Sunday, April 27, 2014

நான் அருகில் சென்றால் செத்துப் போகும் என்றால் அந்தச் சாமி எதற்கு?


``  சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி, நான்கு நாள் முன்னோ பின்னோ சாகவேண்டியது தான். வீட்டில் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத் தொண்டிற்குப் பிரவேசிக்கின்றேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாகப் பயணம் சொல்லிக் கொண்டு தப்பிப் பிழைத்தால்தான் திரும்பி வரமுடியும் என்று என் பெண் ஜாதிக்கும், தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர்விட வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெனில் நான் எடுத்துக் கொண்ட வேலை அவ்வளவு பெரியதும் பல எதிரிகளைக் கொண்டதும் தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால் இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும், தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும் இனி பயப்படுவது என்பது முடியாத காரியம். ஆயிரம் தரம் சொல்லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும்கல், வெறும் கல்."
                                                                                ***
னக்கு முன்பேசிய மூன்று கன வான்களும் பேசியவற்றிற்குப் பின் நான் சில விஷயம் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அதாவது முதலில் பேசியவர், தலைவர்கள் அடிக்கடி மாறுவதால் சுயராஜ் யம் தூரமாகி விடுகின்றது என்று சொன் னார்கள். நான் தலைவனல்ல; ஒரு தொண் டனாவேன். நான் எப்போதாவது மாறவும் இல்லை. பொது வாழ்வில் தொண்டு ஆரம்பித்த காலத்தில் நமது விடுதலைக்கு என்ன என்ன காரியங்கள் தடையாயிருக் கின்றது என்று சொன்னேனோ அதை யேதான் இப்போதும் சொல்லுகிறேன். தீண்டாமையும் வருணா சிரம தர்மமும் ஒழிந்தாலல்லாது நமக்கு விடுதலை இல்லை என்பது எனது உறுதி. அதற்காக இப்போதும் பாடுபடுகிறேன். காங்கிரசினால் தீண்டா மையும் வருணாசிரமும் ஒழியாது என்பது உறுதியாதலால் நான் அதை விட்டுவிட்டு அதற்காகத் தனியாய் பிரச்சாரம் செய்கின் றேன். ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிடவில்லை என்கின்றார்.

ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட்ட காலத்தில் எனக்கு அவரி டம் இருந்த மதிப்பு இப்போது இல்லை. என்னவென்றால், இப்போது அவர் வருணா சிரமத்திற்கு வியாக்கியானம் செய்ததில் பிறவியில் ஜாதி உண்டென்று சொல்வ தோடு இந்த ஜன்மத்தில் பிராமணனுக்குத் தொண்டு செய்தால்தான் அடுத்த ஜன்மத் தில் பிராமணனாகப் பிறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்ட பிறகு அவரை மகாத்மா என்று சொல்ல எனக்கு இஷ்டமில்லை.

மற்றபடி மற்ற மதங்களிலும் பிரிவுகளும் மூடநம்பிக்கைகளும் இருப்பதாக சொல்லி யிருக்கிறார்.

மற்ற மதங்களிலும் இருக்கின்றது என்கின்ற சமாதானம் போதாது. ஜனசமூகம் உண்மையான விடுதலை பெற மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டியது தான்.

ஆனால், இப்போது எனது வேலை அதுவல்ல. என் தலைமீதும் எனது சகோதரர்கள் மீதும் சுமத்தப்பட்ட மதத்தின் யோக்கியதை வெளியாகி மக்கள் உண்மையறிந்து அதிலிருந்து அறிவு பெற்ற பிறகுதான் நமக்கு மற்ற மதங்களில் சீர்திருத்தத்தைப்பற்றி பேச யோக்கியதை உண்டு. ஆதலால் மற்ற மதங்களின் ஊழல்கள் இருப்பதற்காக நாம் நமது மதம் என்பதின் ஊழல்களை மூடி வைத்திருக்க முடியாது. நான் தொட்டால் அருகில் சென் றால் செத்துப் போகும் சாமிகளைப்பற்றி அலட்சியமாய் பேசினதற்காக வருந்துவதாக பேசினார். நான் அதற்குப் பரிதாபப்படுகின் றேன். நான் தொட்டால் நான் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமியை நான் வேஷ்டி துவைக்கக்கூட உபயோகிக்க மாட்டேன். யார் என்னை என்ன சொன் னாலும் சரி, எனக்குக் கவலை யில்லை அப்படிப்பட்ட குணம் ஏற்பட்ட உருவத் திற்கு என்ன பெயர் சொன்னாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதை வெறும் கல்லென்றும் செம்பென்றும் தான் சொல் லுவேன். ஸ்ரீ முத்துகிருஷ்ணன் பிள் ளையை அனுசரித்து ஸ்ரீமான் ரங்கநாதம் செட்டியாரும் பேசியிருக்கிறாராதலால் அவருக்குத் தனியாய் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் முன்பு இந்த ஊர் ஜில்லா மகாநாட்டுக்குத் தலைமை வகித்த காலத்தில் தீண்டாமை ஒழிய வேண்டுமென்பதையும் அதற்கு விரோத மாக மதம், சாஸ்திரம், புராணம் என்பதையும் பற்றி அப்போது அதாவது சுமார் 5, 6 வருஷங்களுக்கு முன்னால் நான் 2-மணி நேரம் அக்கிராசனர் என்கின்ற முறையில் பேசியிருப்பதை ஞாபகப்படுத்திக் கொண் டாரானால் நான் ஏதாவது இப்போது மாறி இருக்கின்றேனா அல்லது காங்கிரசும் அந்த இடத்தில் இப்போது இருப்பவர்களும் மாறி இருக்கின்றார்களா? என்பது புலனாகும். ஸ்ரீ அய்யங்கார் வெகு நேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக் காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை - என்று நாயக்கர் சொன்னதும் அய்யங்கார் எழுந்து நீங்கள் கல்லென்று சொன்னீர்களே இது சரியா? என்றார்.

உடனே ஸ்ரீமான் நாயக்கர், ஆம், வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள்! காட்டுகின்றேன் என்று மேஜை மீதிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைத்தட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலைகுனிந்தார்.

மற்றொரு பார்ப்பனர் - (பத்திரிகை நிருபர்) அந்தக் கல்லுக்கு மந்திர உச்சாட னம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன் னார்.

நாயக்கர்:- அப்படியானால் மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்குச் செய்த மந்திர உபதேசம் உண்மையில் சக்தி உள்ள தானால் இதோ - எதிரில் இருக்கும் சகோதர ருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதேசம் செய்து அவரை அந்த கல்லுச்சாமிக்குப் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும் படியாகவாவது செய்யக்கூடாதா? என்றார்.

அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.

மறுபடியும் ஸ்ரீ திரு. நாராயணய்யங்கார் இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன்! ஆனால் நீங்களா வது ஒரு புது மதம் சொல்லுவது தானே என்றார்.

நாயக்கர்:- நான் ஒரு புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றா தீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத்தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்று தான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகின்றேன்.

அய்யங்கார்:- இருக்கின்றதை மறைப்ப தானால் புதிதாக ஒன்றைக் காட்ட வேண் டாமா? என்றார்.

நாயக்கர்:- வீட்டிற்குள் அசிங்கமிருக் கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்கு பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும்? இந்து மதம் என்பதாக உலகமெல்லாம் நாறுகின்றதே. அந்த துர் நாற்றம் போய்விட்டால் அதுவே போதும், நீங்களே இந்துமதம் என்பதாக ஒன்று இல்லை என்றும் சொல்லி ஒப்புக் கொண்டு விட்டீர்களே இனி நான் என்ன சொல்ல வேண்டும்!

அய்யங்கார்:- நீங்கள் இவ்வளவு சமத் துவம் பேசுகின்றீர்களே! உங்களுக்கு லட்ச லட்சமாக சொத்துக்கள் இருக்கின்றதே, அதை ஏன் எல்லோருக்கும் பங்கிட் டுக் கொடுக்கக் கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே என்றார்.

நாயக்கர்:- ஸ்ரீமான் அய்யங்கார் சொல் லுகின்றபடி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்துக்கள் கிடையாது. ஏதோ சொற்ப வரும்படிதான் வரக்கூடியதா யிருக்கின்றது. அதையும் எனக்குச் சரியென்று தோன்றிய வழியில் பொது நலத்துக்குத்தான் செலவு செய்து வருகி றேன். அல்லாமலும் இந்தத் தொண்டுக்கு வருமுன் பெருவாரியாக - வியாபாரமும் செய்து வந்தேன். வருஷம் ஒன்றுக்கு 1000 ரூபாய் கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கின்றேன். ஆனால் அவைகளை இப்போது அடியோடு நிறுத்தி விட்டேன். இந்தப் பிரசார செலவு சிலசமயம் மாதம் 200, 300 ரூபாய் வீதம் ஆகிவருகிறது மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்பதில்லை. நான் அனேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டியில்தான் போகிறேன். அப்படி இருந் தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.
ஒதுக்கிப் பொசுக்க வேண்டும்

அய்யங்கார்:- புரோகிதத்தைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத் திற்கும் போவதில்லை, பிச்சைக்கும் போவதில்லை, காப்பிக்கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரையும் ஒன்றாகக் கண்டிக்கிறீர்கள். அப்படியானால் என்னதான் செய்கின்றது? எந்த புஸ்தகத்தை தான் படிக்கின்றது.

