நண்பர் பெருமாள் அவர்களின் புதுமனை புகுவிழாவின் பொருட்டு நாம் கூடியுள்ளோம். சாதாரணமாக திறப்பு விழாக்களின் உள்தத்துவம் ஒரு விளம்பரத்துக்காகவேயாகும். என்ன விளம்பரம் என்றால் நண்பர் பெருமாள் முன்பு ஒரு வீட்டில் வசித்தார். இன்று இந்த வீட்டுக்கு குடி வந்துள்ளார் என்பது சுற்றத்தாருக்கும், நண்பருக்கும் தெரிய வேண்டும். எப்படி குடிமாறிப் போனால் முகவரி மாற்றம் குறித்து விளம்பரப்படுத்துவது போலவாகும். இதுபோலத்தான் திருமணம், புதிய கடைத் திறப்பு எல்லாம் மக்களுக்கு இச்சங்கதியை தெரியப்படுத்தச் செய்யும் ஒருவகை விளம்பர சாதனமாகும். இது எந்த நாட்டிலும் உண்டு.
இத்தகைய இந்த ஜாதி இனத்தின் சுயநலக்காரர்கள், தந்திரக்காரர்கள். இதனை பணம் பறிக்கவும், மதத்தையும், மடத்தனத்தையும் புகுத்தவும் உபயோகப்படுத்திக் கொண்டனர். மக்களும் இதுபற்றி சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டு நடக்கின்றனர்.
சுயமரியாதைக்காரர்கள் இப்படி முட்டாள்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் இத்தகைய நிகழ்ச்சிகளில் நடந்து கொள்ளுகின்றார்களே. இதனை மாற்றி பரிகாரம் காண வேண்டாமா? என்று எண்ணியே இப்படிப்பட்ட பகுத்தறிவுக்கு ஒத்த முறைகளை கையாளுகின்றோம். பார்ப்பனரைக் கூப்பிட்டு அர்த்தமற்ற சடங்குகளை செய்கிறார்களே ஒழிய, அது ஏன் செய்ய வேண்டும்? அதன் பலன் என்ன? என்று சிந்திப்பதே இல்லை.
மனிதன் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பலன் நல்லதா? கெட்டதா? என்று ஆராய்ந்து பார்த்து செய்ய முற்படுவதோ, செய்ய தூண்டுவதோ நம்மவர்களுக்கு இல்லை. எதுவும் சுலபத்தில் அடைய வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றார்கள்.
இம்மாதிரியான காரியத்தில் கை வைக்க எவனுமே தோன்றவே இல்லையே. தோன்றியவன் எல்லாம் இம்மாதிரியான முட்டாள்தனத்தை பாதுகாக்கவேதான் நினைக்கிறான்.
கிராமப் பஞ்சாயத்துக்களை அமைப்பதில் முன்னெச்சரிக்கை வேண்டும். இங்கு மேல்நாட்டு பாணி ஜனநாயக முறை புகுத்த இங்கு மக்கள் இன்னும் தகுதி பெறவில்லை. அரசியல் கட்சிகள் புகுந்தால் பெரும்பாலான மக்களின் சமூக வாழ்வில் சிதைவு ஏற்படும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனக் கூறி அடிக்கடி ஒத்தி வைப்பும், வெளிநடப்பு நாடகங்களுமே நடக்கும். எங்கள் இயக்கத்தைத் தவிர இருக்கின்ற அத்தனை இயக்கங்களும், அமைப்புகளும் எங்களால் ஏற்படும் மாறுதல்களை ஏற்பட ஒட்டாமல் தடுக்கவே பாடுபட்டு வருகின்றன.
எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவர்கள் கடவுள் விரோதி, மத விரோதி பார்ப்பனரை எதிர்க்கின்றார்கள். இப்படித்தான் கூறுவார்களே ஒழிய, எங்களால் என்ன கேடு என்று எவனும் கூற முடியாது. எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவற்றைக் காப்பாற்றவே பாடுபட்டு வருகின்றனர்.
நாங்கள் கூறுகிறோம் என்றால், அப்படியே உங்களை நாங்கள் நம்பச் சொல்லவும் இல்லையே? உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்து உனது புத்திக்கு சரி என்று பட்டால்தானே எடுத்துக் கொள்ளச் சொல்கின்றோம்.
மக்கள் காரண காரியங்களைக் கேட்டு நடக்க ஆரம்பித்து இருந்தால் வெகு நாளைக்கு முன்பே நாடு முன்னேறி இருக்கும். இல்லாதவன் காரணமாகத்தான் நாம் இப்படி இருக்கின்றோம். மதம், சாஸ்திரம் என்பதெல்லாம் மனிதன் அறிவு கொண்டு சிந்திக்கக் கூடியது என்று ஆக்கி வைத்தாதாகும் என்று எடுத்துக் கூறினார். அவர்கள் மேலும் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றின் மடமை பற்றியும், ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.
(19.5.1962 அன்று ஆத்தூரில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 12.5.1962
No comments:
Post a Comment