சத்தியாக்கிரகம் ராஜிக்கு உட்படாது
வைக்கம் சத்தியாக்கிரகத்தின் வரலாற்றினை ஈண்டுச் சுருக்கமாக நினைவு கூர்தல் இன்றியமையாதது. வைக்கம் கோவிலின் மதிற் சுவர்களைச் சுற்றிலுமுள்ள நான்கு வீதிகளிலும் தாழ்ந்தவகுப்பினர் எனப்படுவோராகிய ஈழவர் முதலானோர் செல்லுதல் கூடாதென்றிருந்த கொடிய சமூக வழக்கத்தை ஒழித்து, மக்கள் யாவருக்கும் பொதுவான பாதைகளில் எல்லாச் சாதியினரும், சமயத்தினரும் செல்லும் உரிமையை நிலை நாட்ட எழுந்ததாகும் இவ்வைக்கம் சத்தியாக் கிரகப் போர், இப்போரினை எதிர்த்து நின்ற வைதீகக் கூட்டத்தினருக்கு திருவாங்கூர் அரசினர் முதலில் துணை போந்து தலைவர்களைச் சிறைக்கனுப்பிவிட்டு, கோஷா வீதிகளுக்கும் கொண்டுவிடும் நான்கு வீதிகளையும் நடுவில் நடுவில் கழிகள்கொண்டு அடைத்து., போலீ காவலர்களைக் காவல் செய்யநியமித்து சத்தியாக்கிரகிகள் மேற் செல்லாவாறும் மறித்தனர். சத்தியாக்கிரகிகள் நாடோறும் கூட்டம் கூட்டமாகச் சென்று வழி மறித்துள்ள விடத்தில் நின்று மழையென்றும், வெயிலென்றும் கருதாமல் சத்தியாக்கிரகம் புரிந்து வந்தனர். வைதீகக் கூட்டத்தினரால் பல்வித அல்லல்களுக்கு ஆளாகியும் சத்தியாக்கிரகிகள் அன்பு நெறி அறநெறிகளினின்றும் ஒரு சிறிதும் வழுவாது காந்தியடிகளின் ஆணையின்படி ஒழுகி வந்ததும், வருவதும் பெரிதும் போற்றத்தக்கது. உள்ளன்புடனும், உண்மையாகவும் உழைத்து வரும் சத்தியாக்கிரகிகள் இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்பது திண்ணம்.பல்லூழிகளாக நின்று நிலவி வரும் இந்து சமயத்தின் நற்பெயரைக் கெடுப்பான் பிற்காலத்தில் ஒரு சில அறிவிலிகளால் அதனுள் புகுத்தப்பட்ட தீண்டாமை என்னும் கொடிய பேயை நாட்டினின்றும் ஓட்டி, இந்து சமயத்தின் தூய தன்மையையும், மக்களின் உரிமைகளையும், சமத்துவத் தன்மையும் நிலைநாட்டவேண்டுமென்ற உயரிய எண்ணங்கொண்டு திருவாங்கூர் சமதானத்திலுள்ள வைக்கம் என்னும் ஊரில் சத்தியாக்கிரகம் தொடங்கப் பெற்று நடைபெற்று வருவது நேயர்கள் நன்கு அறிவார்கள். இவ்வுண்மைப் போர் ஓராண்டாக நடைபெற்று வருகிறது; இன்னும் வெற்றிபெறவில்லை; ஆனால், விரைவில் வெற்றியுறும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. இச்சத்தியாக்கிரக நிகழ்ச்சியைப் பற்றி இவ்வொரு வாரமாக ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகள் வெளிப்போந்து ஒரு காலை இன்ப மூட்டியும் மற்றொரு காலை துன்ப மூட்டியும், இறுதியில் மக்களைப் பெருங்கவலையில் ஆழ்த்திவிட்டன என்பதே எமது கருத்து மக்களுக்குள் பிறப்பினால் உயர்வு, தாழ்வு எவ்வாறெனும் இல்லை என்ற உயரிய சிறந்த உண்மையை உலகினர்க்கு அறிவுறுத்தும் பெரும்பேறு-ஒரு பெண்ணரசிக்கும் வாய்க்கும் என்று யாம் கொண்டிருந்தபேரவா நிறைவுறுங்காலம் நீடிக்கப்பட்டமை காணக் கவற்சியுறுகின்றோம். இத்தகைய பெருமையினை திருவாங்கூர் பெண்ணரசியார் பெறுதற்கில்லாமற்போய் விடுமோ என்றும் அஞ்சுகின்றோம் இது கிடக்க இதுகாறும் வெளிப்போந்த செய்தி களில், சத்தியாக்கிரகிகள் காந்தியின் உடன்படிக்கையைப் புறக்கணித்து வரம்பு மீறி ஒழுகத் தலைப்பட்டுவிட்டனர் என்ற செய்தி பொய் ஆயினமை கண்டுமகிழ்ச்சி உறுகின்றோம்.