நாயக்கர்:- நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவதில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிடமிருந்தாலும் மனிதனின் சுபாவத்திற்கும், சமத்துவத் திற்கும், சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கைகளும், கதைகளும் எதிலிருந் தாலும் அவைகளை ஒதுக்கி சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல் லுகின்றேன் (என்று ஆவேசமாய் சொல்லி கடைசியாக முடிவுரையாக சொன்ன தாவது), இந்த ஊர் எவ்வளவோ நல்ல ஊர் என்றுதான் சொல்வேன். சில ஊர்களில் கல்லுகள் போடவும் கூட்டத்தில் கலகம் செய்யவும் கூச்சல் போடவும்கூட பார்த் திருக்கின்றேன். இதெல்லாம் அனுபவிப்பது எனக்குச் சகஜம் தான். எவ்வளவுக் கெவ் வளவு எதிர்ப்பு ஏற்படுகின்றதோ, எவ் வளவுக் கெவ்வளவு எதிர்பிரச்சாரங்கள் ஏற்படுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு எனது வேலை சுலபமாகும், எனது எண்ணமும் நிறைவேறும் என்கின்ற தைரி யம் எனக்கு உண்டு. இம்மாதிரி வேலைகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்இருந்தே பலர் செய்து வந்திருக் கிறார்கள். ஆனால் அந்தச் சமயம் இருந்த அரசர்கள் முட்டாள்களாகவும் பலவிதத்தில் பார்ப்பனர்களால் மயக்கப்பட்டவர்களாக வும் இருந்ததினால் அது பலிக்காமல் போய்விட்டது. ராமராஜ்யமாகவோ , பாண்டிய ராஜ்ய மாகவோ இருந்தால் நான் இதுவரை ஒரே பாணத்தால் கொல்லப்பட் டிருப்பேன் அல்லது கழுவேற்றப்பட்டி ருப்பேன். நல்ல வேளையாக அந்த அரசாங்கங்கள் மண் மூடிப்போய் விட்டது. வேறு ஒரு லாபமும் இல்லாவிட்டாலும் நமது பணம் கொள்ளை போனாலும் மனிதனின் சுயமரியாதையைப் பற்றியாவது வெள்ளைக்காரர் ராஜ்யத்தில் இதுவரை தாராளமாகப் பேச இடம் கிடைத்துவிட்டது.


சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி, நான்கு நாள் முன்னோ பின்னோ சாக வேண்டியது தான். வீட்டில் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத் தொண் டிற்குள் பிரவேசிக்கின்றேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாகப் பயணம் சொல்லிக் கொண்டு தப்பிப் பிழைத்தால் தான் திரும்பி வரமுடியும் என்று என் பெண் ஜாதிக்கும் தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர்விட வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெ னில் நான் எடுத்துக் கொண்ட வேலை அவ்வளவு பெரியதும் பல எதிரிகளைக் கொண்டதும் தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால் இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும், தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும் இனி பயப்படுவது என்பது முடியாத காரியம். ஆயிரம் தரம் சொல் லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும்கல், வெறும்கல். நமது தேசிய இயக்கம் என்கின்ற காங்கிரஸ் முதலியவை வெறும் புரட்டு, வெறும் புரட்டு என்பது எனது முடிவு. யார் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ளா விட்டாலும் சரி நான் யாருக்கும் போதிக்க வரவில்லை. எனக்குப் பட்டதைச் சொல்ல வந்தேன். சரியானால் ஒப்புக் கொள்ளுங்கள். தப்பானால் தள்ளி விடுங்கள். சாமி போய்விடுமே என்று யாரும் சாமிக்காக வக்காலத்து பேச வேண்டிய தில்லை. பேசினாலும் நான் ஒப்புக் கொள் ளப் போவதில்லை. உண்மையான கடவு ளும் உண்மையான தேசியமும் எனக்குத் தெரியும். அதை வெளியிடும் தொண்டு தான் இது என்று பேசி உட்கார்ந்திருந்தார்.

(25-02-1928 அன்று சிதம்பரத்தில் வக்கீல் இராமையா தலைமையில் நடந்த சுயமரியாதைப் பொதுக்கூட்டத்தில் பல குறுக்குக் கேள்விகளுக்கு விடை தந்து ஆற்றிய சொற்பொழிவு)

                                                                                - குடிஅரசு - சொற்பொழிவு - 04.03.1928



Sunday, April 6, 2014

மலையாளமும் மாளவியாவும்



தென்னாட்டு பார்ப்பனர்கள் அரசிய லிலாவது மத இயலிலாவது சமுதாய இயலிலாவது தங்களுடைய புரட்டுகள் எல்லாம் வெளியாய் விடுவதின் மூலம் செலவழிந்துவிட்டால் வடநாட்டிலிருந்து யாராவது ஒருவரைக் கொண்டு வந்து பித்தலாட்டப் பிரச்சாரம் செய்வது வழக்கம்.

அது மாத்திரமல்லாமல் தாங்களாகத் தனித்து வெளியில் புறப்பட்டு பிரச்சாரம் செய்ய முடியாத பட்சத்திலும் வெளிநாட்டிலிருந்து யாரையாவது பிடித்து வந்து அவர்கள் மதிப்பின் மறைவில் மேடைமேலேறிப் பேச இடம் சம்பாதித்துக் கொள்வதும் வழக்கம். இதுவும் சமீபகாலம்வரை பாமர மக்கள் முழு மோசமாயிருந்த காலம் வரையில்தான் செல்லுபடியாய்க் கொண்டு வந்தது.

இப் போது அடியோடு இவர்கள் யோக்கியதை வெளியாய் விட்டதால் சிறிது கூட செல வாணி ஆவதற்கில்லாமல் செல்லு மிடங்களிலெல்லாம் சாயம் வெளுத்துப் போய் உண்மை நிறம் வெளியாய்க் கொண்டு வருகின்றது. அதாவது சென்ற வருஷத்திற்கு முன் திரு.காந்தியைக் கூட்டிக் கொண்டு வந்து அவரைத் தங்களிஷ்டப்படி ஆட்டி வைத்து ஊர் ஊராய் திரிந்ததில் இவர்கள் சாயம் வெளுத்ததல்லாமல் அவர் சாயமும் வெளுத்து என் ராமன் வேறே;

என் வருணாசிரமம் வேறே என்று சொல்லி கொண்டு தப்பித்துப் போகப் பட்டபாடு வெகு பாடாய்ப் போய்விட்டதும்; பிறகு திரு பஜாஜ் அவர்களை தருவித்து அவர் களுடன் திரிந்ததில் உள்ள யோக்கி யதையும் போய் அவர் தலையில் கை வைத்துக் கொண்டு திரும்பியதும் திரு வாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்திய மூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் முதலிய வர்கள் தாங்கள் தனித்து போக முடியாமல் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாண சுந்தரம், முத்துரங்கம், ஓ.கந்தசாமி, பாவலர், ஜயவேலு, ஷாபிமுகமது;

பஷீர் அகம்மது முதலிய நபர்களை கூட்டிக் கொண்டு வெளியில் போவதும், அங்கும் இப்போது எந்த ஊருக்குப் போனாலும் எவ்வளவு பயந்து ஒடுங்கி அடக்கமாகப் பேசினாலும் இவர்களைப் பேச ஒட்டாமல் திருப்பி அனுப்பிக் கப்படுவதும் பார்ப்பனப் பத்திரி கைகளும் அவர்களது கூலிப் பத்திரிகைகளும் எவ்வளவுதான் மறைத்தாலும் தாராளமாய் வெளிப்பட்டுக் கொண்டு வரு கின்றது.


இந்த இரண்டு மூன்று வாரமாய் திரு.சீனிவாசய்யங் கார் கம்பெனி செல்லுமிடங்கள் பலவற்றில் கூட்டம்போட முடியாமல் திரும்புவதும், கூட்டம் கலைக்கப்பட்டுவருவதும் அவர் கூடச் செல்பவர்களுக்கு நடக்கும் மரியா தைகளும் சேலம், திருச்சி, கோயமுத்தூர் முதலிய ஊர்களில் நடந்த சம்பவங்களே போதுமானது.

இவ்வளவும் போதாமால் இந்த வருஷத்திற்கு திரு பண்டிட் மாள வியா அவர்களைத் தருவித்து கடவுளுக் கும் கோயிலுக்கும் மதத்திற்கும் ராமாயணத் திற்கும் ஆபத்து வந்துவிட்டதென்று சொல்லி பிரச்சாரம் செய்யச் செய்ததில் அவர் சென்றவிடங்களிலெல்லாம் சரமாரி யாகக் கேள்விகள் கேட்டுத் திணறவைத்து கடைசியாகக் கூட்டம் கலைந்து வீட்டுக்குத் திரும்பும் படியாகிவிட்டது.

பார்ப்பனர் களும் அவர்களது கூலிகளும் பண்டி தரைப் பிடித்து அவர் தலையில் வருணாசிரமத்தையும் கோவி லையும் மதத்தையும் இராமனை யும் இராமா யணத்தையும் தூக்கி வைத்து எவ்வளவோ விளம்பரம் செய்தும் ஒரு காசுக்குக் கூட விற்க முடியாமல் போனதோடு திரு.மாளவியா வுக்கும் கொஞ்ச நஞ்சம் இருந்த யோக்கியதையும் அடியோடு கவிழ்ந்து விட்டதென்றே சொல்லலாம்.

உதாரணமாக கோட்டயத்தில் நடந்த கோவில் பிரவேச மகாநாட்டில் தலைமை வகித்து பேசிய விவரமும் அங்கு நடந்த விவரமும் அடுத்த பக்கத்தில் தெரியலாம் ஆனால் அந்த விஷயங்களைப் பார்ப்பனப் பத்திரிகைகள் எவ்வளவோ மறைத்தும் சிறிதாவது வெளியாக வேண்டியதாய் விட்டது. அதாவது 11-ஆம் தேதி இந்து பத் திரிகை வேண்டுமென்றே அயோக்கியதன மாய் அடியோடு மறைத்துவிட்டு உணர்ச்சி யுள்ள வாதங்கள் நடந்தன என்று மாத்திரம் எழுதி இருக்கிறது.

10-ஆம் தேதி சுயராஜ்ஜியாவில் மாளவி யாஜி பேசும்போது ஜாதி இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் கூட்டத்தார் பலமாக ஆட்சேபணை செய்தார்கள். சரமாரியான கேள்விகள் பல பக்கங்களிலிருந்து புறப்பட்டன என்றும் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் கலகமும் பரபரப்பும் உண்டா யிற்று என்றும் எழுதி பலர் மேடைக்கு வந்து கண்டித்துப் பேசியதையும் எழுதி இருக்கின்றது.

12-ஆம் தேதி மித்திரனில் திரு.மாளவியா பேசின கான்பரன்சில் திரு.மாளவியாவை கண்டித்து ஒரு தீர் மானம் செய்திருப்பதாகவும் பிரீபிரஸ்சின் பேரால் போடப்பட்டிருக் கின்றது. ஆனால் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் இன்னவையென்று ஒரு பத்திரிகையாவது எழுதவில்லை என்றாலும் திரு.மாளவியா அவர் பிறந்தது முதல் இதுவரை இதுபோல் ஒரு கஷ்டத்தையும் அவமானத்தையும் அடைந்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம்.

திரு.மாளவியா ஜாதிகள் இருக்க வேண்டியது அவசியம்; எனக்கு சாதிரம் தெரியும் என்று சொன்னவுடன் ஒருவர் எழுந்து ஒரு கிறிதவனையோ மகமதியனையோ இந்து வாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பது என்று கேட்டவுடன் மாளவியாஜி அதற்குச் சாதிரம் பார்த்துதான் சொல்ல வேண்டு மென்று தலைகுனிந்து சொன்னதானது அவரைத் தருவித்தவர் கண்களில் ஜலம் ததும்பும்படி செய்தது.

