Tuesday, December 24, 2013

சுகம் அனுபவிக்க வெட்கப்படுகிறேன்

சுகம் அனுபவிக்க வெட்கப்படுகிறேன்
இரயில் பிரயாணம் செய்யும்பொழுது மூன்றாம் வகுப்பில்தான் செல்வேன். அப்படி யாராவது வலுக்கட்டாயம் செய்து முதலாவது, இரண்டாவது வகுப்பு வண்டிகளில் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்களானால் நான் அவர்களிடம் சரி என்று சொல்லிவிட்டு முதலாவது அல்லது இரண்டாவது வகுப்புக்கு உள்ள பிரயாணச் சீட்டின் கட்டணத்தை வாங்கிக்கொள்வேன். ஆனால், பிரயாணச் சீட்டு வாங்கும்பொழுது மூன்றாவது வகுப்புக்கு வாங்கிக்கொண்டு மீதி உண்டாகும் தொகையைப் பத்திரமாக முடிபோட்டு வைத்துக்கொள்வேன்.
ஏனெனில், அவசியமற்ற காரியத்துக்காகப் பணத்தை வீண் விரயமாக்குவது என்பது எனக்கு வெறுப்பானதும், பிடித்தமில்லாதது மானதாகும். காசு கையில் சிக்கிக்கொண்டது என்பதற்காகத் தேவையற்றதை அனுபவிக்க ஆசைப்படுவதா? இப்போதைய புதுப் பணக்காரர் பலர் இப்படித்தான் செய்து பணத்தைப் பாழாக்குகிறார்கள்.
நான் காங்கிரசுத் தலைவனாக இருக்கும்போதும் 3-ம் வகுப்பிலும், கட்டை வண்டியிலும்தான் செல்வேன். சுய மரியாதை இயக்கத் தலைவனாக இருந்தபோதும் கண்ணப்பர் செகண்ட் கிளாசில் வருவார். நான் கூடவே தேர்ட் கிளாசில் போவேன். ஆச்சாரியார், திரு.வி.க., டாக்டர் நாயுடு செகண்ட் கிளாசில் வருவார்கள். நான் தேர்ட் கிளாசில்தான் போவேன். (வேன் வழங்கியபோது 24.12.1955)
வெங்காயம்
எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே ‘வெங்காயம்’ என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் வெறும் காயம்; உயிரற்ற உடல் - விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையதாய் முடிவது என்பது பொருள்.
ஆகவே விதை, வித்து இல்லாத காரணத்தால்தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும் மதமும் ஆகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருளே இல்லை; கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான்.
ஆனால், சூரியன், சந்திரன், முதலானவைகளை அப்படிச் சொல்ல முடியுமா? முடியாது. ஏன் என்றால், அவை உண்மையானவை. எவ்வளவு மடையனும், எப்படிப்பட்ட பகுத்தறிவுவாதியும் அவைகளை மறுக்க மாட்டான் என்பதோடு ‘எனக்கு அவை இல்லை; என் கண்ணுக்கு, என் புத்திக்கு அவை தென்படவில்லை; ஒப்புக்கொள்ள மாட்டேன்’ என்று சொல்லவே மாட்டான். இதுதான் இயற்கைக்கும் - உண்மைப் பொருளுக்கும்; செயற்கைக்கும் - கற்பனைக்கும் ஏற்ற உதாரணம் ஆகும்.
30 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்தக் கடவுள், மத உணர்ச்சி இருந்தாலும் 24 அல்லது 30 வயதுக்கு உட்பட்ட மக்களிடம் கண்டிப்பாக இந்த உணர்ச்சி இருக்கவே கூடாது என்பது என் ஆசை. அப்படி, இந்தக் கடவுள் மத உணர்ச்சி இல்லாமல் இருந்தால்தான் மனிதப் பண்பு, மக்கள் யாவரையும் ஒன்றுபோல் கருதும் உணர்ச்சி, நேர்மை, நல்லதைப் போற்றவும் தீயதைக் கண்டிக்கவுமான துணிவு, யாவரையும் ஒன்றுபோல் கருதிச் செய்யும் பொதுத்தொண்டு உணர்ச்சியும் ஏற்பட முடியும். இன்று இவை சுத்த சுத்தமாய் இல்லாததற்குக் காரணம், இந்தக் கடவுள், மதம், மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தன்மையுள்ள மனிதப்பிறப்பு என்கிற உணர்ச்சிதான் என்பது எனது தாழ்மையான முடிந்த முடிவு.
விதவைகள் நிலை!
