தந்தை பெரியார் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களின் உருவப் படத்தினை திறந்து வைத்து, அண்ணா பேரவையினைத் துவக்கி வைத்து ஆற்றிய அறிவுரையாவது:-
இன்றைய தினம் அண்ணா பேரவையினைத் துவக்கி வைக்கும் இந்நிகழ்ச்சியில் அண்ணாவின் படத்தினை திறந்து வைக்கும் வாய்ப்பினை எனக்களித் திருக்கிறார்கள். நமது நாட்டில் அண்ணா பேரவை என்னும் பெயரால் பகுத்தறிவுக் கொள்கையோடு இப்படிப்பட்ட ஒரு அமைப்பு அமைவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
அண்ணா நமக்கெல்லாம் சாதாரண மான நண்பராக, மனிதராக இருந்தாலும் அவர் ஆற்றிய தொண்டுகளைப் பார்க்கும் போது அவரை ஒரு மகாபுருஷர் என்றே சொல்ல வேண்டும். அண்ணா பகுத்தறிவு வாதி, நாத்திகர், திராவிடர் கழகத்திலிருந் தவர்; புராண - இதிகாச கடவுள் புரட்டுக்களைப் பற்றியெல்லாம் எழுதியவர்; இராமாயணத்தைக் கொளுத்தியவர்.
பகுத்தறிவைப் பரப்புவது சாதாரண காரியமல்ல; பகுத்தறிவு என்றால் நாத்திகம். அதைப் பரப்பி ஒரு ஆட்சியை நிறுவுவது என்றால் அது சாதாரணமான காரியமல்ல. அண்ணா ஒருவர் தான் எந்த புரட்சியும் - கொலையும் இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவராவார். லெனின் பகுத்தறிவு ஆட்சியை உண்டாக்கினார் என்றால் பாதிரிகள், பணக்காரர்கள், மதவாதிகளைக் கொன்று உண்டாக்கினார். ஆனால், அண்ணா ஒருவர்தான் ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் பார்ப்பானை - பணக்காரனைக் கொல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை அதுவும் மக்களின் ஆதரவைப் பெற்று நிறுவியவராவார். இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் யாவரும் காந்தி சொன்னார், கடவுள் சொன்னார் என்று சொல்லிக் கொண்டு போனார்களே ஒழிய, அறிவு என்ன சொல்கிறது என்று சொல்ல வில்லை. அதன்படி நடக்கவில்லை. அண்ணா ஒருவர்தான் அறிவுப்படி நடக்கிறேன் என்று துணி வாகச் சொல்லி நடந்து காட்டினார். அண்ணா அவர்கள் இருந்தால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் இந்தக் கருத்துகளை பரப்பி இருப்பார். இங்கு அண்ணா படத்தை திறந்து வைக்கிறோம் என்றால் அவர் கொள்கைகளைப் பின்பற்றி பரப்ப வேண்டுமே ஒழிய, படத்தை வைத்துக் கும்பிடுவதால் பலன் இல்லை.
உலகமெல்லாம் முன்னேறியதற்குக் காரணம் பகுத்தறிவு வளர்ச்சியாலேயேயாகும். உலகமெங்கும் 100 வருஷ காலமாக பகுத்தறிவு ஸ்தாபனங்கள் வளர்ந்து வந்திருக்கின்றன. நமது நாட்டில் இந்த ஒரு ஸ்தாபனம் தான் 50 ஆண்டு காலமாக தொண்டாற்றிக் கொண்டு வருகிறது. வேறு ஸ்தாபனங்கள் தோன்ற வில்லை. ஒரு சில ஸ்தாபனங்கள் இக்கொள்கையை பரப்ப முன்வந்து அழித்து ஒழிக்கப்பட்டு விட்டன. நம் நாட்டைத் தவிர, உலகின் மற்ற நாடுகளில் இக்கொள்கையையுடைய ஸ்தாபனங்கள் நிறைய பல பெயர்களில் தொண்டாற்றிக் கொண்டு வருகின்றன.
இன்றைய தினம் இந்த ஸ்தாபனங்கள் வளர்ந்ததன் காரணமாக உலகில் சுமார் 120 கோடிக்கு மேலான மக்கள் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதிகளாக இருக்கிறார்கள். புத்தன் இந்தக் கொள்கையுடை யவன்தான். புத்தன் என்றால் புத்தியுடையவன். புத்தியைக் கொண்டு ஆராய்பவன் என்றுதான் பொருள். இப்படி தங்கள் புத்தியைக் கொண்டு ஆராய் கின்ற மக்கள் இன்று உலகின் பல பாகங்களிலும் இருக் கின்றார்கள். இவர்கள் அத்தனை பேரும் நாத்திகர் களேயா வார்கள். சிந்தனையாளராக இல்லாத நாத்தி கர்கள் 200 கோடி பேர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்றால் கடவுள் நம்பிக்கைக்காரர் களாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்களாவார்கள்.
தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும் கடவுள் நம்பிக்கை யாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல் கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்? எனவே தான், இவர்களை சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்கின்றேன். பார்லிமெண்டிலே நேற்று பேசி விட்டானே, வேதத்தையும் - சாஸ்திரத்தையும் குப்பையிலே எறிந்து விட்டு இன்றைய அறிவுப்படி நடக்க வேண்டும் என்று இந்தக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - வேதம் இவை யாவும் ஒழிக்கப்பட்டால் தான் நமது மக்கள் மற்ற உலக மக்களைப் போல முன் னேற்ற மடைய முடியும். அதன் பேராலே உழைக் கிறதற்கு ஒரு ஜாதி. அதன் பேராலே பிழைக்கிறதற்கு ஒரு கூட்டம் இருப்பதால் இதை தடுத்துக் கொண்டு வருகிறது. இந்தக் கூட்டம் மக்கள் அறிவு பெற்றால் தானாகவே அழிந்துவிடும்; அல்லது இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடும்; அதுவும் இல்லாவிட்டால் தங்களையே நம்மோடு சேர்ந்து விடும். மக்கள் அறிவற்றவர் களாக இருக்கிற வரை இது வளர்ந்து கொண்டுதானிருக்கும்.
இப்போது நம் மக்களுக்கு தேவையானது பகுத்தறிவேயாகும். இந்தப் பேரவை பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு அதற்காக அமைக்கப் பட்டதானால் பகுத்தறிவு என்பது வெளியே தெரிகிற மாதிரி இதன் பெயர் இருக்க வேண்டும். அண்ணா பகுத்தறிவுப் பேரவை என்றிருக் கலாம். நாங்கள் முதலில் உண்மை நாடுவோர் சங்கம் என்பதாக ஈரோட்டில் ஒரு நாத்திக சங்கத்தைத் துவக்கினோம். அதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து உறுப் பினர்களாகி இருந்தார்கள். அதன் பெயரால்தான் முதன் முதலில் குடிஅரசு என்று ஒரு பத்திரிகை நடத்தினேன். அது பலரை வளர்த்தது. இந்த கரு ணாநிதி, அண்ணாதுரை, நெடுஞ்செழியன், நடராசன் எல்லாம் அதில் பணியாற்றியவர்கள்தான். அதிலிருந்து வெளியே பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டியிருந்த தால் அதை கவனிக்க முடியவில்லை. அதன் பின் அரசியலில் ஈடுபட்டதால் அதை நிறுத்த வேண்டிய தாயிற்று. அதன்பின் விடுதலையை ஏற்படுத்தினேன். அது சமுதாயத்திற்குப் பயன்படாமல் போனதோடு அரசியலிலும் அவ்வளவாக செயல்பட முடியாமல் போய்விட்டது என்றாலும், விடுதலையில் வெளி வருகிறது என்றால், உத்தியோகஸ்தர்கள் பயப்படுகிற அளவிற்கு இருக்கிறது. அரசாங்கமும் யோசிக்கும் படியாக இருக்கிறது என்றாலும் அது மாதம் இதுவரை ரூ. 3,000 நஷ்டத்தில் நடந்தது. இப்போது ரூ. 4,000 நஷ்டத்தில் நடக்கிறது. ஏன் இப்போது ரூ. 4,000 நஷ்டம் என்கிறேன் என்றால், ஒரு இலட்ச ரூபாய்க்கு அதற்காக மெஷினை வாங்கி இருக்கிறது. அதற்கு வட்டி பார்த்தால் ரூ. 1,000த்துக்கு மேலாகும். விடுதலை ஆபீஸ் இருக்கிற கட்டிடத்தை வாடகைக்கு விட்டால் குறைந்தது ரூ. 2,000 வாடகை வரும். இப்படி நஷ்டத்தில் ஏன் நடத்த வேண்டி இருக்கிறதென்றால், இந்த வேலையைச் செய்ய வேறு பத்திரிகைகள் இல்லாததாலேயேயாகும். மற்ற எந்த பேப்பரும் செய்யாத வேலையை அது செய்கிறது. விடுதலையில் வந்தால் அதிகாரி பயப்படுகிறான். அய்கோர்ட் ஜட்ஜே பயப்படுகிறான். இப்போது பகுத்தறிவு பிரச்சாரத் திற்காக உண்மை என்று ஒரு பத்திரிகை ஆரம்பிக்கிறேன். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பகுத்தறிவு கருத்து கொண்ட சுமார் 100 புத்தகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் படிக்கச் செய்ய வேண்டும். புத்தகம் போட வேண்டும். கொஞ்சம் வளர்ந்த பின்னர் பத்திரிகைப் போட வேண்டும். இன்னும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு அண்ணா பேரவை வளர்ச்சிக்காக ரூ. 100 அன்பளிப்பாக அளித்தார்கள்.
(13.2.1969 அன்று மதுரையில் அண்ணா பேரவையைத் துவக்கி வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 23.12.1969)
No comments:
Post a Comment