மறுபடியும் ஒரு கேள்விக்கு அதாவது உமது இந்து யுனிவர்சிட்டி காலேஜில் ஈழவர்களை சேர்த்துக் கொள்ளுவீர்களா என்று கேட்டதற்கு மாளவியாஜி நீங்கள் புலையர்களைச் சேர்த்து கொள்ளுவீர்களா என்று கேட்டதும் கூட்டமே ஆம் சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னதும், மாளவி யாஜியை மூர்ச்சையடையச் செய்து விட்டது.

எனவே மாளவியா நல்ல பாடம் கற்றுக் கொண்டார் என்று சொல்லத்தான் வேண்டும். இதற்கு நேர் எதிரியாகச் சுயமரியாதை கொள்கைகள் அங்கு தாண்டவமாடியதும், அவைகள் ஒரே அடியாய் ஒப்புக் கொள்ளப்பட்டதும், அப்போது ஏற்பட்ட உற்சாகமும் அங்கு சமீபத்தில் இருந்து பார்த்தவர்கள்தான் அறியக் கூடும்.

                                                                                   குடிஅரசு - தலையங்கம் - 12-05-1929

Sunday, March 30, 2014

சீர்திருத்தமும் இந்துமத ஸ்மிருதியும்



திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தற்காலம் ஆலோசனையிலும் கமிட்டி விசாரணையிலும் இருந்து வரும் குழந்தை விவாகத் தடை மசோதாவைக் கண்டித்து ஒரு ஸ்ரீமுகம் வெளியிட்டிருக்கின்றார். அதை சுதேசமித்திரன் பிரசுரித்துள்ளபடி மற்றொரு பக்கத்தில் எடுத்துப் போட்டி ருக்கின்றோம். அதன் காரண காரியங் களைப் பற்றி ஆராயுமுன் திரு. சத்திய மூர்த்தி யார் என்பதையும், அவர் எந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கின்றார் என்பதையும் முதலில் கவனிப்போம்.

திரு. சத்தியமூர்த்தியை அவருடைய தனித்த ஹோதாவில் ஒரு சாதாரண மனிதர் என்பதாகச் சொல்லி விடலாமானாலும் அவருக்கு இம்மாதிரியான ஸ்ரீமுகங்கள் வெளியிட சந்தர்ப்பங்கள் அளித்ததும் அந்த ஸ்ரீமுகங்களை மக்கள் கவனிக்க நேர்ந்ததும், சில விஷயங்களிலாவது அவர் இந்திய மக்கள் பிரதிநிதி என்கின்ற தன்மை அடைந்திருக்கிறார் என்பதே அதாவது தேசிய அரசியல் இயக்கம் என்று சொல்லப் படுவதில் ஒரு குறிப்பிட்ட மனிதராகவும், சென்னை சட்டசபை என்பதில் ஜனப் பிரதிநிதி அங்கத்தினராகவும்,

அதிலும் படித்த மக்களின் பிரதிநிதியாகவும், அதா வது யுனிவர்சிட்டி பிரதி நிதியாகவும், சென்னை முனிசிபாலிட்டியின் ஒரு அங்கத் தினராகவும், மற்றும் பொது ஜனசேவை செய்கின்றவர் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தில் சேர்ந்தவராகவும் இருக்கின்றார் என்பதே. அன்றியும், தன்னை ஒரு சீர்திருத்தக்காரர் என்றும், மதம், சமுகம் முதலியவைகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்தான் என்றும் சொல்லிக் கொள்பவர்.

எனவே, இப்படிப்பட்ட ஒருவர், குழந் தைகள் புருஷன் பெண்ஜாதியான வாழ்வு நடத்தாதிருப்பதற்கும், குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவம் மாறாததற்கு முன்பே பிள்ளை பெறும்படியான நிலைமையை உண்டாக்காமல் இருப்பதற்கும், மற்றும் மனித சமுகத்தின் அறிவு, சரீர வளர்ச்சி, பலம் முதலிய வைகள் விர்த்தி அடைவ தற்கும் அவசியமானதான மேல்கண்ட குழந்தை விவாகத் தடுப்பு மசோதா என்பதை எதிர்த்துப் போராடவந்து அதற்கு ஆதாரமாக பெரிதும் மதசம்பந்தமான ஆட்சேபனைகளையே எடுத்துக்காட்டி இருக்கிறார்.

இது மாத்திரமல்லாமல், மற்றும் இது போன்ற பல சீர்திருத்தங்களையும், மதத் தைச் சாக்காகக் கொண்டே ஆட்சேபித்து வந்திருக்கின்றார். இதற்கு உதாரணமாக இரண்டொன்றைக் குறிப்பிடுகின்றோம்.

அதாவது கொஞ்ச நாளைக்கு முன் சென்னை சட்டசபையில் திரு. முத்து லட்சுமி அம்மாளால் கொண்டுவரப்பட்ட சாமிபேரால் விபச்சாரத்திற்குப் பொட்டுகட் டும் வழக்கத்தடுப்பு மசோதாவையும் மதத்தைச் சாக்காகக் கொண்டே தடுத்து நின்றதும் யாவருக்கும் தெரிந்ததாகும்.

அந்தச் சமயத்தில் திரு. சத்தியமூர்த்தி அய்யர் சொன்ன ஆட்சேபனை, என்ன வென்றால் பொட்டுகட்டு கின்ற வழக்கம், கேட்டைத் தரத்தக்க தானாலும், அதை நிறுத்தச் சம்மதிப்பது மதத்தில் பிரவேசிப் பதாகும் என்றும், இன்று பொட்டுகட்டுவதை நிறுத்த ஒப்புக்கொண்டால் நாளை மற் றொரு சீர்திருத்தம் வரும் என்றும், ஆத லால் அதற்குச் சம்மதிக்க முடியாதென்றும் சொல்லி விட்டார்.

பிறகு சென்ற வாரத்தில், சென்னையில் நடைபெற்றுவரும் விபச்சாரங்களை தடுக்க ஒரு மசோதா கொண்டுவர முயற்சித்த போதும் இதுபோலவே தடைக்கல்லாய் நின்றதுடன் அவர் சொன்ன சமாதானம் என்னவென்றால், விபச்சாரிகள் எவ்வளவு தான் ஒழுக்க ஈனமாக நடந்துகொண்டாலும் அவர்களும் நமது சமுகத்தார் அல்லவா? அப்படியிருக்க அவர்களின் விபச்சாரத் தொழிலை நிறுத்தி விட்டால் பிறகு அவர் கள் ஜீவனத்திற்கு என்ன செய்வார்கள் என்று சொல்லி ஆட்சேபித்தாராம்.

இம்மாதிரியாகவே எவ்விதமான சீர் திருத்தங்கள் வந்த போதிலும் மதத்தின் பேராலும் சமுகத்தின் பேராலும் ஆட்சே பித்து அவைகள் நிறைவேற்றப்படாமல் போவதாயிருந்தால் பிறகு எந்த விதத்தில் தான் நமக்குக் கதிமோட்சம் ஏற்படக்கூடும்? அன்றியும் பராசரர் ஸ்மிருதியும் மனுஸ் மிருதியும் நமது வாழ்க்கைக்கும் மதத்திற் கும் ஆதாரமென்பதை நாம் சகித்துக் கொண்டு அதைப் பின்பற்றுவதென்றால், அதை விட ஈன வாழ்க்கை வேறு எங் காவது ஏதாவது உண்டா என்று கேட் கின்றோம்.

இப்பேர்ப்பட்ட இந்துமதம் என்பதும் அதனுட் பிரிவுகள் என்பதான சைவ வைணவ முதலிய சமயங்கள் என்பதும், அதன் ஆதாரங்களான வேதம், சாஸ்திரம், ஸ்ருதி, ஆகமங்கள் என்பவை களும், நமது மோட்ச சாதனத்திற்கு ஏற்பட்டவை என்றும், உலகத்திலுள்ள மற்ற மதங்களுக் கெல்லாம் சிறந்தது என்றும் சொல்லிக்கொண்டு அச்சமயங்களைக் காப்பாற்ற வெளிவந்திருக்கும் வீரர்கள், சுயமரியாதை இயக்கம் இந்து மதத்தைக் கெடுக்கின்றது.

வைணவ மதத்தை வைகின்றது, சைவ சமயத்தை ஒழிக்கின்றது என்று ஊளையிட்டு கொண்டிருக்கின்ற வர்களே இம்மாதிரி சீர்திருத்தத்தைப் பற்றியாவது கடுகளவு கவலையாவது கொள்ளுகின்றார்களா என்பதைப் பொது ஜனங்கள் யோசித்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.

அன்றியும் மத சமயக்காரர்கள் என்பவர்கள் சம்பந்தன் சமணர்களைக் கழுவேற்றினது பொய்யா மெய்யா? முதலைதான் உண்ட பாலகனை 14 வருஷம் வரை வயிற்றில் வளர்த்து வெளியில் கக்கினதை ஒப்புக் கொள்ளுவாயா? மாட்டாயா ராமன் கடவுளா மனிதனா? ராவணன் யோக்கியனா? ராமன் யோக் கியனா? சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா? விஷ்ணுவுக்கு வடகலை நாமமா, தென்கலை நாமமா? சூரியனுடைய ரதத்திற்கு எட்டு குதிரையா? பதினாறு குதிரையா? விதி பெரியதா மதி பெரியதா? இதுபோன்ற விசயங் களில் மதபக்தியையும் அறிவு சக்தியையும் காண்பித்துக் கொண்டு சமயத் தொண்டையும், தெய்வத் தொண் டையும் செய்துகொண்டும்,

இம்மாதிரியான விஷயங்களிலெல்லாம் பார்ப்பனர்கள் சொன்னதை தெய்வவாக்கு என்பதாகவும், அதை மறுத்தால் தங்களுக்கு எந்த வித யோக்கியதையும் இல்லாமல் போய்விடும் என்று பயந்து கொண்டும் பாமர மக்களை மிருகங் களாக்கி விடுகின்றார்கள். ஆதலால் இம்மாதிரி மதமும் சமயமும் நமக்கு எதற் காக வேண்டும்? இவை மக்களுக்கு நன்மையளிக்கும் சமயமாகுமா? என்பதாக கேட்க ஆரம்பித்தால் அதை நாஸ்திகம் என்று சொல்லி விரட்டியடிக்கப் பார்க் கின்றார் களேயொழிய மனிதத் தன்மை அறிவுத் தன்மை என்பதை ஒரு சிறிதும் காட்டு வதே கிடையாது.

