Monday, October 24, 2011

தமிழர்களும் - தீபாவளியும்

தீபாவளி பண்டிகை என்பது ஆரியர் களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாக வும், அக்கொலை யானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.

சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதா வது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபா வளி கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்கு காரணம் நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும், ஆரியர்களின் இழி நிலைக்கும், தமிழர்களின் முட்டாள் தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம்.

அதாவது இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம்.

மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியைப் பிடுங்குவதற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராட்சசனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து விட்டு விட்டாராம்.

அந்த சமயத்தில் அந்த பன்றி யைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம்.  இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பல வந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும், இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத் தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனைக் கொன்றாராம்.

நரகாசுரன் விஷ்ணுவைத் தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டா னாம். அதற்கு ஆக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம். தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங் கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை  எண்ணி வெட்கப் படுங்கள். ஏனெனில், பூமியை ஒரு ராட்ச சன் பாயாக சுருட் டினான் என்றால் அப்போது எங்கி ருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?

சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன்மேல் இருந்திருக் கும்?

கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?

அப்படித் தான் வரவில்லையானா லும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக் காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப் பானேன்?

அந்த அழகை பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப் பட்டா ளென்றால் பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ் வளவு இழி வானது. நம் பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது? அவருடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர் களைக் காட்டிலும் எவ்வளவு மோச மானவர்களாய் இருந்திருக்க வேண் டும்? பூமாதேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக் களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்காளக் குடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகாசுரன் என்பவன் நமது தோழர் கள் முத்துரங்கம், ராமநாதன் முதலி யவர்கள் போன்றோர்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவ மானத்தை உலகம் கொண்டாட வேண்டு மென்று கேட்டுக் கொண்டிருப்பான்? 

இவற்றையெல்லாம் தமிழர்கள் பண்டிதர் கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்தி ருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடி னால் ஆரியர்கள் தமிழர்களை, தாசி மக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப் பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறை பிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்றுதானே அர்த்தமாகும்? அப்படித்தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள்.

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், பார்ப்பன அடிமை களான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ் காரர்களுக்குச் சுரணை இல்லாவிட் டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர் களுமாவது இவற்றை நன்றாய் கவனித் துப் பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழி காட்ட வேண்டாமா என்று கேட்கின் றோம்.

இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங்களை தமிழர்களுக்கு படிப்பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் - அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தி யும், மனவேதனையும் படுவது உண்மை யானால் - தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடு வார்களா?
(விடுதலை)
குடிஅரசு - கட்டுரை மறுவெளியீடு - 31.10.193

நீங்கள் பார்ப்பனர்களின் தாசர்களா?

தீபாவளி நெருங்கி விட்டது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நான் பார்ப்பானின் அடிமை, நான் பிராமணியத்தின் தாசானுதாசன், நான் திராவிடர்களின் தொன்று தொட்டு விரோதியான அய்யர் மார்களின் பாதுகாவலன், நான் எனது திரேகத்தில் ஓடும் வீரதிராவிட இரத்தம் சுண்ட காரணபூதனான ஒரு துரோகி என்று பெயரெடுக்கப் போகிறீர்களா? அல்லது நான் வீரத் திராவிடனே; நான், என் சமுகத்தின் நீண்ட நாளைய முட்டாள்தனத்தை மீண்டும் புதுப்பித்து முழுமுட்டாளாக மாட்டேன்; நான், பிராமணிய விஷம் எனது சமுகத்தை அரிக்கக் காரண பூதனாக இருக்கமாட்டேன்; நான் இனியும் திராவிட சாம்ராஜ்யம் உண்டாவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கமாட்டேன் என்று பெயர் எடுக்கப்போகிறீர்களா? என்று தெரிந்து கொள்வதற்காகவே நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் தீபாவளிக்கு என்று கேட்க ஆசைப் பட்டோம்.

இத்திராவிட நாட்டில் நமது முன்னோர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வந்த காலத்தில் ஆரியர் குடியேறினர். அவர்களின் தீய பழக்க வழக்கங்கள் திராவிட சமுகத்திற்கு வந்துவிடாது இருக்க அக்கால திராவிட மன்னர்கள் ஆரியரை விரட்டினார்கள்.

அக்காலத்தில் ஆரியர்கள் நமது திராவிடர்களிலேயே சிலரைப் பிடித்து ஏமாற்றி, அவர்கள் மனம் தங்களிடம் ஆசையாக இருக்கும்படிச் செய்யவேண்டியதை எல்லாம் செய்து தம் கையாளாக்கிக் கொண்டு, தங்களை எதிர்த்த திராவிடர்களை ஆரிய சூழ்ச்சியையும், ஏன் திராவிடர்களின் பலத்தையும் ஒன்றாகச் சேர்த்து, எதிர்த்து நமது திராவிட மன்னர்களைக் கொன்றார்கள். இது ஆரியர்கள் எழுதி வைத்த சரித்திரங்களிலேயே இருக்கிறது. 

ஆரிய நஞ்சிலிருந்து தன் சமுகத்தைக் காப்பாற்றப்பாடுபட்ட ஒரே குற்றத்துக்காகத்தான் அக்காலத் திராவிட வீரர்கள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டனர். இதற் காகப் பிராமண சமுகத்தை நாம் கடிந்துகொள்வதில் பிரயோஜனமில்லை. நமது திராவிடர்களில் பலர், புன்சிரிப்புக் கும், புடவை பொன்னாபரணங்களுக்கும் ஏமாந்து போனார்கள். 

ஆனால், நமது முன்னோர்களில் நல்லவர்கள் தீயவர்களால் நயவஞ்சகமாய் அழிக்கப்பட்ட நாள் இது என்றால் இந்நாளை ஆரியர்கள் கொண்டாட வேண்டுமா? திராவிடர்களான நாம் கொண்டாடுவதா? என்பதை எந்தப் படித்தவனும் தன்னை அறிவாளி என்று எண்ணிய எவனும், தன்னை பண்டிதன் என்று சொல்லிக்கொள்ளும் எவனும் கொஞ்சமும் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.

இதுவரையில் நாம் ஏமாந்து இருந்த நாள் சரி, இன்னும் நாம் கொண்டாடினால் உண்மையில் நம்மைவிடக் கோழைகள், மானத்தை மதிக்காதவர்கள், எவரும் உண்டு என்று சொல்வதற்கில்லை. பதினெட்டாண்டாக இந்நாட்டில், எப்படிப் பிராமணியம் நம்மை அடிமைப்படுத்தியது என்று பேசியாய் விட்டது; எழுதியாய் விட்டது. பிராமணியக் கொடுமையை, ஆரிய அகந்தையை, எடுத்துச் சொன்ன காரணத்துக்காகவும் பிராமணியப் படுமோசத்தை எழுதிய காரணத்திற்காகவும் சிறைப்பட்டும் ஆய்விட்டது. 

நீங்களும் பத்தாயிரக்கணக்கான கூட்டத்தில் அய்ம்பதினாயிரக்கணக்கான கூட்டத்தில் ஏன், இரண்டு லட்சம் மக்கள் உள்ள கூட்டத்திலும், நம்மவர்கள் பிராமணிய நயவஞ்சகத்தை எடுத்துச் சொல்லும்போது, கைதட்டி ஆரவாரம் செய்தீர்கள். ஆனால், ஆரியர் அடிமைக் கட்டை நாம் அறுத்தெறிய வேண்டிய தினங்களில் ஏமாந்து போகிறீர்கள். சென்ற ஆண்டு இரண்டாயிரம் பெயர்களுக்கு அதிகம் தீபாவளி கொண்டாடுவதில்லை என்று எழுதினார்கள். 

இந்தத் தடவை அந்த எண்ணிக்கை பதின் மடங்காக வேண்டும். இல்லாவிட்டால் பணக்காரனானாலும், பட்டதாரியானாலும் பார்ப்பானின் அடிமை என்பதில் சிறிதும் சந்தேகமற்றவர்களாகவே எதிர்காலத் திராவிட உலகம் உங்களைக் கருதும் என்பதை இன்றே எச்சரிக்கை செய்கிறோம்.
குடிஅரசு - தலையங்கம் - 20.10.1940

Sunday, October 23, 2011

தீபாவளி என்றால் என்ன?


