Sunday, November 7, 2010

கோயில்கள் ஏற்பட்டது எப்படி? - ஓர் ஆராய்ச்சி

உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில்தான் அதிக மான பெரிய ஆலயங்கள் (கோவில்கள்) இருக்கின்றன.
இந்தப்படி அதிகமான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டிருப்பவையெல்லாம் பெரிதும் அக்கால அரசாங்க அரசர்களாலேயே கட்டப்பட்டவையாகும்.
இதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத் தில் இந்த ஆலயங்களின் மூலம் அரசாங்கத்திற்கு பணம் (நிதி) வருவாய்க்கு வழி செய்துகொள்ளும் ஏற்பாடு இருந்திருக்கிறது என்பதுதான்.
எது போலென்றால் சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன் வரையில், அரசாங்க நிதி (வரி) வசூலுக்கு அரசாங்கமே மது (கள்ளு)க்கடைகளை ஏற்பாடு செய்து அதை வியாபாரம் போல் செய்து பணம் சம்பாதித்து, வரி நிதியோடு சேர்த்து வந்ததுபோலவேயாகும். அதனா லேயே கோவில் கட்டுவது என்பதை அரசாங்கத்திற்கே உரிமையாக வைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன் அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் கோவில் கட்டக் கூடாது என்கிற நிபந்தனையும் இருந்து வந்திருக்கிறது. இதற்கு ஆதாரம் நம் தேசத்தில் சுதேச சமஸ்தானங்கள் இருக்கும்வரை அந்த அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் எந்த கோவிலையும் கட்டக் கூடாது என்ற நிபந்தனை இருந்து வந்திருப்பதேயாகும்.
சுமார் 2000 ஆண்டுகளுக்குமுன் சாணக்கியர் என்ற ஒரு பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார்; அவர் உண்டாக்கிய அர்த்தசாஸ்திரம் என்னும் நீதி நூலில் இதைப்பற்றி விளக்கியுள்ளார். இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நூலா னது மனுதர்ம சாஸ்திரம், யாக்ஞவல்கியர் ஸ்மிருதி ஆகிய நூல்களுக்கும் முந்தியதாகும் என்பது ஆராய்ச் சியாளரின் முடிவு. இதிலிருந்து மனு யாக்ஞவல்கியர் முதலிய நீதி நூல்களின் ஆயுள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு உட்பட்டதென்றே தெரிகிறது.
இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் மத சம்பந்தமான ஸ்தாபனங்களை மேற்பார்வை செய்யும் அரசாங்க அதிகாரி நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துகளின் வரும்படிகளையும், கோவில்களுக்கு பக்தர்களிடமி ருந்து பணமாக வசூலித்து, அந்தப்படி வசூலிக்கப்படும் பணத்தையும் அரசாங்க வருவாய் நிதியுடன் சேர்க்கவேண்டும் என்ற விதிகள் இருந்திருக்கின்றன.
புதிய வருவாய்த் திட்டம்
அரசாங்கத்திற்குப் புதிய வருவாய்த் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வசூலிக்க பல திட்டங்கள் இருந்தன.
ஒரு இரவில் பொதுமக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு கடவுளை அல்லது மேடையை ஏற்படுத்தி, அதைத் தானாகத் தோன்றியது என்று விளம்பரப்படுத்தி, அதை வணங்கினால் பல கெடுதிகள், வியாதிகள் விலகு மென்று கூறி திருவிழாக்கள் முதலியன நடத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டியது.
அரசாங்க ஒற்றர்களை விட்டு ஒரு மரத்தில் பிசாசு, முனி இருப்பதாக பொதுமக்களிடம் பயத்தை ஏற்படுத்திவிட வேண்டும். பிறகு இதை விரட்டவும், திருப்தி செய்யவும் பெரிய சாந்தி விழா நடத்தி பெருந்தொகை வசூலித்து பொக்கிஷத்திற்கு சேர்த்துவிடவேண்டும்.
அரசரது ஒற்றர்கள் சந்நியாசி மாதிரி வேடம் பூண்டு இந்த தந்திரத்தைச் செய்து பணத்தை வசூலிக்க வேண்டியது. இவற்றால் பிசாசு நகரத்தை விட்டுப் போய்விடுகிறது. பணம் அரசரது பொக்கிஷத்திற்கு சேர்கிறது. அந்தக் காலத்தில் அரசனுக்குப் பணம் தேடிக் கொடுக்கும் வேலை அதிகாரிகளுக்கும் கடுமையான வேலையாகவே இருந்திருக்கவேண்டும்.