தவிர திரு. சத்தியமூர்த்தி, பால்ய விதவைகளின் கொடுமையையும் சிறு குழந்தைகள் பிள்ளை பெற்று தாயாகி விடுவதால் வரும் கெடுதியையும் நான் அறிவேன் என்று கொடுமைகளையும் கஷ்டங்களையும் ஒப்புக்கொள்ளு கின்றார்.

ஆனால் கூடவே அதன் கீழ் 12 வயதுக்குள் பெண்களுக்குக் கல்யாணம் செய்யாவிட்டால் பாவம் வரும் என்று பராசர ஸ்மிருதியில் சொல்லி இருக் கின்றது என்கின்றார். கொடுமையையும் கெடுதி யையும் நீக்குவது பாவமாகு மானால் அந்தப் பாவத்திற்குப் பயப்படவேண்டுமா? என்றுதான் கேட்கின்றோம்,.

அன்றியும் திரு. சத்தியமூர்த்தி ஆதாரம் காட்டும் பராசர ஸ்மிருதியின் விவாகப் பிரகரணத்தில், 8 வயது பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் சுவர்க்க லோகத்தையும், 9 வயதுப்பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் வைகுண் டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் பிரம்ம லோகத் தையும் அடைகிறான்; அதற்கு மேற்பட்டு பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரவுரவதி நரகத்தை அடைகிறான் என்று எழுதி யிருக்கின்றது.

ஆனால், திரு. சத்தியமூர்த்தி 10 வய துக்கு முன் கல்யாணம் செய்யும் வழக்கம் இப்போது நின்றுபோய்விட்டது என்று சொல்லுகின்றார். இந்தப்படி பார்த்தால் இப்போது பெண் பெற்றவர்கள் எல்லோரும் ரவுரவாதி நரகத்திற்குப் போய்க் கொண் டிருக்கிறார்கள் என்று தானே சொல்ல வேண்டும். எனவே இனி 16 வயதில் கல்யாணம் செய்பவர்களுக்குப் புதிதாகப் பாவம் ஏது என்று கேட்கின்றோம்.

தவிர திரு. சத்தியமூர்த்தி பயப்படுவதாக வேஷம் போடும் பராசர ஸ்மிருதியின் யோக்கியதையைக் கவனிப்போம்.

10 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்குக் கல்யாணம் செய்யாவிட்டால் ரௌரவாதி நரகத்தை அடைய வேண்டும் என்று சொல்லும் ஸ்மிருதியானது அதே ஸ்திரிகள் விஷயத்தில் சொல்லுவது என்ன என்றால், ஸ்திரிகள் பூமிக்குச் சமமானவர்கள்.

அவர்கள் குற்றம் செய்தால் தூக்ஷிக்கக் கூடாது. அவர்கள் என்ன தவறுதல் செய்தாலும் அவர்களை விலக்கிவிடக் கூடாது. சண்டாளன் வசித்த பூமியை எப்படிச் சில சுத்திகள் செய்து அதில் நாம் வசிக்கின்றோமோ, அதுபோல் ஸ்திரிகள் சண்டாள சம்பந்தம் வைத்துக் கொண் டாலும் அவர்களைச் சுத்தி பிராயச்சித்தம் செய்து ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கின்றது.

அந்த பிராயச்சித்தம் என்னவென்று பார்ப்போமானால் அதாவது ஒரு பிராமண ஸ்திரீ தன் மனதறிந்து ஒரு சண்டாளனுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டால் சாந்திராயண கிருச்சிரம் செய்துவிட்டால் சுத்தியாகிறாள் என்று சொல்லியிருக் கின்றது. இது பராசர ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் 7வது அத்தியாயம் 23வது சுலோகம்.

சாந்திராயண கிருச்சிரம் என்பது கிருஷ்ண பட்சம் முதல் அமாவாசை வரை யில் தினம் ஒரு பிடிசாதமாகக் குறைத்துக் கொண்டு வந்து ஒரு நாள் பட்டினி விரதமிருந்து, மறுபடியும் ஒவ்வொரு பிடி விருத்தி செய்து சாப்பிட வேண்டியது இது 7வது காண்டம் 2 வது சுலோகம்.

ஒரு பிராமண ஸ்திரீ பாவ சீலர்களான சூத்திரர்களால் அனுபவிக்கப்பட்டால் அவள் பிரஜாபத்திய கிருச்சிரம் செய்வ தாலும் ருது ஆவதாலும் சுத்தி அடைகின் றாள் என்று சொல்லுகின்றது (இது மேல்படி காண்டம் மேல்படி அத்தியாயம் 24வது சுலோகம்)

பிரஜாபத்திய கிருச்சிரம் என்பது 3 நாள் காலையிலும் 3 நாள் மாலையிலும் புசித்து 3 நாள் யாசிக்காமல் வந்ததைப் புசித்து 3 நாள் உபவாசமிருத்தல் (இது பராசர ஸ்மிருதி 7வது காண்டத்தில் 9வது அத்தியாத்தில் சொல்லப்படுகின்றது.)

இதுவும் செய்வதற்குக் கஷ்டமாயிருக்கு மானால் 12 பிராமணர்களுக்கு சாப்பாடு போட்டால் போதும் (இதுவும் மேற்படி அத்தியாயம்.)

இன்னும் இதுபோலவே மகாபாதகம் என்று சொல்லும் படியான குருபத் தினியைப் புணர்ந்தவன் ஒரு பசுவையும் எருதையும் பிராமணனுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான் (மேற்படி காண்டம் அத்தி யாயம் சுலோகம் 13)

இன்னும் இதைவிட மகாபாதகமான அனேக காரியங்களுக்கும் ஒரு வேளை இரண்டு வேளை பட்டினி கிடப்பதும் பிரா மணனுக்குக் கொடுப்பதுமே பிராயச்சித்த மாய்ச் சொல்லப்படுகின்றது. அதிலும் பிராமணன் சூத்திரன் என்பதாகப் பிரித்து அதற்குத் தகுந்தபடி பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கின்றது.

அதாவது ஒரு வேதம் ஓதின ஒரு பிராமணன் ஒரு பசுவைப் புணர்ந்தால் ஒரு பசுவைப் பிரா மணனுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான். இதே காரியத்தை ஒரு சூத்திரன் செய்தால் 4 பசுவையும், 4 எருதையும் பிராமண னுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான் என்று சொல்லுகிறது.

(மேற்படி அத்தியாம் 14வது சுலோகம்)

எனவே இப்பேர்ப்பட்ட காரியங்களுக் கெல்லாம் எவ்வளவு சுலபமாக பிராயச் சித்தம் சொல்லி இருக்கும்போது ஒரு பெண்ணை 12 வயது ஆன பிறகு பிறந்து கல்யாணம் செய்வதால் ஏற்படும் பாவத் திற்கு மிகவும் சுலபமான பிராயசித்தம் தானே இருக்கக்கூடும்.

ஆதலால் பராசர ஸ்மிருதியை கடவுள் வாக்கு என்றே நம்புகின்றவர்களுக்குக் கூட குழந்தை விவாகத் தடுப்பு மசோதாவில் பிரமாதமான கெடுதி ஒன்றும் வந்துவிடாது என்றே சொல்லுவோம். அதிகமான தண்டனை விதித்திருந்தாலும் அது பாலும் பழமும் மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டு ஒரு வேளை பட்டினி கிடக்கவேண்டும் என்று தான் இருக்கக் கூடும்.

ஆதலால் உண் மையானதும் அவசியமானதுமான சீர் திருத்தங்களை விரும்புகின்றவர்கள் மதம், சமயம், சாஸ்திரம், சாமி என்கின்ற பூச் சாண்டிகளுக்கு ஒரு சிறிதும் பயப்படக் கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 21.10.1928







Read more: http://www.viduthalai.in/e-paper/77868.html#ixzz2xVjvn3i1

Sunday, March 16, 2014

கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்வதற்கு யார் காரணம்?



இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம் போன்ற முட்டாள் தனம் முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வருகிறது. இதை மாற்றக் கூடாதது என்று சொல்கின்றோமே தவிர, உணவை, உடையை, மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னோர்கள் பழமையைக் கடைபிடிப்பது கிடையாது.

விளக்கெண்ணெய் அகல் விளக்கைத் தூக்கிக் குப்பையிலெறிந்துவிட்டு மனிதன் மின்சார விளக்கைப் பயன்படுத்துகின் றானே தவிர, முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வந்தது என்று எவனும் அகல் விளக்கைப் பயன் படுத்துவது கிடையாதே!

இங்கு மனிதன் சிந்திப்பது பாவம், மதத்திற்கு விரோதம், கடவுளுக்கு விரோ தம் என்று சொல்லி மனிதனின் சிந் தனையைத் தடுத்து விட்டதால் அறிவு வளர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது. ரஷ்யாக்காரன் கடவுள், மதத்தை ஒழித்து சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுத்ததால் அங்கு ஏழையும் இல்லை - பணக்காரனுமில்லை, தொழிலாளியும் இல்லை - தாழ்ந்த சாதிக்காரனும் இல்லை - உயர்ந்த சாதிக் காரனும் இல்லை. எல்லா மக்களும் சமமாக இருக்கிறார்கள்.

உலகில் நாம் பல பாகங்களைப் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்த பின்தான் நம் இழிவிற்குப் காரணம் பகுத்தறி விருந்தும் அதனைக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - புராணம் - முன்னோர் - பெரியோர் என்கிற காரியங்களில் பயன்படுத் தாததே என்பது புலப்படுகிறது.

பகுத்தறிவு என்பது ஒரு மனிதனால் புகுத்தப் பட்டதல்ல, தானாக ஏற்படுவதாகும். ஏசு கிறிஸ்து ஆயிரம் கடவுள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்றான். அப்போது அவன் பகுத்தறிவுவாதி! முகமது நபி ஆயிரம் கடவுள் இல்லை; கடவுளுக்கு உருவ மில்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன்னான்; அந்தக் காலத்தில் அவன் பகுத்தறிவு வாதி! இப்போது நான் அந்த ஒரு கடவுளும் தேவையில்லை என்கின்றேன்.

