Sunday, December 5, 2010

சண்முகத்தின் அஹம்பாவம்

தோழர் சண்முகம் அவர்கள் தனது தேர்தல் சம்பந்தமாய் ஆங்காங்கு பிரசங்கம் செய்து வருவது யாவரும் அறிந்ததாகும். அவருடைய எதிரிகளாகிய காங்கிரஸ்காரர்கள் - தேசிய பத்திரிகைக்காரர்கள் - பார்ப்பனர்கள் ஆகியோர் சண்முகத்தை வைவதற்கும் அவர்மீது பழி சுமத்தி விஷமப்பிரச்சாரம் செய்வதற்கும் ஒட்டவா ஒப்பந்தத்தையும், சட்டசபைத் தலைவர் பதவியில் அவர் வில்லிங்டன் பிரபுக்கு அடிமையாய் இருந்தார் என்றும், இனியும் அடிமையாய் இருக்கப் போகின்றார் என்றும் காங்கிரசுக்கு துரோகியென்றும், வியாபாரிகளுக்கு துரோகியென்றும் சொல்லி அவற்றைப் பல்லவியாய் வைத்து எதிர்ப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இவற்றிற்கெல்லாம் தக்க பதில் சொல்லப்பட்டவுடன் இப்போது அந்தப் பல்லவிகளை உபயோகிக்க முடியாமல் போய்விட்டதால் சண்முகம் பிரசங்கத்தில் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் இது அகம்பாவம் இது தலைவர்க்கழ கல்ல இப்படிப்பட்டவர்கள் தலைவராகக் கூடாது. இவர் தெரிந்தெடுக்கப்பட்டால் எப்படியும் தலைவராகி விடுவார். ஆதலால் தெரிந்தெடுக்கக் கூடாது என்று புதிய முறையில் இப்போது விஷமப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள் தென்னிந்தியாவில் உள்ள காங்கிரஸ் வாதிகள் அனேகர் - தேசிய பத்திரிகைக்காரர்கள், காங்கிர பத்திரிகைக்காரர்கள் ஆகியவர்கள் பெரிதும் யோக்கியப் பொறுப்பு, நடுநிலைமை என்கின்ற விஷயங்களைச் சுயநலத்துக்குத் தியாகம் செய்த, வீரர்களாக இருப்பதாலும், அதோடு மானாபிமானத்தையும் வந்த விலைக்கு விற்கத் துணிந்திருப்பதாலும், அவர்களுக்கு உண்மை, ஒழுங்கு, மனிதத் தன்மை என்பவை கண்களுக்கே தென்படாமல் போய்விடுகின்றன. அப்படிக்கில்லாமல் இருந்தால் தோழர் சண்முகம் என்ன பேசினார்? ஏன் பேசினார்? என்பவை களையும் முழுவதும் எடுத்துச் சொல்லி மேல் கொண்டு தங்கள் காரியங்களை நடத்தி இருக்கலாம். அவற்றை விட்டு விட்டு எங்கோ இரண்டொரு வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டு அதை ஆதியாய் வைத்து வெறிகொண்டவர் களைப் போல் கண்டபடி உளறிக் கொட்டி வருகின்றனர். இதன் பயனாய் காங்கிரஸ்காரர்கள் யோக்கியதையையும் தேசிய பத்திரிகைகளின் யோக்கியதையையும் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதே ஒழிய சர். சண்முகத்தை சிறிதாவது அசைக்க முடிந்தது என்று சொல்லிவிட முடியவில்லை.
சண்முகம் அசெம்பிளிக்குப் பிரசிடெண்டாக இருந்த தால் அவரை பிரசிடெண்ட் என்று மதித்தவர்கள் அல்லது அவரை பிரசிடெண்ட் முறையில் குறை கூறுகிறவர்கள் யோக்கியர்களாய் இருந்தால் அவருக்குப் போட்டி போட்டி ருக்கக் கூடாது, அல்லது பிரசிடெண்டாய் இருந்தபோது அவர் செய்த குற்றம் ஏதாவது இருந்தால் அதை மரியாதையுடன் எடுத்துக்காட்டி இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் சண்முகம் பிரசிடெண்டாய் இருந்தாலும் அவருக்கு போட்டி போடக் கூடாது என்கின்ற ஒழுங்கை அடிமை தேசத்திலுள்ள அடிமை மக்கள் பின்பற்ற முடியாது என்றும் காங்கிரஸ்காரர்கள் சட்டசபையில் இல்லாத காலத்தில் அவர் பிரசிடெண்ட் ஆனதினால் அவருக்கு காங்கிரஸ்காரர்கள் பிரசிடெண்ட் யோக்கியதையைக் கொடுக்க முடியாது என்றும் சொல்லி அவரை ஒரு சாதாரண மனிதனாகவே கருதி போட்டி போட்டுக் கண்டபடி மேடைகளில் ஏறி, காலிகள் முதல், சத்தியாக்கிரகிகள் என்கின்றவர்கள் வரை பூதக்கண்ணாடி வைத்துக் கண்டுபிடிப்பதற்குக் கூட உண்மையோ யோக்கியதையோ இல்லாமல் பேசி, எழுதி விஷமப் பிரச்சாரம் செய்தால் தோழர் சண்முகம் தனது வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொள்ள வேண்டுமென்று எந்தப் பயங்காளியாவது சொல்ல முன்வருவானா என்று கேட்கின்றோம்.
