Sunday, July 15, 2012

சடங்குகள் மோசக்காரர் புகுத்தியது


நண்பர் பெருமாள் அவர்களின் புதுமனை புகுவிழாவின் பொருட்டு நாம் கூடியுள்ளோம். சாதாரணமாக திறப்பு விழாக்களின் உள்தத்துவம் ஒரு விளம்பரத்துக்காகவேயாகும். என்ன விளம்பரம் என்றால் நண்பர் பெருமாள் முன்பு ஒரு வீட்டில் வசித்தார். இன்று இந்த வீட்டுக்கு குடி வந்துள்ளார் என்பது சுற்றத்தாருக்கும், நண்பருக்கும் தெரிய வேண்டும். எப்படி குடிமாறிப் போனால் முகவரி மாற்றம்  குறித்து விளம்பரப்படுத்துவது போலவாகும். இதுபோலத்தான் திருமணம், புதிய கடைத் திறப்பு எல்லாம் மக்களுக்கு இச்சங்கதியை தெரியப்படுத்தச் செய்ய ஒருவகை விளம்பர சாதனமாகும். இது எந்த நாட்டிலும் உண்டு.
இத்தகைய இந்த ஜாதி  இனத்தின் சுயநலக்காரர்கள், தந்திரக்காரர்கள். இதனை பணம் பறிக்கவும், மதத்தையும், மடத்தனத்தையும் புகுத்த  உபயோகப்படுத்திக் கொண்டனர். மக்களும் இதுபற்றி சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டு நடக்கின்றனர். சுயமரியாதைக்காரர்கள் இப்படி முட்டாள்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் இத்தகைய நிகழ்ச்சிகளில் நடந்து கொள்ளுகின்றார்களே. இதனை மாற்றி பரிகாரம் காண வேண்டாமா? என்று எண்ணியே இப்படிப்பட்ட பகுத்தறிவுக்கு ஒத்த முறைகளை கையாளுகின்றோம். பார்ப்பனரைக் கூப்பிட்டு அர்த்தமற்ற சடங்குகளை செய்கிறார்களே ஒழிய, அது ஏன் செய்ய வேண்டும்? அதன் பலன் என்ன? என்று சிந்திப்பதே இல்லை.
மனிதன் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பலன் நல்லதா? கெட்டதா? என்று ஆராய்ந்து பார்த்து  செய்ய முற்படுவதோ, செய்ய தூண்டுவதோ நம்மவர்களுக்கு இல்லை. எதுவும் சுலபத்தில் அடைய வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றார்கள். இம்மாதிரியான காரியத்தில் கை வைக்க எவனுமே தோன்றவே இல்லையே. தோன்றியவன் எல்லாம் இம்மாதிரியான முட்டாள்தனத்தை பாதுகாக்கவேதான் நினைக்கிறான். கிராமப் பஞ்சாயத்துக்களை அமைப்பதில் முன்னெச் சரிக்கை வேண்டும். இங்கு மேல்நாட்டு பாணி ஜனநாயக முறை புகுத்த இங்கு மக்கள் இன்னும் தகுதி பெறவில்லை. அரசியல் கட்சிகள் புகுந்தால் பெரும்பாலான மக்களின் சமூக வாழ்வில் சிதைவு ஏற்படும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனக் கூறி அடிக்கடி ஒத்தி வைப்பும், வெளிநடப்பு நாடகங்களுமே நடக்கும். எங்கள் இயக்கத்தைத் தவிர இருக்கின்ற அத்தனை இயக் கங்களும், அமைப்புகளும் எங்களால் ஏற்படும் மாறுதல்களை ஏற்பட ஒட்டாமல் தடுக்கவே பாடுபட்டு வருகின்றன.
எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவர்கள் கடவுள் விரோதி, மத விரோதி பார்ப்பனரை எதிர்க்கின்றார்கள். இப்படித்தான் கூறுவார்களே ஒழிய, எங்களால் என்ன கேடு என்று எவனும் கூற முடியாது. எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவற்றைக் காப்பாற்றவே பாடு பட்டு வருகின்றனர். நாங்கள் கூறுகிறோம் என்றால், அப் படியே உங்களை நாங்கள் நம்பச் சொல்ல வும் இல்லையே? உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்து உனது புத்திக்கு சரி என்று பட்டால்தானே எடுத்துக் கொள்ளச் சொல்கின்றோம்.
மக்கள் காரண காரியங்களைக் கேட்டு நடக்க ஆரம்பித்து இருந்தால் வெகு நாளைக்கு முன்பே நாடு முன்னேறி இருக்கும். இல்லாததன் காரணமாகத்தான் நாம் இப்படி இருக்கின்றோம். மதம், சாஸ்திரம் என்பதெல்லாம் மனிதன் அறிவு கொண்டு சிந்திக்கக் கூடியது என்று ஆக்கி வைத்ததாகும் என்று எடுத்துக் கூறினார். அவர்கள் மேலும் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றின் மடமை பற்றியும், ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.
(19.5.1962 அன்று ஆத்தூரில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 12.5.1962)
தோழர்களே, விசுவரெட்டிப் பாளையத்தில் என்னை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்தே முயற்சி செய் தும், இப்போதுதான் அந்த வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கு என் நன்றி.
எங்கள் கொள்கை மிகக் கசப்பான  கொள்கை! உங்களுக்கு இனிப்பாக இருக்கும் வகையில் எங் களுக்குப் பேசத் தெரியாது. இன்றுள்ள பிரத்தியட்ச நிலைமையை எங்கள் மனத்தில் பட்டதை - உங்களிட மிருந்து எதுவும் எதிர்பார்க்காமல் தைரியமாகச் சொல்கிறோம். உங்கள் அறிவுக்குப்பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள். மீதியை விட்டுத்தள்ளுங்கள். நாங்கள் சொல்லுவதுதான் சரி. இதைத்தான் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.
இப்படியே சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சித்தார்த்தன் என்பவர் எதையும் உங்கள் புத்தியைக் கொண்டு ஆய்ந்து பார்த்து உங்கள் புத்திக்கு சரி எனப்பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவருக்கு புத்தர் எனப் பெயர் ஏற்பட்டது. அதற்குப் பின் வள்ளுவர் இருந்தார். அவரும்,
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்று சொல்லிவிட்டுப் போனார். அதற்குப் பின் ஒருவரும் தோன்றவில்லை. எத்தனையோ நாயன்மார்களும் - ஆழ்வார்களும் தோன்றியும் மக்களுக்குள்ள இழிவு ஒழிய பாடுபட்டதில்லை. அவர்களெல்லாம் பார்ப்பனர்களுடைய தயவால் ஆழ்வார்களாகவும், நாயன்மார்களாகவும் ஆக முயற்சித்தார்களே தவிர, மக்களுக்கு ஏன் இந்த இழிவு? பாடுபடும் பாட்டாளி மக்கள் இழிஜாதியினராக - தீண்டப்படாதவர்களாக - சூத்திரர்களாக - பார்ப்பானின் வைப்பாட்டி மக்களாக இருக்க வேண்டும்? என்று கேட்டதே இல்லை. நாங்கள்தான் துணிந்து பகுத்தறிவுப் பணியாற்ற முன் வந்திருக்கிறோம். எங்கள் கொள்கைகளை விளக்கி பல புத்தகங்கள் போட்டிருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் வாங்கி படிக்க வேண்டும். நூல் நிலையத்திலெல்லாம் திராவிடர் கழகத்தின் ஏடுகள் இருக்காது. இன்னும் அந்தத் துணிவு அவர்களுக்கு வரவில்லை.
பேய் பிடித்தாடும் மடமை இன்னும் நம் மக்களிடம் தானே இருக்கிறது? ஜப்பான் காரன் - ஜெர்மன்காரன் இவர்களைப் பேய் பிடிக்கிறதா? இல்லையே. ஏன்? கடவுள் யோக்கியதை தான் என்ன? திருட னும் கடவுளைக் கும்பிடுகிறான் - திருட்டுக் கொடுத்தவனும் கடவுளைக் கும்பிடுகிறான். கடவுள் யாருக்கு நல்லவர்? கடவுளுக்காக நாமா? நமக்காகக் கடவுளா? என்பதே விளங்க வில்லையே!
மதம் என்றால் என்ன? யாராவது சொல்ல முடியுமா? மதத்தின் தத்துவம்தான் என்ன? மதத்தின் பிரச்சாரம்தானே நாம் சூத்திரர்கள். ஜாதி இழிவைக் காப்பாற்றுவதும் இந்த மதந் தானே?  இந்த இருபதாவது நூற்றாண்டிலும் ஜாதி ஒழிய வேண்டும் என்று நாங்கள்தானே சொல்லுகிறோம்; அதற்காகப் பாடுபடுகிறோம் - சிறைக்குப் போகிறோம். ஜாதி ஒழிய வேண்டு மென்றால், இந்து மதம், சாஸ்திரம், சம்பிரதாயப் புராண, இதிகாசம் எல்லாம் ஒழிய வேண்டும். காந்தியார்கூட ஜாதியைப் பாதுகாக்க வருணாசிரம மதத்தை நிலை நிறுத்தவே பாடுபட்டார். அதனால்தான் காந்தியார் சிலையை உடைக்க வேண்டும் என்றேன். நமக்கு ஒரு அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில் லாததின் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு ஜாதியால்தானே. இதைச் சிந்திக்க வேண்டாமா? 
(விசுவரெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - விடுதலை 8.7.1961.)

No comments:

Post a Comment