புராணம் கூறுவது
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து  விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன்  கலவி  செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு)  பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாக பூமி  கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுர டனுடன் போர்  துவங்கினார்.
8. விஷ்ணுவால்  அவனைக் கொல்ல முடியவில்லை.  விஷ்ணுவின் மனைவி நரகா சுரனுடன் போர்தொடுத்து  அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந் தார்கள்.
10.  இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்த தற்காக)  நரகாசுரனின்  இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.
பூமி தட்டையா? உருண்டையா?
தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவ னால் அதைப்  பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?
சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?
எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?
விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?
அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு  பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா?
மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப்  பிள்ளை உண்டாகுமா?
பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
இதற்காக நாம்  ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் -  தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின்  கரையில்  இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித்ஜோஷா என்று சொல்லப்படுகிறது. இது  வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.
வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி  உடுத்து வதும்,  பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன்  காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவ தும் என்றால் இதை என்னவென்று சொல்வது?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
பார்ப்பனர்களே உங்கள் ஆசிரியர்களுக்கு மானம்,  புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக  இவ்வளவு சொல்லு கிறேன் என்றால், இக்கதை  எழுதின காலத்தில் பார்ப்பனர்கள் (ஆரியர்) எவ்வளவு காட்டு மிராண்டிகளாக  இருந்திருக்கவேண்டும். அந்தக் காலத்தில்  நாம் மோசம் போனது ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதை  தமிழன் ஒவ்வொருவரும் நன்கு  சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