எதிர்ப்பிரச்சாரத்தின் யோக்கியதையைப் பற்றிச் சொல்ல ஒன்று இரண்டு விஷயங்களே போதுமென்று நினைக் கின்றோம்.
முதலாவது, அவரை செக்கு ஓட்டுகிற மாதிரியாகப் படம் போட்டு அதற்குச் சிறிது கூடப் பொருத்தமில்லாத விஷயத்தைச் சொல்லி அற்பத்தனமாய், போக்கிரித்தனமாய் பிரச்சாரம் செய்தார்கள்.
இரண்டாவது, அதைவிட இழிவான முறையில் தோழர் சண்முகம் தனது தொகுதியை விட்டு பயந்துகொண்டு ஓடிவிட்டார் என்று கேவலப் பிரச்சாரம் செய்தார்கள். மூன்றாவதாக, அவர் சட்டசபைக்குப் போனால் பிரசிடெண் டாகி விடுவார். பிரசிடெண்டானால் வைசிராய் பிரபுவுக்கு அடிமையாகி விடுவார். ஆதலால், அவருக்கு ஓட்டுக் கொடுக்கக்கூடாது என்று விஷமப் பிரச்சாரம் செய்தார்கள்.
இவை தவிர அப்படிக் கெடுதி செய்து தேசத்தைக் காட்டிக் கொடுத்தார் இப்படிக் கெடுதி செய்து தேசத் துரோகியானார் என்றும் பிரச்சாரம் செய்தார்கள்.
இவ்வளவு காரியங்கள் நடந்த பிறகு தோழர் சண்முகம் மேடையேறாமல் இருக்க முடியுமா என்று பார்லிமெண்டு ஒழுங்கு தெரிந்த மேதாவிகளைக் கேட்கின்றோம்.
ஆண்மையோடு, வீரத்தோடு போர்புரிபவர்களே யுத்த முறையைப் பற்றிப் பேச யோக்கியதை உடையவர்களா வார்கள். சண்டித்தனமான போர் முறையில் யுத்த முறை யைப் பற்றிப் பேசுவது, தோல்வியை ஒப்புகொண்டதாகுமே ஒழிய வேறில்லை.
சண்முகத்தை இந்தப் பார்ப்பனர்கள் வம்புக்கிழுக்கிறார் களா? அல்லது அவரே வம்புக்கு வந்தாரா? என்பதைப் பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
வேட்டைக்குப் போன ஒரு வேடன் ஒரு மிருகத்தைச் சுட குறி பார்க்கிறபோது, அந்த மிருகம் வேடனைப் பாயவந்தால் வேடன் அய்யோ மிருகம் பாய வருகிறதே என்று அதன் மீது பழி கூறுவது எவ்வளவு நியாயமும் வீரமும் ஆகுமோ, அதுபோல் சும்மா இருக்கும் சண்முகத்தை வம்புக்கிழுத்து விட்டு விட்டு அய்யோ சண்முகம் இப்படிப் பேசினாரே! அப்படிப் பேசினாரே!! அவர் அகம்பாவம் எவ்வளவு என்று பேசுவதில் ஆண்மை எங்கே, வீரம் எங்கே, நீதி எங்கே, உண்மை எங்கே என்று கேட்கின்றோம்.
சண்முகம் ஒரு பதவியில் இருப்பவர், அவர் பெரிய மனிதர், ஆதலால் இப்படிப் பேசக் கூடாது என்று தர்ம உபதேசம் செய்கிறார்கள் சிலர். சிறிதும் வெட்கமில்லாமல் சண்முகம் பெரிய மனிதர், இவர்கள் அது அல்லாதவர்கள், ஆதலால் இவர்கள் என்ன பேசினாலும் அவர் ஒன்றும் பேசக் கூடாது என்பதை இவர்களே ஒப்புக் கொள்ளுவது போல்தான் ஆகின்றது.
