Sunday, August 18, 2013

புத்தர் - நாத்திகர்

பேரன்புமிக்க தாய்மார்களே! தோழர்களே! டாக்டர் நாயுடு அவர்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக் கம். இன்று புத்தரின் 2500ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் கடைசி நாள். இதைப் பொதுக் கூட்டமாக வைத்து இதில் அநேக தோழர்கள் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முக்கியமானவர்கள் எல்லாம் பேச இருக் கிறார்கள். ஆகவே நான் கடைசியில் பேசுவதாகவே இருக்கிறேன். இங்கு பலதரப்பட்டவர்கள், பல கருத்துடைய தோழர்கள் பேசுவார்கள். எந்தக் கருத்துக்களைப் பேசினாலும் நீங்கள் அமைதியாக இருந்து பொறுமை, அன்பு இவைகளைக் கடைப்பிடித்து, இங்கு விளையாட்டு எதுவும் விளையாடாமல், கைத்தட்டுதலைக் குறைத்துக்கொண்டு கடைசி வரை அமைதியாய் இருக்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
புத்தரைப்பற்றிப் பேசுகிறவர்கள் எல்லாம் புத்தரின் சரித்திரம் சரிவரச் சொல்லவில்லை. என்னமோ திண்ணை வேதாந்தம் பேசுகிற மாதிரிப் பேசுகிறார்கள். யாரும் சொல் லாததை புத்தர் ஒருவர்தான் சொன் னார். அவருடைய கொள்கைகளைக் கட்டாயம் நாம் எல்லோரும் பின்பற்ற வேண்டும். புத்தரைப்பற்றி பலர் பலவிதமாகச் சொன்னார்கள். புத்தர் ஒருவர் தான், தான் (புத்தர்) சொன் னதைச்கூட தட்டிக்கேட்க உரிமை கொடுத்தவர். நான் சொன்னதை நம்பாமற் போனால் நாசமாகத்தான் போவாய் என்பதைத்தான் வேதம் சொல்லுகிறது. நாரதர், தேவர், உப நிஷத்து முதலிய எல்லாமுமே அதுதான் சொல்லுகின்றன. இவைகள் எல்லாம் சொந்த அறிவைத் துணையாகக் கொண்டு நடக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எனவேதான் தீண்டப்படாதவரை வண்டியில் கொண்டு வந்து நடுப்பந்தியில் உட்கார வைத்தால் எப்படியோ அதுபோல இதுவரை தீண்டப்படாதவனாகவும், அயோக்கியன், நாத்திகள் என்று கூறப்பட்டு வந்த புத்தரை இன்று நாடெங்கும் போற்றி விழா கொண் டாடுகிறார்கள்.
2000 வருடங்களாக தீண்டப் படாதவன், தாழ்த்தப்பட்டவன், தேவடி யாள் மகன், சூத்திரன் என்று ஒதுக்கி வைத்துக் கொண்டேபோனால், எத் தனை நாளுக்குத் தான் பொறுத்துக் கொண்டு வருவான். கோடி கடவுள், ஆயிரம் மகான்கள் இவர்களுக் கெல்லாம் கோயில்கள் கட்டி, அவை களுக்கு வேளா வேளைக்குச் சோறு போட்டு, கல்யாணம் பண்ணி ஒரு வருடம் கல்யாணம் செய்தால் போதாது என்று வருடா வருடம் செய்து, கருமாதி செய்தும் பார்த் தாயிற்று. இவ்வளவும் செய்த நாம் சூத்திரன்தான் என்றால் என்ன அர்த்தம்? இதை யார் மறுக்க முடியும், பார்ப்பனர்களைத் தவிர? இதுதான் கடவுள் விசுவாசமா? இப் படியே எத்தனை நாளைக்கு இருப்பது? 1953ஆம் வருடத்திலும் இப்படியே சொல் லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
இந்த புத்தர் விழா பெரும்பாலான ஊர்களில், நாடுகளில் 60 கோடி மக்க ளுக்குக் குறையாமல் கொண்டாடு கிறார்கள். நாம் தனியாகக் கொண் டாடிய அன்று ஒரு சிலர் ஆத்திரம் அடைந்தார்கள். இப்பொழுது சைனா, ஜப்பான், பர்மா, இலங்கை முதலிய இடங்களில் கொண்டாடுகிறார்கள்.
இங்கு இருக்கிற மாதிரி, பார்ப்பான், சூத்திரன், பறையன் அங்கு இல்லை. இராமன், கிருஷ்ணன், பிள்ளையார் போன்ற ஆயிரக்கணக்கான கடவுள்கள் இல்லை. மூத்திரத்தைக் கரைத்துக் குடிக்கும் மூட வழக்கம் அங்கு இல்லை. எனவே அங்கு புத்தநெறிக்கு ஆதரவு வளர்கிறது. புத்தர் கொள்கைகள் வாழ, புத்தர் சங்கம் வாழ, அன்பு, அஹிம்சை வேண்டுமென்கிறார், புத்தர்.