திராவிடர் - தமிழர்


ஆரியர் பழக்க வழக்கமும் அவர்களது மதம், கடவுள் ஆகியவைகளும் அவை பற்றிய யோக்கியத் தன்மை, சக்தி, நடப்பு முதலியவைகளும் தமிழர்களாகிய நமக்குப் பெரிதும் பொருத்த மற்றவை என்பது நமது கருத்தாகும்.
இதை மறந்து அவற்றுள் எதையாவது நமக்கு பொருத்த முள்ளதென்றும் அவை நம்முடையவையே ஒழிய ஆரியருடைய தல்ல வென்றும் நம் சைவப் பண்டிதர்களைப் போல் தமிழர் யாராவது ஆதாரத்தோடு வழக்காடுவார்களேயானால், அப்படி இருந்தாலும் அவை அந்த (அதாவது மக்கள் இன்றைய அறிவுபெறாத அந்த) காலத்தில், அதுவும் ஒரு சமயம் அன்று இருந்த மக்களுக்குப் பொருத்தமாயிருந்தாலும் இருக்கலாமே ஒழிய இந்தக் காலத்திற்கு அவை கண்டிப்பாய் ஒதுக்கித் தள்ள வேண்டியவைகளோயாகும் என்பதும் நமது அபிப்பிராயம்.
அதற்காக வேண்டியே, அதாவது அவைகளை நம் மக்கள் உணரவேண்டு மென்பதற்கு ஆகவே, அவைகள் பற்றிய ஆதாரங்களை ஆரியர்களாலும், ஆரியர்களின் கொள்கைகளுக்கும் அவர்களது மதம், கடவுள்களுக்கும் அடிமைப்பட்ட நம் பண்டிதர்களாலும், கற்பிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்தே சில எடுத்து அடிக்கடி குடிஅரசுவில் எழுதி வரப்படுகிறது.
அந்தப்படி இவை சம்பந்தமாக குடிஅரசுவில் எழுதி வந்ததும் வருவதுமான சேதிகள் கண்டிப்பாக ஆரியர் களால் ஏற்படுத்தப்பட்ட வடமொழி ஆதாரங்களி லிருந்தும், அவைகளை ஆரியர்களாலேயே மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் மொழி பெயர்ப்புகளிலிருந்தும், மற்றும் அவற்றை நம் தமிழ்ப் பண்டிதர்களால் மொழி பெயர்த்தோ அல்லது ஆரியர் மொழிபெயர்த்ததைக் கவிகளாகப் பாடிய கவிகளிலிருந்தோ எடுத்துக் கையாளப்படுபவைகளேயல்லாமல் கற்பனையாக எந்தச் சங்கதியும் குறிப்பிடப்படுவதில்லை என்பதை மறுபடியும் வாசகர்களுக்கு உணர்த்துகிறோம்.
பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ அவர்களது பழக்க வழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் அவர்களுக் குள் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறையோ, ஒழுக்கமோ, நீதியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ ஏதும் இருந்ததாகக் காணப்படுவதற்கு இல்லை. அக்கால மானாபிமானத்துக்கும், இக்கால மானாபிமானத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்பதாகவும் தெரிகிறது. ஆகவே ஆரியர்கள் சகல துறைகளிலும் அக்காலத்திய ஆரியர் வாழ்வில் பூரண சுயேச்சையோடு எவ்விதக் கொள்கையும் இல்லாமல் அவரவர்கள் இச்சைப்படி விலங்குகள் போல் வாழ்ந்து வந்ததாகவே தெரிகிறது. அதனால்தான் வள்ளுவர்,
தேவரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுகலான்
என்று பாடினார்போலும். (தேவர்-ஆரியர்)
நாளாவட்டத்தில் அவர்கள் இந்தக் கால தேச வர்த்தமானத்திற்குத் தகுந்தபடி எது மேன்மையாகக் கருதப்படுகிறதோ அதைத் தங்கள் பழக்கவழக்கங்களாக மாற்றி அமைத்துக் கொண்டு வந்து இன்றைய நிலைமைக்கு அவர்கள் வந்திருக்கக்கூடும் என்றாலும் வேத புராண இதிகாச காலங்களில் அவர்கள் மிருகப் பிராயத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதே அவற்றி-லிருந்து தெள்ளென விளங்குகின்றதாகும்.
நம் பண்டிதர்கள் பெரிதும் அவற்றை தங்கள் சமயத்திற்கும், தங்கள் கடவுள் நடப்புக்கும் பொருத்திக் கொண்டால் அந்தக் கேவலமான சேதிகளை வெறுக்க யோக்கியமற்றவர்களாகி மூடிவைத்துத் தொல்லை கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். அதனாலேயே அவை நம்மாலும் வெறுக்கப்படாமல் உயர் சமயமாகப் போய்விட்டதெனலாம்.
அந்தக் காலத்தில் கணவன் மனைவி என்கின்ற கூட்டு வாழ்க்கை ஒப்பந்தம் இன்று இருப்பதில் 100 இல் ஒரு பங்கு இருந்ததாகக்கூடத் தெரியவில்லை.
அந்தக் காலத்து நாணயம், ஒழுக்கம், நம்பிக்கை, நல்லெண்ணம், பிறநலம் பேணுதல் முதலிய நற்குணங் களும் இக்காலத்தவைகளுக்கு மிகமிக மாறுபட்டதும் தாழ்ந்ததுமாகவே இருந்து வந்திருக்கிறது.
அந்தக்கால  ஆரியர்களுக்கு ஏதாவது ஒரு சமயம் இருந்திருப்பதாகக்கூடத் தெரியக் காணுவதில்லை. அவர்களுக்கு அப்போது ஏதாவது ஒரு கடவுளோ, பல கடவுள்களோ இருந்திருந்ததாகவும் தெரிய முடியவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பஞ்ச பூதங் களையும், சூரிய சந்திரன் முதலியவைகளையும் மனி தனைப் போல் உருவகப்படுத்திக் கொண்டு தங்களுக்கு வேண்டியதை நல்கும்படி வேண்டிக்கொண்டு இருந் திருக்கின்றார்கள். அப்படி வேண்டியிருப்பதாலும் ஒரு கவனிக்கத்தக்க சமயமென்ன வென்றால், தங்களுடைய ஒழுக்க ஈனங்களையும் மோசடிகளையும் அவைகளுக்கும் கற்பித்து இருக்கின்றார்கள்.
ஆரியர்களின் முதல் ஆதாரம் வேதம் என்பதாகத் தான் தெரிகிறது. அந்த வேதம் பெரிதும் விபசாரம், மது, மாம்சம் அருந்துதல், தாங்கள் அல்லாதவர்களை (ஆரியரல்லாதவர்கள்) இழிவாய் பேசுவதும், அவர்களை அடியோடு அழிக்கவும், தங்களுக்கு ஏவலாகக் கொள்ளவும், பழிவாங்கும் தன்மைபோல் கொடுமை செய்வதும் ஆன காரியங்களையே கொள்கையாகவும், பிரார்த்தனையாகவும் கொண்டிருக்கிறார்கள்.
