Saturday, December 18, 2010

கூவி அழைக்கிறோம்!


ஜாதி, மதம், வருணம், தேசம் என்கிற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும் எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம்.மனித சமூகத்தினரிடம் அன்பு கொண்டு சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்யவேண்டுமென்ற ஆசை-யுள்ள மக்களை அப்படிப்பட்ட சமதர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கச் சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம்.

ஏழை என்றும் பணக்காரன் என்றும், எஜமானன் என்றும், கூலி என்றும் ஜமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும், உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும், நிர்மூலமாக்கித் தரைமட்டமாக்கும் இயக்கம்.
மற்றும் குரு என்றும், சிஷ்யன் என்றும், பாதிரி என்றும், முல்லா என்றும், முன் ஜென்மம் பின் ஜென்மம் என்றும், கர்ம பலன் என்றும், அடிமையையும் எஜமானனையும், மேல் ஜாதிக்காரனையும் கீழ் ஜாதிக்காரனையும், முதலாளியையும் தொழிலாளியையும், ஏழையையும் பணக்காரனையும், சக்ரவர்த்தியையும், குடிகளையும், மகாத்மாவையும், சாதாரண ஆத்மாவையும் அவனவனுடைய முன் ஜென்ம தர்மத்தின்படி அல்லது ஈஸ்வரன் தன் கடாட்சப்படி உண்டாக்கினார் என்றும் சொல்லப்படும் அயோக்கியத்தனமான சுயநலங்கொண்ட சோம்பேறிகளின் கற்பனைகளையெல்லாம் வெட்டித் தகர்த்து சாம்பலாக்கி எல்லோர்க்-கும், எல்லாம் சமம்; எல்லாம் பொது என்ற நிலையை உண்டாக்கும் இயக்கமே!
ஜாதி, சமய, தேசச் சண்டையற்று - உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்று சாந்தியும் ஒற்றுமையும் அளிக்கும் இயக்கம். ஆதலால், அதில் சேர்ந்து உழைக்க வாருங்கள் வாருங்கள் என்று கூவி அழைக்கிறோம்.
ஈ.வெ.ரா. 
குடிஅரசு 30.7.1933

No comments:

Post a Comment