அன்பு, அஹிம்சையெல்லாம் சூழ் நிலைக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கும். இந்த வார்த்தைகளையெல்லாம் அநேக வருடங்கள் சென்ற பிறகு சொல்ல வேண்டும். புலி அருகில் சென்று அஹிம்சை, அஹிம்சையென்று சொன் னால் என்ன நடக்குமோ அதே போன் றதுதான், நாம் பார்ப்பனரிடம் போய் ஜாதி பேதம் நமக்குள் வேண்டாம் என்று கூறிக் கொண்டுவருவதும். அவன் சூத்திரன் என்று சொன்னால், நாம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் என்றால் நமக்குப் புத்தி யில்லை, மானமில்லை என்றுதானே அர்த்தம்?
நமக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை, இழிவுகளை மாற்றிக் கொண்ட பிறகுதான் பிறருக்கு நாம் அன்புகாட்ட முடியும். ஒரு மனிதனை 2000 வருடங்களாக கீழ்ஜாதி, வைப் பாட்டி மகன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? மடத் தனமாய், அறிவில்லா தவனாய், ரோஷமில்லாதவனாய் இருந்தால் இந்த நாடு எப்படி முன்னேறும்? கவர்னர் முதல் மந்திரிவரை பைத்தியக் காரத் தனமாய்க் கூறிக் கொண்டு வரு கிறார்கள்.
அய்க்கோர்ட் ஜட்ஜுகள், கடவுள் பக்தியைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆயிரக்கணக்கான வழக்கில் அவர்கள் தீர்ப்புக் கூறியிருப்பார்கள் பலரகக் குற்றவாளிகளைக் கண்டு இருப் பார்கள். மக்களிடம் நாணயம், ஒழுங்கு இல்லையென்று, அவர்களுக்குத் தெரியாதா? இப்படி இருந்தும் கடவுள் பக்தி வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? எத்தனை அயோக்கியத் தனம் செய்தாலும் ஒருவனுக்குக் கடவுள் பக்தி இருந்தால் போதும் என்று தானே பொருள்?
யாருக்கு இல்லை பக்தி? இந்த சென்னை மாகாணத்தில் இருக்கும் எல்லா சென்டிரல் ஜெயில்களிலும் சுமார் பத்தாயிரம் கைதிகள் இருப் பார்கள். அவர்களில் என்போல் பத்து பேர் இருக்கலாம், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். மற்றவர்கள் எல்லோ ரும் காலையில் எழுந்த உடனே திரு நீற்றுப் பட்டையை நெற்றியில் தடவிக்கொண்டு, பகவானே, விடு தலை சீக்கிரம் செய் என்றுதானே வேண்டுகிறார்கள் கடவுளை? ரிமாண் டில் இருப்பவன்  தண்டனை கொஞ்ச மாக இருக்க வேண்டுமென்றும், கடவுளே என் மேல் கேசே போடக் கூடாதென்றும் தானே ஒவ்வொருவனும் வேண்டிக் கொள்கிறான்? இதெல்லாம் பக்தி இல்லாமலா நடக்கிறது?
புத்தர் எவ்விடத்திலும் கடவுளைத் தாக்கிப் பேசவில்லை என்று கூறுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம். இப்படிப் பேசுகிறவர்களுக்கு இந்து மதம் என்றால் என்ன என்பதே தெரியாது. வேதத்தை ஏற்று நடந்துவருவதுதான் இந்து மதம். உபநிஷத்துக்கள், மந்திர சாஸ்திரங்கள்படி நாம் நடப்ப தனால் தான் இங்கு பார்ப்பான் - பறையனும், மேல்சாதி - கீழ்சாதியும், எண்ணற்ற கடவுள்களும் இலட்சக்கணக்கான கோவில்களும், குப்பைகூளங்களும் இருக்கின்றன.