வேதத்திலும் அதன்பின் ஏற்பட்ட வேதசாரமான புராணக் கதை, காவிய இதிகாசங்களிலும் பார்த்தால் தகப்பன்- மகள், அண்ணன்- தங்கை என்கின்ற பேத முறைகூட இல்லாமலும், மிருகம்- மக்கள் என்கின்ற இன பேதம்கூட இல்லாமலும், ஆணும் ஆணுமாகவும் இன்னமும் எத்தனையோ விதமாக இயற்கைக்கு விரோதமாக சேர்க்கையுடன் இருந்து வந்திருப்பதாகப் பல இடங்களில் காணப்படுகின்றன.
இவைகளையெல்லாம், ஏதோ காட்டுமிராண்டி காலத்துக் கொள்கை என்றும், எந்த சமூகத்திலும் மனிதன் மிருகப் பிராயத்தில் இருந்த காலத்தில் இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்றும், ஒரு விதத்தில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்றாலும், மேற்கண்ட விஷயங் களைக் கொண்ட ஆதாரங்களை இன்று ஆரியரும், தமிழரும், தங்கள் தங்கள் சமய ஆதாரங்கள் என்றும் தங்களால் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்க வேண்டிய புண்ணிய சரித்திரங்கள், புண்ணிய காரியங்களில் என்றும் பிரசங்கித்துப் பிரச்சாரம் செய்கின்றார்களே இதற்கு என்ன சமாதானம் என்பது நமக்கு விளங்கவில்லை.
சிவன், விஷ்ணு, பிரம்மா, சுப்பிரமணியன், இராமன் கிருஷ்ணன் முதலிய கடவுள்களைப் பற்றிப் பிறகு யோசிப்போம். அக்கினி, வாயு, வருணன் முதலிய பஞ்சபூதக் கடவுள்களைப் பற்றியும் பிறகு யோசிப்போம். இந்திரன் என்கின்ற கடவுளைப் பற்றி ஆரியர் கள்தானாகட்டும், தமிழர்கள் தானாகட்டும், அக் கடவுள்களின் கதைகளையும், பண்டிகைகளையும் எதற்கு ஆக கொண்டாட வேண்டும் என்று கேட் கின்றோம்.
இந்திர விழா சிலப்பதிகாரத்திலேயே கொண்டாடப் பட்டிருக்கிறது. இதிலிருந்து ஆரியர்கள் தவிர தமிழர்களும் ஆதி காலத்தில் இருந்தே இந்திர விழாவைக் கொண்டாடி இருக்கின்றார்கள் என்றும் ஆதிகாலத்திலிருந்தே தமிழர்கள் தன்மானமிழந்து ஆரியர்களுக்கு அடிமைப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்றும் தெரியவருகிறது. பழந்தமிழ் அரசர்கள் என்று சொல்லி உரிமை கொண்டாடப்படுபவர்களான மூவேந்தர் (சேர சோழ பாண்டியர்) எவருமே உண்மைத் தமிழனாக இருந்ததாகச் சொல்லுவதற்கு ஆதாரமே காண முடியவில்லை.
இன்றைய அரசியல் உலகத்தில் ஒரு முத்துரங்க முதலியாரும், பண்டிதர்கள் உலகத்தில் ஒரு கதிரேசன் செட்டியாரும், கலைவாணர்கள் உலகத்தில் ஒரு சிதம்பரநாத முதலியாரும், ஆகிய பெரியோர்கள் இன்று எப்படித் தமிழர்களாக இருந்து வருகிறார் களோ அப்படித்தான் பழங்கால தமிழர்கள் உலகத்திலும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழர்களாக இருந்திருக்கிறார்களே ஒழிய இன்று தமிழர் களின் உள்ளத்தில் உதித்தெழுந்த உணர்ச்சிப்படி யான தமிழன் ஒருவனைக் கூட அக்காலத்தில் இருந்ததாகக் காணமுடியவே இல்லை.
தமிழர்களுக்கு ஆரியர்வேதம், கடவுள், சமயாதாரம் ஆகியவை தவிர்த்த தனித்தமிழ்க் கொள்கையோ முறையோ இருந்தும் இருந்ததாகச் சொல்லியும் ஆராய்ச்சியாளர்களுக்கு இடமில்லாமலே நம் இன்றைய தமிழ்ப் பண்டிதர்களும், பழங்காலப் பண்டிதர்களும் இன்றைய அரசர்களும் பழந்தமிழ் அரசர்களும் செய்து விட்டார்கள்.
பெரிய புராணத்தையும், பக்த சீலாமிர்தத்தையும், கந்தப் புராணத்தையும் கட்டிக்கொண்டு அழும் தமிழன் எவனாகட்டும் அவன் தனித்தமிழர் கொள்கைக்காக இதுவென எதையாவது காட்ட முடியுமா? என்றும் இப்படிப்பட்ட தமிழன் யாராய் இருந்தாலும் அவன் பண்டார சன்னிதியாயிருந்தாலும் அவன் நாஸ்தி கனல்லாமல் அதுவும் முழு முழு நாஸ்திகனே யல்லாமல் கடுகளவு நாஸ்திகனாகவாகிலும் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.
அன்பே கடவுள், உண்மையே கடவுள், ஒழுக்கமே கடவுள், ஒப்பு நோக்கே (சமரசமே) கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு தமிழ் ஆஸ்திகன் மேற் கண்ட பெரிய புராணாதிகளையும் அவற்றில் வரும் கடவுளர் களையும், அவர்களது செய்கைகளையும் பாராட்டி வழிபடுகிறவனாக  இருந்தால் அவன் எப்படி தமிழ் ஆஸ்திகனாவான் என்று கேட்கிறோம்.
தமிழனுக்கு உச்சிக்குடுமி எப்படி வந்தது? தீக்கை எங்கிருந்து வந்தது? பஞ்சாட்சரமேது? முத்திரஸ் தானம், (சமாரட்சனம்) ஏது? அஷ்டாட்சரம் ஏது? பஞ்சகச்சம், திருநீறு, திருநாமம் பூச்சுக்கள் ஏது? என்பன போன்ற எத்தனையோ விஷயங்களை கவனித் தால் உண்மைத் தமிழன் எவனாவது இருக்கிறானா என் பதும் விளங்காமல் போகாது.
தமிழனென்று தன்னை சொல்லிக் கொள்ள வேண்டுமென்றும் தமிழனுக்கு என்று தனிக் கொள்கைகள் அடையாளங்கள் ஒன்றும் இருக்க வேண் டியதில்லை என்றும் கருதிக் கொண்டு தமிழனெனில் பெரியவனாகத் தன்னைக் கருதவேண்டும் என்றிருப் பவர்கள் நம்மீது கோபித்துத்தான் தீருவார்கள். அதற்கு நாம் என்ன செய்யலாம். இவர் கோபத்தை விட அதனால் ஏற்படும் கேட்டைவிட தமிழர்களின் மானம் பெரிது என்று எண்ணுவதால் இவர்கள் கோபத்தால் வந்தது வரட்டும் என்கின்ற துணிவு கொள்ள வேண்டி இருக்கிறது.
(குடிஅரசு, 13.11.1948)