நாய்கடித்தால் நாயைத் திருப்பிக் கடிக்கக் கூடாது என்பது சரியான நீதிவாக்கியந்தான். ஆனால் அதை அடிக்காமல் இருக்க முடியுமா என்று தான் கேட்கின்றோம்.
காங்கிரஸ் துரோகி, தேசத் துரோகி என்று சொன்ன பிறகே அவர், தான் துரோகி அல்ல என்று பதில் சொல்ல வந்தால் எலக்ஷன் போட்டியில் அவர் அகம்பாவமாய் பேசினார் என்று சொல்லுவது அர்த்தமற்ற வார்த்தையேயாகும்.
இப்போதும் அவர் அதே வார்த்தையைத் தான் சொல்லுகின்றார். காங்கிரஸ்காரர்கள் என்னை எவ்வளவு தேசத் துரோகி என்று சொல்லி விஷமப் பிரச்சாரம் செய்தாலும் நான் வெற்றி பெறத்தான் போகின்றேன். பொது ஜனங்களுக்குச் சொந்த புத்தி உண்டு. ஆதலால் அதோடு மாத்திரமல்ல நான் இந்திய சட்டசபைத் தலைவருமாகத்தான் போகின்றேன் என்று சொல்லுகின் றார். அதில் என்ன தப்பு? அதற்காக அவரை என்ன செய்யமுடியும்? என்றுதான் கேட்கின்றோம்.
இந்த வார்த்தைக்கு அகம்பாவம் காரணமா? அல்லது அவரைத் தெரிந்தெடுக்கப்போகும் ஓட்டர்களின் ஞானமும் வாக்குறுதியும், நாணயமும் காரணமா என்று கேட்கின்றோம்.
தோழர் பனகால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று எப்படி எல்லாப் பார்ப்பனர்களும் டிங்-டங்-டாங் என்று சுதேசமித்திரன் முதல்கொண்டு தோழர்கள் சீனிவாச அய்யங்கார், அல்லாடி அய்யர், சி.பி. ராமசாமி அய்யர் முதல் கொண்டு ஆகாயத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்களோ, அது போலவே இப்போதும் சர். சண்முகம் வெற்றிபெறக் கூடாதென்று அந்த அனாதைகள் உள்பட மகாத்மாக் களை உபயோகித்துக் கொள்வது உள்பட காரியங்கள் நடக்கின்றன. நடந்தால் நடக்கட்டும் என்றேதான் சொல்லுகின்றாரே ஒழிய இதற்குப் பயப்பட வில்லை. சண்முகம் தோற்றுவிட்டாலும் முழுகிப்போவது ஒன்றும் இல்லை. மேலால் நடக்கப் போவது என்ன வென்றுதான் கேட்கின்றோம்.
1926இல் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப் போனதுதான் மந்திரிச் சபையிலும் நிர்வாக சபையிலும் பார்ப்பனப் பூண்டுக்கு இடமில்லாமல் போனதற்குக் காரணமாய் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை.
பார்ப்பனரல்லாதாருக்கு அவர்கள் வீதாசாரத்துக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூட கொடுக்கக் கூடாது என்று சொல்லி மிரட்டியதின் மூலமாய் ஏமாற்றிய காரணம் தான், இன்று பார்ப்பனர்களைத் தங்கள் வகுப்புக்குத் தகுந்தபடி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கச் செய்ததும் சில இடங்களில் அடியோடு இல்லாமல் போக நேரிட்டதுமாகும்.
அதுபோலவே சண்முகத்தின் விஷயமும் தோல்வி ஏற்படாது, ஏற்பட்டாலும் அது ஒரு சமயம் சண்முகத்தின் சுயநலத்துக்கு விரோதமாக மாறினும் பார்ப்பனரல்லதார் நன்மைக்கு இரட்டை லாபம் என்பதோடு பார்ப்பனர் நிலைமை கடுகளவு கூட முற்போக்கு அடையக் கூடியதாய் இராது என்பதையும் தைரியமாய் சொல்லுவோம். ஆகையால் இன்றைய பார்ப்பனர்களால் பிறர் கண்டுபிடிக்க முடியாமலும், தோல்வி அடையாமலும் இருக்கும்படியாக எவ்வித பித்தலாட்டமும், விஷமப்பிரச்சாரமும் செய்ய முடியாது என்பதும், அந்தக்காலம் மலையேறி விட்டது என்பதும் நமது அபிப்பிராயமாகும்.
- பகுத்தறிவு - துணைத்தலையங்கம் - 14.10.1934

No comments:

Post a Comment