குரங்கை எப்படி மனிதன் அடக்கி ஆட்டி வைக்கின்றானோ அதுபோல் மூடமக்களை மதவாதிகள் ஆட்டி வைக் கின்றனர். எதற்காக ஒருவன் மேல் சாதி என்றால், கடவுள் அமைப்பு, மத அமைப்பு, தலையெழுத்து, முன் ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம் என்கின்றான். எதற்காக ஒருவன் கீழ்சாதி என்றால் அவன் தலை யெழுத்து, கடவுள் அமைப்பு, மத அமைப்பு, முன் ஜென்மத்தில் அவன் செய்த பாவம் என்கின்றான். ஆகையால்தான் மனிதனின் இழிவை ஒழிக்க இந்தக் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம் முன்ஜென்மம் என்கின்ற முட் டாள் தனங்களை ஒழிக்க வேண்டுமென் கிறோம்.

நோய்க்கு மூலகாரணம் என்ன என்பதை அறிந்து அதற்குப் பரிகாரம் செய் தால்தான் நோய் குணமாகும். அதுபோன்று நம் இழிவிற்கு, அறிவற்ற தன்மைக்கு, மானமற்ற தன்மைக்கு, அடிப்படை மூலம் எது என்று பார்த்து அதனை அழித்தால் தான் மனிதனின் இழிவு, அறிவற்றதன்மை, மானமற்ற தன்மை ஒழியும். இந்து மதம் இருப்பதால்தான் ஒருவன் பார்ப்பானா கவும், ஒருவன் பறையனாகவும் இருக்கின்றான். இந்துமதம் இல்லை என்றால் பார்ப்பானு மில்லை, பறையனுமில்லையே! கிறிஸ்து மதத்தில், முஸ்லிம் மதத்தில் பார்ப்பான் - பறையன் என்று எவனுமில்லையே!

இந்துமதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. காந்தியும் இதைச் சொல்லி விட்டார். இந்து என்றால் கருப்பு நிறமுடை யவன் என்றுதான் பொருள். இந்துமதம் இருந்தது என்பதற்கு எந்த இலக்கியத்திலும் சான்றில்லை. இந்து மதம் எப்போது தோன்றியது? அதன் தலைவன் யார்? மதநூல் (வேதம்) எது? என்றால் இவைகள் எதற்கும் தெளிவான விளக்கம் இல்லை. இவற்றிலிருந்தே இந்துமதம் இல்லை என்பதை உணரலாம்.

சிந்திக்காததனாலே எவன் அதை உப யோகப்படுத்திக் கொண்டு வாழ்கின் றானோ, அவன்தான் நம்மையெல்லாம் சிந்திக்க ஒட்டாமல் தடுக்கின்றான். மற்ற வற்றில் பகுத்தறிவைப் பயன்படுத்துவது போன்று கடவுள் - மத - சாஸ்திர விஷயத் திலும் மனிதன் தன் சிந்தனையை - பகுத் தறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று நாம் சொல்கின்றோம்.

நாம் கடவுள் இல்லை என்று சொன் னால், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்னால், இது நாமாக சொன்னது இல்லையே. கடவுள் நம்பிக்கைக்காரன் நம்மைப் பற்றிச் சொன்னதற்குப் பதில்தான் நாம் சொல்வதாகும்.

பைபிளிலேயே இருக்கிறதே! எவன் கடவுளை நம்பவில்லையோ அவன் முட்டாள், அயோக்கியன் என்கின்றான். துலுக்கனை எடுத்துக் கொண்டால் எவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவன் காபிர், முட்டாள், அறிவில்லாதவன், அயோக்கியன் என்கின்றான்! கடவுள் நம்பிக்கையற்றவனையெல்லாம் கொலை செய்திருக்கிறார்களே!

சமணனும், புத்தனும் என்ன அயோக்கியத்தனம் செய்தனர்? எதற்காக அவர்களைக் கொலை செய்ய வேண்டும்? கழுவேற்றிக் கொல்ல வேண் டும்? மதத்தைப் பரப்பியதே மக்களை வெட்டி வீழ்த்திக் கொன்றுதானே? துலுக் கன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்றுதானே மகம்மதிய மதத்தைப் பரப்பினான்?

1920இல் மலையாளத்தில் மாப்பிள்ளா கலகம் ஏற்பட்டதே மதத்தைப் பரப்புவ தற்காக ஏற்பட்ட கலவரம்தானே! அது 1920லேயே இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்கிற தென்றால் 1000, 2000 ஆண்டு களுக்கு முன் நடந்த கொடுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

ஏசுவை எதற்காகக் கொன்றார்கள்? ஆயிரம் கடவுள்கள் இல்லை; ஒரு கடவுள் தான் உண்டு என்று சொன்னார். அதற் காகத்தான் அவரைச் சிலுவையிலறைந்து கொன்றார்கள். இப்படிக் கடவுள் நம்பிக்கை யற்றவர்களை அழித்து ஒழித்துத்தான் மக்களை மடையர்களாக்கி வைத்திருக் கின்றார்கள்.

நாம் இப்போது இது போன்ற கழகங்கள் துவக்குவதன் நோக்கம் மனிதர்களுக் கிடையே இருக்கிற மடமை, முட்டாள் தனம், அறிவற்ற தன்மை ஒழிக்கப்பட வேண்டும். மற்ற உலகிலுள்ள மனிதர் களைப் போல் இழிவற்று அறிவு பெற்று வாழ வேண்டுமென்பதற்காகவும் மனிதன் தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள் வதற்குச் சிந்தனை வேண்டும். அந்தச் சிந்தனையைத் தூண்டுவதற் காகவும் ஏற்பாடு செய்யப்படுவதேயாகும் என எடுத்துரைத்தார்.

10.12.1970 அன்று கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி (விடுதலை, 20.1.1971).


Saturday, March 15, 2014

கம்பனுக்கு சிபார்சா?


கம்பர் பாடிய இராமாயணத்தில் மக்கள் இராமனைக் கடவுளாகக் கருத வேண்டும் என்கின்ற கருத்துடனே வால்மீகி இராமாயணத்தில் வால்மீகி, இராமனைப் பற்றிக் கூறியுள்ள பல ஆபாசங்களையும் அயோக்கியத்தனங் களையும் மறைத்து இராமனையும் அவனுக்கு அனுகூலமாய் இருந்தவர் களையும் மேன்மைப்படுத்தியும் கம்பர் பாடியதன் பயனாகவே ஆரிய இராமனைத் தமிழர்கள் கடவுளாகக் கருதும் படிச் செய்து விட்டார்.

அதனால் தமிழர் ஆரியத் திற்கு அடிமையாக வேண்டியதாக ஏற் பட்டது என்பது சுயமரியாதைக்காரர் கம் பர்மீதும் கம்ப இராமாயணத்தின்மீதும் சுமத்தும் குற்றச்சாட்டாகும்.

அனுபவ அறிவுக்குப் பதில் சொல்லட்டுமே

இதற்குச் சிபார்சுக்கு வரும் சைவப் பண்டிதர்கள் சொல்லும் சமாதானம் பலவற்றுள் தலையாயது என்னவெனில், கம்பன் தமிழ்மகன் ஆனதால் அந்த இராமாயணத்தைத்தமிழ் மக்கள் படிக்க வேண்டும் என்றும் அதிலுள்ள நீதிகள் தமிழருக்குப் பயன்பட வேண்டும் என்றும் கருதி வால்மீகி கூறியவற்றை மாற்றித் தமிழர்களின் கொள்கைகளைப் புகுத்தி அரிய கற்பனைகளுடன் பாடி கம்பராமாயணத்தை அருங்கலையாக ஆக்கியிருக்கிறார் என்பதாகும்.

சுயமரியாதைக் காரர்கள் படித்த பெரிய பண்டிதர்கள் அல்ல என்பதை வாதத்துக்கு ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் அவர்கள் அறிவுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்த பகுத்தறிவுவாதிகள். சகலத்தை யும் நடுநிலை நின்று ஆழமாய்ப் பார்ப் பவர்கள்.

பண்டித அறிவாளிகள், பண்டி தர்கள் முதலிய யாவரையும் பகுத்தறிவு கொண்டு அவர்களது திறனைச் சீர் தூக்கிப் பார்ப்பவர்கள் என்பதோடு அதில் அனுபவம் பெற்று அறிவடைந்தவர்கள் - அந்த அனுபவ அறிவைக் கொண்டே அவர்கள் எதைப்பற்றியும் பேசுகிறார்கள். கம்பருக்கு சிபார்சுக்கு வருகிறவர்கள் எவரும் அந்த அனுபவ அறிவுக்குப் பதில் சொன்னால் போதும்.

கவலையற்ற கம்பன்

கம்பர் தமிழர் நாகரிகத்திற்கேற்ப பல உண்மைகளை வால்மீகியின் கூற்றுக்கு மாறாகத் திருத்தி இருக்கிறார் என்று சிபார்சுக்காரர் செப்புகிறார்கள்.

உதாரணமாக, வால்மீகியானவர், சீதையை இராவணன் தலைமயிரைப் பிடித்துத் தூக்கி மடியில் வைத்து பூமி யோடு, பெயர்த்து கொண்டு போனான் என்று சொல்லி யிருக்கிறார். இதைக் கம்பன் மாற்றி, சீதையைப் பன்னகசாலை யோடு தூக்கிக் கொண்டு போனான் என்று சொல்லு கிறார்.

இப்படிக் கம்பர் சொன்னதற்குக் காரணம் சீதையை கடவுள் தன்மையு டையவளாக ஆக்க வேண்டும் என்கின்ற ஆவலினாலேயே அல்லாமல், தமிழர் நாகரிகத்தை ஒட்டி அல்ல என்பது சுய மரியாதைக்காரரின் கூற்று.

இதற்கு ஆதாரம் வேண்டின் கம்பர் எங்கும் தமிழரைப் பற்றியோ, தமிழர் நாகரிகத்தைப் பற்றியோ கவலை கொண்டி ருக்கவில்லை என்பதோடு ஆரியரைப் புகழ்வதும், அவர்களது எதிரிகளை இகழ்வதுமான கொள்கையுடன் தான் இராமாயணம் முழுதும் பாடி இருக்கிறார்.

கம்பர் தமிழர் நாகரிகத்தைப்பற்றி கவலை கொண்டிருப்பாரானால், சூர்ப் பனகை விஷயத்தில் பாடி இருப்பது நியாயமாகுமா?