எல்லாவற்றையும் கற்று, எது உண்மை? எது பொய்? என்று யார் தெரிந்து வைத்திருக்கிறானோ அவன் தான் புத்தன் திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாத்திகனுக் கும் வித்தியாசமில்லை. ஆகையால் அவனை நாட்டில் விட்டு வைக்காதே என்று இராமன் பரதனுக்குச் சொல்லி யிருக்கிறான். மற்றொரு இடத்தில் பரதா, பவுத்தர்கள் எல்லாம் நாத்தி கர்கள்; அவர்களோடு பழகாமலிருக் கிறாயா? தங்களுடைய சாமர்த்தியத் தால் வேத, புராணங்களையும் சாஸ் திரங்களையும் பெரியோர் ஏற்படுத்தி வைத்த மத சம்பிரதாயங்களையும் அர்த்தம் செய்ய மாட்டார்கள். கேள்வி ஞானங்கொண்டு தங்கள் கருத்துக் களைச் சொல்லி மக்களை மாற்றி விடுவார்கள். அவர்களை நாட்டை விட்டுத் துரத்தி விட்டாயா? என்று இராமன் கூறுகிறான். கேவலம் தன் சொந்தப் புத்தியைக் கொண்டு, அறிவு என்னும் ஆயுதத்தைக் கொண்டு வேதங்களை, புராணங்களை, ரிஷிகள் எனப்படுபவர்களை ஆராய்ச்சி செய் கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நாஸ்திகன் என்று சொல்கிறார்கள்.
இந்து மதப்படி, மனுதர்ம சாஸ்திரப் படி நாம் எல்லாம் சூத்திரன்; அவன் பார்ப்பனன். அவன் உடம்பு மட்டும் அப்படி என்ன மணக்கிறது? நம் உடம்பில் மட்டும் நாற்றம் வீசுகிறதா? அவர்கள் சிறுநீர் பன்னீர் வாசனையும், நம் சிறுநீர் துர்நாற்றமும் வீசுகிறதா? இதைக் கேட்டால் நான் முகத்தில் பிறந்தேன்; நீங்கள் காலில் பிறந் தீர்கள்; என்று சொல்லுகிறார்கள்! புராணங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் புண்ணியம் என்றும், மறுத்தால் பாபம் என்றும் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் முதலியவைகளில் எழுதப்பட்டு இருக் கின்றன. உதாரணமாகப் பெரிய புராணத்தில் ஒரு பக்தன் தான் மோட்சம் செல்வதற்கு தன்னுடைய மனைவியை ஒரு பார்ப்பானுக்கு விட்டுக்கொடுத்து இருக்கிறான். இப்பொழுது இது மாதிரி யார் செய்வார்கள்? இம்மாதிரி எழுதிவைத் திருக்கிறாயே என்று கேட்டால் நாத்திகனா?
நேற்று எந்தப்பத்திரிகை என் பேச்சை வெளியிட்டது? பார்ப்பனர் களின் பத்திரிகைகள் தங்களுக்குள் கட்டுப்பாடு செய்து கொண்டன. என் பேச்சைப் போட்டால் தன் தலை மேலேயே கொள்ளியை எடுத்து வைத்துக்கொண்ட மாதிரி ஆகி விடாதா? கவர்னர் பேச முடியாமல் போய் விட்டதைப் பெரிதாக்கிப் போட்டிருக்கிறார்கள். புத்தர் விழாவுக்கு இழுக்கு கற்பிப்பதில் அவ்வளவு அக் கறை. கூட்டம் மறுநாள் நன்கு நடந் ததே அதைப்பற்றி ஏன் போடவில்லை? இராமசாமி வேண்டாதவன். அதனால் போடவில்லை.
சுமார் 500, 1000 வருடங்களுக்கு முன் மேல்நாடுகளில் யாராவது மதத் திற்கு விரோதமாகப் பிரச்சாரம் செய் தால் கொன்று போட்டுவிடுவார்கள்.
இங்கு அரசாங்கமும், பார்ப்பனரும் உள்ள ஆதரவும் போதாமல் திண் ணைக்குத் திண்ணை இராமாயண காலட்சேபம் செய்கிறார்கள். இவை களுக்கெல்லாம் அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. நாம் ஆதாரத்துடன் எடுத்துச் சொல்ல முன் வந்தால் தடையுத்தரவு போடுகிறார்கள். குப்பை கூளத்திற்கெல்லாம் 3, 4 தடவை ஆதரித்துப் பொம்மை போட்டு ஆதரவு கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள்.
புத்தன், வள்ளுவன், என்னைத் தவிர வேறு யார் சொல்லியிருக் கிறார்கள் ஜாதி ஒழிய வேண்டு மென்று? நேற்று இருந்தாரே ரமண ரிஷி, ஒரு வார்த்தை ஜாதி ஒழிய வேண்டுமென்று சொல்லி இருப்பாரா? நாயன்மார், ஆழ்வார்கள் சொல்லியி ருப்பார்களா? மகாத்மாதான் சொன் னாரா? 1956ஆம் வருடம் வரை எங்களைத் தவிர வேறு யாராவது சொன்னார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா?
