Sunday, July 31, 2011

ஜனநாயகம்

மக்கள் மடையர்களாக, மூடநம்பிக்கைக்காரர்களாக, சிந்தனா சக்தி இல்லாதவர்களாக உள்ளவரைதான் கடவுளுக்கும் அரசனுக்கும் மதிப்பு இருக்க முடியும்; அவர்களிடத்தில் மக்களுக்கு பயம் இருக்க முடியும்.
ஏனெனில் இவர்களுக்கு இயற்கையான சக்தி கிடையாது. இவர்களது ``சக்தி'' செயற்கைச் சக்திதான். அதாவது புருஷனுக்குப் பெண்டாட்டி பயப்படுவதுபோல ஒரு கட்டுப்பாட்டினால் தேவையைப் பொறுத்து ஏற்படும், ஏற்படுத்திக் கொள்ளும் சக்திதான்.
உதாரணமாக, கடவுள் பயம் மக்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து வந்து இன்று சம்பிரதாயத்துக்காக அல்லாமல் மற்றபடி எவருக்குமே இன்று கடவுள் பயமோ - நம்பிக்கையோ அடியோடு இல்லாமல் போய்விட்டதுடன் இன்று மடையர்களிடமும் அயோக்கியர்களிடமுமே தேவையைப் பொறுத்து இருந்து வருவதையே பார்க்கிறோம். அதாவது, ஒரு பூசாரிக்கு அர்ச்சகனுக்கு இருந்து வருகிற நம்பிக்கைப்படி.
அதுபோலவேதான் - அரசன் நிலைமையும் இன்று அடியோடு மறைந்துவிட்டது. உலகில் இன்று எங்குமே உண்மையான அரசன் இல்லை; உலகில் எங்குமே இன்று அரசனை மதிக்கும் மக்களும் இல்லை.
அரசர்களை ஒழிப்பதற்கென்று பல நாளாக கிளர்ச்சிகள் குடிமக்களாலேயே செய்யப்பட்டு, சில அரசரைக் கொன்றும் சிலரை விரட்டியும் விட்டு, அரசனல்லாத ஆட்சியையே உலகில் பெரும்பாகத்தில் மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்றாலும், அதாவது அரசன் ஒழிக்கப்பட்டு விட்டான் என்றாலும், அரசன் செய்து வந்ததுபோல் மக்களை அடக்கி ஆளும் ஆட்சி என்பதாக ஒன்று இன்று மக்களுக்கு அவசியம் வேண்டியதாகவே இருக்கிறது.
இப்படி தேவையிருக்கும் ஒரு ஆட்சிக்கு ``அரசன் என்பதாக ஒருவன் தேவை இல்லை. மக்களாகிய நாமே ஆட்சித் தலைவனாக இருந்து கொண்டு ஆட்சி நடத்திக் கொள்ளலாம்'' என்று மக்கள் கருதியது அல்லது யாரோ சிலர் கருதியது என்பது மாபெரும் முட்டாள்தனம் அல்லது அயோக்கியத் தனமேயாகும். இதன் பயன் என்னமாய் முடியுமென்றால், மக்களுக்கு ஏற்கெனவே இருந்து வரும் கெட்ட குணங்கள், கூடாத குணங்கள் என்று சொல்லப்படுபவையான பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றுதல், வஞ்சித்தல், கொலை, கொள்ளை, பலாத்கார காலித்தனம், அமைதி இன்மை, குழப்பம் முதலிய சமுதாய வாழ்வுக்குக் கூடாததான காரியங்கள் நடைபெறவும், நாளுக்குநாள் மக்கள் இவற்றில் ஈடுபடவுமான, மக்களின் சமூக வாழ்வுமுறை கெடவுமான நிலை ஏற்பட்டுத் தாண்டவமாடு வதுதான் விளைவாக இருக்கும், இருந்தும் வருகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை எவ்வளவு முட்டாள் தனமானதோ அவ்வளவு முட்டாள்தனமான கருத்தும் காரியமுமேயாகும் ஜனநாயகம் என்பதும். ஆனால், சில அயோக்கியர்களுக்கும், கீழ்த்தர மக்களுக்கும் இதில் பயன், சுயநலம் இருப்பதாக இவர்களால் எளிதில் மக்களை ஏமாற்றிப் பயன்பெற முடிகிறது.
இன்று உலகில் எந்த நாட்டில் ஜனநாயகம் ஒழுங்காக யோக்கியமாக நடைபெறுகிறது என்று சொல்ல முடியும்?
அரசன் நாயகன், அரசன் ஆட்சி என்று சொல்லப்படுவதற்கு சக்தி இருப்பதற்குக் காரணம்,
1. அரசன் என்கின்ற மதிப்பு
2. அரசன் நடுநிலை உள்ளவன் என்கின்ற நம்பிக்கை
3. அரசனது அதிகார பலம், இவற்றோடு
4. பரம்பரையாக யார் தயவுமில்லாமல் பதவிக்கு வரும் இயற்கை உரிமை.
இந்தக் காரணங்களால் அரசனது ஆட்சியை குடிகள் யாரும் எதிர்க்கவும் குறை கூறவும் முடியாமல் இருக்க முடிந்தது.
ஜனநாயக ஆட்சியாளருக்கு இவ்விதத் தகுதி ஏதாவது உண்டோ? மக்களுக்காவது இதற்கேற்ற பண்பாடு ஏதாவது உண்டோ?
கடவுளுக்கு சோறு போட்டு கல்யாணம் செய்து வைத்து கடவுள் பெண்டாட்டியின் தலையையும், சேலையையும் திருட்டுக் கொடுத்துவிட்டு வந்த ஒருவன் மற்றவனைப் பார்த்து, ``அடே, கடவுள் கெடுத்து விடுவாரடா'' என்று சொல்லி மிரட்டுகிறதைப் போல்தானே இருக்கிறது நமது ஜனநாயக அமைப்பு!
1. காசு கொடுத்து ஓட்டுப் பெறுகிறான்.
2. காசு பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடுகிறான்.
3. பொய்யும் புரட்டும் கூறி மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறான்.
4. ஓட்டின் பலன் என்ன, அதை எப்படி, எதற்குப் பயன்படுத்துவது என்ற அறிவே இல்லாமல் ஓட்டுப் போடுகிறான்.
இவ்வளவுதானா?
ஜாதிப் பெயர் சொல்லி ஓட்டுக் கேட்கிறான்; (தன்) ஜாதியான் என்பதற்காக ஓட்டுப் போடுகிறான். இவை ஜனநாயக பிரதிநிதித்துவ நிலைமை என்றால் நாட்டின் நிலைமையோ மக்கள் ஒருவனை ஒருவன் தொட முடியாத நான்கு ஜாதி, ஒருவருக்கொருவர் உண்ணல் கொடுக்கல் வாங்கல் இல்லாத 400 உள்பிரிவு, ஒருவருக்கொருவர் வெறுப்புக் கொண்ட பல மதம், கடவுள்கள், பல வேதங்கள், பல தர்மங்கள், இவற்றுள் பல ஜாதித் தொழில்கள், அவற்றின்படி ஒருவரை ஒருவர் அடக்கி ஆள பல இலட்சியங்கள், சூழ்ச்சிகள் இவை மாத்திரமேயல்லாமல் பெரிதும் கொள்கையே இல்லாத பல பதவி வேட்டைக் கட்சிகள்; இவற்றிற்கு ஏற்ற பத்திரிகைகள்; சாக்கடை கழுவுகிறவன் முதல் அய்க்கோர்ட் ஜட்ஜ், சீப் செகரட்டரி வரை ஜாதி உணர்ச்சி, ஜாதி அகம்பாவம், மற்ற ஜாதியை ஆள வேண்டுமென்கிற உணர்ச்சியை மூச்சாகக் கொண்ட சிப்பந்திகள், பதவியாளர்கள், பதவியையும் சம்பளத்தையும் வருவாயையுமே முக்கிய இலட்சியமாகக் கொண்ட மந்திரிகள், பிரசிடென்ட்கள், சட்டசபை, பார்லிமென்ட் மெம்பர்கள்.
இந்த நிலையில் ஜனநாயகம் என்றால் இதற்குப் பொருள் கடவுள் என்பதற்கு உண்டான பொருள் அல்லாமல் ஜனநாயகத்தை நம்புகிறவர்கள் கடவுளை நம்புவது போன்றவர்கள் என்பது அல்லாமல் வேறு என்ன? ஆகவே, ஜனநாயகம் ஒழிந்து கொடுமையான சர்வாதிகாரம் ஏற்பட்டாலும் குடிமக்களுக்கு ஒருவனுடைய தொல்லைதான், ஒருவனுடைய நலத்திற்கு ஏற்ற கேடுதான் இருக்கலாமே ஒழிய ஜனநாயகப்படியான முள்ளுப் பீப்பாயில் போட்டு உருட்டுவது போன்ற தொல்லைகள் குடிமக்களுக்கு இருக்க முடியாது.
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
(விடுதலை, 3.11.1968).