வால்மீகியும் கம்பனும்

வால்மீகி சூர்ப்பனகையை இராமன் உத்திரவுப்படி இலக்குவன் மூக்கையும் காதையும் அறுத்தான். என்று சொல்லி இருக்கிறார். ஆனால் கம்பரோ இலக்குவன் தானாகவே ஓடிப் போய்,

சூர்ப்பனகையின் தலை மயிரைப் பிடித்து, கையில் சுற்றுப் போட்டு இழுத்து வயிற்றுக்குக் கீழே எட்டி உதைத்து, உடை வாளை உருவி காது, மூக்கு, இரு முலை களின்

நுனிக் காம்புகள் ஆகியவைகளை அறுத்துச் சினம் ஆறி மயிரை விட்டான்.

அதாவது, சில்லோதியைச் செங்கை யிற்றிரு குறப்பற்றி.. ஒல்வயிற்றுதைத் தொளி கிளர் சுற்றுவாளுருவி என்றும்,

மூக்குங்காதும் வெம் முரண்முலைக் கண்களு முறையாற் போக்கி போக்கிய சினத்தொடும் புரி குழல் விட்டான் என்றும் பாடியிருக்கிறார்.

இதுதான் தமிழர் நாகரிகமா? இதுதான் தமிழர் ஒழுக்கம் வழக்கம் ஆகியவை களுக்கு ஏற்ற வண்ணம் பாடினதா? என்று கேட்கிறேன்.

இதுவா நாகரிகம்?

மற்றும் ஆரம்பத்தில் இராமன் இலக் குவனை அழைத்து,
லக்ஷ்மணா துஷ்டர்களோடு விளை யாட வேண்டாம். சூர்ப்பனகையை அங்க பங்கம் செய்துவிடு என்று சொன் னான் என்றும் அதன்மீது இலக்ஷ்மணன் அவளு டைய மூக்கினையும் காதுகளையும் அறுத் தான் என்றும் வால்மீகியில் இருக்கிறது.

கம்பர் இராமன் சொன்னதை மறைத்து சூர்ப்பனகையை இழிவுபடுத்த எண்ணி, இலக்ஷ்மணன் அவளது மயிரைப் பிடித்து கையில் சுற்றுப் போட்டு இழுத்து வயிற்றுக்குக் கீழே (அதாவது பெண் குறியில்) எட்டி உதைத்து சுருள் வாளை உருவி காதுகளையும் மூக்கினையும், மூலைக் கண்களையும் ஒழுங்காக அறுத் தான். அறுத்த பிறகே இலக்ஷ்மணனுக்குக் கோபந் தணிந்து அவளது மயிரை விட்டான் என்று கூறி இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு இருக்கிறது பாருங்கள்.

இதற்குப் பெயர் தமிழர் நாகரிகமா? சிந்தித்துப் பாருங்கள்.

பொருத்தமற்ற பொருள்
மேலும் இந்தக் கவியினால் கம்பருக்கு பொருள் பொருந்தப் பாடும் ஆற்றலில் குற்றம் சேருவதையும் பாருங்கள். கம்ப சித்திரம் என்னும் பேரால் இப்போது பலர் நமக்கு எதிர்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களது அபூர்வமதியை என்ன வென்பது?

கம்பனது கவிகளில் அநேக குற்றம் குறைகள் இருக்கின்றன. அவைகளைப் பின்னால் விளக்குவோம். ஆனால் மேற் கண்ட கவியில் உள்ள குற்றம் என்ன வெனில்,
சூர்ப்பனகையின் தலை மயிரைக் கையில் (திருகுற) சுற்றுப் போட்டுப் பிடித்து உதைத்து பிறகு சுருள் வாளை உருவிய போது, சூர்ப்பனகை துடிக்கா மலும் திமிறாமலும் பிணம் போல் இருந்திருப்பாளா? அப்படி இருக்க.

அடுத்த கவியில்,

ஊக்கித் தாங்கிவிண்படர் வெம்மென்றுருத் தெழு வாளை

மூக்கையும் காதையும் முலைக் கண் களையும் முறையாக போக்க முடியுமா? என்பது யோசிக்கத் தக்கதாகும்.

இலக்குவனுக்கு ஒரு கையில் சுற்றுப் போட்ட அவளது மயிர், மற்ற ஒரு கையில் சுருள் வாள். அது சமயம் சூர்ப்பனகை தள்ளி எழும்பிக் கொண்டு இருக்கிறாள். இந்த அவசரத்தில் முரண் முலைக் கண்களை குறிபார்த்து முறையாக அறுக்க முடியுமா?

எனவே இது ஆத்திரத்தில் புத்தி சுவாதீனமில்லாமல் பாடியதே அல்லாமல் பொருந்தபாடியதல்ல என்பது எவருக்கும் விளங்கும்.

கவிக் குற்றம் பற்றி நமக்குக் கவலை யில்லை. அதைப் பற்றிப் பேச நமக்குத் தகுதியும் இல்லை. ஆகவே அதை கம்பசித்திரக் காரருக்கு விட்டு விடுவோம்.

தமிழர் நாகரிகம் பொருந்தக் கம்பர் பாடினார் என்கிறவர்களுக்கு இந்த சவாலை விடுகிறோம்.

                                                                                                                      உண்மை 14.2.1973



Saturday, March 1, 2014

மனிதன் செத்தால்... பிறகு?

மனிதன் செத்துப் போனான் என்பதற் குப் பொருள் மனிதன் இயங்குவதற்கு 
ஆதாரமாகவுள்ள சுவாசம் அதாவது மனி தன் மூக்கால், வாயால் உள்ளே 
இழுத்து வெளியே விடும் காற்றுப் போக்குவரத்து நின்று விட்டால், அதாவது 
அந்தக் காற்றை இழுக்கும் சக்தி அந்த உடலுக்கு இல்லாமல் போனால் 
செத்துப் போனான் என்பது பொருள். உடனே மனிதன் பிண மாகி விடுகிறான். 
இந்தக் காற்றுப் போக்கு வரத்திற்குக் காரணமான உடலிலிருக்கும் சக்தி 
வேலை செய்யச் சக்தியற்றுப் போய் விட்டால் சுவாசம் நின்று விடுகிறது.

இந்த நிலையைத் தான் மதவாதிகள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆத்மா 
உடலை விட்டுப் பிரிந்து போய் விட்டது என்று சொல்லுகிறார்கள்.

ஆத்மா என் றாலே சுவாசம் (காற்று) என்றுதான் பொருள் அது பிரிவதும் 
இல்லை. பிரிந்து எங்கும் போவதுமில்லை.

உதாரணமாக, ஒரு மனிதனின் மூக்கை யும், வாயையும் காற்றுப் போகாமல் 
வரா மல் மூடி அழுத்திப் பிடித்துக் கொண்டோ மானால் அந்த மனிதன் துள்ளிக் 
குதித்து ஆடி அமர்ந்து செத்தே போகிறான். இப்படி ஆகி விடுவதில் ஆத்மா 
பிரிகிறது? எங்கே இருக்கிறது? ஆத்மாவைச் சொன்ன வன் ஆத்மாவிற்கு 
உருவமில்லை. அரூ பம் கண்ணுக்குத் தெரியாதது. சூட்சமம், கண்டுபிடிக்க 
முடியாதது என்றுதான் சொன்னானேயொழிய அதை ஒரு வஸ்து 
வாக்கவில்லை.

இந்தப்படி முடித்து விட்டுப் பிறகு அது மேல் லோகத்திற்குப் போய் உரு 
வெடுத்து அதே மனிதனாகிக் காமத்தை அனுபவிக்கிறது என்று புளுகி இருக் 
கிறான். கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இதில் கொஞ்சம் மாற்றம்  செய்து 
சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்தாலும் விசாரணை - தீர்ப்புக்காலம் வந்தவுடன் 
பிரிந்த ஆத்மா மறுபடியும் சரீரத்திற்குள் வந்து,  புகுந்து தீர்ப்பை ஏற்கிறது 
(ஜட்ஜ் மென்ட் டே) என்பதாகக் கருதுகிறார்கள்.

இப்படி எல்லாம் மதக்காரர்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால் கடவுளுக்கு 
மனிதன்மீது ஒரு அதிகாரம் (வேலை வேண்டுமென்பதற்காகவேயாகும்.
மனிதன் செத்த பிறகு கடவுள் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்றாகி 
விட் டால் கடவுளை எவன்தான் சட்டை செய் வான்? ஏன் எதற்காக? சட்டை 
செய்வான்?

ஆனதினாலேயே  கடவுள் பெயரால் முட்டாள்களும் பிழைக்க வேண்டிய 
அயோக்கியர்களும் இந்த ஏற்பாடு செய்து விட்டார்கள். சரீரத்தை விட்டு 
ஆத்மா பிரித்தால் அது மோட்சத்திற்குப் போவதா? நரகத்திற்குப் போவதா? 
மறு ஜன்மம் எடுப்பதா? பிதிர் லோகத்தில் வாழ்வதா? பேயாய் அலை வதா? 
செத்தவனுக்காகச் செய்யப்படும் காரியங்களை அனுபவிப் பதா? இவற்றில் 
எந்தக் காரியத்திற்குச் செத்தவன் ஆளாவது?

செத்தவனைப் புதைத்தால் உடல் முழுவதும் நிராகர மண்ணாக ஆகி விடு 
கிறது. நெருப்பில் கொளுத்தினால் சரீரம் முழுவதும் சாம்பலாக ஆகிக் 
காற்றில் பறந்து மறைந்து விடுகிறது. இரண்டு மில்லாமல் பூமியில் கிடந்தால் 
கழுகு, காக்கை, நரி, நாய், மற்றும் மாமிச பட்சிணி ஜீவன்கள் தின்று தீர்த்து 
விடுகின்றன.

ஆகவே செத்த மனிதன் எப்படி இருப் பான் எதை அனுபவிப்பான் எங்கே இருப் 
பான் என்பவற்றையும் இந்த அனுபவம் எல்லாம் மனிதனுக்கு மாத்திரம்தானா 
மற்ற ஜீவன்களுக்கும் மற்றும் செத்துப் போன பட்டுப் போன மரம், செடி, கொடி 
புல், பூண்டுகளுக்கும்  உண்டா என்பதை யும் ஆறறிவுள்ள மனிதன் சிந்தித்துப் 
பார்ப்பானாக.