Saturday, October 22, 2011

பெண்ணடிமைத் திருமணம்


நான் சொல்லுகிற எதையும் அப்படியே நம்பி விடாதீர்கள். நான் சொல்லுவதில் பல சரியானதும் இருக்காது, தவறுகளும் தெரியலாம்; நான் சொல் லுகிற சங்கதிகளையெல்லாம், நான் சொல்லுகிறேன் என்பதை மறந்துவிட்டு, நான் சொன்னவைகள் சரியானவையானதுதானா என்பதை நீங்கள் உங்கள் சொந்த அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து உங்களுக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக் கொள் ளுங்கள்; தவறாகப் பட்டால் தள்ளி விடுங்கள் என்று முதலாவதாக கேட்டுக் கொள்கிறேன்.
ஏனென்றால், நம்முடைய மக்களுக்கு இந்த ஆராயும் தன்மை இல்லை. அந்தத் தன்மை வளரு வதற்கும் யாரும் இடங்கொடுக்க வில்லை. நம்முடைய வாழ்வின் நித்திய நிகழ்ச்சிகள் பலவற்றிலே அறிவைச் செலுத்துகிற நாம் ஆண்டவன் சங்கதியிலே சாஸ் திரத்திலே அறிவைச் செலுத்து வதில்லை. செலுத்தி னால் பாவம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் ஏறக்குறைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பார்ப்பான் நம்மை இழிமக்களாகவும், கடைசி ஜாதி மக்களாகவும் வைத்திருக்க முடிகிறது. மக்களுக்கு மிகமிகத் தேவையான வேலை களையெல்லாம் - உழுது, நட்டு, விதைத்து, அறுத்து, கதிரடித்து, உணவு உற்பத்தி செய்கிற, பெருங் கட்டடங் களை மக்கள் குடியிருக்க எழுப்பி, நல்ல உடைகள் தயாரித்துக் கொடுத்து, மக்களின் வாழ்வுக்காக வாழ்கிற நாம் ஏன் இந்தக் காலத்திலே கூட சூத்திரர்களாய் இருக்க வேண்டும்? வேறு நாடுகளிலே இந்த அநீதியான முறை உண்டா? இல்லையே! அப்படியிருக்க இங்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? என்று யாராவது கேட்டார்களா? பெரிய பக்திமான்கள், பரமனருள் பெற்றோர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று கூறப்பட்டவர்களில் எவருமே இது பற்றி வாய் திறக்கவேயில்லையே? என்னவென் றால் இந்தத் துறையிலே மட்டும் அறிவைச் செலுத்தக் கூடாது என்ற அடக்கு முறையினால் தான் நாங்கள் மட்டுந்தான் துணிந்து இந்தக் காரியத்திலே இறங்கி யிருக்கிறோம்.
மேலும் பெரியார் அவர்கள் ஜாதி முறைகளின் கொடுமை களை விளக்கி, புராணங்களின் புன்மையை எடுத்துக் காட்டி, கடவுள்கள் என்பவர்களின் கீழ்க் குணத்தை யும், அயோக்கியத் தனத்தையும் எடுத்துக் கூறி, இதற்கெல்லாம் ஆதரவு கொடுத்து அதற்காகவே வாழ்ந்தும் வருகிற காங்கிரசின் யோக்கி யதையையும் விளக்கினார்.
மேலும் பெரியார் அவர்கள் திராவிட நாடு தனியாகப் பிரிய வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறி, வடவர் ஆட்சியுடன் நாம் இணைந் திருப்ப தனால் நாம் அடைகிற கேடுகளையும் எடுத்துக் காட்டினார்கள்.
இறுதியாகப் பெரியார் அவர்கள் கூறினார்கள்: சென்ற வாரத்தில் சென்னை யிலே சிலப்பதிகார மாநாடு என்ற பேரால் ஒரு மாநாடு நடந்தது. உள்ளபடியே கேட்கிறேன், உண்மையான திராவிடன் - தமிழ் மகனாக இருந்தால் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா? பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நடத்துவதற்கு ஆக நடத்தப்படுவது என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?
மற்ற நூல்களைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. இந்த 15, 20 வருஷங்களில் நாம் செய்த பிரச்சாரத் தினால் மக்கள் மன்றத்தில் இராமாயணம் நாற்ற மெடுத்துப் போய்விட்டது. அதைக் கொண்டாடவே வெட்கப்படத்தக்க தன்மையிலே வந்து விட்டது. கீதை அஞ்ஞாத வாசம் செய்கிறது. அதனால்தான் இன்று இதை - சிலப்பதிகாரத்தைப் பிடித்துக் கொண்டார்கள். காரணம், இது தமிழ்நாட்டுக் கதை - தமிழன் தொகுத் தது என்று சொல்லித் தமிழர்களை ஏமாற்றுவதற்கே ஆகும்.
இதிலே மட்டும் என்ன வாழ்கிறது? ஒரு ஓவியம் மிக நன்றாக, அழகாக, கண்டோர் வியக்கச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அந்த ஓவியத்திலேயே ஒரு திராவிடனைக் கால்அடியிலே, கண் பிதுங்க, நாக்கு வெளியே தொங்க, மிதித்துக் கொண்டிருக்கிற மாதிரி சித்தரிக் கப்பட்டிருக்கிறது என்றால் அதை வாழ்த்தவா முடியும்? அதிலே சொட் டுகிற கலைக்காக?  அப்படித்தான் சிலப்பதிகாரமும். அதிலே கலை இருக்கிறதென்றால் இருக்கட்டுமே, அதற்காக நம் வாழ்வே இருள் காடாக வேண்டுமா?
சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூல் என்பதல்லாமல் வேறு என்ன? ஆரம்பம் முதல் இறுதி வரையிலே ஒரே ஆரியம்தானே சாட்சியளிக் கிறது. ஏதோ கதை தமிழ்நாட்டிலே நடந்ததாக ஏற்படுத்தியிருப்பதைத் தவிர.
கோவலனுக்கும், கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் ஆரியப் புரோகிதப்படி - ஆரிய முறைப் படி ஏற்பட்ட திருமணம். அது பெண் அடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பண மூட்டைகள் திருமணம். கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்குச் சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா?  அந்தக் கதையின்படி மணமகன் கோவலன் திருமணத்தின்போதே தாசி மீது காதல் கொண்டு தாசி வீடு போய்விடுகிறான். அப்படி யிருந்தும் ஆரியக் கதையில் ஒரு சார்பான கற்பு என்னும் முட்டாள் தனத்தால் கணவனுக்குப் பண உதவி, பண்ட உதவி செய்து வருகிறாள். சொத்து, சுகம், நகை, நட்டு எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். கணவன் தாசி வீடு போய்விட்டால், இருக்கிற சொத்தையெல் லாமா விட்டுவிட வேண்டும்? ஒரு கணவன் அந்தப்படி நடக்கிற ஒரு மனைவிக்கு அப்படி கொடுப் பானா? கொடுத்தால் கூட்டிக் கொடுப்பவன் என்றுதானே சொல்வோம்.
இந்தக் காலத்திலே ஒரு மடப்பெண்ணாவது இப்படி நடக்க முடியுமா? இதைப் படித்தால் பெண் ஒழுங்காய் நடப்பாளா? ஆண் ஒழுங்காய் நடப்பானா? இதுதான் கற்பு. ஆனால், அப்புறம் ஒவ்வொரு பெண்ணின் கதியும் என்னவாவது? அடுத்தபடியாக ஆருடம் சொல்லுவது, குறி சொல்லுவது போன்ற ஆரிய ஏமாற்றுப் பித்த லாட்டம் சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்றன.
இதெல்லாம்தான் போகட்டும் என்றால் கடைசி யிலே என்ன நடக்கிறது? நம்முடைய தமிழ்நாட்டு அரசனை ஒரு முட்டாளாகச் சித்தரித்துக் காட்டப்பட்டிருக் கிறது. யாரோ ஒரு ஆசாரி, கோவலன் தான் சிலம்பைத் திருடினான் என்று சொன்ன வுடன் கோவலனைக் கொன்று விடுகிறான். இந்த அரசனை எப்படிப் புத்திசாலி என்று ஒத்துக் கொள்ள முடியும்? இதுதான் போகட்டும் என்றால் கோவலன் இறந்த பிறகு கண்ணகி கோபங்கொண்டு ஒரு பக்கத்துக் கொங்கையைத் திருகி எறிகிறாளாம். உடனே அது நெருப்புக் கட்டியாக மாறுகிறதாம். அதனால் மதுரையே தீப்பிடித்து எரிகிறதாம். நம்ப முடியுமா? பாண்டியன் நடந்து கொண்ட அயோக்கியத்தனத்திற்கு மதுரை மக்கள் சாம்பலாக வேண்டுமா? இதுவா கற்புக்கு யோக்கியதை? தமிழ்க் கவிக்கும் பார்ப்பனக் கவிக்கும் என்ன பேதம்? ஆரியப் புராணங்களுக்கும் தமிழன் இலக்கியங்களுக்கும் என்ன பேதம்? இரண்டும் ஆரிய அடிப்படைக் கொள் கைப் பிரச்சாரம்தானே! அக்கினி பகவான் வந்து கண்ணகியை நான் யாரைச் சுட்டுச் சாம்பலாக்கட்டும் என்று கேட்டால் இந்த மகா பதிவிரதை பார்ப்பனர்களைச் சுடக் கூடாது என்று கட்டளை யிடுகிறாள். இதை எப்படித் தமிழர் நூல் என்று கொள்ள முடியும்? கண்ணகிக்கும் சீதைக்கும் என்ன வித்தியாசம்? தமிழர்கள் சிலப்பதிகாரத்தின் தர்மம் வர்ணாசிரமம்தானே.
இராமாயணத்தின் கடைசி தர்மம் சூத்திரன் (சம்பூகன்) கொல்லப்பட்டு வருணாசிரம தர்மம் காப்பாற்றப்பட்டதுதானே! சிலப்பதிகாரத்தின் கடைசி தர்மம், சூத்திரர்கள் அகாரணமாய் எரிக்கப்பட்டு, பார்ப்பனர் காப்பாற்றப்பட்ட வருணாசிரம தர்மந் தானே? இந்த விஷயத்தில் இராமாயணத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் பேதம் என்ன? இதெல்லாம் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி நலம் பெற செய்யும் தன்மானமும், இன உணர்ச்சியும் அற்ற தன்மை தானே!
(30.3.1951 அன்று காங்கேயம் பொதுக் கூட்டத்தில் மணியம்மையார் தலைமையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - விடுதலை 3.4.1951)