தோழர்களே! சாகத் துணிவு கொள்ளுங்கள்

இந்த திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவுக் குத் தலைமை வகித்து தலைமை முன்னுரை நிகழ்த்துவது என்கின்ற சம்பிரதாய நிகழ்ச்சிப்படி நான் ஏதாவது பேசவேண்டும். அப்படிப் பேசுவதில் திராவிடர் என்பதுபற்றியும், நீங்கள் பெரிதும் இளைஞர்கள் ஆனதால் நானும் முதியோனாய் இருப்பதால் உங்களுக்குச் சிறிது அறிவுரை வழங் குவது என்கின்ற தன்மையிலும் சில வாக்கியங்கள் சொல்வது பொருந்துமெனக் கருதுகிறேன்.
நாம் திராவிடர்
நாம் நம்மைத் திராவிடர் என்று ஏன் சொல்லுகிறோம்?
இந்தநாடு திராவிட நாடு, நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டுப் பழங்குடி மக்கள், இந்நாட்டில் மேன்மையாய் நாகரிகத்தில் சிறந்து மானிகளாய் வீரர்களாய் வாழ்ந்தவர்கள், வீரத் திராவிடர்கள் என்ற பெயரைச் சரித்திர காலத்திற்கு முன்னிருந்து உடைய்த்தாய் இருந்தவர்கள், ஆதலால் திராவிடர்கள் என்கிறோம், இதை நானாக அல்லது நானே சொல்லவில்லை. இது இன்று மாத்திரம் சொல்லப்படவில்லை. இந்த நாட்டுச் சரித்திரம் , ஏன்? உலகச் சரித்திரம் தெரிந்த காலம் முதலாய் ஆராய்ச்சி நிபுணர்களான பல அறிவாளிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையும் இன்றும் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கும் சரித்திர நூல்கள் முதல் புராணங்களில் குறிப்பிட்டு இருக்கும் கற்பனை, பழிச்சொற்கள் என்பவைகள் வரையில் காணப்படும் சேதிகளுமாகும்.
பழமைகள், பழமை சம்பவங்கள், காட்சி சாலைகளுக்கும், நேரப் போக்குப் பரிகாசத்துக்கும் சென்று கொண்டிருக்கும் இந்தப் புத்துலகில் பழங்காலச் சரித்திரத்தையும் பரிகசிக்கும் புராணத்தைப் பற்றியும் கூட ஏன் சொல்லுகிறேன் என்று கேட்பீர்கள். அந்தமாதிரி அதாவது, நம்மைப் பற்றி நம் முன்னைய நிலையைப் பற்றி மேலே நான் சொன்னமாதிரியாய் இருந்து நாம் இன்று எந்தமாதிரியில் இருக்கிறோம்? பழமை நிலைமை யும் இயற்கையும் முற்போக்கில் மாற்றப்பட்டு இருக்கிறதா பிற்போக்கில் பின்னும் மோசமான நிலைமையில் கொண்டுபோய்த் தள்ளி இருக்கிறதா என்பதை சிந்திக்கவும், நாம் அதைவிடச் சிறிதாவது மேன்மையும், மனிதத்தன்மையும் அடைந்திருக் கிறோமா அல்லது கீழ்மையும், இழிநிலையும், மானமற்ற தன்மையும் அடைந்திருக்கிறோமா என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து மேலால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதற்கும் ஆகவேயாகும்.
நாம் சூத்திரர்களா?
நாம் பிறவியிலோ, தன்மையிலோ, தகுதியிலோ சூத்திரர்களாக இருந்தவர்கள் அல்ல; உண்மையில் அல்ல. பின் நாம் யார்? என்றால் வீரத்திராவிடர்கள் ஆவோம். எப்பொழுது முதல் என்றால் முன் நான் சொன்னபடி உலக சரித்திரம் மனிதநூல் ஆகியவை எட்டியகாலம் முதல் என்பேன். இவை வெறும் வார்த்தையால் மாத்திரம் அல்ல. நாடு, இனம், பண்பு, நடைமுறை ஆகியவைகளால் இயற்கையைத் தழுவி திராவிடர்களானவர்கள். நமது இந்த முடிவு இதுவரை யாராலும் மறுக்கப் படவில்லை, நம் எதிரிகளாலும் மறுக்கப்பட வில்லை. இந்த உணர்ச்சி நமக்குக் கூடாது என்று சொல்லும் சுயநல சமயசஞ்சீவிகளாலும் கூட மறுக்கப்படவில்லை. ஆனால் நாம்தான் நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ள, நம்நாடு திராவிடம் என்று சொல்லிக்கொள்ள, நாம் சூத் திரர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்ள வெட்கப் படுகிறோம்.
எப்படி மானமும், சுதந்திர உணர்ச்சியும் அற்ற ஒர் பெண் மற்றொரு ஆண்மகனைக் கண்ணால் பார்ப்பதால் கற்புப் போய்விடுமென்று கருதிப் பயப்படுகிறாளோ, பார்க்க வெட்கப்படுகிறாளோ அதுபோல் நாம் திராவிடர் என்று சொல்லிக் கொண்டால் நமது மதம் போய்விடும், தேசியம் போய்விடும், செல்வாக்குப் போய்விடும் என்று பயப்படுகிறோம், வெட்கப்படுகிறோம். எந்தக் காரணத்தாலேயோ நாம் சூத்திரர்கள் என்பதாக ஆக்கப்பட்டிருந்தாலும் இன்றும் சூத்திரர்களாக அதுவும் நாம் மாத்திரமல்லாமல் நம் இன்றைய ராஜாக்களும், மகாராஜாக்களும், பண்டார சன்னதிகளும், ஜமீன்தாரர்களும், ஆயிரக்கணக் கான வேலி நிலமுள்ள மிராசுதாரர்களும், பல கோடி ரூபாய் செல்வமுள்ள ராஜா, சர் முதலியவர்களும் சூத்திரர்களாக இருக்கவும் நடத்தப்படவும் இதுதான் (நாம் திராவிடர் என்று உணராததும், உணர்ந்தாலும் சொல்லிக்கொள்ளப் பயப்படுவதும்) காரணமாகும். ஆனால் இந்த இழிவு அவர்களுக்கு (அப்படிப்பட்ட பெரியவர்களுக்கு) மிக சகஜமாகி விட்டது. எப்படியோ அவர்களை அவர்களது ஆசாபாசம் அவர்களுக்குச் சகிப்புத்தன்மையை உண்டாக்கிவிட்டது. நமக்குப் பட்டம் இல்லை, பதவி இல்லை, செல்வம் இல்லை இவை பற்றிய மானமற்ற பேராசை இல்லை. எனவே நாம் ஏன் திராவிடன் என்பதை மறந்து மறைத்துக்கொண்டு நம்மைச் சூத்திரன் என்பதாகக் காரியத்தில் ஆதாரத்தில் ஒப்புக்கொள்ள வேண்டும்?
சூத்திரன் என்றால் என்ன?
சூத்திரன் என்பது தாசிமகன், ஆரியர்களின் அடிமை; ஆரியநலத்துக்கு ஆக, ஆரியர்களின் மேன்மை வாழ்வுக்காக இருப்பவன், இருக்க வேண்டியவன், இருந்தும் வருகிறவன் என்பதாகும். இதுதான் அந்த வார்த்தையின் அருத்தம். சாஸ்திரம் கடவுள் என்பவற்றின் வாக்குமாகும். ஆனால் உண்மையில் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்லாதவர் களாக இருக்கும்போது அந்தப் பெயரை ஏன் நமக்கு இருக்கவிடவேண்டும்? என்று கேட்கிறேன்.
தோழர்களே, இக்காலத்தில் உண்மையான ஒரு தாசிமகனையே பாருங்கள். தனது தாய் தாசி என்றும், தனது வீடு, வாசல், செல்வம் தாசித்தனத்தால் வந்த தென்றும் தெரிந்தவன்கூட அவனது சுயமரியாதைக் கொதிப்பால் தாசியே உலகில் இருக்கக்கூடாது சட்டத்தில் இருக்கக் கூடாது, தன் தாய் வீட்டிற்குள்ளும் வேறொரு பயல் அவன் ஜமீன்தாரரானாலும், அவன் குருவானாலும், ஆச்சாரியானாலும், கோடீஸ்வரன் ஆனாலும் வரக்கூடாது என்று தன் தாயைச் சகோதரியைக் கண்டிக்கிறான். வருகிறவனையும், ஏன்? வந்து கொண்டிருக்கிறவனையும் விரட்டி அடிக்கிறான், அநேகமாய் அடித்துத் துரத்தியே விட்டான். இத்தனைக்கும் அவர்களுக்குத் தேவ அடியார்கள், தேவதாசிகள் என்று பெயர் இருந்தும் கூட. ஆனால் நம் சுயமரியாதை என்ன என்று பாருங்கள், நாம் வேசி மக்கள், அடிமை (சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறோம். அப்படி நம்மை அழைப்பவர்களைச் சாமி என்கிறோம். அப்படிப்பட்ட வர்களை நம்மிலும் மேலானவர்களாகக் கருதி வைதிகக் கருமங்களை (முட்டாள்தனமான, இழிவு தரும்படியான காரியங்களை) அவர்களைக்கொண்டு செய்வித்துக் கொள்கிறோம்.
அதையே வலியுறுத்தும் மார்க்கத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்மை சொல்லிக் கொள்ளு கிறோம் வாயால் சொல்லிக்கொள்ளுவது மாத்திரமல் லாமல் மற்றவர்களுக்கும் தெரியும் படியான குறிகளையும் (ஏதாவது ஒரு அடையாளத் தையும்) அணிந்துகொள்ளுகிறோம். இந்த பேதத்தையும், இழிவையும் மானமற்ற உணர்ச்சி யையும் நிலைநிறுத்துவதும், பெருக்கிக் கொள்வது மான காரியங்களை நமது ஆத்மீக, லவுகீக காரியமாய்க் கருதிச் செய்து வருகிறோம். இது நியாயமா? நமக்கு இது தகுதியா? அதுவும் இந்த 20ஆம் நூற்றாண்டில் தகுமா? இதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாமா? என்று யோசித்துப் பாருங்கள்.
உன் சொந்த இழிவை, ஈனத்தை நீக்கிக்கொள்ளாத நீ நாட்டுக்குச் சுதந்திரம், மனித சமுதாயத்திற்கு விடுதலை ஏழைகளுக்குச் செல்வம், உண்டாக்கப் பாடுபடுகிறேன் என்றால் உன்னைவிட மடையனோ அல்லாவிட்டால் அயோக்கியனோ அல்லாவிட்டால் பித்தலாட்டக்காரனோ வேறு யார் இருக்கமுடியும். திராவிடனுடைய சரித்திரத்தில் இந்த இழி தன்மை என்றும் இருந்ததாகக் காணப்படவில்லையே!
எது தேசியம்? எது விடுதலை?
ஆயிரக்கணக்கான எச்சிலிலை கழியும் ஓட்டலுக்குள் சென்று சமமாய் இருக்க அனுமதி யில்லை. நீ பத்து லட்சக்கணக்காக செலவழித்துக் கட்டி வருஷம் லட்சக்கணக்கான செலவு செய்து பூஜை உற்சவம் செய்துவரும் கோவிலுக்குள் சென்று பிச்சை எடுத்துப் பிழைக்கும் உச்சிக்குடுமி மக்களுடன் சரிசமமாய் நின்று பிரார்த்திக்க உரிமை இல்லை என்பதாக இருந்துவரும், நடத்தப்பட்டு வரும் மக்களுக்கு தேசியமா? சுயராஜ்ஜியமா?
உண்மைத் திராவிடன் இப்படிப்பட்ட எச்சிலிலை மண்டபங்களையும், கோவில்களையும் நிர்துளியாக்கு வதையல்லவா தேசியம் சுயராஜ்ஜியம் என்று எண்ண வேண்டும்?
இன்றைய தினம் இந்த நிலையைப் பொறுத்துக் கொண்டு, இதை மாற்ற வேலை செய்பவர்களையும் எதிர்த்துத் தொல்லை விளைவித்துக்கொண்டு தேசியம், சுயராஜ்ஜியம், விடுதலை, சுதந்திரம் பேசும் திராவிடன் எவனானாலும், தம்மைச் சிறிதாவது திராவிட ரத்தம் ஊசலாடும் திராவிடன் என்று கருதுகிற எவனானாலும் அவன் எல்லாம் நம் எதிரிகளின் அதாவது வெள்ளை ஆரியர், தவிட்டு நிற ஆரியர் ஆகிய இரு கூட்டத்தினரின் லைசென்சு பெற்ற அடிமைகள் அல்லது நம்மைக் காட்டிக்கொடுக்கும் ஒற்றர்கள் என்று தூக்குமேடையில் இருந்துகொண்டு கூறுவேன்.
எது பொதுவுடைமை இன்றைய பொது உடைமைக்காரர்கள் என்பவர்களின் யோக்கியதைதான் என்ன? வெங்கடா சலபதிக்கு (ஒரு கருங்கல் பொம்மைக்கு) பத்து லட்ச (10,00,000) ரூபாயில் கிரீடமா? மற்றும் பல குழவிக்கல், தாமிர பொம்மை ஆகியவைகளின் பேரால் நடக்கும் அட்டூழியங்களைப் பாருங்கள். ஊர்தோறும் கோவில், மணிதோறும் பூஜை, மாதந்தோறும் உற்சவம், வருஷந்தோறும் சாமி திருமணமா? இவைகளுக்குப் பண்டு எவ்வளவு? பண்டம் எவ்வளவு? பூசாரி பண்டார சன்னதி எவ்வளவு? எனவே நம் நாட்டு, இனத்தின் அறிவு, செல்வம், முயற்சி எதில் மண்டிக் கிடக்கின்றன? நம்மவர்களே ஆன கிருபானந்த வாரிகள், திருநாவுக்கரசுகள் ஆகியவர்கள் காலட் சேபமும், இசை அரசுகள் சங்கீதங்களும், நாடக மணிகள் நாடகங்களும், சினிமாக்களும், பண்டித மணிகள் வித்துவத் தன்மைகளும் இன்று எதற்காகப் பயன்படுகின்றன? இவைகள் பொதுவுடைமையின் எதிரிகள் அல்லவா? இவர்கள் எல்லோரும் தனி உடைமைக்காரர்களின் நிபந்தனை இல்லாத அடிமைகள் அல்லவா? இவைகளை அச்சுக் குலை யாமல் அசைய விடாமல் காப்பாற்ற இடம் கொடுத் துக்கொண்டு பணக்காரனைப் பார்த்து ஆத்திரப் பட்டால், குரைத்தால், பாமரத் தொழிலாளிகளை ஏமாற்றினால் பொது உடைமை ஆகிவிடுமா?
காங்கிரஸ்
காங்கிரஸ், தேசிய விடுதலைக்காரன் யோக்கி யதைதான் என்ன இதைவிட மேலானதாகிவிட்டது. எந்தத் தேசியவாதி இந்தப்பக்கம் திரும்பினான், எந்தப் பொதுஉடைமை மாநாட்டில் எந்த தேசிய மாநாட்டில் இந்த தன்மைகளை பொசுக்கிப் பொங்கல் வைக்கவேண்டுமென்று பேசப்பட்டது? தீர்மானங்கள் செய்யப்பட்டது? நினைக்கப்பட்டது? இந்த மகா உத்தமர்கள் எங்களை குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கத்தைத்தான் குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கம் இப்படியெல்லாம் செய்யச் சொல் லுகிறதா? அல்லது இவைகளைப் பற்றிப் பேசுவது ராஜத்துரோகமா? காப்பிக் கடைக்குள், கோவிலுக் குள் முன் மண்டபத்தில் பறையனை, சூத்திரனை விடக்கூடாது என்று எந்த அந்நிய ஆட்சி சட்டம் செலுத்தியது? கோவிலுக்குக் கூத்தியை வைக்கச் சொல்லி, கடவுளைத் தாசிவீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லி, கல்லுக்குத் தங்கத்தில் கவசம் போட்டு வைரத்தில் கிரீடம் வைக்கச் சொல்லி எந்த அடக்குமுறை, சுரண்டல் அந்நிய ஆட்சி சொல்லிற்று?
எங்கள் கோபம்
இன்று எது ஒழிய வேண்டும்,யார் வெளியேற வேண்டும், எது மாற வேண்டும்? இவை அறியாத மக்களும், சுயநலவாதிகளும், சமயசஞ்சீவிகளும், வயிற்றுப்பிழைப்பு, பொதுஉடைமை, தேசபக்தர் குழாங்களும் எங்களை ஏன் கடிய வேண்டும். எங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது கோபம்? எந்தக் கடவுள் மீது கோபம்? எந்தத் தலைவன் மீது கோபம்? எந்த ஜாதி மீது கோபம்? எந்த வெள்ளை யனிடம் அன்பு? தோழர்களே! பித்தலாட்டத்தின் மீது கோபம், முட்டாள்தனத்தின் மீது கோபம், ஏமாற்றுகிறதன்மை மீது கோபம், எங்களை இழிவுபடுத்தியும், முன்னேற வொட்டாமலும் செய்து வைத்து இருக்கும் சகலத்தின் மீதும் கோபம், இவைகளுக்கு ஆதரவளிப்பதால் வெள்ளையன் மீதும் கோபம்.
ஆகவே, எங்களை காங்கிரஸ்காரர்களும், பொதுஉடைமைக்காரர்களும் மற்றவர்களும் ஏன் கோபிக்க வேண்டும். ஏன் தொல்லை கொடுக்க வேண்டும்?
எங்களைத் தொல்லை கொடுப்பவர்கள் சுரண் டல்கார எங்கள் எதிரிகள் அல்லது அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகள் என்பவர்கள் அல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்?
இளைஞர்களே! நடப்பது நடக்கட்டும் என்று நீங்கள் எதற்கும் துணிவு பெற்றுத் தொண் டாற்றவேண்டிய காலம் இது. நீங்கள் அடிபட வேண்டும். காயப்பட வேண்டும். கும்பல் கும்ப லாகச் சிறைப்பட நேரிட்டாலும் மனம் கலங்கா மல் நிற்கும் துணிவு பெற வேண்டும். இதற்குத் தான் திராவிட இளைஞர் கழகம் இருக்க வேண்டும்.
நாடானது விடுதலை, சமதர்மம், முன்னேற்றம், சீர்திருத்தம், கலை, கல்வி, தேசியம் என்னும் பேர்களால் மிக்க அடிமைத்தனத்திற்கும், காட்டு மிராண்டிதனத்துக்கும் போய்க்கொண்டு இருக்கிறது. வேசிக்கும் விபசாரிக்கும் தேவர் அடியாள் என்று பெயர் இருப்பதுபோல் நாட்டின் மனித சமுதாயத்தின் இழிவுக்கும், கீழ்மைக்கும், ஏழ்மைக்கும், அடிமைக்கும் அயோக்கியர்கள் ஆதிக்கத்திற்கும் மேற்கண்ட விடுதலை முதலிய பெயர்கள், ஸ்தாபனங்கள் இருந்து வருகின்றன.
தோழர்களே! துணிவு கொள்ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண் டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக்குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டு போகும் செல்வமாகும்.
உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று. உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு. இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற் றத்தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப்பற் றில்லாத மரம்போல்,  கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல்  தானாகவே விழுந்துவிடும்
தன் இனத்திற்கு உண்மையான தொண்டாற்று பவனுக்கு அடையாளம் என்னவென்றால் அத் தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற் குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்புவித்துவிட்டவனாக இருக்க வேண்டும். இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கியமாகும்.
(23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹாலில், திராவிட வாலிபர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தலைமை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)
                                                                                                                        குடிஅரசு - 01.09.1945

