தோழர் ஈ. வெ. ரா. ஸ்டேட்மெண்டு
இ.பி.கோ. 124A செக்ஷன்படி தொடரப்பட்டுள்ள பொது வுடைமை பிரச்சாரத்திற்காகவும் இராஜ நிந்தனை என்பதற் காகவுமுள்ள வழக்கு கோவையில் 12ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட போது தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்கள் கோவை ஜில்லா கலெக்டர் ழு.று. வெல் ஐ.ஊ.ளு. அவர்கள் முன் தாக்கல் செய்த ஸ்டேட்மெண்ட்:-
இ.பி.கோ. 124A செக்ஷன்படி தொடரப்பட்டுள்ள பொது வுடைமை பிரச்சாரத்திற்காகவும் இராஜ நிந்தனை என்பதற் காகவுமுள்ள வழக்கு கோவையில் 12ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட போது தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்கள் கோவை ஜில்லா கலெக்டர் ழு.று. வெல் ஐ.ஊ.ளு. அவர்கள் முன் தாக்கல் செய்த ஸ்டேட்மெண்ட்:-
(1) என் பேரில் இப்போது கொண்டு வரப் பட்டிருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது.
(2) வழக்குக்கு அஸ்திவாரமான 29-10-33 தேதி குடிஅரசின் தலையங்கத்தை இப்போது பலதரம் படித்துப் பார்த்தேன். அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்.
(3) அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்காவது வாக்கியங்களுக்காவது ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால் இன்றைய அரசாங்கமுறை நிர்வாகமுறை முதலியவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ அவற்றால் மக்களுக்கு ஏற்படக் கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ யாருக்கும் சுதந்திரம் கிடையாது என்று தான் முடிவு செய்யப்பட்டதாகும்.
(4) என்ன காரணத்தைக் கொண்டு என்மேல் ஆதாரமற்ற இந்தப் பிராது தொடரப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் என்னுடைய சமதர்மப்பிரச்சாரத்தை நிறுத்தி விடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தான் வரவேண்டி யிருக்கிறது. வியாசத்தின் விஷயத்திலாவது பதங்களிலாவது நோக்கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது.
(5) முக்கியமாய் அதில் சொல்லப்பட்ட விஷயம் எல்லாம் கல்வி இலாகாவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்கு கல்விச்செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளைவ தில்லையென்றும், ஏழைகளுக்கு கல்வி பரவ சவுகரியம் இல்லை என்றும், இப்படிப்பட்ட முறையால் லாபம் பெறும் பணக்காரர்களும், அதிகார வர்க்கத்தாரும் உத்தியோகஸ்தர்களும் சொல்லுவதைக் கேட்டு ஏமாந்து போகாமல் வரப்போகும் (சீர்திருத்த) எலெக்ஷன் களில் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டும் என்று ஏழை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியதேயாகும்.
(6) நான் 7,8 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்க சமதர்மப் பிரச்சாரம் செய்து வருகிறேன். சமுக வாழ்விலும் பொருளா தாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழவேண்டுமென்பது அப்பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவமாகும்.
(7) நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதும் அவ்வுற் பத்திக்காக செய்யப்பட வேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லோரும் சக்திக்குத் தக்கபடி பாடுபட வேண்டும் என்பதும் அத்தத்துவத்தின் கருத்தாகும்.
(8) அவ்வியக்க இலட்சியத்திலோ, வேலைத் திட்டத்திலோ பிரச்சாரத்திலோ அதற்காக நடைபெறும் குடி அரசுப் பத்திரி கையிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை இடம் பெற்றிருக்க வில்லை. எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம் பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று.
(9) இதற்கு அத்தாட்சி வேண்டுமானால் பல வருஷங்களாக இரகசியப்போலீஸ் இலாகா சுருக்கெழுத்து அறிக்கைக்காரர்கள் எனது பிரசங்கத்தை விடாமல் குறித்து வைத்திருக்கும் அறிக்கை களையும் சுமார் 10 வருஷத்திய குடி அரசு பத்திரிகையின் வியாசங்களையும் சர்க்கார் கவனித்து வந்தும் என்மேல் இத்தகைய வழக்கு இதற்கு முன் ஏற்படுத்தியதில்லை என்பதே போதும்.
(10) அரசாங்கமானது முதலாளித் தன்மை கொண்டதாய் இருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரச்சாரம் செய்யும் என்னையும் எப்படியாவது அடக்க வேண்டுமென்று முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதில் அதிசயமில்லை. தற்கால அரசாங்க ஆட்சியில் பங்குபெற்று போக போக்கியமும், பதவியும், அதிகாரமும் அடைந்துவரும் பணக்காரர்களும் மற்றும் மதம், ஜாதி, படிப்பு என்கிற சலுகைகளைக் கொண்டு முதலாளிகளைப் போலவே வாழ்க்கை நடத்துகின்றவர்களும் இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு நேர்முக மாகவும், மறைமுகமாகவும் உதவி செய்து தீர வேண்டியவர்களாய் இருப்பதால் அவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாய் இருப்பதிலும் அதிசயமில்லை.
(11) பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும் இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலை நிறுத்தப்பட்டு நடைபெற்று வரும் சமுக அமைப்பையும், பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும் அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கைகளில் உள்ள அனேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த்தியாகி சவுக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாது என்பது எனது உறுதி.
(12) இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும் அதற்காக பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரச்சாரம் செய்வதும் குற்றமாகாது.
(13) ஏதாவது ஒரு கொள்கைக்குப் பிரச்சாரம் பரவ வேண்டு மானால் அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக்கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்கு முறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காகவே நாமே வலுவில் போய் கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது என்றாலும் தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்து விடக் கூடாது. இந்தப் பிரச்சாரத்தைத் தடுக்க வேண்டு மென்று கருதி இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம், வெறுப்பு, பலாத்காரம் முதலியவைகள் இருப்பதாகக் கற்பனை செய்து தீர வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.
அந்தப்படி செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக என்மீது நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடையவர்களும் சிறப்பாக எனது கூட்டு வேலைக்காரத் தோழர்களும், தப்பான அபிப்பிராயம் கொள்ளக்கூடுமாதலால் அப்படிப்பட்ட கற்பனைகளை மறுத்து உண்மையை விளக்கி விட வேண்டுமென்றே இந்த ஸ்டேட்மெண்ட் டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனானேன்.
(14) இதனால் பொதுஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமாவதோடு அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்குப் பலம் ஏற்படக் கூடுமாதலால் என் மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்டை மாத்திரம் கொடுத்து விட்டு எதிர் வழக்காடாமல் இப்போது கிடைக்கப்போகும் தண்டனையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.
(15) இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தாலும், சரி அல்லது இந்த பிராதுக்கு போதிய ஆதாரமில்லை என்று நியாயத்தையும் சட்டத்தையும் லட்சியம் செய்து வழக்கைத் தள்ளி விட்டாலும் சரி. இப்படிப்பட்ட அடக்கு முறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத் தைப்பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.
- புரட்சி - கட்டுரை - 21.01.1934
- புரட்சி - கட்டுரை - 21.01.1934
No comments:
Post a Comment