Sunday, October 16, 2011

தீபாவளி பண்டிகை


வருஷா வருஷம் கடவுளுக்கு (சாமிகளுக்கு) கல்யாண உற்சவம் வருவது போல வருஷா வருஷம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டி ருக்கின்றன.
நம்மக்களும் பெரும்பான்மையோர்கள், கடவு ளுக்கு எங்காவது கல்யாணம் செய்வாருண்டா? கடவுள்தானாகட்டும் கல்யாணம் செய்து கொள் ளுமா? என்கின்ற அறிவே இல்லாமல் எப்படி கோயில் களில் வருஷா வருஷம் கல்யாணம் செய்கிறார்களோ அதே போல் இந்தத் தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகிறார்கள்; இவற்றுள் அண்மையில் வரப்போகும் இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலை இருப்பதே இல்லை; ஏதாவது ஒரு சாக்கு வைத்துக் கொண்டு கொண்டாட்டங்கள் கொண்டாட வேண்டும். ஏதாவது ஒரு சாக்கில் கடவுள் மத பக்தி காட்டிக் கொள்ள வேண்டும் என்கின்ற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உள்கருத்தை அறிவது என்கின்ற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.
சாதாரணமாக நம்மைப் போல் உள்ள ஒரு மனிதனை நாம் பிராமணன் என்று கருதுகிறோ மானால், ஒருவனை பிராமணன் என்று அழைக்கிறோம் என்றால், அதன் கருத்து என்ன? என்பது பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. ஒருவனை நாம் பிராமணாள் என்றால், நாம் யார்? ஒருவனை நாம் பிராமணன் என்று அழைப்பதால் நம்மை யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்? நம்மை நாம் எந்தப்படியும் நினைத்துக் கொள்ளவில்லை என்று ஆனாலும்கூட அதன் கருத்து என்ன ஆகின்றது? அதனால் நாம் நம்மை சூத்திரன், கீழ் பிறப்பு என்பதாக ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது? என்பது போன்ற அறிவில்லாததனாலேயே ஒருவனை நாம் பிராமணன் என்கின்றோம். இந்தக் காரணத்தால் பிராமணன் என்பதாக ஒரு ஜாதி மகன் இருக்கவும், சூத்திரம் என்பதாக ஒரு ஜாதி மகன் இருக்கவும் நாமே இடம் கொடுத்து உதவி செய்தவர்களாக ஆகிவிடுகிறோம். இதனால் பிராமணர்கள் என்பவர்களும் (பார்ப்பனர் கள்) தங்களை பிராமணர்கள் என்று எண்ணிக் கொண்டு, நம்மை சூத்திரர்கள் என்றே கருதிக் கொண்டு மற்றெல்லா விஷயங்களிலும் நம்மை சூத்திரர் களாகவே (கீழ்ஜாதி மகனாகவே) நடத்துகிறார்கள்.
இது போலவே நாம் இந்த தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் நாம் நம் இழி நிலையை உணராத, மான உணர்ச்சியற்ற மக்களாக ஆகி, வேறு யாராவது நமது இழி நிலை ஒழிப்புக்கு ஆக செய்யப்படும் முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போட்டவர்களாகி, நம் பின் சந்ததிகளுக்கும் மான உணர்ச்சி ஏற்படாமலும் இழிவு படுத்தப்படவும் ஆதரவு காட்டி வைத்தவர்களாக ஆகிவிடுகிறோம்.
இன்று நம் நாட்டில் அரசியல், பொருளியல், கல்வி இயல், சமய, சமுதாய இயல், என்பவைகளின் பேரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும் குறிப்பாக திராவிடர் கழகத்தாரால் செய்யப்பட்டு வருபவைகளும்,மற்றும் பல பொது முயற்சி கிளர்ச்சிகளும் எதை அடிப்படையாகக் கொண்டது என்று நாம் சிந்தித்துப் பார்ப்போமே யானால், உண்மையில் அதன் அடிப்படைத் தத்துவம் நம் மக்கள் பெரும்பாலோருக்கு அதாவது 100-க்கு 99 பேருக்கு இருந்து வரும் பிறவி இழிவும், அவ்விழிவு காரணமாக நமக்கு இருந்துவரும் பல உரிமை மறுப்புக்களும் முன்னேற்றத் தடைகளும் ஒழிய வேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்பதும், நம் எதிரி களால் அல்லது நம்மை இப்படி ஆக்கிவைத்து பலன் அனுபவித்துக் கொண்டு இருக்கும் மக்களால் இந்த நிலையை இப்படியே இருத்தி வைக்க வேண்டும் என்பதுமான ஒரு போட்டா போட்டி முயற்சிகளே யாகும்.
இம்முயற்சி காரணமாகத்தான் நாம் ஏன் ஒருவனை பிராமணன் என்று அழைக்கக்கூடாது என்பதும் நாம் ஏன் உற்சவாதிகளைக் கண்டிக்க வேண்டும் என்பதும் நாம்  ஏன் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண் டாடக் கூடாது என்பதுமான விஷயங்களைப் பற்றி பிர சாரங்களும் வேண்டுகோள்களும் செய்து வருவதாகும்.
அது போலவே இந்தக் காரணங்களால்தான் இந்த நடத்தைகளால் பலனடைந்து நம்மை இழிவுப்படுத்தி, அடக்கி ஒடுக்கி அழுத்தி வைத்திருக்கும் பிராமணர்கள் என்பவர்களின் உற்சவம், பண்டிகை, வர்ணாசிரம ஜாதிக்கிரமம் அவற்றை அனுசரித்த ஆதாரங்களாகிய வேத சாஸ்திர, புராண இதிகாசம், அவை சம்பந்தமான இலக்கியம் முதலியவை காப்பாற்றப்படவும், பிரசாரம் செய்யவும், இயல் இசை நாடகம் மூலம் அவற்றைப் பரப்பி வரவுமான எதிர் முயற்சிகளும்மாகும்.
இது பழைய போராட்டமே
இந்த இரண்டு போராட்டமும் இந்த நாட்டில் இன்று நேற்று அல்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடந்து வந்திருக்கின்றன என்பதை நாம் இன்றும் ஆதார பூர்வமாய்க் காணலாம். ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக் கிறது என்பதைக் காட்டுவதுதான், அதை ஆதரிக்கும்படி தூண்டுவதுதான், அந்தத் தன்மையை நிலைத்திருக்கச் செய்வதுதான் இன்றைய உற்சவம், பண்டிகை முதலான காரியங்களாகும்.
எதனால் இதை இந்தப்படி நாம் சொல்லுகிறோம் என்றால்  ஏறக்குறைய 100 க்கு 90 க்கு குறையாத உற் சவம், பண்டிகை நல்ல நாள் கெட்ட நாள் கொண் டாட்டங்கள், விரதம் முதலிய அநேக காரியங்களுக்கும் இந்தப் புராண இதிகாசங்களும், சமுதாய நடப்புகளுக்கு சாஸ்திர தர்மங்களுமே காரணமாக இருந்து வருவதாலேயே இப்படிக் கூறுகிறோம்.
உதாரணமாக, கடவுள் அவதாரங்கள், கடவுள்களின் யுத்தங்கள், கடவுள்கள் செய்த (சம்ஹாரம்) கொலைகள், கடவுள்கள் செய்த வஞ்சக (கபடநாடக)ங்கள், கடவுள் களின் காலடிகளில் அழுத்தி மிதித்துக் கொண்டு இருக்கும் சூர, அசுர, ராட்சதாதிகள் முதலியன எல்லாம் எதற்காக என்று பர்த்தோமேயானால் நன்றாய் விளங்கிடும்.
கந்தப் புராணம், பாகவத புராணம், இவை சம்பந்தமான மற்ற இதிகாசங்கள் முதலிய எல்லாம் ஜாதிப் போராட்டமாகவும், பிறப்புப் போராட்டமாகவுமே இருந்து வருவதோடு, மேல்ஜாதி என்பதை ஒப்புக் கொள்ளாமல், மேல் ஜாதி சம்பிரதாயத்தையும் உரிமையையும் நடப்பு களையும் கீழ் ஜாதியார் என்பவர்கள் எதிர்த்துச் செய்த புரட்சியான போராட்டங்காளவே இருந்து வரும்.
இதுதான் தேவாசுர (சுரர்-அசுரர்) போராட்டமாகவும், தேவர் -அரக்கர் போராட்டமாகவும், இராட்சத சம்காரங்களாகவும் இன்றும் கருதப்பட்டு வருவதாகும்.
தெளிவாகச் சொல்லவேண்டுமானால் சிவன், கந்தன், காளி, விஷ்ணு அவதாரமான ராமன், கிருஷ்ணன், பலராமன், நரசிம்மன், வராகமூர்த்தி முதலானவர்களும், சூரர், அரக்கர் முதலியவர்கள் பிராமண தர்மத்தை எதிர்த்ததற்கு ஆக தோன்றி எதிர்த்தவர்களை கொன்று இருக்கிறார்கள் என்றும், இந்த கொலையைப் பற்றி மகிழ்ச் சியடையவும்தான் பண்டிகை உற்சவம் கொண்டாடு கிறோம் என்றும் கூறலாம்.
ராட்சதர்கள் யார்?