மற்றும் பாம்பைக் காட்டி பணம் பறிக்கும் தந்திரம் இதைவிட விசித்திரமானது; இது இன்றுங்கூட சிறிது மாற்றத்துடன் - ஒரு கோவிலிலாவது - இருந்து வருவ தாகத் தெரிகிறது. சாணக்கியர் காலத்தில் தீர்த்தம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்குமென்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம். சாதாரணமாக எளிதில் இவ்விஷயங்களை நம்பாத மக்களிடத்தில்தான் இந்த தீர்த்தம் உபயோகிக்கப்பட்டது. இதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மருந்தாக உபயோகித்தார்கள். ஆனால், இந்தத் தந்திரங்களையெல்லாம் அரசர் களுடைய காரியத்திற்காக உபயோகித்தார்களேயன்றி இன்று நடப்பதுபோல் ஒரு சிலருடைய சுயநல வாழ்வுக் காகவன்று என்பதை ஞாபகத்திலிருத்திக் கொள்ள வேண்டும். தந்திரம் இரண்டும் ஒன்றுதான்.
பார்ப்பான் தன்னலத்தையும், ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந் திரத்தையும் உபயோகிப்பான் என்று பிரஞ்சு பாதிரி யாரான கற்றறிந்த ஆபே டூபே ஒரு நூற்றாண்டுக்குமுன் எழுதியிருக்கிறார். மேலும் சாணக்கியர் கூறுவதாவது:
அற்புதங்கள் உற்பத்தி
அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் பால் வடித்தாலாவது அல்லது அகாலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்திருந்தாலாவது அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது ஜனங்களிடம் காட்டி பிரசித்திப்படுத்தவேண்டும்.
அல்லது ஒரு கிணற்றில் அனேக தலைகளை யுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.
ஒரு பாம்பு விக்கிரகத்தில் துவாரமிட்டோ அல்லது கோவிலின் இருட்டு மூலையிலோ அல்லது ஏதாவது பொந்திலோ பசியால் வாடிக் கிடக்கும் பாம்பு ஒன்றை வைத்து, ஜனங்களைப் பார்க்கச் சொல்லி பணம் வசூலிக்கலாம். இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத ஜனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்த மென்றும், பிரசாதமென்றும் சொல்லிக் குடிக்கும்படிச் செய்து, அவர்கள் குடித்து மயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் என்றும் சொல்லவேண்டியது. அல்லது தாழ்ந்த ஜாதியானொருவனைப் பாம்பு கடிக்கும்படி செய்து இம்மாதிரி துர்சகுனம் நேரிடாது தடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.
தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது பொக்கிஷத்தைச் சேரவேண்டும்! அரசனது செலவுக்காக அரசன் வாழும் பொருட்டுப் பணம் வசூலிக்க ஒரே இரவில் தேவதைகளையும், பீடங்களையும் ஸ்தா பித்துத் திருவிழாக்கள் நடத்தவேண்டும்! காணிக்கை களைப் பெறுவதற்காக அடிக்கடி கடவுள்கள் தோன்றும் படிச் செய்யவேண்டும்! சாதாரணமாக மிக வெளிப் படையான தந்திரங்கள்தான் அதிகமான பலனை அளிக் கின்றது. கடவுள் தம் மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்து பணம் திரட்டும் வழி முன் காலத்தில்தான் மற்ற நாட்டுப் புரோகிதர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவில் இன்றும் இவ்வழக்கம் ஓயவில்லை. இங்கு விக்கிரகங்களே பேசுகின்றன. இவற்றை வழிபடுகிறவர்கள் மிகக் கவனமாகக் கேட்டு பரவசமடைகிறார்கள். ஆனால், கல் விக்கிரகத்தின் உள்ளோ, பக்கத்திலோ வஞ்சகனொ ருவன் மறைந்திருந்து விக்கிரகத்தின் வாய்வழியாகப் பேசுகின்றான் என்பதை இவர்கள் அறிவதில்லையென்று ஆபே டூபே கூறுகின்றார். இவைபோன்று இன்றளவும் கையாளப்பட்டு வருகிற பலவிதத் தந்திரங்களையும் அவர் விரிவாக விளக்குகிறார்.
கோவில்மூலம் வியாபாரம்
இனி நமது சாணக்கியரைக் கவனிப்போம். சாணக் கியர் காலத்தில் கோவில் வருவாயிலிருந்து ஒரு பைசா வாவது அரசனது பொக்கிஷத்தைச் சேரத் தவறி விட்டால், அந்த இடத்திலேயே கோவில் அதிகாரி ஏன் தூக்கி லிடப்பட்டிருப்பார் என்பதை நாம் மேற்சொன்னவற்றி லிருந்து அறிந்துகொள்ளலாம்.