Monday, February 24, 2014

மனித வாழ்க்கைக்கு இன்றைய மதமும், கடவுளும் போதியதாகாது

மனித சமுதாயத்தின் கூட்டு வாழ்விற்கு ஒரு கடவுள் என்பதும், அதை 
அடையும் மார்க்கம் (மதம்) என்பதும் அவசியம் என்று முன்னோர்கள் 
கருதினார்கள். ஏனெனில், மனித சமுதாயத்தார் கூடி வாழும் பிராணி 
களாவார்கள். அப்படிப்பட்ட கூட்டு  வாழ்க் கைப் பிராணிக்கு ஒரு நடப்பு 
முறை தேவை யாகும். அதாவது ஒரு சங்கம் என்றால், அதற்கு எப்படி ஒரு 
நடப்பு  முறைத் திட்டம் தேவையோ, ஒரு விளையாட்டு நடப்பு என்றால், 
அதற்கு நியதி தேவையோ, அதுபோல் பல மக்கள் சேர்ந்து வாழும் ஒரு 
சமுதாயத்துக்கும், விதிமுறை தேவை யாகும். அந்த நடப்பு முறை 
விதிகள்தான் மதம் என்றும், நெறி என்றும், மார்க்கம் என்றும் 
சொல்லப்படுவதாகும். அப்படிப் பட்ட மார்க்கமும், நெறியும்
தவறிப்போகாமல், அதற்குக் காப்பு அளிக்க ஒரு நிர்ப் பந்தம், நிபந்தனை 
இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
எப்படியெனில் ஓர் அரசாங்கமானது, மக்களை அடக்கி ஆளவும், மக்கள்
அவ்வடக்குதலுக்கு அடங்கி நடந்து வரவும், விதி, சட்டம், நீதிமுறை 
ஆகியவை செய்யப்பட்டு இருந்தாலும், அச்சட்டத் திலேயே இந்து சட்டப்படி, 
விதிப்படி, நீதிப்படி நடக்காவிட்டால், மீறி நடந்தால் அதற்கு தண்டனை 
இன்னது என்பதாக நிபந்தனையும் ஏற்படுத்தி, நிபந்தனை விதிக்க நீதிபதியும், 
அந்நிபந்தனை சரிவர ஈடேற கோர்ட்டு, ஜெயில், அபராதம் முதலி யவையும் 
இருப்பது போல் மதநெறியை மீறி நடக்காமல் இருப்பதற்காக வேண்டி 
கடவுள் தண்டிப்பார். அதற்கான மோட்சம், நரகம் என்பதாக மனிதனைப் 
பலப்படுத்தக் கடவுளையும் கற்பிக்க வேண்டியது அவசியம் என்று 
கண்டு பிடித்தார்கள்.

ஏனென்றால், இப்போது எங்கும் அரசாங்கமே இருந்து வந்தும் கூட, அரசாங் 
கத்துக்கு மக்களை அடக்கி ஆள சட்டம் இருந்தாலும் கூட, அரசாங்கத்திற்கு 
அதிக கஷ்டம் இல்லாமல் மக்களைத் தாங் களாகவே பயந்து ஒழுங்காய் 
நடக்கும்படி செய்ய எந்த அரசாங்கமும், மதத்தையும், கடவுளையும் பிரச்சாரம் 
செய்து மக்களை அவற்றிற்கு, ஆளாக்கி வருகிறது என்றா லும், மனித 
சமுதாயத்தை அதன் எல்லாக் காரியங்களையும் சட்டத்தினாலேயே அடக்கி 
ஆண்டு விட முடிவதில்லை. உதார ணமாக சர்க்கார் அறியாமல் சட்டத்தில் 
பட்டுக் கொள்ளாமல், மனிதன் பல தவறுதல் களைச் செய்யலாம். 
சமுதாயத்துக்குப் பல கடமைகளைச் செய்யாமல் விட்டும் விடலாம்.

இப்படிப்பட்ட காரியங்களுக்குச் சட் டமும், தண்டனையும் ஏற்படுத்த, பயன் 
படுத்த முடியாது. ஆகையால் மனிதனை தானாகவே பயந்து நடக்கும்படி 
செய்ய, அவன் எளிதில் புரிந்து கொள்ள முடியாத படியான மதமும், கடவுளும் 
பயன்படும் என்று கருதினார்கள். அந்தக் கருத்தில் ஏற்பட்ட அவை மிகமிகப் 
பாமரத் தன்மை யில் இருந்த காலத்தில் ஏதாவது பலன ளித்து 
வந்திருக்கலாம். ஆனால், அவை அதாவது அன்றைய மதமும், கடவுளும் 
இன்றைக்குப் போதுமானதாக பயன் அளிக் கக் கூடியதாக இல்லாமல் 
போய்விட்டது.

அரசாங்க சட்டத் திட்டங்கள் மனிதர் களுடைய தன்மைக்கும், அவர்களுக்கும், 
அறிவு வளர்ச்சிக்கான நிலைக்கு, காலத் தினுடைய மாறுபாட்டிற்கு 
அக்கம்பக்கத் தின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல மாற்றி யமைக்கப்படுவது 
போல் இவையும் காலத்துக்கு, நிலைக்கு ஏற்ப அமைக்கப் பட்டு 
வரவேண்டியது அவசியமாகும்.
ஒரு கடவுள் கற்பனையானது மாறி, இன்று இந்நாட்டில் பல கடவுள்களும், 
ஒரு மதம் மாறி பல மதங்களும் மலிந்து விட்டன. இவை பெரிதும் 
உண்மையில் மனித சமுதாய நல்வாழ்வுக்காகவே ஏற்பட்டவை என்று நாம் 
கருதலாம் என்றாலும், இப்ப டிப்பட்ட பலப்பல என்பவை காலக்கிரமத் தில் 
பலரின் சுயநலத்துக்காகவும், சூழ்ச்சிக்கு ஆகவும் ஏற்படுத்தப்பட்டவை என்று 

வலிந்து சொல்ல வேண்டியவையாய் இருக்கின்றன என்ற போதிலும், 
இன்றுள்ள மதங்களும், கடவுள்களும் இன்றைய மக்களை அவர்களுடைய 
இன்றைய அமைப்புக்கு ஏற்றபடி, அதாவது இன்றைய மக்களுக்கும், 
சமுதாயங்களுக்கும் இயற்கை யாக ஏற்பட்டுள்ள ஆசாபாசம், அறிவு, ஆற்றல், 
வசதி, வாய்ப்பு, சுற்றுச்சார்பு சூழ் நிலை ஆகியவற்றுக்கு ஏற்றபடி மக்களை 
அடக்கிப் பயப்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு, நலனுக்கு, எல்லையற்ற 
அமைதியான வாழ்வுக்கு பயன்படப் போகிறதாக இல்லா தவையாகி விட்டன.

எப்படியெனில் மனிதன் பிறவியில் மற்ற ஜீவன்களைவிட அதிகமான அறிவுத் 
திற மையும், சிந்தனையும், சக்தியும் கொண்ட வன் என்பதோடு மனிதனுக்கு 
அவை நாளுக்கு நாள் மாறுதலும், வளர்ச்சியும், அனுபவ ஞானமும், 
ஆற்றலும், உண்டாக் கக் கூடியவையாகவும் இருந்து வருகின்றன. 
அப்படிப்பட்ட ஓர் உயர் பிறவியான மனித சமுதாயம், பகுத்தறிவு, அனுபவ 
ஞானம், ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு மேம் பாடான நிலையை 
அடைந்து கொண்டு போகாமல், பகுத்தறிவும், சிந்தனா சக்தியும் அற்ற மிருகத் 
தன்மையைவிட மோசமான தன்மையைக் கொண்டு தன்னைத் தானே 
பாதுகாத்துக் கொள்ளக் கூடச் சக்தியற்றதாக, போதிய உதவி பெற வாய்ப்பு 
இல்லாமலும், சதா கவலையுடன் வாழ்ந்து மடிய வேண் டியிருக்கிறது 
என்றால், அதுவும் இப்படிப் பட்ட நிலை ஏற்படாமல் இருப்பதற்கென்றே பல 
மதங்களும், பல கடவுள்களும் இருந்தும் இந்த மாதிரியாகப் பயனற்று மனித 
வாழ்க்கையானது காட்டில் துஷ்ட ஜந்துக்களிடம், சாது ஜந்துக்கள் எப்படி 
பயந்து ஒடுங்கி மறைந்து வாழ்கின்றனவோ, எல்லைக்கும், பலத்திற்கும், 
துன்பத்துக்கும் ஆளாக்கி  மடிவதுடன் மனிதனுக்கு மனிதன் அன்பற்று ஆதரவு 
செய்வதற்று மனிதனை மனிதன்  தின்று வாழ்கிறான் என்றால், இதற்கு 
ஏதாவது காரணம் இருந்துதானே தீர வேண்டும்? அல்லது இந்தக் கடவுளும், 
மதமும் பலனிக்க வில்லை என்று தானே கருத வேண்டும்?

இந்நிலை ஏற்பட்ட இன்றுகூட நாம், மதம் மனிதனை நல்வழியில் நடத்திச் 
செல்வதாகும், கடவுள் மனிதனுக்கு நல்வழி யும் நல்வாழ்வும்  கொடுத்து 
மனிதனது சர்வ நடத்தைக்கும் காரணபூதமாய் இருந்து நடத்திக் காப்பதாகும் 
என்று தானே கருதுகிறோம். மனிதனுக்கு அவனுடைய பகுத்தறிவு அனுபவ 
ஞான ஆற்றல் தவிர, இப்படிப்பட்ட பலமான இரண்டு சாதனங் கள் அதாவது 
மதமும், கடவுளும் இருந்தும் மனிதன் மேற்காட்டியபடி கீழ்மகனாய் 
இருக்கிறான் என்றால், இன்றுள்ள மேல் குறிப்பிட்ட மதங்களும், 
கடவுள்களும் பயன்படவில்லை என்றும், அவை மக் களைச் சரியாய் நடத்தப் 
போகிறதாய் இல்லை என்ற காரணம் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்? 
அல்லது இன்றைய மனிதத் தன்மையானது, இப்போதைய மதமும், கடவுளும் 
ஏற்பட்ட காலத்தில் இருந்த தன்மையை விட அதிக மாற்றமான தன்மை 
பொருந்திய ஒரு மேல் நிலையில் அமைந்து விட்டது என்றாவது சொல்லித் 
தானே ஆக வேண்டும். தலை பெருத்து விட்டது என்றாலும் சரி, அல்லது 
குல்லாய் (தொப்பி) சுருங்கி விட்டது என்றாலும் சரி, அதன் முடிவு தலைக்கும், 
குல்லாய்க்கும் பொருத்தமில்லை போதுமானதாக இல்லை என்பதாகத்தான் 
ஆகும்.

