Tuesday, December 24, 2013

என்ன வெங்காய மொழி?

என்ன வெங்காய மொழி?
நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்,
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்,
நம் அரசாங்கம் - சாதி காப்பாற்றும் அரசாங்கம்,
நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்,
நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி,
இதை உயர்ந்த மொழி என்கிறார்கள். என்ன வெங்காய மொழி? இரண்டாயிரம் வருடங்களாக இருக்கும் தமிழ்மொழி சாதியை ஒழிக்க என்ன செய்தது? மொழி மீது என்ன இருக்கிறது? ஏதோ மொழி மீது நம்முடைய பற்று; விவரம் தெரியாமல் சிலருக்குப் பற்று. எந்த இலக்கியம் சாதியை ஒழிக்கிறது? நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - வெங்காயம் என்று பாடியிருக்கிறான்; இந்த மடையனும் தினமும் படிக்கிறான். அது முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை சாதியைக் காப்பாற்றுவதுதானே? அதை அனுசரித்துத்தானே புலவன் பாடியிருக்கிறான்? கோபித்துக் கொள்ளாதீர்கள்! நிலைமை அப்படி.
நம் மக்களை நெருக்கடியில் வைத்து, கீழே அதை எதிர்ப்பதற்கில்லாமல் ஏற்பாடு செய்தார்கள்; எதிர்த்த வர்களைக் கொன்றார்கள்; ஒழித்துக் கட்டினார்கள். எதிர்த்தால், இரணியனைப் பார்த்துக்கொள்; இராவணனைப் பார்த்துக்கொள்; சூர பதுமனைப் பார்த்துக்கொள் என்று சொல்லி மக்கள் எல்லோரையும் மடை யர்களாக்கிவிட்டர்கள். அதிலிருந்து வெளியில் வர யாரால் முடிந்தது? வெளியிலே வந்தால் அவர்கள் எல்லாம் நாத்திகர்கள்! துவேஷிகள்! 
(சென்னையில் சொற்பொழிவு 16.09.1961)
மாறுதலுக்குக் கட்டுப்பட்டவனே மனிதன்
நான் சொல்லும் சில கருத்துகள் இன்று தலைகீழ்ப் புரட்சியாகச் சிலருக்குத் தோன்றுகின்றன. அடுத்த 20 வருடங்களில் - என்னையே மகா பிற்போக்குவாதி என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அதிகமாயிருக்கிறதே! மாறுதலுக்குக் கட்டுப்பட்டதன்றோ உலகம்? மாறுதலுக்கு வளைந்துகொடாத மனிதன் மாயவேண்டியதுதானே! இதுவரை மாறுதலை எதிர்த்து வெற்றிபெற்றவர்கள் கிடையாதே! நமது போக்குவரத்துச் சாதனங்கள், நமது வாத்தியங்கள், நமது உடைகள், நமது ஆபரணங்கள் இவையெல்லாம் இன்று எவ்வளவு மாறுபட்டுவிட்டன? 20 வருடத்திற்கு முன் எத்தனை பேர் கிராப் வைத்திருந்தார்கள் - இன்று எத்தனை பேர் குடுமி வைத்துள்ளார்கள்?
இப்பெரிய கூட்டத்தில் குடுமி வைத்தவர்கள் எத்தனை பேர் என்று சுலபத்தில் எண்ணிவிடலாமே! இயற்கை மாறுதலால் ஏற்பட்டதா இது? அல்லது சர்க்கார்தான் குடுமி வைத்திருக்கக்கூடாதென்று சட்டம் போட்டதா? இல்லையே! இன்று எத்தனை பேர் நெற்றியில் பூச்சுடன் காணப்படுகிறார்கள்? விரல்விட்டு எண்ணிவிடலாமே! பூச்சுடன் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றா அரசு உத்தரவு போட்டுப் பூச்சுகள் மறையும்படி செய்யப்பட்டது? இல்லையே! காலம் மாறிவருகிறது; அம்மாறுதலுக்குக் கட்டுப்பட்ட மனிதனும் தானாக மாறுகிறான். பணக்காரர்களின் உயர்வெல்லாம் இன்று எங்கு போயின? அவர்களுடைய பிடிவாதம்தான் எங்கே போயிற்று?
முன்பெல்லாம் தாய்மார்கள் எத்தனை முழம் சேலை கட்டினார்கள்; இப்போது எத்தனை முழம் சேலை கட்டிக்கொள்கிறார்கள்? 18 முழத்துக்குக் குறையாது சேலை கட்டுவதுதான் பெருமை என்று கருதிய தாய்மார்கள், இன்று 6 கெஜத்துக்கு மேல் கட்ட கூச்சப்படவில்லையா? அன்று மட்டும் அவர்கள் தாமாகவா விரும்பினார்கள், 9 கெஜ சேலையை? சேலை சுற்றுக் குறைந்திருந்தால் எங்கே ஓடிவிடுவார்களோ என்று ஆண் பிள்ளைகள் செய்த தந்திரம் அது! அன்றிருந்த கட்டுப்பாடு அவ்வளவு! இன்று பெண்களுக்கு அவ்வளவு கட்டுப்பாடு இல்லை.
எனவே, நைசான சேலை கட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். நகைகளில்தான் எவ்வளவு மாற்றம்! அன்று தங்கச் சங்கிலி எல்லாம் எருமைமாட்டுக் கழுத்து இரும்புச் சங்கிலிபோல் இருக்கும்; இன்று சங்கிலி கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாத அளவுக்கு நைசாக இருக்கிறதே! சட்டம் போட்டா இம் மாறுதல் செய்யப்பட்டது? இப்படி எவ்வளவு வேண்டுமானாலும் உதாரணம் காட்டிக்கொண்டே போகலாமே!. (விடுதலை - 24.10.1948)
புதிய பெயர் - பழைய கொடுங்கோல்
1935 வரை அகில இந்தியா என்று பேசிவந்த நான், வடநாட்டார் ஆதிக்கத்தை உணர ஆரம்பித்ததும் 1938-ல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை முக்கியக் கொள்கையாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். 1950 ஜனவரி 26-ம் தேதிய பலம் 1947 ஆகஸ்ட் 15-ம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான்; அதே பணப்பெட்டிதான்; அதே தராசுதான்; அதே படிக்கல்தான்; அதே சரக்குதான்; அதே பித்தலாட்டம்தான்.
ஆனால், விலாசம் அதாவது ‘டிரான்ஸ்ஃபர்’ செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடி அரசு ஆட்சி என்கிற புதுப்பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதிக பலத்துடனும், மேலும் அதிகப் பாதுகாப்புடனும் 26-ம் தேதி முதற்கொண்டு நடைபெறப் போகிறது. இந்த உண்மையைத் தெளிவாக உணரும் நாம் இதை ஏன் புரட்டு என்று எடுத்துச் சொல்லக்கூடாது? உண்மையை எடுத்துச் சொல்ல நாம் ஏன் பயப்பட வேண்டும்? அக்கிரமத்தை எடுத்துச் சொல்ல நமக்கேன் அச்சம்? (விடுதலை 20.01.1950)

No comments:

Post a Comment