சில பார்ப்பனர்கள் புத்தர் கடவுளைத் திட்டிப் பேசவில்லை என்று பேசுகிறார்கள். இம்மாதிரியாக சிலர் பெரிய விஷயங்களில் தலை கொடுத்து விடு கிறார்கள். புத்தர், உன் புத்தியைக் கொண்டாடு; ஆராய்ச்சி செய். மூடக்கொள்கை களை, மூடத்தன பழக்க வழக்கங் களைக் கடைப்பிடிக்காதே என்று கூறி யிருக்கிறார். அப்படி ஆராய்ச்சி செய்து பார்த்தால் ஒரு கடவுள் மிஞ்சுமோ? இராமன், கிருஷ்ணன் எல்லோரும் பறந்து விடமாட்டார்களா? புத்தர் கூறிய ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு கடவுளைக் கண்டுபிடியுங்களேன், பார்ப்போம்!
புத்தர் சிலையின் முகத்தைப் பாருங்கள், அன்பு, அமைதி, சாந்தம் இருக்கிறது. கிருஸ்துவின் முகத்தைப் பாருங்கள், பார்த்தவுடன் நமக்கே ஒரு சக்தி ஏற்படுகிறது. இங்கு இருக்கிற கடவுள்களை எடுத்துக் கொள்ளுங்கள். 5,6 முகங்கள்! 10, 20 கைகள்! கண்கள் வெளியே வந்து விடுகிற மாதிரி இருக்கும் கோரமான முகம்! கையில் அரிவாள் கத்தி, பெரியவயிறு இவைகள்தானே நம் கடவுள்கள்?
21 லட்ச வருடங்களுக்கு முன் திரோதாயுகத்தில் இராமாயணம் நடந்தென்று எழுதப்பட்டிருக்கிறது. 2000 - 3000 ஆண்டுகட்கு முன் இருந்த தமிழன் கதையே நமக்கு அகப்படவில்லை. இராமாயணம் மாத்திரம் அப்படியேயிருக்குமா? 21 லட்ச வருடங்களுக்கு முன் டார்வின் ஆராய்ச்சிப்படி மனிதன் குரங்காகத் தானே இருந்திருப்பான். 5000, 6000 வருடங்களுக்கு முன்பே நான்கைந்து தடவைகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட் டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொ ல்லியிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் மதுரை, சேர, சோழ பாண்டியர் முதலிய அரசர்கள் இருந்திருப்பார்களா? இவை களை நாம் எப்படி ஒப்புக் கொள்வது? சில வருடங்களுக்குமுன் தேவடியாள் பட்டம் பொட்டுக்கட்டி கோவிலில் விடுதல் போன்ற பழக்க வழக்கங்கள் இருந்தன. நாம் தானே அவர்கள் ஒரு வகுப்பாக மாறிவிடக் கூடாது என்றும் சமுதாயத்தில் ஒருவராக ஆகி சம மதிப்புப் பெற வேண்டும் என்றும் கருதி ஒழிக்கப் பாடுபட்டோம்.
கக்கூஸ், எடுத்தலும் பியூன் வேலை பார்ப்பதும் நம்மவர்களுக்கே; அதற் கெல்லாம் மேல் ஜாதியார் வர மாட் டார்கள். கீழ்த்தரமான வேலைகளை நமக்குக் கொடுத்து விட்டு, பெரிய உத் யோகங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு விகிதாச்சாரப்படி என்று கூறிவிடுவார்கள்.
கிருஷ்ணன் பல்லாயிரக்கணக்கான கோபிகா ஸ்திரிகளுடன் விளையாடி னான். அதைக்கண்ட நாரதருக்கும் பெண்ணாசை பிடித்துக்கொண்டது. அதற்குக் கிருஷ்ணன், நான் இல்லாத வீட்டில் நீ போய் இரு என்று சொன் னான். நாரதர் எங்குபோய்ப் பார்த் தாலும் கிருஷ்ணன் இருந்தானாம். இதுதான் கடவுள்களின் லட்சணம் போலும்?
இன்று நாம் எல்லோரும் இவ் விழாவைக் கொண்டாடியதனால் ஒரு படிப்பினையை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். குறைந்த அளவு இங்கு வந் திருக்கும் தாய்மார்கள் வாசற்படியில் குங்குமம் தடவுவதையாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். கோவிலுக்கு ஏன் போகவேண்டும். அக்காலத்தில் சுங்கம் வரி போட்டிருந்தான். இக்காலத்தில் கோயிலில் பணம் பிடுங்குகிறான். அம் மாதிரி ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து அதன்படி நடந்தால் 25 வருடத்திற்குள்ளாக பார்ப்பான்-பறையன் பூண்டே இருக்காது.