Saturday, July 23, 2011

உணவுக்கு வரி

பண்டைகால அரசு கள் முதல், தற்கால அரசு கள் வரையிலும் எல்லா அரசுகளும், உணவுக்கு வேண்டிய பொருள்கள் மேல் வரிகளைச் சுமத்தி, அவைகளின் விலையை உயர்த்தி வந்திருக்கின்றார் கள். இத்யாதி வரிகளை நியாய மென்றே எண்ணி வந்திருக்கின்றார்கள். இந்த வரிகளுக்கு நிலத் தீர்வையென்றும், ஜலத் தீர்வையென்றும், சுங்கத் தீர்வையென்றும் அழைக்கின்றார்கள். இவ்வரிகளை விதித்து வரும் தற்கால அரசுகள் இவ்வரிகள் இயற்கை யாக நியாயமானவைகளா? அநியாய மானவைகளா? என்று பகுத்தறிவைக்கொண்டு உணர்ந் தாரில்லை.
ஏதோ ஆதிகால முதல் உண்பண்டம், தின்பண்டங்களின் மேல், வரி விதித்து வந்திருக்கின்றார்களாகையால், அந்தப் பழக்கத்தைப் போலவே, அந்தந்த சமயங்கட்கு ஏற்றவாறு பற்பல வரிகளை உணவுப் பொருளின் பேரில் விதித்து வருகின்றார்கள்.
தற்கால ஓர் முனிசிபாலிடியை எடுத்துக் கொள்வோம். எந்தெந்தப் பொருள்களுக்கு வரிகளை விதித்து வருகிறார் களென்பதைச் சற்று கவனிப்போம். பட்டணங்களில் வரி விதிக்கப்படாத உணவுப்பொருள்கள் யாதொன்றுமில்லை. பால்கொடுக்கும் பசுவுக்கு வரி, பதார்த்தங்களை விற்பதற்கு வரி, அவைகளை விற்கும் தொழிலுக்கு வரி, அவைகளை விற்கும் இடங்களுக்கு வரி, தோசைக் கடை முதல், நெய், சர்க்கரை, மளிகை, உப்பு, வெற்றிலை, பாக்கு, ஜீனி, கற்கண்டு, பிஸ்கட், மிட்டாய், தினைமாவு, தேன் முதலிய சகலவித சொற்ப பண்டங்கட்கெல்லாம் முனிசிபல் வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இத்யாதி வரிகளை நேரல்லாத வரிகள் என்று கூறு வார்கள். ஆனால், இவ்வித உண்பண்டம் தின்பண்டங் களின் மேல், நேரல்லாத வரிகளோடு, முக்கிய உணவு களின் பேரிலும் வரி விதிக்கப்பட்டு வருகின்றன. அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, பருப்பு முதலிய தானியங் களின் பேரிலும் பலவித வரிகளைச் சுமத்தி வருகின் றார்கள்.
அரசாங்கத்தாரால் விதிக்கப்படும் இத்யாதி வரிகளும் போதாமல், போக்குவரத்துக்கு வேண்டிய வண்டி, ரயில், கப்பல், தோணி, படகு முதலியவைகட்குச் சுமை வரியும் கொடுக்க வேண்டி வருகின்றது. இவ்வரிகளின் அக்கிரமத்திற்கு மேலான ஒரு வரி உண்டு. அது நிலத் தீர்வை எனப்பெயர். இந்த நிலத்தீர்வை நீர்வரியையும் சேர்ந்தது. விளையும் பொருள்களை விளைவிப்போன் ஒருவன், ஆனால், விளைவுக்கு வேண்டிய உழைப்புக்கு யாதொரு சம்பந்தமுமில்லாதவன், இந்நிலத் தீர்வையைக் கைக்கொள்ளுகின்றான். நிலத்தை இவன் கொண்டு வந்ததில்லை, இந்நிலத்தை ஓரிடமிருந்து, மற்றோரிடத் திற்குக் கொண்டு போகவும் முடியாது. கற்ப காலங்களாக, இந்நிலங்கள் இருந்த இடத்திலேயே இருந்து வருகின்றன.
மனிதன் உலகில் தோன்றுவதற்கு முன்னமே விளை நிலங்களிருந்து வருகின்றன. இந்நிலத்தை ஆதிகால முதல், தற்காலம் வரையில் மனிதனைத் தவிர மற்றெல்லா ஜீவன்களும் பூமியின்மேல் விளையும் பொருள்களை அந்தந்த உயிர்கட்கு வேண்டிய அளவு வரி விதியா தொன்றுமின்றி, அனுபவித்து வந்திருக்கின்றன. ஆனால் மனிதரில் சிலரே இயற்கைக்கு விரோதமாக விளை பொருள்களை யாதொரு உழைப்புமின்றி அனுபவித்து வருகின்றார்கள். இதுதான் அக்கிரமத்திலும் அக்கிரம மான நிலவரி என்பார்கள். பட்சிகள் யாதொரு சட்டதிட்ட நிபந்தனைகளின்றி, விருட்சகங்களில் உண்டாகும் கனிகளை உண்டு வாழ்ந்து வருகின்றன. புழு, பூச்சி, வண்டு, புல்லினங்கள் யாவும் தத்தமக்கு வேண்டிய பொருள்களை வரிவிதிப்பின்றி, விளையும் பொருள்களை இலவசமாக உண்டு வாழ்ந்து வருகின்றன. கோடான கோடி வருடங்களாக வரி, சுங்கம் இன்னும் பலவித சுமை களின்றி, கோடான கோடி உயிர்கள் அனுபவித்துவரும் உணவுப் பொருள்களை, நேற்று உலகில் தோன்றிய மனிதன் ஒருவனே, மக்கள் போதுமான வரையிலும் உண்ணுவதற்கு முடியாமல் வரிச்சுமைகளை மேலும் மேலும் விதித்து வருகிறான். இந்தக் கொடுமை மனிதனைத் தவிர யாதொரு உயிர்களிடமுமில்லை. இது மனிதனால் உண்டாக்கப்பட்ட முதல் கொடுமை.