இவ்வாண்டின் தொடக்கத்தில், சத்தியாக்கிரகிகளுக்கு ஊக்கமும், உண்மை நெறியும் ஊட்ட காந்தியடிகள் வைக்கம் போந்தார். திருவாங்கூர் பெண்ணரசியையும் இளவரசரையும். நேரில் கண்டு வைக்கம் சத்தியாக்கிரகத்தின் உண்மையையும் அதனை அவர்கள் ஆதரிக்க வேண்டிய கடமையினையும் உள்ளத்தில் பதியும்படி எடுத்துரைத்தனர் வைக்கம் சத்தியாக்கிரகம் தற்காலம் உற்ற நிலைமைக்கு காந்தியடிகள் வைக்கம் போந்ததே ஆகும் எனக் கூறுதல் மிகையாகாது. திருவாங்கூர் அரசாங்கத்தின் போலீ கமிஷனர் பிட் என்பாருடன் காந்தியடிகள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். சத்தியாக்கிரகிகள் முன்னேறாவண்ணம் தடுப்பதற்கென வைக்கப்பட் டிருக்கும் போலீ காவலை அரசினர் எடுத்துவிடவேண்டுமென்பதும், சத்தியாக்கிரகிகள் அரசினர் அனுமதியின்றி முன்னேறுதல் கூடாதென்பதும் தான் அவ்வுடன்படிக்கையின் முடிவுகள். இம்முடிவுகள் இரு கட்சியினரும் ஏற்று அவ்வாறே நாளிதுவரை ஒழுகி வந்தனர்.
வைக்கம் கோவிலைச்சுற்றிலும் உள்ள நான்கு வீதிகளில் கீழ் வீதி ஒன்றினைத் தவிர மற்றை மூன்று வீதிகளிலும் தாழ்ந்த வகுப்பினர் எவ்வித தடையுமின்றிச் செல்லலாமென்று திருவாங்கூர் அரசினர் உத்தரவு செய்திருப்பதாக இதுகாலை யாம் அறிகின்றோம். இச்செய்தியில் யாம் ஒரு சிறிதும் மகிழ்ச்சி உறவில்லை. அது சத்தியாக்கிரகத்தின் வெற்றியுமாகாது. சத்தியாக்கிரகத்தின் உண்மையினை அறியாதாரே இதனை வெற்றியெனக் கொள்வர்.
சத்தியாக்கிரகத்தின் உண்மை யாது? சத்தியாக்கிரகம், உண்மை என்பன ஒரு பொருட் கிளவிகள். சத்தியாக்கிரகம் வெற்றிபெற்றதெனக் கூறின் உண்மை வெற்றி பெற்றதெனப் பொருள். உண்மை எக்காலத்தும் வெற்றி உறும் என்பதில் எட்டுணையும், ஐயமின்று; உண்மைக்குத் தோல்வி என்பது எக்காலத்தும் இல்லை. ஆதலால், சத்தியாக்கிரகத்தில் உண்மையில் ராஜி என்பதே கிடையாது. அரசினர் மூன்று வழிகளில் சத்தியாக்கிரகிகள் செல்லலாமெனக் கூறியது சத்தியாகிரகம் அவர்தம் உள்ளத்தைக் கரையச் செய்து விட்டது என்பதைக் காட்டுகிறதேயன்றிச் சத்தியாக்கிரகம் வெற்றிபெற்றது என்பதை ஒரு சிறிதும், குறிக்கவில்லை என்ற உண்மையை ஒவ்வொரு சத்தியாக்கிரகியும் உளத்தமைத்தல் வேண்டும்.
