Sunday, June 26, 2011

மதப்போட்டி - யாரைப் பார்த்து யார் காப்பியடித்தார்?

மதங்கள் என்பவைகளுக்கெல்லாம் ஒரு கடவுள் இருந்தாகவேண்டும்; மோட்சம், நரகம் இருந்தாக வேண்டும். கடவுள் தன்மை பொருந்திய அவதார புருஷர்கள், குருமார்கள் இருந்தாக வேண்டும்.
இவை இல்லாமல் உலகில் எந்த மதமும் இருக்க முடியாது. இந்து மதத்துக்கோ இவைகள் மாத்திரம் போதா. அதாவது பல கடவுள்கள் வேண்டும்; பலவிதமான மோட்சங்கள், பலவிதமான நரகங்கள் வேண்டும். மற்றும் பலவிதமான பிறப்புகள் முன் பின் ஜன்மங்கள் வேண்டும்; பலவிதமான அவதாரங்கள், பலவிதமான குருமார்கள் வேண்டும்; இவ்வளவும் போதாமல் கடவுளை நேரில் கண்டு மோட்சத்திற்குப் போன பலவிதமான பக்தர்கள் வேண்டும்.
இந்தக் காரியங்கள் சிறப்பாக இந்து மதத்தின் உட்பிரிவு மதங்களானச் சைவ மதம், வைணவ மதம் என்று சொல்லப்படும் இரண்டு உட்பிரிவு மதங் களுக்கும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்து வருகின்றன.
பெயர்களைப் பொறுத்த வரையில் சில மாறுதல்கள் இருக்கலாமே ஒழியக் காரியங்களைப் பொறுத்த வரையில் ஏறக்குறைய ஒருவரைப் பார்த்து ஒருவர் காப்பியடித்தது போலவேதான் இருக்கின்றன.
உதாரணமாக, வைணவத்தில் ராமாயணம் ஏற்பட்டதற்குக் காரணம் விஷ்ணுவும் அவரது மனைவியாகிய லட்சுமியும் கலவி செய்ததில் இருந்தே ஏற்பட்டது என்றால், சைவத்துக்குக் கந்தபுராணம் ஏற்பட்டதற்குக் காரணம் சிவனும் அவரது மனைவியாகிய பார்வதியும் கலவி செய்ததில் இருந்தே ஏற்பட்டது.
எப்படியெனில், விஷ்ணுவும் லட்சுமியும் பகல் நேரத்தில் கலவியில் இருந்தபோது சில ரிஷிகள் படுக்கை அறைக்குள் பிரவேசித்து விஷ்ணுவைக் காண ஆசைப்பட்டதாகவும், துவாரபாலகர்கள் தடுத்ததாகவும் அதற்கு அவர்களை ரிஷிகள் சபித்த தாகவும், அந்தச் சாபம் தீரவேண்டியதற்காகவே ராமாயணம் முதலியவை ஏற்பட வேண்டிய தாயிற்றாம்.
அதுபோலவே, பரமசிவன் பார்வதியோடு பல நூறு வருஷங்கள விடாமல் கலவி செய்து கொண்டு இருந்ததாகவும் அதனால் ஏற்படும் வீர்யமும், கர்ப்பமும் மிகக் கொடுமையான காரியத்தைச் செய்யக் கூடியதாகிவிடும் என்று, தேவர்கள் முறையிடக் கலவி முற்றுப்பெறுவதற்கு முன்பாகவே கலவியை நிறுத்திக் கொள்ள வேண்டியதாகி, அதனால் இந்திரியம் நிலத்தில் விழுந்து பிறகு என்னென்னமோ ஆபாசமாகிக் கடைசியாக சுப்பிர மணியர் தோன்றிக் கந்தபுராணம் ஏற்படவேண்டிதா யிற்று என்றுமே கதைகள் இருக்கின்றன.
அன்றியும் பூபாரம் தீர்க்கவும். ராட்சதர்களை அழிக்கவும் விஷ்ணு ராமராய்த் தோன்றினார்.
அதுபோலவே பூபாரம் தீர்க்கவும் அசுரர்களை அழிக்கவும் சிவன் சுப்பிரமணியனாகத் தோன்றினார்.
ராமன் பிறப்பதற்காகத் தேவர்கள் விஷ்ணுவை வேண்டினார்கள்.
சுப்பிரமணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டினார்கள்.
ராமன் ராட்சதர்கள் என்பவர்களைக் கொன்றான்.
சுப்பிரமணியன் அசுரர்கள் என்பவர்களைக் கொன்றான்.
ராமன் ராட்சதர்களைக் கொல்லும்போது (மூலபலம்) கொல்லக்கொல்ல உற்பத்தியாகிக் கொண்டே வந்தனர்.
சுப்பிரமணியன் அசுரர்களைக் கொல்லும்போது கொல்லக் கொல்ல அசுரர்கள் தலைகள் முளைத்துக் கொண்டே வந்தன.
ராமன் பெண்ஜாதி சீதை ஒரு வளர்ப்புப்பெண். சமுத்திரத்தில் கண்டெடுக்கப்பட்டவள்.