இந்தக் கொடுமையை விளைவிக்க வேண்டியதற்கு எதாகிலும், இயற்கையிலாகிலும், பகுத்தறிவிற்காகிலும் பொருத்தமுளதாவென்று பார்ப்போம். உணவுப் பொருள் களின் பேரில் வரிகளைச் சுமத்தி, அகவிலைகளையும் உயர்த்தி மக்களின் உழைப்பின் பயனையும் குறைத்து, மக்களுக்குப் போதுமான உணவு கிடைக்க வொட்டாமல் செய்வது, என்ன தர்ம நீதியென்று கேட்கின்றோம்? முக்கியமாக இந்த வரிச்சுமைகளால், பெரும்பான்மையான மக்கள் பயனடைந்தாலும், ஒருவாறாக ஒத்துக்கொள்ள இடமுண்டு. இவ்வரிகளின் பெரும்பான்மையான பயனை, சிலரே அனுபவிப்பார்களேயாமாகில், இவை எந்த யுக்திக்குப் பொருந்தும்? இவ்வரிகளின் முழுப்பயனும் ராணுவத்திற்கும், உயர்தர உத்தியோகதர்களுக்கும், அனாவசியச் செலவுகளுக்கும், உபயோகப்பட்டு வருமாயின், இது எவ்வித நியாயத்திற்குப் பொருந்து மென்று கேட்கின்றோம்? ஒரு நாட்டுக்கு வரிகளின் மூலம் 160 கோடி வந்தால், அதில் மூன்றிலிரண்டு பங்கு, உணவின் பேரில் விதித்த நேரல்லாதவரியுமானால், அவ்வரியில், 50 கோடி இராணுவச் செலவுக்கும் மூன்று கோடி உணவுப் பொருளபிவிருத்திக்கும் செலவானால், இவ்வாறாகச் செலவழிப்பதை என்ன மதியீனமென்று நினைப்பது?
உணவுப் பொருள்களின் பேரில் வரிவிதிக்காமல், ராணுவத்தை எவ்விதம் காப்பாற்ற முடியுமென்பார்? அதற்கு, நமது நேரான வினா என்னவெனில், ராணுவத் தால் என்ன நன்மை என்று கேட்கின்றோம்? ராணுவப் படை இல்லாமல் போகுமாகில் தேசமாகிலும், உலகமா கிலும் தலை கீழாகக் கவிழ்ந்து விடுமா என்று கேட்கின் றோம்? வேற்றரசர்கள் நாட்டைப் பிடித்துக் கொள்ளுவார் களென்று எவர் சொல்கின்றார்கள். அதனால் பெரும் பான்மை மக்களுக்கு, தற்கால கஷ்டங்களைவிட, வேறு அதிகமான கஷ்டம் என்ன நேர்ந்து விடுமெனக் கேட்கி றோம்? அல்லது தற்கால சுகத்தைவிட, பெரும்பான்மை மக்கள், என்ன அதிகமான சுகத்தைப் பெறுவார்க ளென்றும் கேட்கின்றோம்? வயிற்றுக்கு எட்டாத உணவு கிடைக்காதிருக்கும் வரையில் இராமன் ஆண்டாலென்ன? அல்லது இராவணன் ஆண்டாலுமென்னவென்றும் கேட்கின்றோம்.
ராணுவ முதலிய சிப்பந்திகள் தேச தற்காப்பிற்கு இல்லாமற் போகுமாகில், உள் நாட்டில் குழப்பம், கொலை, களவு முதலிய சச்சரவுகள் உண்டாகுமென்பார்கள். ஏன்? வயிற்றுக்கு உணவு சரி சமத்துவமாக யாவருக்கும் தத்தம் உழைப்பின் பயனாகக் கிடைக்குமாயின், மக்கள் எதற்காகக் குழப்பம் செய்வார்கள்? இவ்வளவு இராணுவ, சேவக சிப்பந்திகளிருந்தும், கொலை, களவு முதலிய உள்நாட்டுக் குழப்பங்கள், ஏன் உலாவுகின்றன? இந்தக் குழப்பங்களை அடக்க எத்தனை சிவில் கிரிமினல் கோர்ட்டுகள்? எத்தனை ஜட்ஜுகள், மாஜிடிரேட்டுகள்? எத்தனை வெட்டியான், தலையாரிகள்? இவ்வளவெல்லா மிருந்தும், ஒரு நாட்டின் ஜெயில்களில் கொடுங் குற்றவாளிகள் ஆயிரம், பதினாயிரம் லட்சக்கணக்காக அடைபட்டுக் கிடப்பானேன்?
தேச தற்காப்பிற்குச் சேனை சிப்பந்திகளும், இராணுவப் படைகளும், கோர்ட்டுக் கச்சேரிகளும் ஜெயில், சப்ஜெயில்களும் அத்யாவசியமென வேண்டு மென்போர் கூறும்கூற்று, அறியாமையால் கூறும் கூற்றென அறிக! சண்டையும், போரும், கலகமும், குழப்பமும் உண்டாவதற்காகிக் காரணமாக நிற்பது, பொருளாதார வித்தியாசத்தால் என அறிக! ஒருவனுக்கு இருந்து மற்றவனுக்கு இல்லாமையே, எல்லாவிதக் குழப்பங்களுக்கும் காரணகர்த்தாவாக நிற்பதென அறிக! நாட்டிலுள்ள மக்களுக்கெல்லாம், சரி சமத்துவமாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுமாயின், ராணுவ சிப்பந்திகள் ஏன்? கோர்ட்டு கச்சேரிகள் ஏன்? கலக குழப்பங்கள் ஏன்? நாட்டு மக்களது சமுகம் உன்மத்த சமுகமா! ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவு உடையதாயிருக்கும் கீழ்த்தர ஜீவராசிகள், பல கோடி நூறாயிரம் வருடமாக கோர்ட்டு கச்சேரியின்றி, ஜெயில், சப்ஜெயில்களின்றி தத்தம் வாழ்வுக்கு வேண்டிய உணவைப் புசித்துக் கொண்டு, இன்று வரை வாழ்ந்து வருகையில், அய்ந்தறிவுடைய மனிதன், யாதொரு அடக்குமுறை தாபனங்களின்று தனது சமுக வாழ்க்கையை ஏன் நடத்தமாட்டான்? அதுவல்ல காரணம் அய்ந்தறிவுடைய மனித வாழ்க்கை யில் ஓர் கொடுங்கோல் திட்டம் புகுந்து கொண்டிருப் பதால், இத்தியாதி கேடும், வினையும் மனித சமுகத்தில் நிறைந்துள! அதுதான் பொருளாதார வித்தியாச திட்டமாகும். அதுதான் ஒருவருக்கிருந்தும், மற்றொரு வனுக்கு இல்லாதிருக்கும் திட்டமாகும். இந்தத் திட்டத் தைக் காப்பதற்கே, ஏற்பட்ட சேனை சிப்பந்திகளும், கோர்ட்டுக் கச்சேரிகளும், ஜெயில்களும், அடக்குமுறை களுமேயல்லாமல், தேச தற்காப்பிற்குமல்ல. உள்நாட்டு குழப்பங்களை யடக்குவதற்குமல்ல. சரிசமத்துவமாக மக்கள் வாழ்க்கை நடத்துவதற்கு மல்ல.
கோடிக்கணக்காக, கோடி வருடங்களாக, புழு, பூச்சி விலங்கினங்கள் யாவும் உணவுப் பொருள்களைத் தடையாதொன்றுமின்றி உண்டுகளித்து வருவதால், அடக்கு முறைகளும் அடக்குமுறை தாபனங்களுமின்றி, நீடூழிகாலமாக வாழ்ந்து வருவதைப் போல், மக்களுக்கு வரி, சுங்கம் முதலிய கொடிய சுமைகள் இல்லாவிடில், மக்களும் இன்னும் பல்லாயிரம் கோடி வருடம் சுகித்து வாழ்வார்களென்பதற்குச் சந்தேகமில்லை.
மக்கள் வாழ்க்கையில், காலப் போக்கிற்கொத்தவாறு, பற்பல நற்பழக்கங்களும், துற்பழக்கங்களும் உண்டாயின. அவைகளில், உணவுப் பொருள்களின் மேல் சிற்சில கற்பனா காரணங்களால் வரி சுமத்தப்பட்டு நாட்டில் வறுமை விளையநேர்ந்தது. நாட்டிலுள்ள வறுமையாகிலும், உலகிலுள்ள வறுமையாகிலும், போக்க வேண்டுமானால், முதலில் உணவுப் பொருள்களின் மேல் ஏறியுள்ள எல்லா வரிச்சுமைகளும் நீங்க வேண்டும். இந்த நியாயம் இவ்வாறிருக்க தற்கால ராஜ்ஜியங்கள், உணவுப் பொருள்களின்மேல் வரிகளைச் சுமத்துவது உன் மத்தமாகுமே ஒழிய, மதியாகா.
                                                                                                - புரட்சி - தலையங்கம்  - 8.4.1934


Friday, July 22, 2011

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

முத்துலட்சுமி (ரெட்டி)
கோயில்களில் பெண்களைப் பொட்டுக்கட்டுவதைத் தடுக்க சட்டம் செய்யவேணுமாய் திரு. முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தைச் சர்க்கார் நமக்கு அனுப்பி அதன்மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள்.

இதற்காகச் சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப் பிராயம். ஏனெனில், கோவில்களில் கட வுள்கள் பேரால் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி அவர்களையே பொதுமகளிர்களாக்கி நாட்டில் விபசாரித்தனத்திற்குச் செல்வாக் கும் மதிப்பும், சமய சமுக முக்கிய தானங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்டவழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. 

அன்றியும், நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புக்கே உரியது என்பதாகி, இயற்கை யுடன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும்விட்டது. ஒரு நாட்டில் நாகரிகமுள்ள அரசாங்கமாக வாவது அல்லது நாட்டின் சுயமரியாதை யையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத் தையோ, நலத்தையோ, கோரின அரசாங்க மாகவாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமுகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்துவர ஒருகண நேரமும் விட்டுக்கொண்டு வந்திருக்காதென்று சொல்லுவோம்.

ஆனால், நமது இந்தியாவில் வெள் ளைக்கார ஆட்சி குடிபுகவும் நிலை பெற வும், நம் நாட்டுச் சுயநலப் பார்ப்பனர்கள் உளவாளிகளாகவும், உதவியாகவும் இருந்து வந்ததால் அப்பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக வெள்ளைக்காரர்களும் இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்தால் அந்தப் பார்ப்பனர்கள் சொல் லுகின்றபடியே நடந்து (வெள்ளைக்காரர்கள்) தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் பட்டுவிட்டார்கள். இந்தக் காரணங்களால் அவர்கள் பார்ப் பனர்களுக்கு விரோதமாய் சீர்திருத்தத் துறையிலாவது, மனிதத்தன்மைத் துறை யிலாவது இதுவரை ஒருவித முற்போக்கான காரியமும் செய்யாமலே இருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள்.