ஆகவே, உண்மை முழுவெற்றியுறும் வரை சத்தியாக்கிரகிகள் உழைத்தல் கடனாகும். சத்தியாக்கிரகத்தின் ஆற்றலை அறியாது. மயங்கினவர்கள் கண்முன் அதன் ஆற்றலைக் கண்டபின்னரும் எவ்வித மயக்கமும் உறுதல் வேண்டுவதின்று. அரசினர் குழாத்தினர் உளங்கரையைச் செய்த உண்மைப் போர் வைதிகக் கூட்டத்தாரின் உள்ளத்தையும் கரைத்து உண்மையை உணர்ந்து ஒழுகச் செய்யும் என்பதில் ஐயப்பாடில்லை. சத்தியாக்கிரகிகளின் பொறுப்பு முன்னைவிட இதுகாலை பெருகி நிற்கிறதென்றே கூறுவோம். சிறு வெற்றியினைக் கண்டு தலை தடுமாறிப் பேய்க்கூத்தில் வீழ்ந்து மாயாவண்ணம் சத்தியாக்கிரகிகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அன்பு நெறியையும், அறநெறியையும் ஒரு சிறிதும் கைநெகிழவிடாமல் காந்தியடிகளின் ஆணைக்கடங்கி நின்றும், காந்தி-பிட் உடன்படிக்கைக்கு உட்பட்டும் சத்தியாக்கிரகத்தை மிக்க ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் சத்தியாக்கிரகிகள் நடாத்திவரும்படியாகக் கேட்டுக்கொள்ளுகிறோம். உண்மையின் வலிமையை உணராமல் எள்ளி நகையாடி ஒதுங்கி நின்ற பொது மக்களும் தமது குறுகிய நோக்கத்தை அறவே நீக்கிவிட்டுச் சத்தியாக்கிரகி களுக்குத் தம்மாலியன்ற உடல் உதவியும், பொருள் உதவியும் புரிவார்களென எதிர்பார்க்கிறோம்.
- குடிஅரசு தலையங்கம் - 28.06.1925
வைக்கம் சத்தியாக்கிரகம்
திருவாங்கூர் அரசாங்கத்தார் வைக்கம் சத்தியாக்கிரகத்தை விரைவில் முடித்துவிட ஆவலாய் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது அச்சமதானத்து திவான் ஆன ஸ்ரீமான் ஆர். கிருஷ்ணப்பிள்ளை அவர்களை சமதானத்து மகாராணி அவர்கள் வைக்கம் சத்தியாக்கிரக சம்பந்தமாகத் தமது அபிப்பிராயமென்னவென்று கேட்டிருப்பதாகவும், அதற்குத் திவான் அவர்கள் கீழ்க்கண்ட பதில் பகர்ந்திருப்பதாவும் அறிகிறோம்.
இவ்விவகாரத்திலுள்ள ரோடுகளை ஜாதிமத வித்தியாசமில்லாமல் எல்லாப் பிரஜைகளும் உபயோகப்படுத்திக் கொள்ளும்படி விட்டுவிட வேண்டிய தென்று யான் அபிப்பிராயப்படுகிறேன். அம்மாதிரி செய்வதை சமதான அரசாங்கத்தார் எப்பொழுதுமே எதிர்க்கவில்லை. இந்த உரிமையைச் சிலர் பலாத்காரத்தினால் அடைய முயற்சி செய்தால் கலகம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சியே அரசாங்கத்தார் தடை உத்தரவு போட்டனர். இந்த உரிமையை அவர்களுக்கு கொடுக்கக்கூடாதென்று ஸநாதன இந்துமதம் கூறவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள இந்துக்களல்லாத வர்கள் அந்த ரதாக்களின் வழியாக நடக்கச் சம்மதம் கொடுத்திருக்கின்ற பொழுது இந்துமதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்க மறுப்பதில் கொஞ்சமும் ஒழுங்கிருப்பதாகக் காணப்படவில்லை. கூடிய விரைவில் ஒரு அரச விளம்பரத்தின் மூலம் இந்த வித்தியாசத்தைப் போக்க வேண்டுவது அவசியமென்று யான் அபிப்பிராயப்படுகிறேன்.