எனக்கு என்ன வேறு வேலை இல்லையா? நான் அவர்கள் சொல்லு கிறபடியே தலையாட்டி விட்டால், பார்த்தீர்களோ! கடவுள், நாயக்கருக்கு கட்டாயம் நல்ல அறிவு கொடுப்பார் என்று அப்பொழுதே சொன்னேனே என்று சொல்லிக்கொண்டே என் காலில் விழுவானே! திடீர் என்று நான் சாமியாராகிவிட்டால் எல்லோருடைய வீட்டிலும் என் படம் தொங்குமே! எனக்கு வயது 77 முடிந்து 78 பூர்த்தி யாகப் போகிறது. இப்பொழுது தலை நடுக்க ஆரம்பித்து விட்டது. எனக்கு என்ன நஷ்டம் வந்துவிட்டதென்று சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். சாகும் வரை இப்படியே இருப்பதாக உத்தேசம். அடிமையாக விலைக்கு வாங்கப்பட்ட நீக்ரோக்கள் இப்பொழுது 100க்கு 80 பேர் படித்துப்பட்டம் பெற்று இருக்கின்றார்கள். இப்பொழுது அவர் களும் வெள்ளையர்களுடன் சம உரிமை யுடன் வாழ்கிறார்கள்.
நாம் நன்றாக வாழ்ந்தபொழுது வெள்ளையருக்கு வேட்டிக் கட்டக்கூடத் தெரியாது. பச்சை மாமிசத்தை அப்படியே தின்று கொண்டிருந்தார்கள்! இப்பொழுது ஆகாயத்தில் ஏரோப் ளேனில் பறக்கிறான்! நாம் கட்டைத் தேரில் கடவுளை வைத்து ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்துக் கொண்டேயிருக் கிறோம். முஸ்லிம்கள்கூட 1000 வருடங்களுக்கு முன் காட்டுமிராண்டித் தனமாக மூடத்தனமான பழக்க வழக் கங்களைக் கையாண்டு வந்தனர். நபி தோன்றினார். சீர்திருத்தம் செய்தார். அதேபோல் கிருஸ்தவர்களுள் இயேசு வந்தார். உருவத்தைக் கும்பிடுபவர்கள் சண்டாளர்கள் என்று சொல்லிவிட்டார்.
இவைகளைப் பார்த்தாவது நமக்கு இனிமேல் புத்திவர வேண்டாமா? சொந்தப் புத்திதான் இல்லையென்றால் புத்தர் சொன்னபிறகாவது வரவேண் டாமா? அப்படியும் வரவில்லையானால் 10 - 15 ஆண்டுகளுக்குப்பின் பார்ப் பனர் ஆட்சி ஏற்பட்டு நம்மையெல்லாம் நெற்றியில் சூத்திரன் என்று பச்சை குத்திக் கொள்ளச் செய்வார்கள். நமக்கு எவ்வித உத்தியோகமும் இல்லையென்று சொல்லிவிடுவார்கள். ஆகவே நீங்கள் எல்லோரும் பகுத்தறிவு வழி, புத்தர் சொன்ன வழிகளைப் பின்பற்றினால் உங்களுக்குப் பின்வரும் சந்ததிகளுக்குப் பெருத்த நிதி சேர்த்து வைத்தவராவீர்கள்.
27.5.1956 சென்னை கடற்கரையில் நடைபெற்ற புத்தர் விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு,  (விடுதலை 2.6.1956)

Sunday, August 4, 2013

மதக்கொடுமை

நம் மதமும், நம் நீதிகளும், நம் தெய்வங்களுமே நமது கல்வியற்ற நிலைமைக்குக் காரணமாகும். உதா ரணமாக வேத தர்ம சாஸ்திரங் களைப் பாருங்கள் அவற்றில் இன் னார்தான் படிக்கலாம். இன்னா ருக்குச் சொல்லிக்கொடுக்கக் கூடாது என்கின்றதான நிபந்தனை யிருக்கிறது. இதனாலேதான் நம் நாட்டில் கல்வி இல்லை.
சூத்திரன் படிக்கக் கூடாது. அவனுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல் லப்பட்டிருக்கிற இந்து மதத்திற்கு நாம் கட்டுப்பட்டதால் சூத்திரா என்ற நாமத்தை நாம் ஏற்றுக் கொண்டதால் படிக்க முடியாமல் போய் விட்டது.
மி. மேயோ பனகால் அரசரைக் கண்ட போது பார்ப்பனரல்லாதா ருக்கு மூளையில்லையா? ஏன் படிக்கவில்லை என்றார். அதற்கு பனகால் அரசர் அது பார்ப்பனர் மூளையின் சூழ்ச்சியாலேயே பார்ப் பனரல்லாதார் படிக்க முடியாமல் போயிற்று என்றார். அப்படியே மேயோ அம்மையாரும் எழுதி விட்டார்.