ஆனால், இப்போது கொஞ்சகாலமாய் அப்பார்ப்பனர் களின் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கண்டுபிடித்து அவர்களது யோக்கியதை களை அடியோடு வெளியாக்கி சீர்திருத் தங்களை உத்தேசித்து நாமும் வெள்ளைக் காரர்களை மிரட்டக்கூடிய சமயம் மிரட் டியும், ஆதரிக்கக்கூடிய சமயம் ஆதரித் தும் பார்ப்பனர்களின் செல்வாக்கை ஒழித்து நமது சக்தியையும் தீவிர ஆசையையும் காட்ட ஆரம்பித்துவிட்டதால், இப்போது ஏதோ சிறிது அளவுக்காவது சர்க்காரார் சீர்திருத்தத் துறையில் நமது இஷ்டத் திற்கும் இணங்கும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமையின் பலனேதான் இப் போது நமது கொள்கைகள் சிலது நாட்டில் பிரசாரம் செய்யவும் செல்வாக்குப் பெறவும் இடம் ஏற்பட்டதும்; சட்டசபையில் இது சமயம் ஒரு முடிவைப் பெற்றுத் தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டுப் பொதுஜன  அபிப்பிராயத்திற்கு  வரநேர்ந்ததுமாகும். 

நிற்க, இப்போது திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப்பட்டி ருக்கும், பொட்டுக்கட்டுவதை ஒழிக்கும் இந்த மசோதாவானது வெகுகாலமாகவே ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களால் பொதுக்கூட்டங்களிலும், பொதுமகாநாடு களிலும் கண்டித்துப் பேசப்பட்டிருப் பதுடன் இம்மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று இந்திய சட்டசபைக் கூட்டங்களிலும் அடிக்கடி பிரதாபிக்கப் பட்டும் வந்திருக்கின்றது.  இது சம்பந்த மாக, திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்கள் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டு இருக்கிறார். அதன் சுருக்கமாவது.

தேவதாசி மசோதா

இந்த சமுகக் கொடுமையை ஒழிக்க ஆரம்பித்த கிளர்ச்சியானது 1868 வருஷ முதல் நடைபெற்று வருகிறது. 1906, 1907 வருஷம் உலக தேசிய மகாநாட்டில், இந்தக் கொடிய கெட்ட வழக்கத்தை ஒழிப்பதற் காகப் பல மாகாண சர்க்கார் அபிப்பிராயங் களையும் அறிந்து தம்மால் கூடியவரை ஒழிப்பதென முடிவு செய்ததினின்று, இந்தியா கவர்ன்மெண்டும், இந்த தேவதாசி  மசோதாவில் அதிக சிரத்தைக் காட்டி வந்தது. 1912ஆம் வருஷம் பழைய இம்பீரியல் சட்ட நிருபண சபையில், மூன்று இந்திய அங்கத்தினர்கள், கனம் மாணிக்ஜிதாதா பாய், முதோல்கர், மேட்கித் ஆகியவர்கள் இந்தக் கொடிய பழக்கத்தை ஒழிப்பதற்கு இதே எண்ணத்தோடு வேறு மூன்று மசோதாக்கள் கொண்டு வந்தனர். 

இந்திய சர்க்கார், உள்நாட்டு சர்க்காருக்கு இந்த மசோதாவை அனுப்பி, அவர்களது அபிப்பிராயம் தந்த உடன் 1913ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் தாங்களா கவே ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். மீண்டும் அம்மசோதா ஒரு செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு அவர்களது ரிப்போர்ட்டையும் 1914 வருஷம் மார்ச்சு மாதம் பெற்றார்கள். 

அந்த ரிப்போர்ட் மறுபடியும் இப்போ தைப் போலவே பொதுஜன அபிப்பி ராயத்துக்கு விடப்பட்டது. இம்மசோ தாவை நிறைவேற்றுவதில் எல்லோருக்கும் பூரண எண்ணமிருந்தபோதிலும், அத் தகைய பெண்களை எவ்வாறு காப் பாற்றுவது என்பது போன்ற சில சில்லரை விவாதங்கள் கிளப்பிவிடப்பட்டதால் அம்மசோதா தானாகவே அதுசமயம் மறைந்துவிட்டது. அதன் பின்னர் மகாயுத்தக் கிளர்ச்சியினால் அது கவனிக்கப்பட முடியாமல் போயிற்று.

பிறகு 1922ஆம் வருஷம் டாக்டர் கோர் மீண்டும் அதை இந்திய சட்டசபையில் கொண்டுவந்தார். மேற்படி தீர்மானத் தின்மேல் விவாதம் நிகழ்ந்து கடைசியாக அது மறுபடியும் பொதுஜன அபிப்பிரா யத்திற்கு பிரசுரிக்கப்பட வேண்டுமென்ற பிரேரேபனை அதிகப்படியான ஓட்டு களால் தோற்கடிக்கப்பட்டது. பிறகு மேல் படி 1922ஆம் வருஷத்திய தீர்மானத்தின் மீது 1924ஆம் வருஷம் அதை சட்ட மாக்கப்பட்டதோடு, அதை அனுசரித்து இந்தியன் பினல்கோடு 372, 373 செக் ஷன்கள் திருத்தப்பட்டன. 

அதன் சட்டம் 1925ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதியன்று அமலுக்கு வந்தது. ஆதியில் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பொட்டுக்கட்டுதல் கூடாதென்று சாஸ்திரத் தால் தடுக்கப்பட்டிருக்கிறது.  ஏனெனில், பொட்டுக்கட்டப்பட வேண்டிய பெண் சாஸ்திரப்படி கன்னிகையாயிருக்க வேண்டுமாதலால் 14 வயதிற்குள்தான் இந்த சடங்கு செய்வது வழக்கமாக இருந்து வந்தது. 

அதாவது எந்தப் பெண்ணையும் 14 வயதிற்குமேல் பொட்டுக்கட்ட எந்தக் கோயில் அதிகாரியும் அனுமதிப்ப தில்லை.  ஆனால், இப்பொழுது மேற்படி சட்டம் வந்தபிறகு  16 வயதிற்குக் கீழ்ப் பட்ட பெண்களுக்கு பொட்டுக்கட்டப் பட்டால்  கோயிலதிகாரிகள் குற்றவாளிகள் ஆவதோடு அந்த விதமாக அனேக கேகள் நடந்து அந்த 25வது சட்டப்படி தண்டனையும் பெற்றிருக்கிறார்கள்.

ஆகவே, வைதிகர்களது அபிப்பிரா யப்படி பார்த்தாலும்கூட, சாஸ்திரப்படி 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோவில்களில் பொட்டுக்கட்ட  மத அனுமதியில்லையென்று தெரிகிறது. இந்தியன் பினல்கோடுபடி ஒரு மைனர் பெண்ணைப் பொட்டுக்கட்டுவது குற்ற மென்றாலும், பேராசையுள்ள பெற்றோர்கள் சிலர் தங்கள் பெண்களுக்குப் பொட்டுக் கட்ட கோவிலினிடமிருந்து உத்தரவு பெற்றுவிடுகிறார்கள்.

இது விபசாரத்துக்கு அனுமதி கொடுத்த தாகுமேயன்றி வேறில்லை. பொதுஜன அபிப்பிராயம் இதைச் சட்டமாக்க அனுகூலமாயேயிருக் கிறது.  பத்திரிகைகளில் இதை ஆதரித்து எழுதியும் பொதுக்கூட்டங்களில் ஆதரித் துத் தீர்மானங்கள் நிறைவேற்றியும், சுமார் 13 வருஷத்துக்கு மேற்பட்ட ஆண்-பெண் சங்கங்களில் அதை ஆதரித்து தீர்மானங்கள் நிறை வேற்றியும் இந்தக் கொடிய பழக்கத்தினால் அல்லலுறும் சமுகத்தினரே இதைச் சட்டமாக்க வற் புறுத்தி எழுதியும் இருக்கின்றனர். டிடிரிக்டு போர்டு முனிசிபாலிட்டிகளிலும் தங்களது ஆதரவைத் தெரிவித்திருக் கின்றனர். 

இவ்வாறெல்லாமிருக்க, இச்சட்டத் திற்குப் பொதுஜன அபிப்பிராயத்தை அறிய விரும்புவானேன்? என்பது விளங்கவில்லை. இந்த நாள்பட்ட கொடிய சமுகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபணையோ, எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது. இந்தியத் தலைவர்கள் கூறியிருப்பது போல் தேவதாசி என்று ஒரு வகுப்பு இருப்பது இந்து சமுதாயத்திற்கே இழிவானதுமல்லாமல், இந்து மதத் திற்கே பெரும் பழியுமாகும். 

ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகு மாகையால் இவ்வழக்கம் பெண்களின் அந்ததையும், கவுரவத்தையும் பெரிதும் பாதிக்கக்கூடியதாயிருக்கிறது. அன்றியும் ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ, சமுகத்தையோ விபசாரத்திற்கு அனுமதி கொடுப்பதும்,, பின்னர் அவர்களை இழிந்த சமுகமாகக் கருதுவதும் பெரும் சமுகக் கொடுமையாகும். சிறு குழந்தை களிலிருந்தே இத்தகைய துராசார வழிகளில் பயிற்றுவிப்பது ஜனசமுக விதிகளையே மீறியதாகும். எனவே இப்படிப்பட்ட நிலைமையில் இனி இதைப் பற்றி பொதுஜனங்களுடைய அபிப்பிரா யத்தைத் தெரியவேண்டிய அவசியமே இல்லை.

தவிர இதுவிஷயத்தில் சாஸ்திர சம் பந்தமான  வைதிகர்களின் ஆட்சேப ணைக்கும் இடமில்லை. ஏனெனில் சாதிரத்தில் 14 வயதுக்கு முன் கன்னிப் பெண்ணாய் இருக்கும்போதுதான் பொட்டுக்கட்ட வேண்டும் என்று இருக் கின்றது இந்தியன் பினல்கோட் 372, 373 செக்ஷன்களின்படியோ 18 வயதுக்குள் பொட்டுக்கட்டக்கூடாது என்றும், கட்டினால் ஒரு வருஷக் கடினக்காவல் தண்டனையும் அபராதமும் என்றும் இருக்கின்றது. 

ஆகவே, இதுவிஷயத்தில் வைதிகமும் இந்துமதமும் 1924 வருஷத்திலேயே ஒழிந்துவிட்டது. இந்நிலையில் இப்போதைய வைதிகர்கள்  என்பவர்கள் இதை ஆட்சேபிப்பதனால் ஒன்று அவர்களது சாதிரம் அவர் களுக்குத் தெரியாமல் இருக்கவேண்டும் அல்லது தாசிகள் மூலம் தங்கள் வகுப்பார்களில் சிலர் வயிறுவளர்ப்பது கெட்டுப்போகுமே என்கின்ற ஜாதி அபிமானமாக இருக்கவேண்டும். அடுத்தாற்போல் பொதுஜனங்கள் எந்த விதத்திலாவது இந்தச் சட்டத்தை ஆட்சேபிப்பார்களா என்று எண்ணுவதும் ஒன்று முட்டாள்தனமாகவோ அல்லது யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையாக வோதான் இருக்க வேண்டும். 

ஏனெனில் இந்து சமுகத்தில் கடவுள் பேரால், மதத்தின் பேரால் விபசாரிகளை ஏற்படுத்த வேண்டும் என்று எந்த சமுகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்களானால், அவர்களைப்போல் காட்டுமிராண்டிகளோ கெட்டவர்களோ இருக்கவே முடியாது. மற்றபடி எந்த சமுகமாவது இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களே யானால் அவர்களைப்போல் சுயமரியாதை யற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்கமுடியாது.