விதவைகளுக்கு விவாகம் செய்யலாமா என்பதற்கும் சாஸ்திரத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு சமயம், விவாகம் எந்த மாதிரி செய்வது என்பதுபற்றி யோசிப்பது என்றாலும் சமாதானம் சொல்லலாம். அப்படிக்கின்றி, விவாகம் செய்யலாமா, வேண்டாமா என்பதற்கே சமாதானம் சொல்லுவதென்றால், அது சுத்த முட்டாள்தனமென்று தோன்றவில்லையா?
என்னைக் கேட்டால், இந்தக் கொடிய நாட்டில் விதவைகளுக்குத் துன்பத்தை இழைத்தவர் நமது இராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே அபிப்பிராயம். ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும் கஷ்டப்படவும் ஏற்பட்டுவிட்டது. எப்படி என்றால் மோகன்ராய் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தாதிருப்பாரானால், ஒவ்வொரு பெண்டும் புருஷன் இறந்தவுடனே அவனோடு கூடவே அவன் பக்கத்தில் மாங்கல்ய ஸ்திரீயாகவே உயிருடன் கட்டையில் வைத்துச் சுடப்பட்டுக் கற்புலோகத்தை அடைந்து, மோட்ச லோகத்திலிருப்பாள்.
கற்புலோகமும் மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந்தாலும் ஒன்று மாத்திரம் நிச்சயம். அதாவது, உயிருடன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரம்தான் கஷ்டம் இருந்திருக்கக்கூடும். ஆனால், அந்தப்படி நடவாமல் காப்பாற்றப்பட்ட விதவைப் பெண்ணுக்கு அவள் ஆயுள்காலம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சித்தரவதை செய்வது போன்ற கஷ்டத்தை விநாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா இல்லையா என்றுதான் கேட்கிறேன்.
ஒரு பெண் சாதியை ஆண் கலியாணம் செய்துகொள்ளலாமா வேண்டாமா என்பதைப் பற்றி, எந்தப் பெண்ணாவது அபிப்பிராயம் சொல்ல வருகிறாளா? அப்படியிருக்க, புருஷனை இழந்தவள் கலியாணம் செய்துகொள்ளலாமா வேண்டாமா என்பதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல புருஷனுக்கு என்ன பாத்தியம் என்பது நமக்கு விளங்கவில்லை. நாட்டில், சிறப்பாக நமது சமூகத்தில் விதவைகள் கர்ப்பமடைந்து கர்ப்பத்தை அழிப்பதும், பிள்ளைகளைப் பெற்றுக் கொலை செய்வதும், வீடுகளை விட்டுப் பெற்றோர் அறியாமல் நினைத்த புருஷர்களுடன் ஓடுவதும், பிறகு விபச்சாரிகளாகி குச்சுகள் மாறுவதும் முதலிய காரியங்களைத் தினமும் கண்ணால் பார்த்தும் தாங்களாகவே துன்பங்கள் அடைந்து வரும்போது, விதவா விவாகம் சாஸ்திர சம்பந்தமா, சாதி வழக்கமா என்று பார்க்கும் மூடர்கள் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்களா என்று கேட்கிறேன்.
சாஸ்திரத்தில் இடம் இருந்தால் என்ன? இல்லாவிட்டல் என்ன? சாதியில் வழக்கம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அதைப் பற்றிக் கவனிப்பதில் பலன் என்ன? புருஷனை இழந்த பெண்ணுக்குப் புருஷ இச்சை இருக்குமா, இருக்காதா? அவளுக்குப் புருஷன் வேண்டுமா வேண்டாமா என்பதைத் தானே கவனித்து முடிவுகட்ட வேண்டும்? அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று ஜோசியத்திலிருந்து விட்டால், அந்தப் பிள்ளை திருடின திருட்டையெல்லாம் ஜோசியம் நம்புகிறவன் சும்மா விட்டுவிடுவானா என்று கேட்கிறேன்?
எந்தக் காலத்திலோ, எங்கிருந்தோ, யாராலோ, எதற்காகவோ, யாருக்கோ எழுதிய ஒரு புத்தகத்தை இந்தக் காலத்திற்கு, இந்த இடத்திற்கு, நமது நன்மைக்காக, நமது நன்மையில் கவலை கொண்டவர்களால் எழுதப்பட்டதென்றும் அதன்படி நடந்து தீர வேண்டும் என்றும் கருதுகின்றவன் மனிதனல்லன் என்பதுதான் எனது மாற்ற முடியாத உறுதியான அபிப்பிராயம் ஆகும். (குடிஅரசு - 27.10.1929)

No comments:

Post a Comment