இவ்வண்ணமாக திவான் அவர்கள் அபிப்பிராயம் கொடுத்த பிறகு, கூடிய விரைவில் மகாராணி அவர்களுடைய அனுகூலமான ஸ்ரீமுகம் எதிர் பார்ப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. ஆனால் இதிலிருந்தே நமது முயற்சிகளை விட்டுவிட வேண்டுமென யாரும் நினைத்தல் கூடாது. திருவாங்கூர் அரசாங்கத்தாரிடமிருந்தே ஒருவேளை அரைகுறையான ஸ்ரீமுகம் வெளியாயினும் ஆகலாம். ஏனெனில் இரண்டு கட்சியாரையும் சமாதானப்படுத்த வேண்டுமென நினைத்து அவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்ததை யாம் அறிவோம். அம்மாதிரி திருடருக்கும் - திருட்டுக் கொடுத்தவருக்கும் நல்லவர்களாக வேண்டுமென நினைத்து ஏதாவது கொஞ்சம் இடம் வைத்துக் கொண்டு மேற்சொல்லியபடி ஸ்ரீமுகம் வெளியாகுமேயாகில் பூரண வெற்றி பெறும்வரை நமது நிலையினின்றும் தளரக்கூடாது. ஒருவேளை பூரணவெற்றி கிடைத்துவிடினும், அதனுடன் உலகத்தினிடை இம்மாதிரி நிறைந்துள்ள அக்கிரமங்களெல்லாம் ஒழிந்து விட்டனவென்று நினைக்கக் கூடாது. எங்கு எங்கு இவ்விதக் கொடுமைகள் உள்ளனவோ ஆங்காங்குச் சென்று நமது சத்தியாக்கிரகக் கொடியை நாட்டி இக்கொடிய வழக்கத்தை ஒழிக்க அஹிம்சையுடன் பாடுபடுதல் வேண்டுமென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
- குடி அரசு கட்டுரை, 07.06.1925
வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக் கொண்டாட்டம்
ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் உரை
முடிவுரையில், தனக்கும் தமது மனைவிக்கும் செய்த உபச்சாரத் திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாகிரக இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும், தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள் காலம் வந்து விடவில்லை தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்குமென்றும். சத்தியாகிரக ஆரம்பத்தில் பிராமணர்கள் கட்சியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்களுக்கு விரோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சர்க்காரார் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே சத்தியாகிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப் படத்தக்கதாய் இருக்கிறது.
சத்தியாகிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அனுப வித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத்காரத்திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ, நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாகிரகத்தின் உத்தேசம், கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாதென்பதுதான். அந்த தத்துவம் இந்த தெருவில் நடந்ததோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்திரத்தை கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை. மகாத்மா காந்தியும், மகாராணியாரைக் கண்டு பேசிய காலத்தில் மகாராணியார் மகாத்மாவைப் பார்த்து இப்பொழுது தெருவைத் திறந்து விட்டுவிட்டால் உடனே கோயிலுக்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்களேயென்று கேட்டார்கள். மகாத்மா அவர்கள் ஆம், இதுதான் என்னுடைய குறியென்றும், ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டி ஜனங்கள், போதுமான பொறுமையும், சாந்தமும் அவசியமான தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார்களாவென்று நான் அறியும் வரையில் அக் காரியத்தில் பிரவேசிக்க மாட்டேனென்றும், அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண்டிருப்பே னென்றும் சொன்னார்.
வைக்கம் சத்தியாகிரகத்திற்கு விரோதியாயிருந்தவர்கள் பிராமணர்களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். மனித உரிமை அடைய அந்நிய மதங்களுக்குப் போவது மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமிருந்தாலும் கிருதுவ மதத்திற்காவது, மகமதிய மதத்திற்காவது செல்லலாமேயொழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்டமில்லை. ஏனென்றால், ஆரிய சமாஜத்திற்குப் போவதனால் பொருளில்லாத அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்வதோடு பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத் தினம் நமது சுதந்திரத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் விரோதிகளாயிருக்கின்றார்கள். அந்த நிலைமைக்கு நீங்களும் வரக்கூடாதென்று நினைப்பீர்களேயானால் கண்டிப்பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள்.
(வைக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் தந்தை பெரியார்
29.11.25 ஆம் தேதி ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு) குடிஅரசு - 06.12.1925
கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய் முழங்காலுக் குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ. ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அதுபோல் இருமடங்கு வேலை செய்கிறார். ஒரு ஜாதி இந்து என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்கு புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார். ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம் பெருந்தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன் னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காணமுடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்கவேண்டும் என்பதற்காகத் தாம் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே _ அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்க மேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவ மிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வர வேண்டாமா?
|
No comments:
Post a Comment