எந்தப் பெண்களாவது இந்தத் தொழிலில் ஜீவிக்கலாம் என்று கருதி அதற்காக சுவாமியையும், மதத்தையும் உதவிக்கு உபயோகப்படுத்த நினைத்தால் அவர் களைப்போல் ஈனப்பெண்கள் வேறு எங்கும் இருக்கவே முடியாது. 

ஆகவே இந்தச்சட்டம் சென்ற சட்டசபைக் கூட்டத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டியது மிக்க அவசியமும் யோக்கிய முமான காரியமுமாகும். ஆனால், அந்தப் படி நிறைவேற்றப்படாமல் இருக்கச் சட்ட மெம்பர் ஆட்சேபணைகளைக் கிளப்பி இதை பொதுஜன அபிப்பிராயத்திற்கு அனுப்புவது என்னும் பேரால் தடைப் படுத்திவிட்டது மிகவும் வருந்தத்தக்க தாகும். 

அதற்கு அனுகூலமாய் ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்கள் ஓட்டுக் கொடுத்தது அவர்களுக்கு மிகுதியும் மானக்கேடான காரியமாகும். அக்கட்சியார்கள் இந்தக் காரியத்தைக்கூட செய்ய முடியவில்லை யானால் பின் என்ன வேலை செய்யத்தான் அந்தச் சட்டசபையை நடத்திக் கொண் டிருக்கிறார்கள் என்பது நமக்குப் புலனாகவில்லை. 

காங்கிரகாரர்கள்  சட்டசபையில் இல்லாததால் இச் சட்டம் நிறைவேறாமல் போயிற்று என்று திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் நமக்கு எழுதி இருப்பதைப் பார்க்க நமக்குத் தாங்க முடியாத அவமான மாகவே இருந்தது.

எப்படியானாலும் அடுத்த சட்டசபைக் கூட்டத்திலாவது இச்சட்டம் நிறைவேறா மல் போகுமேயானால் சர்க்காரின் யோக்கியத்திலும், ஜஸ்டிஸ் கட்சியாரின் சுய மரியாதையிலும் தெருவில் போகின் றவனுக்குக்கூட மதிப்பும் நம்பிக்கையும் இருக்காதென்றே சொல்லுவோம்.
தந்தை பெரியார்
- குடிஅரசு -  தலையங்கம் -23.03.1930

Sunday, July 17, 2011

ஒரு சந்தேகம்


புதுபக்தன்: சிவனுக்குத் திருப்பணி செய்பவர்கள் அதாவது கல்லினால் கோவில் கட்டுபவர்கள், கும்பாபிஷேகம் செய்பவர்கள், பழைய கோவில்களை ரிபேர் செய்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்பவர்கள் ஆகிய எல்லோரும் கைலாயத்தில் சிவபெருமானுடன் இரண்டறக் கலந்து கற்பகோடி காலம் வாழ்வார்கள் என்று சாஸ்திரங்கள் சொல் லுவதாக பெரியோர்கள் சொல்லுகிறார்களே இது மெய்தானா?
பழைய பக்தன்:- அடப் பயித்தியமே எந்த மடையன் சொன்னான் உனக்கு இந்தப்படி?
பு. ப:- ஏனைய்யா! சந்தேகம் கேட்டால் கோபிக் கிறீர்கள். விவரம் சொல்லுங்கள்.
ப.ப:- இதற்கு சந்தேகம் என்னப்பா வந்தது? சொல்லுகிற மடையனோ அயோக்கியனோ சொன்னால் கேட்கிறவனுக்கு புத்தி வேண்டாமா? எவனாவது மலத்தைக் கையில் வைத்துக் கொண்டு அய்யா இது ஜவ்வாது என்று சொன்னால் மூக்கு நன்றாய்இருக்கிற ஒருவன் அதில் சந்தேகப்பட்டு ஏனய்யா இது ஜவ்வாதா என்று கேட்பானா?
பு.ப:- இது என்ன உபமானமய்யா எனக்குப் புரியவில்லையே
ப.ப:- அட முண்டமே! இந்த உலகத்தில் சிவ னுக்குக் கல்லில் கோவில் கட்டித் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து, சிவனுக்குக் கல்யாணம், கருமாதி எல்லாம் பண்ணி, தினம் 3 வேளை, 6 வேளை பொங்கல் படைப்புக்கு பூமி எழுதிவைத்த பக்த சிகாமணிகளை இந்த உலகத்திலேயே இவற்றையெல்லாம் சிவன் நேரில் கண்ணில் கண்டும்கூட அப்படிப்பட்டவனைத் தன் கிட்டவந்து தொட்டுக் கும்பிடவோ, தன் பக்கத்தில் நின்று பிரார்த்தனை செய்யவோ அந்த சிவன் சம்மதிப் பதில்லையே. அப்படி இருக்க இவைகளை யெல்லாம் நேரில் காணமுடியாத இடமாகிய கைலாயத்தில் இருக்கும் சிவன் திருப்பணி செய்தவனைக் கிட்டச் சேர்க்குமா? இவன் செய்த திருப்பணிகள் சங்கதி சிவனுக்கு எப்படித் தெரியும்? தெரிந்தாலும் இங்கே சேர்க்காத சிவன் அங்கே சேர்க்குமா? அதுவும் இங்கு கல்லில் இருக்கும் சிவன் சேர்க்கவில்லை என்றால் நிஜமா இருக்கும் சிவன் சேர்க்குமா? இது தெரியாமல் ஒரு சந்தேகம் என்கிறாயே சந்தேகமா, மடத்தனமா?
பு.ப:- அய்யய்யோ நீங்கள் சொல்லுவது பார்க்கிறதுக்கு நிசமாய் இருந்தாலும் அது உண்மையல்ல. ஏனென்றால், இங்கு இருக்கும் பார்ப்பனர்கள் அப்படிச் செய்து நம்மை அவமானப்படுத்துகிறார்கள். சிவபெருமான் அப்படிப்பட்டவரல்லவே.
ப.ப:-அடமடக் குன்றே! பார்ப்பனர் அப்படிச் செய்யவில்லை. அவர்கள் ரொம்பவும் நல்லவர்கள். சிவபெருமான் உடனே கைலாயத்தில் இருந்து இங்கு வந்தவர்களும் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்களு மாவார்கள். சாஸ்திரங்கள் அந்தப்படி அதாவது இந்த மக்களை கிட்ட நெருங்கவிடக் கூடாது என்று சொல் லுவதனால் பார்ப்பனர்கள் அப்படிச் சொல்லுகிறார்கள். ஆதலால், பார்ப்பனர்கள் மீது குற்றம் சொல்லி தப்பித் துக்கொள்ளவோ சிவனைக் காப்பாற்றவோ பார்க்க வேண்டாம். பு. ப:- அய்யய்யோ! அந்த சாஸ்திரம்கூட இந்தப் பார்ப்பனர்கள் எழுதியதுதானே, இதற்கு சிவன் என்ன செய்வார்?
ப.ப:- அடக் களிமண் உருண்டையே! அந்த சாஸ்திரத்தை நீ எப்போதாவது பார்த்தாயா? நான் பார்த்து இருக்கிறேன். அந்த நீ சொல்லும் சாஸ்திரம் பார்வதிக்கு பரமசிவனே நேரில் சொன்னது. அதை நந்தி கேட்டிருந்து நமக்குச் சொல்லப்படுவதாகும். அதிலேயே அப்படி இருக்கிறது. ஆதலால் சாஸ் திரத்தில் அவநம்பிக்கை வைக்கவேண்டாம்.
பு.ப:- அய்யா நீங்கள் வேண்டுமென்றே பேசு கிறீர்கள் போல் தெரிகிறது. பார்ப்பனர் தங்கள் பிழைப் புக்கும் மேன்மைக்கும் எழுதிவைத்த ஏடுகளை எடுத்துக் கொண்டு அதை சாஸ்திரமென்றால் செல்லுமா? அப்படி எந்தக் கடவுளாவது சொல்லி இருக்குமா? என்ன அய்யா இப்படிப் பேசுகிறீர்கள்?
ப.ப:- நான் பேசுவது தப்பு என்கிறாய் - அப்படியானால் நீ யோசித்துப்பார். என்னை எதற்காக ஒரு சந்தேகம் என்று கேட்க வந்தாய்? சாஸ்திரங்களில் சொல்லப்படுவது உண்மையா என்று தானே கேட்க வந்தாய்?
பு.ப:- ஆம்.
ப.ப:- இப்போது நீ குறித்துக்கொண்டு வந்த சாஸ்திரம் மெய்யா பொய்யா என்று தெரிந்து கொண் டாயா? அதை யார் என்ன காரியத்திற்கு எழுதினார்கள் என்றும், அதை நம்பலாமா வேண்டாமா என்றும் தெரிந்துகொண்டாயா? சாஸ்திரம் என்றால் கல்லால் கோவில் கட்டினவர் கற்பகோடி காலம் கைலாயத் தில் சிவனோடு கலந்திருப்பார்கள் என்று எழுதப் பட்டிருப்பதும், சூத்திரர்கள் கோவில் கட்டினவர் களாயிருந்தாலும், (சிவனையே) செய்து வைத்தவர்களாயிருந்தாலும் சிவனைத் தொட்டு விட்டால் உள்ளே நுழைந்துவிட்டால் மகாபாவம் என்ப தல்லாமல் சிவனும் தீட்டுப்பட்டுவிடுவான் என்று எழுதப்பட்டிருப்பதும் ஒன்றுதான். இந்த இரண்டும் ஒருவன் எழுதியதுதான்.
பு. ப:- சரி, சரி இப்போது தெரிந்துகொண்டேன்.
ப. ப:- அப்படி வாப்பா! இப்போது புரிந்ததா என் உதாரணம்
பு. ப;- புரிந்தது! புரிந்தது!! எல்லாம் புரட்டு என்பதும் இந்தத் திருட்டுப்பசங்கள் எழுதினதென்பதும் நன்றாய் புரிந்தது!
ப.ப:- அப்பனே! உனக்கு அறிவு இருக்கிறது, கண் இருக்கிறது, அனுபவம் இருக்கிறது. இவ்வளவையும் விட்டுவிட்டு மனுஷனுக்குப் பிறக்காத நிஜமாய் இருந்திருக்காத, எவனோ ஒரு மடையன் எப் போதோ எதற்காகவோ சொன்னதை, நம்பினதை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்து பொய்யா, மெய்யா, சந்தேகம் என்கிறாயே? இப்படித்தானே மனிதரில் பெரும்பாலோர் இதுபோல் ஒன்றுக் கொன்று முரணான எத்தனையோ காரியங்களை நம்பியும் சந்தேகப்பட்டும், பேராசைப்பட்டும் மாடுகளாக ஆகிவிட்டார்கள். போ இனியாவது இந்த மாதிரி காரியத்துக்கு சந்தேகம் கொள்ளாதே.
பு.ப:- சரி புத்திவந்தது போய் வருகிறேன்.
ப.ப:- போய்த் தொலை.

சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் எழுதியது.
குடிஅரசு - கற்பனை உரையாடல் - 30.06.1945


Sunday, July 3, 2011

கொள்கைகளும், திட்டங்களும் பாமர மக்களுக்காக....


தலைவரவர்களே! தோழர்களே !


