கே : கட்சிகள் என்றால் என்ன? வி: நல்ல லட்சியங்களைச் சொல்லி; ஜனங்களை ஏமாற்றி; தங்கள் வசம் செய்து; சுயநல லாபம் அடைவது. உதாரணமாக காங்கிரஸ் கட்சி, தேசியக் கட்சி முதலிய பல கட்சிகள். கே: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ? வி: சேராது! கே: ஏன்? வி : அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை; பணம் கேட்பதில்லை; உத்தியோகம் கேட்பதில்லை; பதவி கேட்பதில்லை; பட்டம் கேட்பதில்லை. அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும், செல்வாக்கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். எது அதிகக்கெடுதி? மக்களைக் கோவிலுக்குப் போகவேண்டாம் என்று சொல்லுகிறவர்களால் ஜனங்களுக்குக் கெடுதி என்று சொல்வதானால் கோவிலுக்குப் போகும் படி சொல்லுகின்றவர்களால் அதைவிட அதிகமான கெடுதி என்றே சொல்லலாம்.கோவிலை இடிக்கின்றவர்களை விட, கோவில் கட்டுகின்ற வர்களாலேயே மக்களுக்கு நஷ்டமும், கஷ்டமும் ஏற்படுகின்றன.கடவுள் கல்லிலும், செம்பிலும், படத்திலும் இருக்கிறார் என்று சொல்லு கின்றவர்களை விட, கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள் நல்லவர்கள். 100 ரூபாய் இனாம் தானாக ஏற்பட்ட கடவுள் எங்காவது உண்டா? இந்த மூவரில் யார் நல்லவர்கள்? கருப்பக் கவுண்டர் உதைப்பதாகச் சொல்லி மிரட்டி ஓட்டு வாங்கினார். தனபாலு செட்டியார் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார். பஞ்சாபகேச அய்யர் சுயராஜ்யம் வாங்கிக் கந்தாயம் தள்ளிப் போடுவதாக ஆசைகாட்டி ஓட்டு வாங்கினார். இம்மூவரில் யார் யோக்கியர்கள்? இவர்களில் யார் பதிவிரதைகள்? 1. சீதா, புருஷன் பந்தோபஸ்தினால் வேறு புருஷன் சாவகாசம் செய்ய முடியவில்லை. 2. மீனாட்சி, புருஷன் உதைத்து விடுவானே என்று உதைக்குப் பயந்து சோரம் செய்யவில்லை. 3. நாமகிரி, ஜனங்கள் கேவலமாய் பேசுவார்களே என்று மானத்திற்குப் பயந்து வேறு புருஷனை இச்சிக்கவில்லை. 4. இரஞ்சிதம், தன் மனதிற்குப் பிடித்த கணவன் கிடைக்கவில்லை என்று கருதி யாருக்கும் இணங்கவில்லை. 5. சரஸ்வதி, மேல் லோகத்தில் செக்கில் போட்டு ஆட்டுவார்கள் என்ற கஷ்டத்திற்குப் பயந்து யாருக்கும் இணங்கவில்லை. 6. மேனகை, தான் கேட்டளவு பணம் கொடுக்கவில்லை என்று கருதி யாருக்கும் சம்மதிக்கவில்லை. 7. கோகிலா, தன் காதலனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு விரோதமே என்று கருதி வேறு யாருக்கும் ஒப்பவில்லை. - தந்தை பெரியார் (குடி அரசு 21-12-1930 பக் 13) |
Saturday, October 30, 2010
அரசியல் கட்சிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment