Sunday, September 8, 2013

கடவுள் ஒருவராம் - ஆனால் பிறப்பு நான்காம்!

இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது என்பது போல் எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும் அத் தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியவை ஏற்படுத்தி இருப் பவை அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாகிக்கொண்டே வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல.
இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும் இந்துக்கள் என்பவர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங் கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகன் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதுண்டு.
நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும் கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப்போது அமலில் இருக்கும் பழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக்கூடியதும் அதிக செல் வாக்குள்ளதும் முதற்கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப்பற்றி சற்று கவனிப்போம்.
1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து நான் குளித்து விட்டு வெளியில் வரும் வரை வேறு யாரையும் உள்ளே விடாதே என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும் அந்த சமயத்தில் பார்வதி புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண் டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனையும் பார்த்து பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு, கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத் தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய் என்று கேட்டதாகவும் அதற்கு சிவன் காவல்காரன் தலையை வெட்டி உருட்டி விட்டு வந்தேன் என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெண்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதி யின் துக்கத்தை தணிக்க வேண்டி வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலி ருந்த ஒரு யானையின் தலையை வெட்டி முண்டமாக கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து அதற்கு உயிரைக் கொடுத்து பார்வதியை திருப்தி செய்த தாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக் கதைக்கு சிவ புராணத்திலும், கந்த புராணத் திலும் ஆதாரங்களுமிருக்கின்றனவாம்.
2. ஒரு காட்டில் ஆண் பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகமேற் பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.
3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றி ருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாக சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும் அதற்கு பரிகாரமாகப் பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
4. தக்கனுடைய யாகத்தை அழிப்ப தற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும் தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்ட தாகவும் சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பி னதாகவும், அவன் போய்ப்பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும் உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்த தாகவும் மற்றொரு கதை சொல்லப்படு கின்றது. இது தக்க யாகப்பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.
5. இன்னும் பல வழிகள் சொல்லப்படு கின்றன. அதனைப் பற்றியும் இப்பிள்ளை யாரின் மற்ற கதைகளைப் பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.
எனவே பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும் அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற் கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப்பல வித மாகச் சொல்லப்படுவதும். அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதா யிருந்தால் மற்ற கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க, ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுள் களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டு தானே தீரும் (இவைகளைப் பார்க்கும் போது கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆகவே இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது. இதனைப் பின்னால் கவனிக்கலாம்)
கடவுளைப் பற்றிய விவகாரங்களோ சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் கடவுள் ஒருவர்தான் அவர் நாம ரூப குணமற்றவர், ஆதியந்தமற்றவர், பிறப்பு இறப்பு அற்றவர் தானாயுண்டானவர் என்று சொல்லுவதும் மற்றும் அது ஒரு சக்தி என்றும், ஒரு தன்மை அல்லது குணம் என்றும் பேசி அந்த சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும் வணங்க வும் பூசை செய்யவும் உற்சவம் முதலியன செய் யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும் புரட்டும் கஷ்டமும் நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.
உதாரணமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம். சிதம்பரம் கோவிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து அதன் தும்பிக்கையை மற்றொரு பெண்சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்ப துடன் இந்தக் காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.
சில தேர்களிலும் ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண்குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும் அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத் தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டி ருக்கின்றது. இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும், புராணமும் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது.
அதாவது ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும் அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுவது போல் பல லட்சக் கணக்காய் வந்து கொண்டே இருந்த தாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள், பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும் உடனே பிள்ளையா ரானவர்  ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல் களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள்விட்டு அங்கிருந்த அசுரர்களை யெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மை யான ஆபாசங் களுக்கு கண்டவை களையெல்லாம் கடவுள் என்று சொல்லும் ஆஸ்திகர்கள் என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.
எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான் என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா?
இன்றைய தினமும் அவ்வெ ழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப் படவில்லையா அன்றியும் பல கோவில்களில் உருவங்களாகத் தோன்ற வில்லையா? இதை எவனோ ஒருவன் செய்து விட்டான் என்று சொல்வதனால் இவைகளுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா? என்பது போன்றவை களைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கின்றோம்.
சீர்திருத்தக்காரர்கள் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்றும் மதத்திற்கு ஆபத்து, சமயத்துக்கு ஆபத்து கடவுள்களுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் வக்காலத்து பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.
இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலை யில்லாவிட்டாலும் பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு இந்த ஆபாசங்களையெல் லாம் ஒழிக்க முயற்சிக்காமல் சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களை பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லி விடுவ தாலேயே எந்தக் கடவுளையும் எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியா தென்றே சொல்லுவோம் இனி அடுத்த முறை அடுத்தக் கடவுளைப் பற்றிக் கவனிப்போம்.
- குடிஅரசு - கட்டுரை - 26.08.1928

No comments:

Post a Comment