திருச்சி மாநாட்டிற்குப்பின் இங்கு முதல்முதல் கூடி இருக்கிறோம். திருச்சி மாநாடானது உண்மையில் யாருக்காக நமது இயக்கமும், கழகமும் இருக்கிறதோ அவர்கள் கைக்கு இயக்கமும், கழகமும், மாநாடும் முழு சுதந்திரத்துடன் வந்துவிட்டது என்பதைக் காட்டிவிட்டது என்றே சொல்லலாம்.
நம் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வேறு பலரும் S.I.L.F.. கட்சி என்றும், பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், திரவிடியன் லீக் என்றும், திரவிடியன் பார்லிமெண்டரி போர்ட் என்றும், தென்இந்தியர் என்றும் பல பெயர்களைச் சொல்லிக்கொண்டு இரகசியமாகவும், போலிஸ் காவலுடனும், பட்டாங்க மாகவும் மாநாடுகளைக் கூட்டினார்கள். ஆனால் அங்கு சென்றவர்கள் யார்? சர்கள், திவான்கள், ராவ்பகதூர்கள், சாஹேப்கள் இவர்களைக் கொண்டு கடைத்தேறக் கருதும் சுயநலப்பக்தர்கள் குழாம்கள் ஆகியவர்களேயாகும். அப்படிப்பட்ட அவர்களது கூட்டமும் சிரிப்புக்கு இடமான தன்மையில் முடிவு பெற்றும் பெறாமலும் நடந்திருக்கும். மற்றும் சில மாநாடுகளோ கமிட்டிகளோ காரியக் கூட்டங்களோ நடைபெறாமலேயே அசரீரியால் கேள்விப்பட்டு பத்திரிகையாளர்களின் தயவால் வெளியாக்கப் பட்டதாக நடைபெற்றிருக்கும்.
திருச்சிக் கூட்டம் அப்படி இல்லை என்பதோடு சர்களோ, ராவ்களோ, பகதூர்களோ, பண மூட்டை களோ, சுயநலப்பட்டம், பதவி பித்தர்களோ ஆன வர்கள் இல்லாமல் உண்மையான திராவிட மக்களாகவே ஆண் பெண்கள் உள்பட நாற்பது அய்ம்பது ஆயிரம் மக்களாக வந்து கூடிஇருந்தார்கள்.
மதப் பிரசாரமோ, சாமி பிரசாரமோ, புராண ஆபாசக்கதை பண்டிகை உற்சவமோ, காரியமோ சிறிதும் இல்லாமல் பட்டம் பதவி கூடாது தேர்தலில் நிற்கக்கூடாது என்பதோடு, மதம், சாமிகள், பூதம், உற்சவம், புராணம், புண்ணியச் சரித்திரம் முதலிய வைகளைக் கண்டித்தும் வெறுத்தும், சிலவற்றை இழித்துக்கூறியும், அதற்காகவே மாநாடு கூட்டுவ தாகப் பிரசாரம் செய்து விளம்பரம் செய்திருந்தும் நாற்பது ஆயிரம் அய்ம்பதாயிரம் மக்கள் வந்து கூடினார்கள் என்றால் இடமில்லாமல், சோறில்லாமல், மழையில் நனைந்து மண்ணில் புரண்டு கொண்டு பெண்டு பிள்ளைகளுடன் வெகு கஷ்டத்தோடு 3-நாள் 4-நாள் திருச்சியில் வதிந்தார்கள் என்றால் இந்தக் கூட்டத்தை மாமாங்கக் கூட்டம் என்றோ பெரிய பாளையத்தம்மன் பண்டிகைக் கூட்டம் என்றோ பீபிள்ஸ் பார்க்குக்கூட்டம் என்றோ எந்த அறிவிலிதான் சொல்ல முடியும்?
ஆகவேதான், ஜஸ்டிஸ் கட்சி எந்த மக்களுக்கு ஆக என்று துவக்கப்பட்டதோ அந்தக்கட்சி அந்த மக்களின் உண்மையான பெயரின் மீது அந்த மக்களுடைய கைக்கே வந்ததோடு அந்த மக்களைப் பயன்படுத்திச் சுரண்டிக்கொண்டும் பயன்பெற்றுக் கொண்டும் வந்த சுயநலக்கூட்டம் துரத்தப்பட்டும் விட்டது. இந்தத் தன்மையில் இன்று நமது நிலை, நமது பொறுப்பு ஆகியவை மிகக் கஷ்டமானவை நமக்குப்பல எதிரிகள் இருக்கிறார்கள். அதிலும் இன்று அரசியல் சமுதாய மத இயல் கட்சிகள், ஸ்தாபனங்கள் என்பவைகள் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டும் தமக்குள்ளாகவே பிளவுகள் செய்து போராடிக்கொண்டும் இருக்கின்றன. வசவுகளும் அடிதடி பலாத்காரங்களும் இல்லாமல் எந்தக்கட்சி வேலையும் நடக்க முடியாத நிலையை அடைந்து விட்டதான இந்த நிலையில் புரட்சிகரமான கொள்கை கொண்ட நாம் வேலை செய்வது என்பது மிகவும் கஷ்டமானதும், அபாயகரமானதுமான காரியம் ஆகும் அல்லவா ?
நம் கொள்கை
ஏனெனில், நமது கட்சி இன்று ஒரு அலாதியான தன்மை கொண்டதாகும். நம் கட்சியைப்போன்ற மற்றொரு கட்சி இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லலாம். நம்மைத்தவிர மற்ற எவரும், எந்தக்கட்சி யாரும் நம்மை எதிரிகளாகக் கொள்ளத் தக்க நிலையில் இருக்கிறோம்.
உதாரணமாக நாம் ஒரு கட்சியார்தான் இன்று தேர்தலைப் பகிஷ்கரிக்கிறோம். தேர்தலில் கலந்து கொள்ளாதே என்கிறோம். நாம் ஒரு கட்சியார்தான், சாமிகள், பூதங்கள், கோட்பாடுகள், மதப்பயித்தியங்கள், ஜாதித்தன்மைகள், சாஸ்திரங்கள், புராணங்கள், கடவுள்களின் திருவிளையாடல்கள், இராமாயணம், கீதைகள் ஆகியவைகளை கண்டித்துப் பேசுகிறோம்.
அநேகத்தை கூடவே கூடாது என்று மறுத்தும், இழித்தும் பேசிப் பிரசாரம் செய்து மாநாடுகள் கூட்டித் தீர்மானிக்கிறோம். இதை இந்த இந்தியாவில் வேறு யார் செய்கிறார்கள்? நல்ல ஒரு அரசியலுக்கும், நல்ல ஒரு அறிவுத் தன்மைக்கும், மக்கள் ஒற்றுமைக்கும், நல்வாழ்வுக்கும் இந்தக்கொள்கைகள் சிறிதாவது அவசியம் என்று எந்த அரசியல் பொருளாதார இயல், சமய சமுதாய இயல் கட்சியார் கருதுகிறார்கள் ?
நாம் ஏன் இப்படிக் கருதுகிறோம் என்றால் நாம் பொறுப்பை உணருகிறோம். நம் மக்களை விழுந்து கிடக்கும் குழியில் இருந்து மேலேற்ற இந்தக் கொள்கை கள்தான் படிக்கட்டு - ஏணி என்று கருதுகிறோம். நாம் இந்த இழிநிலையில் அதாவது ஜாதியில் கீழாய் படிப்பில் தற்குறியாய், செல்வத்தில் தரித்திரர்களாய், தொழிலில் கூலியாய், ஆட்சியில் அடிமையாய் இருப்பதற்கு நம் மிடம் இன்றுள்ள மடமையும், மடமைக்கு ஆதாரமான மதத்தத்துவக் கொள்கை, மததர்மம், ஜாதி, ஜாதி வகுப்புப்பேதம், கடவுள்கள், கடவுள் கதைகள், கல்வித் தன்மைகள், இவைகள் கொண்ட மக்களின் தேசியம் முதலியவைகளேயாகும். ஆதலால், அடிப்படையாக பயனுள்ளதான ஆக்க வேலைசெய்ய முயற்சிக்கிறோம். இந்த முயற்சிக்கு இதனால் பாதிக்கப்படும் எவரும் நமக்கு எதிரிகளாய்த்தான் இருப்பார்கள். இவர்கள் யாவரும் நமக்கு எதிரிகள் என்றால் இவர்களது கூட்டுறவால் ஆதரவால் ஒப்பந்தத்தால் அரசு செலுத்தி இவர்களுக்குப் பங்களிக்கும் அரசாங்கமும் நமக்கு எதிரியாய் இருப்பதில் அதிசயமென்ன இருக்க முடியும் ?
இப்படியெல்லாம் இருந்தும் நாம் நம் முயற்சியில் மேலும்மேலும் ஊக்கமேற்படத்தக்க நிலையில் இருக்கிறோம். நம் கொள்கைகள் திட்டங்கள் எல்லாம் இன்று பாமர மக்கள் சிந்தனைக்கு ஆட்பட்டவைகளாக ஆகி வருகின்றன.
எதிரிக்கு இடம் கொடுங்கள்
ஆகையால், நாம் நம் பிரசாரத்திற்கு இன்னும் நல்ல வசதி செய்து கொள்ள வேண்டும். நம் பிரசாரத்திற்கு வசதி என்பது எதிரிகள் பிரசாரத்திற்குத் தாராளமாக நாம் இடம் கொடுப்பதே முதலாவதாகும். இன்று நம்மை எதிர்த்துப்பேச எந்தக் கட்சியாருக்கும் இடமும் வசதியும், மேடையும் இல்லாத நிலையில் இருக்கிறோம். உதாரணமாக, என்னை ஒருவன் எதிர்க்க வேண்டு மானால் என் மீசை, தாடி, கைத்தடி, பெயர், என்னுடைய கணக்கு வழக்குகளைப் பிறருக்குக் காட்டவில்லை என்பது நான் சர்வாதிகாரம் செய்கிறேன் என்பது, ஆகியவைகள் பற்றியும் மற்றும் இன்னும் என் சொந்த நிலை பற்றியும் தான் எப்படிப்பட்டவனும் பேச முடியுமே தவிர இந்த 20 வருஷகாலமாக நான் சொல்லி வந்ததைப் பற்றியோ, சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சி ஆகியவற்றின் கொள்கைத்திட்டம் ஆகியவை களைப் பற்றியோ எதிர்த்துப் பேசி மெய்ப்பிக்க இன்று எவருக்கும் சரக்கோ மேடையோ இல்லாமல் போய்விட்டது.
இந்தத் தன்மை இன்று இந்த நாட்டில் யாருக்கு எந்தக்கட்சிக்கு இருக்கிறது; சொல்லுங்கள் பார்ப்போம். ஆகையால் நாம் எந்தக் கட்சியாருடனும் வாதத்துக்கோ, வழக்குக்கோ போக வேண்டியதில்லை. நாம் மற்ற கட்சியார் கூட்டத்திற்கு வம்புக்கும் தொல்லைக்கும் போனதாகப் பத்திரிகைகளில் சேதி வருகின்றன. அந்தப்படி சேதிவர நாம் இடம் கொடுக்கக் கூடாது. மற்றவர்களுடைய கூட்டங்களுக்குப் போக வேண்டு மென்றோ போக வேண்டாமென்றோ நான் சொல்ல வரவில்லை. போனால் இஷ்டமுள்ளவரை இருந்துவிட்டு வந்துவிட வேண்டியது தான்.
கேள்வி கேட்காதீர்கள்
கேள்வி கேட்பதுகூட சரி இல்லை என்பதுதான் என் அபிப்பிராயம். நம் கேள்விகள் அவர்களுக்குப் புரியாது; புரிந்தாலும் பதில் சொல்ல முடியாது. முடிந்தாலும் பதில் சொல்ல மாட்டார்கள். ஆதலால், நாம் கேள்வி கேட்பதை அவர்கள் கலகம், குழப்பம் என்றுபேர் வைத்து கலைத்துவிட்டுப் போகவே தந்திரம் செய்வார்கள். பத்திரிகைக்காரர்களும் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆனதால் நம்மால் கலகம் நடந்ததாக எழுதிவிடுவார்கள். இதனால் அவர்கள் தங்கள் பலக்குறைவில் இருந்தும் அவர்களது கொள்கையும் நாணயமும் அற்ற திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ளுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை யாராவது கேள்வி கேட்டால் அதற்குப்பதில் சொல்லு வது வழக்கம். எனக்குத் தெரிந்ததை என் கருத்தைச் சொல்லி விடுவேன். கேள்வி கேட்டவர் ஒப்புக்கொள்ளுகிறாரா இல்லையா என்பதைப்பற்றிக் கவலை இல்லை. கேள்வி கேட்பது குற்றமாகாது. சொன்ன பதிலைப் பதிலாகக் கருதாமல் அதன்மேலும் கேள்வி கேட்பதோ விவகாரம் செய்வதோ நியாயமாகாது என்பதோடு அது ஒழுக்கமுமாகாது யோக்கியமு மாகாது என்பேன். இதுதான் நாகரிகமும் நாணயமும் கொண்ட மக்கள் கூட்டத்தின் நடப்பு முறையாகும்.
கலகம் ஏற்பட்டால் ஒரு கை பார்க்க வேண்டும். தலை கொடுக்கவேண்டும் அதுதான் சுயமரியாதைக் காரன் கடமை. ஆனால் கலகம் செய்வதும் கலகம் ஏற்படும்படி நடப்பதும் இழிவான காரியமாகும். கூட்டத்தில் ஆர்க்குமெண்டுக்கு ஆகப்பேச வேண் டுமே ஒழிய ஒரு மனிதனை ஒரு கட்சியை இழித்துக்கூறும் எண்ணத்தோடு பேசக்கூடாது. சிலருக்குச் சில தனிப்பட்ட ஆட்களைப் பற்றிப் பேசு வதைத் தவிர கூலிக்காக ஒருவரை ஒருவருக்காக வைவதைத்தவிர வேலையும் இருக்காது விஷயமும் இருக்காது. இப்படிப் பட்டவர்கள் பேசும் கூட்டங்களில் கலவரம் வந்தேதீரும். ஆனாலும் நம்மவர்கள் அதில் சம்பந்தப்படக்கூடாது என்று வேண்டிக்கொள் ளுகிறேன்.
கெட்ட பெயருக்குப் பயப்படக்கூடாது.
நாம் நம் கொள்கைப்படி காரியம் செய்வதில் நமக்குக் கெட்ட பேர் வருமே என்று பயப்படக் கூடாது நாம் கெட்ட காரியம் செய்யத் தலைப்படக்கூடாதே தவிர மற்றவன் என்ன சொல்வான் என்று சிந்திக்கக்கூடாது. நம்மைப் பற்றி மற்றவன் போற்ற வேண்டுமென்றும் கருதக்கூடாது. கசப்பான மருந்து கொடுப்பதும் நோவான ஆயுத சிகிச்சை செய்வதும் ஒரு வைத்தியனுடைய வியாதியஸ்தனுக்குக் கஷ்டமானாலும் வைத்தியத் தன்மைக்குப்புகழ் ஆகும். ஆதலால் நம் தொண்டின் பயனாய் ஏற்படும் நலனைத்தான் நாம் சிந்திக்க வேண்டும். அதுதான் நமது இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் உண்மைக் காரணமானதாகும்.
நம்மவர்கள் திருச்சி தாயுமான சுவாமிகோவிலில் ஏதோ சில விக்கிரகங்களைப் பின்னப்படுத்தி விட்டதாகப் பத்திரிகையில் பார்த்தேன். ஜஸ்டிஸ் கட்சிக்காரர் என்று சொல்லிக்கொண்டு யாரோ இதைக் கண்டித்துத் தீர்மானம் செய்ததாகவும் சேதி பார்த்தேன் இது (நடக்கவே இல்லை) உண்மையாய் நடந்திருக்குமானால் எனக்குக் கஷ்டமொன்று மில்லை. ஆனால் இதைச் செய்யும்படி நான் அல்லது நம் கட்சி (அதாவது யோக்கியமான ஜஸ்டிஸ் கட்சி) யாருக்கும் கட்டளை இடவில்லை. அது இப்போதைய நம் கொள்கையுமல்ல, ஆகையால் அப்படிப்பட்ட காரியத்தில் நம்மவர்கள் சம்பந்தப்படக்கூடாது; பெயர் கூட வெளிவரக்கூடாது.
- குடிஅரசு 27.10.1945