திரு. சத்தியமூர்த்தி சாதிரி இந்தக் குற்றத்தை மறுக்கையில் மாட்டிக் கொண்டார். அவர் சூத் திரர்கள் வேத சாதிரந்தான் படிக்கக் கூடாதே யொழிய மற்றவற்றைப் படிக்கலாம் என்று இருப்பதாகச் சொன்னார். முன் காலத்தில் வேதம், சாதிரம், இவைதவிர வேறு படிக்க நூல் இல்லை. இங்கிலீஷ்காரன் வந்த பிறகு தான் புத்தகம் ஏற்பட்டது. முன் காலத்தில் படிப்புக்கு வேறு வசதி இல்லை. நீதி நூல்கள் தான் இருந்தன. புராணங்கள் தவிர வேறு இலக்கியம் இல்லை. அவைகளும் வடமொழியில்தான் இருந்தன. இப்படியெல்லாம் இருந்ததால் நாம் படிக்க முடியவில்லை வெள்ளைக் காரர்கள் வந்த பின்பே நாம் இப்போது 100-க்கு 7 சதவீதமாவது படிப்பு அனுபவிக்க முடிந்தது. இக்காலத்திலும் பார்ப்பனர்கள் கேள்வியின்றி ஆட்சியிலிருந்ததால் அவர்கள் மாத்திரமே படிக்கச் சௌகரியமாக விருக்கும் படியாக வழிகளை வகுத்து வந்தார்கள்.
வீண் செலவால் தரித்திரம்
பயனில்லாத வழியில் மதத்தின் பேரால் நமது பணத்தையெல்லாம் பாழாக்குகிறோம். ஒரு மனிதன் தினம் 8 அணா சம்பாதித்து 4 அணா மிச்சம் பிடித்தால் அவன் அதை பிதிர்களுக்கும், சடங்குகளுக்கும், சாமிகளுக்கும், பொங்கல்களுக்கும் செலவு செய்யவே வழி காட்டப் படுகிறான். அவன் ஒரு வாரத்தில் சேர்த்ததைக் குடியில் செலவு செய்கிறான். ஒரு மாதத்தின் மீதத்தைப் பண்டிகையில் செலவு செய்கிறான். ஒரு வருஷ மீதத்தைத் திதியில் செலவு செய்கிறான். 10 வருஷ மீதத்தைக் கலியாணம் கருமாதியில் செலவு செய்து விடு கிறான். இவையன்றியும் சில்லறைச் சடங்குகளும், சில்லறைத் தேவதை களும் உற்சவங்களும் நம் செல் வத்தை விழுங்கிவிடுகின்றன. மேற்கொண்டு கடனும் வாங்கச் செய்கின்றன. இவைகளே நாம் நிரந்தர கடனாளியாகவும் தரித்திர வான்களாகவும் இருப்பதற்குக் காரணங்களாகும். இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. படிப்புக்குப் போதுமான பணம் இல் லையா? நமது தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக்கொள்ளுங்கள். உற்சவங் கள் காரணமாய் வருடம் 40 ஆயிரம், 50 ஆயிரம், லட்சம் ரூ. வரை வருஷ வருமானமுடைய 30, 40 கோயில்கள் இருக்கின்றன. சமயங்கள் காரண மாய் வருடத்தில் 5 லட்சம், 10 லட்சம் வரும்படியை உடைய பல மடங்கள் இருக்கின்றன. கணக்குப் போட்டால் எவ்வளவு ரூபா மொத்த மதிப்பு ஆகிறது. உற்சவ செலவும்  ஜனங்கள் போக்குவரத்து, ரயில் முதலிய செலவும் சேர்த்து எல்லாம் பார்த் தால் எந்த காரணத்தினாலும் 1 கோடிக்கு குறையாது. திருச்சி ராபள்ளி ரங்கநாதர், தென்னாற்காடு நடராஜர், மதுரை மீனாட்சி, ராமனாதபுரம் ராமலிங்கம் ஆகிய சாமிகளும், மற்றும் வட ஆர்க்காடு ஜில்லா அருணாசலம், செங்கற்பட்டு வரதராஜ உடையார்; சொன்னப் பட்டினம் கபாலீசர், சித்தூர் வெங் கிடாசலபதி ஆகிய சாமிகளின் உற்சவங்கள் கணக்கு எவ்வளவு திருப்பதி கோயிலில் 20 லட்ச ரூபாய் காணிக்கை; ஏழரைக் கோடி ரூபாய் சொத்து, நகை, பாண்டுகள், வாகனங்கள், கட்டிடங்கள் இவற்றை எல்லாம் விற்றுக் கணக்குப் போட்டுப் பார்த்து 100க்கு 6 வட்டி வீதம் 40 லட்சம் ரூ வட்டி அடையலாம். இந்த ஜனங்கள் காணிக்கைகள் உண்டி யலில் கொடுத்தல் போக வர செலவு எல்லாம் 60 லட்சம் ரூபாய் ஆகும். அவ்வளவும் நம் மக்கள் வீண் செலவு  செய்து விடுகிறார்கள். திருப்பதிக் குப் போய் மொட்டை அடித்துக் கொள்ளுகிறவர்களின் செலவு எல்லாம் சேர்த்து மொத்தத்தில் 1 கோடி ரூபாய் ஆகிறது. இது போலவே இந்த இரண்டு ஜில்லா விற்கு மாத்திரம் மேற்படி 2 கோடி ரூபாயாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? மற்ற சாமிகள் பணத்தாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ஜில்லாவிலுள்ள மடங்கள் என்ன போதிக்கின்றன? என்ன அறிவை வளர்க்கின்றன?
