Saturday, May 19, 2012

பகுத்தறிவுக்கு ஒத்த மாறுதல்


நம்மிடையே உள்ள ஜாதி இழிவும், மூட நம்பிக்கையும், அர்த்தமற்ற சடங்குகள், வீண் செலவுகள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பது நம்மிடையே இருந்து வரும் திருமண முறைதான். எனவே, இதை உணர்ந்து இதனை ஒழித்து பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையிலேயே இத்தகைய மாறுதல் திருமணத்தை வகுத்து நடத்தி வருகின்றோம்.

சீர்திருத்தத் திருமணத்தில் நமது இழிவு துடைக்கப்படுகின்றது. பார்ப்பானுடைய கடவுள், மதம், சாஸ்திரம் முதலியன விலக்கப்படுகின்றன.

நம்மிடையே திருமணத்துக்கு முதலாவதாக பொருத்தம் பார்க்கின்றார்கள். மணமக்களின் வயதுப் பொருத்தம், உடலமைப்பு, அழகு, கல்விப் பொருத்தம் இவற்றைவிட ஒருவருக்கு ஒருவர் திருமணத்துக்கு சம்மதிக்கின்றார்களா என்ற பொருத்தம் இவற்றைப் பார்க்காமல் முட்டாள்தனமாக பெயர், ராசிப் பொருத்தம் பார்க்கின்றார்கள். இத்தகைய முட்டாள் தனத்தை எல்லாம் மக்கள் விட்டொழிக்க வேண்டும்.

நம்மிடையே ஒருவனுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்று தொடங்குவது, வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படு கின்றது என்பதற்காகவே செய்கின்றார்களே ஒழிய, தம் பையன் வாழ்க்கைக்கு என்று சொல்ல மாட்டார்கள். நம்மிடையே பெண்களை அடிமையாகவே வீட்டுக்கு வேலையாளாகவே வெகுநாளாக நடத்திக் கொண்டு வருகின்றோம்.

எங்களுடைய திருமண முறை காரணமாக ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிக நன்மை ஏற்பட்டுள்ளது.

புரோகித திருமணம் என்ற பேரால் ஏற்பாடு செய்யப்பட்ட அத்தனையும் முட்டாள்தனமானதும், அர்த்தமற்றதுமேயாகும் என்று எடுத்துரைத்து, கடவுள், மதம், சாஸ்திரம் ஆகியவற்றின் பேரால் நாம் அடையும் இழிவுகள் குறித்து தெளிவுபடுத்தியும் மணமக்களுக்கு அறிவுரை கூறியும் பேசினார்.

(விடுதலை 10.7.1963)

No comments:

Post a Comment