சமதர்ம பிரச்சார உண்மை விளக்கம்

தோழர் ஈ. வெ. ரா. ஸ்டேட்மெண்டு


இ.பி.கோ. 124A செக்ஷன்படி தொடரப்பட்டுள்ள பொது வுடைமை பிரச்சாரத்திற்காகவும் இராஜ நிந்தனை என்பதற் காகவுமுள்ள வழக்கு கோவையில் 12ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட போது தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்கள் கோவை ஜில்லா கலெக்டர் ழு.று. வெல் ஐ.ஊ.ளு. அவர்கள் முன் தாக்கல் செய்த ஸ்டேட்மெண்ட்:-
(1) என் பேரில் இப்போது கொண்டு வரப் பட்டிருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது.
(2) வழக்குக்கு அஸ்திவாரமான 29-10-33 தேதி குடிஅரசின் தலையங்கத்தை இப்போது பலதரம் படித்துப் பார்த்தேன். அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்.
(3) அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்காவது வாக்கியங்களுக்காவது ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால் இன்றைய அரசாங்கமுறை நிர்வாகமுறை முதலியவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ அவற்றால் மக்களுக்கு ஏற்படக் கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ யாருக்கும் சுதந்திரம் கிடையாது என்று தான் முடிவு செய்யப்பட்டதாகும்.
(4) என்ன காரணத்தைக் கொண்டு என்மேல் ஆதாரமற்ற இந்தப் பிராது தொடரப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் என்னுடைய சமதர்மப்பிரச்சாரத்தை நிறுத்தி விடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தான் வரவேண்டி யிருக்கிறது. வியாசத்தின் விஷயத்திலாவது பதங்களிலாவது நோக்கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது.
(5) முக்கியமாய் அதில் சொல்லப்பட்ட விஷயம் எல்லாம் கல்வி இலாகாவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்கு கல்விச்செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளைவ தில்லையென்றும், ஏழைகளுக்கு கல்வி பரவ சவுகரியம் இல்லை என்றும், இப்படிப்பட்ட முறையால் லாபம் பெறும் பணக்காரர்களும், அதிகார வர்க்கத்தாரும் உத்தியோகஸ்தர்களும் சொல்லுவதைக் கேட்டு ஏமாந்து போகாமல் வரப்போகும் (சீர்திருத்த) எலெக்ஷன் களில் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டும் என்று ஏழை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியதேயாகும்.
(6) நான் 7,8 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்க சமதர்மப் பிரச்சாரம் செய்து வருகிறேன். சமுக வாழ்விலும் பொருளா தாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழவேண்டுமென்பது அப்பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவமாகும்.
(7) நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதும் அவ்வுற் பத்திக்காக செய்யப்பட வேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லோரும் சக்திக்குத் தக்கபடி பாடுபட வேண்டும் என்பதும் அத்தத்துவத்தின் கருத்தாகும்.
(8) அவ்வியக்க இலட்சியத்திலோ, வேலைத் திட்டத்திலோ பிரச்சாரத்திலோ அதற்காக நடைபெறும் குடி அரசுப் பத்திரி கையிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை இடம் பெற்றிருக்க வில்லை. எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம் பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று.
(9) இதற்கு அத்தாட்சி வேண்டுமானால் பல வருஷங்களாக இரகசியப்போலீஸ் இலாகா சுருக்கெழுத்து அறிக்கைக்காரர்கள் எனது பிரசங்கத்தை விடாமல் குறித்து வைத்திருக்கும் அறிக்கை களையும் சுமார் 10 வருஷத்திய குடி அரசு பத்திரிகையின் வியாசங்களையும் சர்க்கார் கவனித்து வந்தும் என்மேல் இத்தகைய வழக்கு இதற்கு முன் ஏற்படுத்தியதில்லை என்பதே போதும்.
(10) அரசாங்கமானது முதலாளித் தன்மை கொண்டதாய் இருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரச்சாரம் செய்யும் என்னையும் எப்படியாவது அடக்க வேண்டுமென்று முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதில் அதிசயமில்லை. தற்கால அரசாங்க ஆட்சியில் பங்குபெற்று போக போக்கியமும், பதவியும், அதிகாரமும் அடைந்துவரும் பணக்காரர்களும் மற்றும் மதம், ஜாதி, படிப்பு என்கிற சலுகைகளைக் கொண்டு முதலாளிகளைப் போலவே வாழ்க்கை நடத்துகின்றவர்களும் இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு நேர்முக மாகவும், மறைமுகமாகவும் உதவி செய்து தீர வேண்டியவர்களாய் இருப்பதால் அவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாய் இருப்பதிலும் அதிசயமில்லை.
(11) பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும் இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலை நிறுத்தப்பட்டு நடைபெற்று வரும் சமுக அமைப்பையும், பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும் அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கைகளில் உள்ள அனேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த்தியாகி சவுக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாது என்பது எனது உறுதி.
(12) இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும் அதற்காக பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரச்சாரம் செய்வதும் குற்றமாகாது.
(13) ஏதாவது ஒரு கொள்கைக்குப் பிரச்சாரம் பரவ வேண்டு மானால் அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக்கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்கு முறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காகவே நாமே வலுவில் போய் கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது என்றாலும் தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்து விடக் கூடாது. இந்தப் பிரச்சாரத்தைத் தடுக்க வேண்டு மென்று கருதி இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம், வெறுப்பு, பலாத்காரம் முதலியவைகள் இருப்பதாகக் கற்பனை செய்து தீர வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.
அந்தப்படி செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக என்மீது நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடையவர்களும் சிறப்பாக எனது கூட்டு வேலைக்காரத் தோழர்களும், தப்பான அபிப்பிராயம் கொள்ளக்கூடுமாதலால் அப்படிப்பட்ட கற்பனைகளை மறுத்து உண்மையை விளக்கி விட வேண்டுமென்றே இந்த ஸ்டேட்மெண்ட் டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனானேன்.
(14) இதனால் பொதுஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமாவதோடு அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்குப் பலம் ஏற்படக் கூடுமாதலால் என் மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்டை மாத்திரம் கொடுத்து விட்டு எதிர் வழக்காடாமல் இப்போது கிடைக்கப்போகும் தண்டனையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.
(15) இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தாலும், சரி அல்லது இந்த பிராதுக்கு போதிய ஆதாரமில்லை என்று நியாயத்தையும் சட்டத்தையும் லட்சியம் செய்து வழக்கைத் தள்ளி விட்டாலும் சரி. இப்படிப்பட்ட அடக்கு முறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத் தைப்பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.
- புரட்சி - கட்டுரை - 21.01.1934