அது மிகவும் நியாயமே, ஏனெனில், அக்காலத்தில் விக்கிரகங்களும், பீடங்களும், அரசனது வியாபாரத்திற் காக ஏற்பட்டவைகளாகும். பொது ஜனங்களின் பணத் தைச் செலவிட்டே விக்கிரகங்களையும், பீடங்களையும், மடங்களையும், கோவில்களையும் உண்டுபண்ணி பரி பாலித்து அவற்றைப்பற்றி பெரிதாக விளம்பரப்படுத் தியும் வந்தார்கள். இக்காலத்தில் அரசாங்கத்தார் எவ்வாறு பெரும் பொருள் செலவிட்டு மேட்டூர் தேக்கத்தையும், சுக்கூர் அணைக்கட்டையும் கட்டி, அவற்றினின்றும் லாபத்தை எதிர்பார்க்கின்றார்களோ, அதேபோல முன் காலத்து அரசர்கள் கோவில்களையும், ஸ்தலங்களையும் உற்பத்தி செய்ததும் லாபத்தைக் கருதியேயாகும்.
இம்மாதிரி மத ஸ்தாபனங்களை ஏற்படுத்திய முற்கால மன்னர்களைச் சுற்றி விரோதிகள் எப்பொழுதும் இருந்து வந்ததால் இடைவிடாது யுத்தங்கள் நேரிட்டுக் கொண் டேயிருந்தன; இதற்காக அவர்கள் பெருஞ்சேனைகளை வைத்திருந்தனர். யுத்தங்களுக்கும், சேனைகளுக்கும் வேண்டிய பணத்திற்காக ஏராளமான வருவாய் தேவைப் பட்டது. கோவில் வருவாயைக் கொண்டு பார்ப்பனருக்கு மட்டும் சோறு போடுவது என்றிருந்தால், அரசும் கோவிலும் அன்றே மறைந்திருக்கும். இக்கோவில்களையும், பீடங்களையும், கடவுள்களையும் படைத்த அக்காலத்து அரசர்களுக்கு அரசாங்கத்தை நடத்தும் கஷ்டம் எவ்வளவு என்று தெரியும். உதாரணமாக பூரண மதுவிலக்கு ஏற்பட்டால், நாட்டில் உயர்தரக் கல்வியை நிறுத்த நேரிடு மென்று இன்று (இராஜாஜி முதலியவர்கள்) சொல்வது போல, தங்களது க்ஷேமமும் கோவில் வருமானத்தில் தொங்கிக் கிடந்தனவென்பதை அக்கால அரசர்கள் அறிந்திருந்தார்கள். ஆதலால் அவர்கள் அதன் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள். இவ்வுலக சுக துக்கங்களைக் குறித்து அவர்கள் நினைத்தார் களேயன்றி மோட்சலோகத்தைப்பற்றி நினைக்கவில்லை. இக்காலத்து சுதேச மன்னர்களில் பெரும்பாலோர் யாதொரு பொறுப்பும், கவலையுமெடுக்காது மோட்ச லோகத்தைப்பற்றி நினைக்கின்றார்கள். பார்ப்பானை திருப்தி செய்தால் மோட்சத்துக்கு சீட்டு கிடைத்து விடுமென நம்புகிறார்கள். அங்ஙனம் செய்துவிட்டு, தங்கள் ராஜ்ஜியங்களை விட்டு தற்கால மோட்ச பூமியான பாரிஸ் முதலிய மேநாடுகளுக்குச் சென்று விடுவதுமுண்டு.
மன்னர்கள் யோக்கியதை
சர்தார் கே.எம். பணிக்கர் அவர்கள் இந்திய சமஸ்தானங்களும், இந்திய அரசாங்கமும் என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.
பல சிற்றரசரகள் மித மிஞ்சிய சுக போகங்களுடன் இழிவான வாழ்க்கை வாழ்வதற்குக் காரணம் அவர்கள் இராஜ்ஜிய பாரத்தில் நேராக பொறுப்பேற்று நடத்தாததேயாகும். முன்காலங்களில் குடிகளைத் துன்புறுத்தும் கொடுங்கோல் மன்னனையும், தனது சுகமொன்றையே கருதும் துர்நடத்தைக்காரரையும் சும்மா விட்டு வைத்திருக்கமாட்டார்கள். வெளியிலிருந்தேற்படும் படையெடுப்போ அன்றி உள்நாட்டுக் கலகமோ அவனது வாழ்க்கையை முடித்து விடும். ஆனால், இக்காலத்தில் அப்படியல்ல, ஒரு அரசன், தான் பிரிட்டிஷ் அரசாங்கத் தோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மீறாதிருப்பது வரையும், நாகரிக ஆசாரங்களை வெளிப்படையாக புறக்கணியாதிருப்பது வரையும் அவனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஆதரவிருக்கின்றது. அவன் தனது சுக போகங்களுக்காகத் தன் இஷ்டம்போல் பொக்கிஷத்தை உபயோகிக்கவும், குடிகளை கொள்ளையடிக்கவும் விட்டு விடுகிறார்கள்.
(தந்தை பெரியார் பிறந்த நாள்
விடுதலைமலர், 1970)

No comments:

Post a Comment