சுப்பிரமணியன் பெண் ஜாதியும் ஒரு வளர்ப்புப் பெண், வள்ளிச் செடிக்கடியில் கண்டெடுக்கப்பட்டவள்.
சைவத்துக்கும் வைணவத்துக்கும் இனியும் அனேக விஷயங்களில் கடவுள்களைப் பற்றிய கதைப் பொருத்தங்கள் காணலாம்.
அதுபோல சைவ, வைணவ ஆச்சாரியார்கள் விஷயங்களிலும், சைவத்துக்கு நாயன்மார்களாகவும், வைணவத்துக்கு ஆழ்வாராதிகளாகவும், ஏற்படுத்தப் பட்டிருப்பதோடு அல்லாமல், பல பக்தர்களையும் அவர்கள் செய்த காரியங்கள் அவற்றின் பயனாய் அவர்கள் அடைந்த முக்திகள் ஆகிய விஷயங்களிலும் ஒன்று போலவே கதைகள் கற்பிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
வைணவ பக்தர்கள் விஷயத்துக்குப் பக்த லீலாமிருதம் என்னும் புத்தகம் போலவே சைவ பக்தர்கள் விஷயத்துக்குப் பெரியபுராணம் என்னும் புத்தகமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
வைணவ பக்தரில் ஒரு குயவர் இருந்தால், சைவ பக்தரிலும் ஒரு குயவர் இருக்கிறார்.
எப்படி எனில், வைணவக்குயவர் கோராகும்பராய் இருந்தால், சைவக்குயவர் திருநீலகண்டராய் இருக்கிறார்.
இருகுயவ பக்தர்களுடைய கதையும் ஒன்று போலவே அதாவது, கோராகும்பரும் தன் பெண் ஜாதி யுடன் பேசாமல் இருந்து கடைசியாக மகாவிஷ்ணுவே இருவரையும் பேசும்படி செய்து சேர்த்துவைக்கிறார்.
திருநீலகண்ட குயவனாரும் தன் பெண்ஜாதியோடு பேசாமல் இருந்து கடைசியாகச் சிவபெருமான் வந்தே இருவரையும் பேசும்படி செய்து சேர்த்துவைக்கிறார்.
மற்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பதிலும் வைணவ மதத்திற்கு சோக்கமாலா என்கின்ற தீண்டாத ஜாதி பக்தர் ஒருவர் இருந்து அவரைக் கோவிலுக்குள் விடாமல் தடுக்கப்பட்டு கனவு கண்டு கடைசியாக விஷ்ணு வந்து அழைத்துப் போகிறார்.
சைவத்திலும் தீண்டப்படாத வகுப்புக்கு நந்தன் என்பதாக ஒருவர் இருந்து பரமசிவன் வந்து கனவில் சொல்லிச் சாமி தரிசனம் செய்யப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இரண்டுமத புராணங்களிலும் பார்ப்பனர் களுக்கு மாத்திரம் ஒரே மாதிரியான உயர்வும், மற்றவர்களுக்கு இழிவும் ஏற்படுத்தப்பட்டிருப்ப தோடு ஜாதிப் பாகுபாடுகளைப் பற்றி ஒரே மாதிரி யாகவே குறிப்பிட்டுப் பலப்படுத்தி இருக்கிறது.
இவற்றுள் சைவத்தைப் பார்த்து வைணவர்கள் காப்பி அடித்தார்களா ? அல்லது வைணவர்
களைப் பார்த்து சைவர்கள் காப்பி அடித்தார்களா? என்பது ஆராய்ச்சி வேலையாய் இருக்கலாம்.
அதில் பிரவேசிக்க நமக்கு இஷ்டமில்லை. ஏனெனில், தமிழ் நாட்டில்தான் சைவத்தைப்பற்றிப் பிரபலமாய்ப் பேசப்படுகின்றதே ஒழிய, மற்றபடி இந்தியாவின் வடபாகம் முழுவதும் ஆந்திரதேசம் உள்பட வைணவமே மேலோங்கி இருக்கிறது. வடநாட்டில் வைணவர் என்றால்தான் மாமிசம் சாப்பிடாதவர் என்று அருத்தமாகும்.
ஆகையால், இவை இரண்டிற்கும் மதக் கிரந்தங்கள், மதக் கதைகள், மத பக்தர்கள், மதக் கடவுள்கள் என்பவைகளில் ஒன்றை ஒன்று காப்பி அடிப்பதோ அல்லது இருவரும் ஒன்றாய் உட்கார்ந்து கூடிப்பேசியோ ஒரு முடிவுக்கு வந்துதான் இப் பெரும் புளுகு மூட்டைகளை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள் என்பது அறியக்கிடக்கின்றது.
(சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் தீட்டியது இது)
குடிஅரசு -கட்டுரை -14.04.1945

No comments:

Post a Comment