத்திரன் என்பதற்கு வெட்கப்பட்டு புரட்சி செய்ய எவருக்கு உணர்ச்சி ஏற்பட்டது? ஏற்படாவிட்டாலும் காரியத்தில் வாழ்க்கையில் அடியோடு அவ்வாதாரங்களை வெறுத்த ஆசிரியர் எத்தனை பேர் உண்டு?
ஆகவே மாணவர்களே நீங்கள் இந்தப்படிப்பு படிக்கா விட்டால் அறிவே இல்லாதவர்களாக ஆகிவிடமாட்டார்கள். இந்தப் படிப்புப் படித்ததினாலேயே பெரிய அறிவாளி ஆகிவிட மாட்டீர்கள். நீங்கள் படிக்கும் இவ்வளவு சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வான சாஸ்திரம், உடல்கூறு சாஸ்திரம் முதலியவை உங்கள் வாழ்வில், நீங்கள் டிப்டி கலெக்டரோ, கலெக்டரோ, முன்சீப்போ, ஜட்ஜியோ ஆனாலும்கூட அதற்கு எதாவது பயன்படுகிறதா? பரீட்சையில் உங்களை வாட்டவும் உங்கள் படிப்பை நீடிக்கச் செய்யவும் படிப்புக்கு அதிகப் பணம் செலவு செய்யவும் இதன் பேரால் பலர் பிழைக்கவும் பயன்படுவதல்லாமல் தங்கள் உத்தியோகத் தினசரி நடப்புக்குப் பயன்படுகிறதா?
எனவே எவ்வளவு மோசமான கல்வி? எவ்வளவு மோசமான கல்வி ஸ்தாபனம்? எவ்வளவு மோசமான ஆசிரியர், எவ்வளவு மோசமான, படிப்பிக்கும் தன்மை? என்று பாருங்கள்.
(18.02.1945 அன்று திருச்சி வடமண்டல திராவிட மாணவர் மாநாட்டைத் திறந்து வைத்தபோது மூவாயிரம் மாணவர்களுக்கிடையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - 24.01.1945