புராண இதிகாச அரசுரர்களும், சூரர்களும், ராக்கதர் களும், இராட்சதர்களும் என்று அழைக்கப்படுகிறவர்கள் யார்? தேவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் யார்? என்று பார்த்தோமேயானால், முறையே இந்த சூத்திரர்களும், பிராமணர்களும் என்பவர்கள் அல்லாமல் வேறு யாரைக் குறிக்கிறது என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா? என்று பார்த்தால் முடியவே முடியாது என்பது அனேக அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்களான மேதாவிகளால் எழுதி வைக்கப் பட்டிருந்தும், இன்றைய ஆராய்ச்சி நூல்கலாலே அறியலாம்.
புராணங்களை எடுத்துக் கொண்டாலும் பாகவத புராணத்தில் இரண்யன் வதைக் கதையில் இரண்யன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இக்கருத்தை தெளிவாய் விளக்கு கின்றன.
அதாவது, இரண்யன் பிராமணர்களுக்கு எதிரி, பிராமணர்களின் உயர்சாதித் தத்துவத்தையும் அவர்களுடைய ஜபதப மந்திரத் தத்துவத்தையும் ஒப்புக் கொள்ளாதவன்; பிராமணர்களை அடிமையாக்கிக் கொண்டு அவர்களிடம் வேலை வாங்குகிறவன்; இரண்யன் பிராமணர்களை ஆதரிப்பதற்கு ஆக பிராமணர்களால்  ஆக்கப்பட்ட விஷ்ணுவின் சகாயத்தால் இவ்வளவு அக்கிரமங்கள் செய்வதால் இந்த விஷ்ணுவை முதலில் ஒழிக்க வேண்டும்; இந்த விஷ்ணுவுக்கு ஆராதனம், எக்கியம், அவிர்பாகம் செய்யும் பிராமணர்களை அடியோடு அழித்து ஆகவேண்டும்; ஆதலால் ஓ! தானவர்களே! (ஏவலாளர்களே) மண்வெட்டி கோடாரி கடப்பாறை கொண்டு புறப்படுங்கள்; இந்த பிராமணர்கள் ஜபதபம் எக்கியம் ஓமம் செய்யும் இடத்தை அணுகுங்கள். அவை களை அழித்துத் தரை மட்டமாக்குங்கள்; புறப்படுங்கள் என்று சொன்னதாக இரண்யன் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
இரண்யன் தம்பி மீதும் குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது.
இரண்யன் தம்பி மீது பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
இது போலவே இராணவன் மீதும், அவன் தேவர் களுக்கு விரோதமாக அவர்கள் யாகாதிகளை அழித்த தாகவும், பிராமணர்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டு வேலை வாங்கியதாகவும்,  தேவர்களுக்குக் கேடு செய்ததாகவும் குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது.
இது போலவே கந்த புராணத்தில் சூரன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
இவைகள் நடந்ததோ இல்லையோ, உண்மையோ, பொய்யோ, எப்படி இருந்தாலும் மேல் ஜாதி, கீழ்ஜாதி, சுரர் - அசுரர், தேவர்கள்-ராக்கதர்கள் என்னும் பேரால் யுத்தங்களும் தேவர்களால் மற்றவர்கள் கொல்லப் பட்டதுமான கருத்துக்களையும் சங்கதிகளையும் கொண்ட தாக இருக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாது. பாகவத்தில் இரண்யன் பிராமணர்கள் மோசக்காரர்கள் என்றும், பிராமணர்களை அழிக்க வேண்டும் என்றும் ஜாதி குறிப்பிட்டுச் சொன்னதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மற்றும் கந்த புராணமும் இராமாயணமும் பார்த்தால்,  அவற்றில் வரும் பெயர்கள் மாத்திரம் வேறு வேறாக இருக்கின்றனவே ஒழிய,இரண்டும் ஒரே கதையைத்தான்  குறிக்கின்றன.கருத்தும் தேவாசுர யுத்தம்தான் என்று எவரும் உணரலாம்.
எனவே, இப்படிப்பட்ட அதாவது நமக்குக் கேடும் இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள் அதாவது சூத்திரர்கள் என்று இழித்துக் கூறப்படுபவர்களாக்கிய நாம் கொண்டாடலாமா என்பதுதான் இன்றைய பிரச்சினையாகும்.
தீபாவளி
இனி எடுத்துக்கொண்ட தலைப்பின் விஷயத்துக்கு வருவோம். அதாவது தீபாவளி பண்டிகை பற்றி, இப்படிப் பட்ட தத்துவம் கொண்ட பண்டிகைகளில் தீபாவளி என்கின்ற பண்டிகையும் ஒன்று. முதலாவது இந்தப் பண்டிகைக்கும் அதன் பெயருக்கும் சம்பந்தமே இல்லை எனலாம். தீபாவளி என்ற சொல்லுக்கு தீப வரிசை (விளக்கு வரிசை) என்றுதான் பெயர். இந்த தீபவரிசை விழாவை கார்த்திகை மாதத்தில் தனியாகக் கொண்டாடுகிறோம். அப்படி இருக்க இந்தப் பெயர் குறிப்பிட்ட பண்டிகைக்குப் பொருத்தமில்லை. இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாட வேண்டிய அவசியம் என்னவென்றால், நரகாசுரன்  என்ற ஒரு அசுரன்; இவன் ஒரு தெய்வப் பெண்ணை சிறை பிடித்துக் கொண்டான். (கந்தபுராணம் இந்திரன் மனைவியை சூரன் சிறைப்பிடித்த கதை, தீபாவளி நரகாசுரன் கசேரு என்ற பெண்ணை சிறைபிடித்த கதை மற்றும் மற்றொரு தெய்வப் பெண்ணாகிய அதிதி என்பவள் காதணியைக் கவர்ந்து கொண்டவன். (எதற்காக எப்படி கவர்ந்தானோ தெரியமுடியவில்லை) இதுதவிர இவனது பிறப்பு வளர்ப்பு மிகவும் அதிசயமானது. அதாவது உலகத்தையே பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் சமுத்திரத்தில் ஒளிந்து கொண்ட இரண்யாட்சன் என்றும், ராட்ச தனைக் கொல்ல மகாவிஷ்ணு பன்றியாக அவதரித்து ராட்சதனைக் கொன்ற பின்பு, அந்தப் பன்றி உருவே பூமியைப் புணர்ந்து அதில் பூமிக்குக் கர்ப்பம் ஏற்பட்டு, அந்தக் கர்ப்பத்தில் உண்டானவன் இந்த நரகாசுரன் சாட்சாத் கடவுளுக்கும் கடவுள் பத்தினியாகிய பூமாதேவிக்கும் பிறந்த இவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான். அதனால் தேவர்கள் முறை யிட்டார்கள். மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்து கிருஷ்ணனும் அவன் மனைவியுமாய், இந்த நரகா சுரனைக் கொன்றுவிட்டார்கள். மகிழ்ச்சியடைய வேண்டும்.
அப்படிக் கொன்றதால் தேவர்கள் சுகம் அடைந் தார்கள். அந்த சுகத்துக்கு ஆகத்தான் நாம் மகிழ்ச் சிக்கு ஆகவே தீபாவளி கொண்டாட வேண்டும்.
இதுதான் தீபாவளி தத்துவம். இது சம்பந்தமான கதையை கவனித்தால் இது சிறிதாவது மனிதத் தன்மைக்கோ கடுகளவு பகுத்தறிவுக்கோ ஏற்றதாக இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? எவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் கொண்ட கதையை, அதுவும் நமக்குக் கேடான கருத்துக் கொண்ட கதையை, நாம் நம் தெய்வீக மதக் கதையாக, ஏன்? கதையாகக் கூட அல்லாமல் உண்மையில் நடந்த தெய்வக் கதையாகக் கொண்டு கொண்டாடுவதா? என்பது யோசிக்கத் தக்கதாகும்.
நரகாசுரன் ஒரு திராவிட நாட்டு அரசனாகவும் திராவிடத்தை (வங்களாத்தை)ச் சேர்ந்த ஒரு பிராக் ஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகிறான். கதை எப்படி இருந்தாலும் இவனும், இந்த நரகாசுரனும் இரண் யாட்சன், இரணியன் சூரபத்மன் முதலிய திராவிடத் தோன்றல்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டிய வனாவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர்களுக்குத் தொல்லை  கொடுத்ததால் என்கிறது புராணம்.
ஆகவே, இன்று நாம் (திராவிடர்கள்) இரண் யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கிறோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட அவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு ஆக நாம் துக்கப்பட வேண்டுமே யொழிய, மகிழ்ச்சி அடைவது மடமையும், இழிவும், ஈனமுமாகும். ஆதலால் திராவிட மக்கள் எவரும் தீபாவளி பண்டிகைக் கொண் டாடக் கூடாது என்று வேண்டிக் கொண்டதோடு, திராவிட கழகத்தவர்கள் கண்டிப்பாகக் கொண்டாடக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தீபாவளியன்று கருப்புச் சட்டையுடன் நரகா சுரனுக்கு வாழ்த்துக் கூறிக் கொண்டு ஊர்வலம் வந்து அவனது கொலைக்காகத் துக்கப்படும் துக்க நாளாகக் கொள்ள வேண்டும்.
(12-10-49  விடுதலை தலையங்கம்)