தலைக்கு  நாள் ஒன்றுக்கு, 2, 5, 10, 15 ரூபாய் வரை, சராசரி சம்பாதிக்கக் கூடிய மக்களையுடைய அய்ரோப்பிய தேசங்கள் இருக் கின்றன. நம் தேசத்தில் ஒருவன் சராசரி ஒன்றரை அணாதான் சம்பாதிக்கிறான். இது கூட இரண்டரை அணா செலவு செய்யக் கற்ற பிறகுதான். இத்தனைக்கும் நாம் ஒரு செல்வக் கடவுளைக் கும்பிடுகிறோம். விளக்கமாறு, முறம், அம்மிக் குழவி, சாணிச் சட்டி உள்பட எல்லாம் லட்சுமி என்கிறோம். அப்படிக் கும்பிடும் நாம் இன்னும் ஏழையாகவே இருக்கிறோம். நம் மக்கள் சிங்கப்பூர், கொளும்பு, நேட்டால், தென்னாப்பிரிக்கா முதலிய இடங்களுக்குக் கூலி ஆட் களாகப் போகிறார்கள். இத்தனை லட்சுமிக் கடவுள்கள் இருந்தும் இந்தத் தரித்திர நிலைமையில் தான் இருக்கின்றோம். இதற்கு நம் சோம்பேறித்தனமும் நம் மக்கள் பணம் அனாவசியச் செலவு செய் யப்படுவதுமே காரணம். பணக்காரன் தொழில் துறையில் பணம் செலவு செய்வதில்லை. பணம் சேர்ந்தவன், கடவுள் தந்தார் என்கிறான். ஏழையானவன் கடவுள் நமக்குக் கொடுக்கவில்லை என்று நினைக் கிறான். ஏழை மக்கள் கடவுள் கொடுக்க வில்லை என்கின்றார் களேயொழிய அப்படிப்பட்ட கடவுளை ஒரு கை பார்ப்போம் என்று நினைப்ப தில்லை. எதற்கும் கடவுள் செய் வான் என்ற கொள்கையே இருக் கிறது.
செல்வமானது கல்விக்கும் தொழிலுக்கும் உபயோகமாகும்படி செலவு செய்யப்படாமல் பணக்காரர் களால் சாமிக்கும், கோயில்களுக் கும் சடங்கிற்கும் போய்விடுகிறது. சாமிக்கு 3 வேளை 6 வேளை பூசை செய்தல் தாசி, மேளம் ஏற்படுத்தல் மரக்கட்டைகளின் மேல் பொம் மைகளை ஏற்றி தேர் என்று சொல்லி இப்படியாக 5,000,10,000 பேர் இழுப் பதில் பணத்தைப் பாழ் செய்கிறார் கள். இது மோட்சமாம்! இப்படி யெல்லாம் ஏழை மனிதன் தலையில் கை வைத்து மேனாட்டார் சாமிக்குக் கொடுப்பதில்லை. அவர்கள் குழவிக் கல்லை நட்டு கும்பிடுவதுமில்லை. ஒரு மேல் நாட்டான் தன் சொத்தைத் தர்மம் செய்ய எண்ணினால் மருத்துவ ஆஸ்பத்திரி கல்வி அபி விருத்திக்குக் கொடுப்பான். ஒரு கண் ஆஸ்பத்திரிக்குக் கொடுப் பான். குஷ்டரோக ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான். தொத்து வியாதிகள் வராமல் தடுக்கக் கூடிய ஆஸ்பத் திரிக்காகவும் கொடுப்பான். இத்து டனில்லாமல் அவன் தன் நாட் டையும் படிக்க வைத்த பின் நம் நாட்டிலுள்ள ஏழைகளும், அனாதை களும் உயர்த்தப் படுவதற்காக மிஷன் பாடசாலைகள் ஏற்படுத்தி யிருக்கிறான். தொழிற் சாலை வைக்கிறான். நாமும் அதில் பங்கு அனுபவிக்கிறோம். நம் பிள்ளை களையும் அவர்களுடைய பள்ளிக் கூடங்களுக்கு அனுப்புகிறோம். அவர்களது ஆஸ்பத்திரிகளுக்கும் செல்லுகிறோம். நாமோ தவறான வழியாகக் குழவிக் கல்லின் தலை யில் நம் செல்வத்தைப் பாழாக்கு கிறோம். நம்மிடம் அறிவு இல்லை. ஆகையினால் செல்வ விருத்தியும் இல்லை.
