Thursday, December 9, 2010

ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி!

அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய  அறிவாளிகளாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் நாஸ்திகர்கள்தான்; நாஸ்திகனாக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது. அவர்கள்தான் தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர். அதன் காரணமாகவே அவர் ஒரு பெரிய நாஸ்திகர். அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம்  என்பவரெல்லாம் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்.
இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்தமதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

டாக்டர் அம்பேத்கர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இந்து மதத்தை ஒத்துக்கொள்வதில்லை. அவர் காந்தியைப்பற்றிச் சொல்லும் போது “காந்தி ஒரு பச்சை இந்து. மனுதர்ம முறை, வர்ணாசிரம முறையைப் பாதுகாக்க நினைப்பவர். அவர் ஆதித்திராவிட மக்களுக்கு என்ன செய்ய முடியும்?’’ என்று கடுமையாகத் தாக்கி வருணாசிரம ஆதார சுலோகங்களையெல்லாம்கூட எடுத்துப்போடு, காந்தி பச்சை இந்துவாக இருப்பதால்தான் அவர் புத்தி இப்படிப் போகிறது என்று எழுதினார்.

1930_-35லேயே ஜாதி ஒழிப்பில் தீவிரக் கருத்துள்ளவராக இருந்தார்; ஜாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் (ஜாத்மத்தோடகமண்டல் என்று கருதுகிறேன்.) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஒரு அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் ஜாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக்கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமையுரையாக (address) 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு ஜாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள் என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஜாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல. ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை (Chapter) நீக்கிவிடவேண்டும் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர் “ஜாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழியவேண்டும்’’  என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப்பேசாமல் வேறு எதைப்பேசுவது? ஆகையால், அதை நீக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார்.  அதற்கும் அவர் நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்: தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது. நான் அம்பேத்கரிடம் அந்தப், பேச்சை வாங்கி “ஜாதியை ஒழிக்கும் வழி’’ என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார்.

நாம் இராமயணத்தைப்பற்றி வாயால் பேசிக்கொண்டிருக்கும் போதே, அதாவது 1932 லேயே அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு சிவராஜ்தான் தலைவர், இதெல்லாம் குடியரசில் இருக்கிறது.
அவர் ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கீதையைப்பற்றி பேசும்போது, கீதை ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்றே பேசினார். அப்போது சி. பி. ராமசாமி அய்யா போன்றவர்கள் “இதென்ன அக்ரமம்; வெறும் அம்பேத்கர் பேசியிருந்தால்கூடக் கவலையில்லை; ஒரு கவுன்சில் மெம்பராக இருக்கிற அம்பேத்கர் அதுவும் சென்னையில் வந்து, கீதை பைத்தியக்காரனின் உளறல் என்று பேசுவதென்றால் அக்ரமம்’’  என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள்.

நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். அந்த மாநாட்டுக்கு, சண்முகஞ் செட்டியார் வரவேற்புரை அளித்தார். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜெயக்கர் வந்திருந்தார். அவர் ஏதோ நம்மைப் பாராட்டிப் பேசிவிட்டுப் போய்விட்டார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம் ஆகப்போகிறேன் என்று சொன்னார். நானும் ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். தயவுசெய்து  அவசரப்பட்டுச் சேர்ந்துவிடாதீர்கள். குறைந்தது 1லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கைவைக்கக்கூடாத மதம் ((Perfect Religion)  என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கைவைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும்.  தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது, உதைக்க வந்தால்கூட சிபாரிசுக்காவது ஆள்வேண்டாமா? என்று சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக்கூடா தென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம்  மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கெனவே புத்தர்தான்.

நாங்கள் உலக புத்தர் மாநாட்டிற்குச் சென்றபோது அவரை பர்மாவில் சந்தித்தேன். புத்தர் மாநாட்டில் நான் பேசுவதாக ப்ரோகிராமில் (நிகழ்ச்சி நிரல்) போட்டிருந்தார்கள். ஆனால், எனக்குச் சொல்லவில்லை. நான் போனேன். பிறகு என்னமோ வேறொருவரை பேசச் சொல்லிவிட்டார்கள். அப்போது அம்பேத்கர் என்னிடம் இன்றைக்குக் கையெழுத்துப்போட்டு புத்தமதத்தில் சேர்ந்துவிடுவோம், என்று சொன்னார்.

மைசூர் மகாராஜா புத்தமதக் கொள்கையில் ரொம்பப் பற்றுள்ளவர். நானும் மைசூரிலேயே நிரந்தரமாகத் தங்கலா மென்றிருக்கிறேன். அவர் எத்தனையோ ஏக்கர் நிலம்கூட தருவதாகச் சொல்லி இருக்கிறார். இப்படி இதையெல்லாம் வைத்து ஒரு பெரிய யூனிவர்சிட்டி (பல்கலைக்கழகம்) ஆரம்பிக்காமல் நாமும்  சாகிறவரையில் பேசிக்கொண்டேயிருந்துதான் என்னாவது? ஏதாவது சாவதற்குள் செய்ய வேண்டாமா? என்று இன்னும் என்னென்னமோ சொன்னார். அதோடு தைரியமாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். சேர்ந்த பிறகு ஒரு அறிக்கை வெளியிட்டார்.

“நான் இனிமேல் ராமன், கிருஷ்ணன், சிவன், இந்திரன் முதலியவைகளைக்  கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. அவதாரங்கள் என்பவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ வணக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஜாதிமுறையில், இன்னும் மோட்சம் _  - நரகம் இவற்றை  நம்புவதில்லை; சடங்கு,  திதி -_ திவசங்கள் ஆகியவைகளில் நம்பிக்கையில்லை.’’ இனிமேல் இவைகளைச் செய்யமாட்டேன். இதுபோல இன்று நாம் எதை எதைக் கண்டிக்கிறோமோ, ஒத்துக்கொள்வதில்லையே, அதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கர் மக்களுக்கு வழி காட்டுபவர். ஜாதிமதக் குறைபாடுகளை மனதில்பட்டதைத் தைரியமாக எடுத்துக் கூறிவந்தார். சுயநலமில்லாமல் பாடுபட்டவர்; இந்தியா பூராவும் விளம்பரம் பெற்றவர். அவர் தமது மக்களுக்குப் பௌத்த மதத்திற்குப் போகும்படி வழி காட்டியிருக்கிறார். இங்கு  பலபேர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு, உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சிசெய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக்கொடுத்தார்.

அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்குமுன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது.
- தந்தை பெரியார் 28.10.1956 இல் வேலூர் நகராட்சி மன்றத்தில்
  ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை - 7.12.1956)

4 comments:

  1. But finally he married a Bhramin girl only..
    not married a SC/ST girl???

    why????

    ReplyDelete
  2. Excellent reproduction of the speech of EVR... It gives added information about Dr B R Ambedkar and his views on religion, and particularly about ill effects of Hinduism. Thanks for the informative reproduction. Keep it up.

    G Manivachagam
    maniadg@yahoo.co.in

    ReplyDelete
  3. i able to understand the part of biography of ambethukar by periyar ramasamy i like his speech at vellore
    jcsrg

    ReplyDelete