Friday, October 14, 2011

தமிழனுக்குக் கடவுள் உண்டா?


நாம் ஒரு தமிழர் என்கின்ற முறையில் கடவுள் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோமானால், "கடவுள்" என்கின்ற பதமே கட+உள் = (கடவுள்) என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே தவிர, வட மொழியிலும், ஆங்கில மொழியிலும் இருப்பது போன்ற பகவான் காட் (God) அல்லா என்பது போன்ற ஒரு தனி வார்த்தையோ அல்லது அந்த விதங்களான அர்த்தத்தைக் கற்பிக்கக் கூடியதான வாக்கியமோ, தமிழில் இல்லையென்பதை உணர வேண்டும். தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் "கடவுள்" உணர்ச்சி இருந்து இருக்குமானால் அதற்கு ஒரு தனி வார்த்தை இருந்திருக்கும்.
அது மாத்திரமல்லாமல், ஆங்கிலம் முதலிய பாஷைகளில் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம், எத்தீஸ்ட், நாஸ்திகம், நாஸ்திகன் என்கின்ற வார்த்தைகள் இருக்கின்றனவோ அவைபோலவே தமிழிலும் கடவுள் இல்லை என்று சொல்லுவதை உணர்த்துவதற்கும், கடவுள் இல்லை என்று சொல்லுபவனைக் குறிப்பிடுவதற்கும் அப்பொருள்கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்கும். ஆகவே, அவற்றிலிருந்து தமிழர்களுக்கும் (அதாவது தமிழ்நாட்டாருக்கும்) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்பந்தமுமிருந்ததில்லை என்பது ஒருவாறு புலப்படும்.
இறைவன் என்கின்ற பதத்தை கடவுளுக்கு உள்ள தமிழ்ப் பதம் என்று பண்டிதர்கள் சொல்லக் கூடுமானாலும் அது அரசனுக்கும், தலைவனுக்கும் ஏற்பட்டதே தவிர, கடவுளுக்காக ஏற்பட்ட தனிப் பொருளமைந்த சொல் அல்லவென்றே சொல்லுவோம். ஆனால், கடவுள் என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன், பெரியவன் எனினும் பொருந்தும் என்று சப்புக் கட்டலாமேயொழிய அது அதற்கே ஏற்பட்ட தனி வார்த்தை ஆகாது.
நிற்க; தமிழ்நாட்டில் பலர் காலம்சென்ற பிதுர்க்களையும், செல்வாக்குள்ள பெரியார் களையும் அன்பினாலும், வீரர்களைக் கீர்த்தியாலும் வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். மற்றபடி இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிரமன், பிள்ளையார், சுப்பிரமணியன் முதலிய கடவுள்களையோ மற்றும் அது சம்பந்தமான குட்டிக் கடவுள்களையோ தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி இருந்தார்கள் என்றாவது சொல்லுவதற்குக்கூட இடமில்லை என்று கருதுகிறேன். இதற்கெனக்குத் தோன்றும் ஆதாரம் என்னவென்றால், இப்போது உள்ள கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட நீச்சக் கடவுள்கள் தவிர மற்ற கடவுள்கள் பெயர்களெல்லாம் வடமொழியிலேயே இருக்கின்றதென்பதே போதுமானதாகும்.
ஆனால், வடமொழிப் பெயருள்ள சில கடவுள்களின் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்து அந்தக் கடவுள்களைத் தமிழில் அழைப்பதைப் பார்க்கின்றோம். என்றாலும், இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்குத் தக்க சமாதானம் சொல்ல யாரும் முன் வருவதை நான் பார்க்கவில்லை.
இது மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களைப் பிடித்த நோய்களான சைவ, வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வடமொழிப் பெயர்கள் உடையதாகவும், அவற்றின் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேத சாஸ்திர புராண இதிகாசங்களாகவும்தானே இருக்கின்றதே அல்லாமல், தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்டதாகச் சொல்லக்கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும் கேட்டதும் இல்லை. இவற்றுக்குச் செய்யப்படும் பூசை முதலியவையும், வடமொழி நூல்கள் ஆதாரப்படி, வடமொழிப் பெயர்கள் கொண்ட வஸ்துகளும் செய்கைகளுமாகவே இருப்பதையும் காணலாம். அதாவது அருச்சனை, அபிஷேகம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவையாகும்.
தவிரவும், மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமயாச்சாரியார்களும், பக்தர்மார்களும் கும்பிட்டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண்டகம், பிரபந்தம் முதலியவை பாடினதும், மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும், ஆகிய எல்லாம் வடமொழிப் பேர் கொண்ட கடவுள்களைப் பற்றியும், அவர்களது செய்கைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட வடமொழிப் புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றியுமே இருக்கின்றனவே அல்லாமல் மற்றபடி அவை தமிழர்களோ அல்லது தமிழ்ப் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத்தக்கதாக ஒன்றையுமே, ஒருவர் வாக்கையுமே நான் பார்த்ததும் இல்லை; பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை.
மற்றும், சமயக் குறிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள்கூட வடமொழியில் உள்ளதே தவிர, தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது அபிப்பிராயம். வேண்டுமானால் அதைத் தமிழில் _ விபூதியைத் திருநீறு என்றும், திருமண் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனாலும், அது சரியான மொழிபெயர்ப்பல்லவென்று சொல்வதோடு, விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்தக் கருத்துடன் சொல்லப்படுகின்றனவோ அந்தக் கருத்தும், பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன். விபூதி என்றும், நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துகள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்தப் பெயரையே அதாவது, சாம்பலுக்குள்ள மாறு பெயராகிய நீறு என்றும், மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னால் வைத்து திருநீறு, திருநாமம் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றே தோன்றுகின்றது.
ஆகவே, தமிழில் காட், அல்லா, பகவான் என்பவற்றைக் குறிப்பதற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும், அதன் சின்னங்களையும் குறிப்பிடுவதற்குத் தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும், அனுபவத்திலுள்ள கடவுள்களும், பெயர்களும் அவற்றின் நடவடிக்கைகளும்கூட தமிழில் இல்லை என்பதும், மற்றபடி இப்போது இருப்பவை எல்லாம் வடமொழியில் இருந்து தமிழர்கள் எடுத்துக்கொண்டு தங்களுடையன வாக்கிக் கொண்ட மயக்கமே என்றும் எனக்குப் பட்டதை உங்களுக்குச் சொன்னேன்.
- கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜ ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களின் தலைமை முடிவுரையிலிருந்து (குடிஅரசு, 29.6.1930).

யார் புத்தன்?


புத்தர் விழா என்கிறபோது தேங் காய், பழம் வைத்துக் கும்பிடுவது என்பதல்ல: புத்தர் விழாக் கொண்டாடு கிறோம் என்றால் அதன் மூலம் ஏதாவது ஒரு படிப்பினைப் பெற வேண்டும். நான் முன்னுரையிலேயே சொன்னேன் நாத்திகன் என்பதாக. நாத்திகன் என் றால் வேத சாத்திர புராண இதிகாசங் களுக்கு மாறான கருத்துள்ளவன்;  இப்போது இருந்து வரும் மதத்திற்கு மாறான கருத்துடையவன். இப்படி இருந்தால்தான் புத்தரைப் பற்றிச் சரியாகப் பேசமுடியும். அப்படியில்லா மலே பேசலாம் என்றால் அதற்கு மிகவும் சாமர்த்தியம் வேண்டும். அதாவது மக்களை நன்கு ஏமாற்றப் பழகியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சாரார் புத்தரை இருடிகள் மகான்களைப்போல ஒருவராகவே பேசுகிறார்கள்.
புத்தர் மகானோ, ரிசியோ அல்லர்; இந்தத் தன்மையை எதிர்த்தவர். அந்தக் காரணத்தினால்தான் நாம் இன்று புத்தரைக் கொண்டாடும்படியான நிலை இருக்கிறது. புத்தர் எப்படி மகானோ, ரிசியோ இல்லையோ அதே போல் பௌத்தம் என்பதும் ஒரு மதமல்ல. பலபேர் பௌத்தம் என்பதைத் தவறாக ஒரு மதம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு மதம் என்றால் கண்டிப்பாக அதற்கு ஒரு கடவுள் வேண்டும். மோட்சம் நரகம் வேண்டும். ஆத்மா, பாவ புண்ணியம், அவற்றிற்கு ஏற்றாற் போல் தண்டனை இவைகளெல்லாம் வேண்டும். இன்னும் சிறந்த மதம் என்பதற்கு ஒரு கடவுள் போதாது. பல கடவுள்கள் வேண்டும். அவற்றிற்குப் பெண்டாட்டி, பிள்ளைக்குட்டி, வைப்பாட்டி இவைகளெல்லாம் வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் அது மதமாகும்.
இன்று பிறிதொரு இடத்தில் புத்த செயந்தி விழா அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தர் (சயந்தி எனும்) பிறந்தநாள் விழா, 1956 மே மாதம் 24, 25, 26, 27 தேதிகளில் கொண்டாடுவது என்று சென்னை புத்த சயந்தி விழாக் கொண்டாட்டக் குழுவினரால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகத்தாராகிய நாம் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று விழாக் குழுவினரால் அழைக்கப்பட்ட அழைப்பைக் கழகச் சார்பாக முழுமனத்தோடு ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஆதலால், திராவிடர் கழகத் தோழர் களும் மற்றும் எல்லாத் தாபனத் தோழர் களும் புத்தர் பிறந்தநாள் 2500ஆவது ஆண்டு விழா. சென்னை உட்பட தமிழ் நாடு எங்கும் சிறப்பாய் நடைபெறவும், புத்தர்பிரான் பிரச்சாரம் செய்யவும் ஆன எல்லா விதமான முயற்சியும் செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்ளு கிறேன். நான் அறிந்தவரை புத்தர் அறிவுரையில் முக்கியத்துவமானவை:-
1. எதையும் உன் அறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்
2. உன் அறிவுக்குச் சரி என்று தோன்றியவைகளையே ஏற்றுக் கொள்
3. உனக்கு விளங்காத தன்மையில் கடவுள், ஆத்மா, தேவர், மேல் உலகம், கீழ் உலகம், மோட்சம், நரகம் என்றும்; பிராமணன், சூத்திரன் - பஞ்சமன் என்றும் சொல்லப்படும் வெறும் கற்பனைச் சொற்கள் முதலியவைகளை நம்பாதே உலகில் உள்ள சீவன்களில் எல்லாம் மனிதன் எப்பொருளையும் ஆராய்ந்து பகுத்தறிந்து உணரும் உயர்ந்த அறிவுள்ள சீவன் ஆவான் - என்பதே ஆகும்.
கடவுள் சொன்னார் என்றும், வேத சாத்திரம் சொல்லுகிறது என்றும், மகான் சொன்னது என்றும், வெகுபேர் பின்பற்றுகிறார்கள் என்றும், வெகுநாளாக நடந்து வருகிறது என்றும் கருதி எதையும் நம்பி விடாதே; உன் ஆராய்ச்சி அறிவு என்ன சொல்லுகிறதோ அதை நம்பு என்றும் சொல்லி இருக்கிறார்.
- தந்தை பெரியார்
(தலையங்கம், விடுதலை 19.4.1956