ஆகையால், 1948ஆம் வருடத்து ரயில் வேலையில், நேரக் குறிப்பு. 1949ஆம் 
ஆண்டுக்கு எப்படிச் சரியானதாக இருக்க முடியாதோ, அதுபோல், சென்ற 
நூற்றாண்டு என்று மாத்திர மல்லாமல், சென்ற பல நூற்றாண்டுகளுக்கு முன் 
ஏற்பட்ட மதங் களும், அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்பிக்கப் பட்ட 
கடவுளும், கடவுள் களும் இன்றைய விஞ்ஞானக் காலமாகிய 20ஆம் 
நூற்றாண்டுக்குப் பொருத்தமா யிருக்கும் என்று எதிர்பார்க்கலாமா? 
எதிர்பார்க்க முடியுமா?

மற்றும் இன்றுள்ள அப்பழைய மதத் துக்கோ, கடவுளுக்கோ, சமுதாய நெறி 
களுக்கோ மனிதத் தன்மைக்கோ ஒரு கடுகு அளவு சக்தி இருந்தாலும், 
காந்தியாரை ஓர் இந்து (ஆரிய) மதத்தைச் சேர்ந்தவன், அதிலும் பார்ப்பனன் 
(தன்னை உயர்பிறவி என்று சொல்லிக் கொள்பவன்) அதிலும் படித்த (பி.ஏ. 
படித்த) பார்ப்பனன், அதிலும் ஓர் இந்து மதத் தத்துவத்தில் பிடிவாதப் பற்றுள்ள 
பார்ப்பனன், அதிலும் இந்து மதத்தைக் காப்பதற்கு என்று ஏற்பட்ட சங்கத்தைச் 
சேர்ந்த பார்ப்பனன் இந்து மதத்தைக் காப்பதற்கு ஆக என்று கருதி சுட்டுக் 
கொன்றிருக்க முடியுமா? அதிலும் மிகக் கொடுமையான, மூர்க்கமான, 
வஞ்சக மான தன்மையில் எதிரில் நின்று அவருக்கு வணக்கம் காட்டி, பதில் 
வணக்கம் காட்டப் படும்போது, வள்ளுவர் அங்க இயலில் கூடாநட்பு என்ற 
அதிகாரத்தில் தொழுத கை யுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்துஎன்று கூறியிருக்கும் குறளுக்கு ஒப்ப 
காந்தியாரை கோட்சே கும்பிட்ட, கூப்பிய கைக்குள்ளாகவே ஆயுதத்தை 
வைத்திருந்து, அவரைக் கும்பிடுகிற பாவனை யிலேயே கொலை பாதகத் 
தன்மையை அடக்கி வைத்துக் கொண்டு அவரைச் சாகும்படி சுட்டுக் 
கொன்றிருக்க மாட்டான்.

குறிப்பு: இக்குறளின் கருத்து, நட்புக் கொள்ளத் தகுதி அற்றவர்களை நட்பாகக் 
கொண்டால், கும்பிடுகிற கைக் கூப்புத லிலேயே ஆயுதம் வைத்துக் 
கொல்லும் துரோகத்தைச் செய்வார்கள்.
அவர்கள் அழுவதாக பாவனை காட்டி, சிந்தும் கண்ணீரிலேயே விஷத்தைக் 
கொட்டி, நம்மைக் கொல்ல வகை செய்வார்கள்.
(குறிப்பு:  வள்ளுவர் கோட்சேயின் பக்கத்தில் இருந்து, அவன் காந்தியாரைக் 
கொன்ற முறையைப் பார்த்தும், அந்த ஜாதியின் இன்றைய தன்மையை 
நன்றாய் உணர்ந்தும், இன்றைய மக்களுக்கு அறிவு றுத்த நேற்று எழுதியது 
போல் இல்லையா, இந்தக் குறள்?)

இதன் கருத்து என்னவென்றால், கடவு ளையும், மதத்தையும் உண்டாக்கிக் 
காப் பாற்றிப் பிரசாரம் செய்து வருகின்றது. கடவுளுக்கு சமமான ஜாதி என்கிற 
பார்ப் பனர்களுக்கே அவர்கள் உண்டாக்கிய கடவுளும், மதமும் பயன்படாமல் 
அவர் களைக் கொலை ஜாதியாக ஆக்கி விட்ட தென்றால், அவை மற்றவர்க்கு 
அன்பு, ஒழுக்கம் உண்டாக்கப் பயன்படுமா என்ப தாகும். அதுபோலவே 
கடவுள், மதங்களுக் குச் சிறிதளவு சக்தி அல்லது ஆற்றலி ருந்தாலும், 
இன்றைய மனித சமுதாயத்தில் 100-க்கு 100 பங்காக இவ்வளவு நாணயக் 
குறைவு, அன்புக் குறைவு, நன்றி அறிதல் குறைவு ஆகியவை 
மலிந்திருப்பதுடன், மனிதனை மனிதன் தனது வாழ்வுக்கு வஞ்சித்து பதறப் 
பதற இம்சித்துக் கொன்று வாழ வேண்டிய அவசியம் தவிர்க்க முடியாத 
தன்மையில் இருக்க முடியுமா?

இன்றைய மக்களில் மதவெறியும், மதப் பிடிவாதமும், கடவுள் பக்தியும், 
தொண்டும் இல்லாத மக்கள் 100-க்கு ஒருவர் வீதமாவது காண முடியுமா? 
மதத்தின்படி வேஷம், வாழ்க்கை இல்லாதவர்கள் 100-க்கு 5 பேர் 
வீதமாகவாவது இருக்கிறார்களா? அது போலவே கடவுளுக்கு வணக்கம், 
பூசனை, கொண்டாட்டம், உற்சவம் ஆகியவற்றில் ஈடுபடாதவர்களோ, 
அவற்றுக்காகப் பணம், நேரம், ஊக்கம், செலவு செய்யாதவர்களோ 100-க்கு 10 
பேர்களாவது இருக்கிறார்களா? இப்படியாகப் பெரும்பான்மை மக்கள் கடவுள், 
மதப் பற்றில் நம்பிக்கையில், நடப் பில் ஈடுபட்டிருந்தும், பல்லாயிரக்கணக் 
கான கோவில்கள், பல லட்சக்கணக்கான பிரார்த்தனை ஸ்தலங்கள், கடவுள் 
சிலைகள் இருந்தும், அவற்றுக்குச் சதா சர்வ காலமும், மனிதன் 
உணரும்படியாகச் செய்ய பல தன்மையில் பிரசாரம் இருந்து வந்தும், ஏன் 
அவை பலன் கொடுக்கவில்லை? இதிலி ருந்து நாம் முன் கண்டபடி 
இப்போதைய மதங்களும், கடவுள்களும் இன்றைய மனித வர்க்கத்துக்குப் 
போதிமரமாக இல்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.

அதையும் மற்றொரு விஷயத்தையும் பார்த்தோமானால், அதாவது சர்க்கார் - 
அரசாங்கத் தன்மையையும் பார்த்தோமா னால், அதுவும் இன்றைய 
தன்மைக்குப் போதாது என்று தான் படும். அதாவது மக்களை அடக்கி ஆள 
இப்போது இருந்து வரும் சர்க்கார் சட்டங்களும், ஜெயில்களும், 
நிருவாகங்களும் போதவில்லை. இதற்கு உதாரணம், சில நாள்களுக்கு முன்பு 
மக் களுடைய சமாதானத்துக்கும், ஒழுங்குக்கும் பொறுப்பாளியான 
மந்திரியார் தனது அறிக்கைவொன்றில், ஜெயில்கள் நிருவாகத்துக்குப் 
போதியதாக இல்லை. மாகாணத்தில் உள்ள ஜெயில்கள் யாவும் நிரம்பி 
விட்டன. ஜெயிலுக்குப் போவதை மக்கள் பெருமையாய், வீரமாய்க் கருது 
கிறார்கள் என்று சொல்லித் தன்னால் இன்றைய சட்டங்களைக் கொண்டு நிரு 
வாகம் செய்ய முடியாமையைக் கண்ணிய மாய் தெரிவித்துக் கொண்டிருக் 
கிறார். மனிதனுக்கு மத ஒழுக்கம் இல்லாமல் போய், கடவுள் பயமும் 
இல்லாமற் போய், சட்ட மரியாதையும் இல்லாமற் போய், ஜெயில் பயமும் 
இல்லாமற் போய் விட்டது என்றால் சமுதாய வாழ்வு என்ன ஆகும்?

இந்தக் கேவலத் தன்மை பற்றி மக்களை வஞ்சித்து ஊரார் உழைப்பில் உண்டு 
வாழும் சோம்பேறிக் கூட்டத்திற்குள் கவலையிருக்காது. இந்த நிலை அப்படிப் 
பட்டவர்களுக்கு நல்லதும் இலாபமானது மாகும். ஆனால், பாடுபடும் மக்கள் 
அப்பாட் டின் நன்மையை அடைய முடியாமல், முழு நேரம் பாடு பட்டும் அரை 
வயிற்றுக் கஞ்சிக்குப் போதியன பெறுவதற் கில்லாமல் 
அவதிப்படுபவர்களும், மானத்தோடும், மரியாதை யோடும், நேர்மையோடும் 
வாழ வேண்டுமென்று கருதிக் கொண்டு இருக்கும் மக்களுடைய கதி என்ன 
ஆவது?

எண்ணெய் விளக்குக்குப் பதில் எலக்டி ரிக் விளக்கு போட்டுக் கொள்ளுவது 
போலும், எருமை  மாட்டு வண்டிக்குப் பதில் ஏரோப்ளேனில் போவது 
போலும், நம் காட்டுமிராண்டி மதம், கடவுளுக்குப் பதில் உண்மையில் அன்பு, 
சத்தியம், அருள் ஞானம், அருளக்கூடிய நெறியும், இறையும் அவசியமாகும். 
அதோடு கூடவே, ஒரு நீதியும், நேர்மையும்  கொண்ட நல்ல ஆட் சியும் நமக்கு 
அதிவிரைவில் வேண்டிய தாகும்.

அந்தப்படி விரைவில் ஏற்படாவிட்டால், மனித சமுதாயம் பாழுங் காட்டில் 
துஷ்ட மிருகங்களுக்குப் பயந்து சாது மிருகங்கள் மறைந்து வாழ்ந்து கொண்டு 
நாளாவட்டத் தில் அத்துஷ்ட ஜந்துக்களுக்குச் சாது ஜந்துக்கள் இரையாகி 
வருவது போல இரையாக வேண்டி வரும். ஆகையால், இன்றையக் 
கடவுளும், மதமும் மாற்றப் பட்டே ஆக வேண்டும். முடியாவிட்டால் 
அழிக்கப்பட்டு ஆக வேண்டும்.

- விடுதலை நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை 
(விடுதலை - 20.11.1954)