நான் சொல்வது…
‘நான் சொல்லுவதை நம்பு, இல்லாவிட்டால் பாவம்!’ என்று நான் சொல்லவில்லை. எதிலும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம் நாடு முன்னேற்றமடையுமேயன்றி, ‘என்னுடைய பாட்டன், முப்பாட்டன் போன வழியில்தான் போகிறேன்’ என்ற மூடக்கொள்கையினால், நாடு நாளுக்கு நாள் நாசமடைவது திண்ணம். என் புத்திக்கு எட்டியதை எடுத்துக் காட்டினேன். அதில் சரியானது எனத் தோன்றியதை ஒப்புக்கொண்டு அதன்படி நடக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் சொல்லுவதில் பிசகிருந்தால் என் அறியாமைக்குப் பரிதாபப்படும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.(குடிஅரசு 28.05.1949)
மதம் என்பது?
‘நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்! நான் சொல்லுவது கடவுள் வாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்’ என்ற வேதம், சாஸ்திரம், புராணம்போல நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்வது, ‘உங்கள் அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள்; ஒத்துவந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள். உங்கள் சகோதரர்களுக்கும் இதைச் சொல்லி அவர்களையும் ஈடேற்றுங்கள்’ என்றுதான் நான் சொல்லுகிறேன். இப்படிச் சொல்வதனால் எனக்கு இதில் ஒரு சுயநலப் பலனும் இல்லை என்பதையும் அறியுங்கள்.
நான் எந்த மதக்காரனுக்காவது ஏஜண்டு அல்ல; அல்லது நானும் எந்த மதக்காரனுக்காவது அடிமையும் அல்ல. அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவங்களுக்கு மாத்திரம் ஆட்பட்டவன். ஆதலால், எனக்குப் பட்டதை உங்கள் முன் சொல்லுவதில் எனக்கு ஒரு கடமையும் ஆசையும் மகிழ்ச்சியும் இருப்பதால் சொல்லுகிறேன். மற்றபடி அதைப் பற்றிய உங்கள் கடமைகளை உங்கள் சுதந்திரத்திற்கே - அதாவது உங்கள் பகுத்தறிவுக்கே விட்டுவிடுகிறேன்.
மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ சமூகத்தையோ கட்டுப்படுத்தி, ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டதா? அல்லது, ஒரு மனிதனின் மனச்சாட்சியைக் கட்டுப்படுத்தக் கூடியதா? மனிதனுக்காக மதமா? மதத்துக்காக மனிதனா? என்பவைகளைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
(குடிஅரசு - 11.09.1927)
(குடிஅரசு - 11.09.1927)
மனிதனை மதிப்பது என்பது?
பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் ரிசர்வ் பேங்க்கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் என்சைக்ளோபீடியா, ரேடியோ ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியாக அனேகவற்றை, ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல.
ஜீவன் என்றால் சுயஉணர்ச்சி என்றுதான் கருத்து. சுயஉணர்ச்சி என்பது தன்னைப் பற்றிய, தன் வாழ்வைப் பற்றிய, தன் பாதுகாப்பைப் பற்றிய உணர்ச்சி என்பதாகத்தான் முடியும். இத்தன்மையை உடையவர்களை ஜீவப் பிராணிகளில் நத்தை, சங்கு, ஈ. எறும்பு, பாம்பு, தேள், குயில், கழுகு, புலி, சிறுத்தை, குதிரை, யானை, ஆடு, மாடு, குரங்கு, மனிதன் என்பதாக மனிதனை மற்றவைகளோடு சேர்த்துச் சொல்வதற்கு அல்லாத தனிக்குணம் வேறு என்ன பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கிறது என்று கருதிப் பாருங்கள்.
ஜீவ சுபாவ உணர்ச்சியான தன்மை உணர்ச்சியும், தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட்சியம் செய்து - அதாவது தன்னைப் பற்றிய கவலையும் தனது நலத்தையும், தன் மேன்மை பற்றிய கவலையும், தனது மேல்வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின் மேன்மைக்காகப் பணியாற்றவே மற்ற மனித ஜீவன்களுக்கு இருக்க முடியாத வசதி என்னும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி தன்னலத்தையும், தன் மானாபிமானத்தையும் விட்டு, எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற ஜீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான். மனித உரு ஜீவப்பிராணி என்பதில் மனிதனை மதிப்பதானாலும், நினைவு நாள் கொண்டாடப்படுவதனாலும் இந்தக் குணத்திற்காகத்தான் இருக்கலாமே ஒழிய வேறொன்றுக்கும் ஆக இருக்க முடியாது. (குடிஅரசு - 14.04.1945)
No comments:
Post a Comment