திருடனுக்குத் திருடி பணம் வந்தாலும் அவன் காத்தானுக்கும், காளிக்கும் பொங்கல் போட்டு பாழாக்குகிறான். புதையல் எடுத் தாலும் சாமி தலையில் போட்டு விடுகிறான். இந்த நிலைமைக் கெல்லாம் நம் மூட நம்பிக்கை களே காரணம். மற்ற நாட்டான் நம் நாட்டின் இந்த நிலைமையைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியாது. கல்லுக்கு 15 தேவடியாள், 20  ஆயிரம் ரூபாய்  செலவில் உற் சவம்! அது தினம் 10 வேளை தின்பது! இவை போன்றவைகளுக்கு நம் முட்டாள் தனமே காரணம். நம் முட்டாள் தனத்தையெல்லாம் வெள் ளைக்காரன் உணர்ந்து கொண் டான். இந்த நிலையில் அவன் எப்படி நமக்குப் பயப்படுவான்? நாம் இப்படி யிருக்க வெள்ளைக்காரனுக்குத் தான் நன்மை. இப் பொழுது எங்கும் நூல் நூற்கப்படுகிறது. ஒரு கொட்டங்கச்சியில் உப்புத் தண் ணீரை முகந்து 2 அணா விறகைச் செலவு செய்து உப்பு காய்ச்சினால் வெள்ளைக் காரன் ஓடிப் போய் விடுவானா? தக்ளியில் நூல் நூற்ப தால் வெள்ளைக்காரன் நடுங்கி விடுவானா? நமது குற்றங்களை உணர்ந்து நாம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டாமா?
கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்
உங்களுடைய தெய்வமும், மதமும் விடப்பட்டொழிந்தாகவே வேண்டும். நான் கடவுளை உண்டு என்றோ இல்லை என்றோ சொல்ல வரவில்லை. கடவுள் இருந்தால் அது இருக்கட்டும். அது இந்த ராமசாமிக்காக ஓடிப்போய் விடாது. அதற்கு எவனும் வக்கீலாக இருக்க வேண்டியதில்லை. ராமசாமி கடவுள் இல்லை என்கிறான். பூசை வேண் டாம் என்கிறான் என்றெல்லாம் பேசுகிறார்கள். நல்ல கடவுளாக இருந்தால் அது உங்களது பணச் செலவை எதிர்பார்க்குமா? அல்லது உங்கள் எண்ணெயையும், பாலையும் பஞ்சாமிர்தத்தையும் குளிப்பாட்டு தலையும் எதிர்பார்க்குமா? கடவுள் உண்டு, இல்லை என்ற சண்டை உலகம் தோன்றிய நாள் முதல் நடக்கிறது. நமக்கு அதை முடிவு செய்ய அவசியமில்லை. உன் அறிவையும் முயற்சியையும் உன் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்து. உன் செல்வத்தை வீணாக கடவுளுக் கென்று அழிக்காதே என்றே சுய மரியாதை இயக்கம் சொல்லுகிறதே தவிர வேறில்லை. உங்கள் தெய் வங்களது நிலைமையில் நான் இருக்க சம்மதிக்கமாட்டேன். ஏனெனில் நீ குளிப்பாட்டும் போது தான் குளிக்கவேண்டும். நீ வேஷ்டி கட்டிவிடும் போது தான் கட்டிக் கொள்ள வேண்டும். நீ எண்ணெய் தேய்த்து விடும்போது தான் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு யார் சம்மதிப்பார்கள்? கடவுள் உன் பூசையையும் உற்சவத் தையும் நகைகளையும் விரும்புகிறது என்று சொல்லுவது வெட்கக்கேடு.
ஆலயங் கட்டியவர்கள் கதி
தஞ்சாவூர் ராஜாக்களை விட உலகத்தில் இன்னொருவன் கோயில் கட்டியிருக்கிறானா? சத்திரங்கள் கட்டியிருக்கிறானா? மான்யங்கள் விட்டிருக்கிறானா? அந்த கடவுள் தர்மம் அந்த ராஜாக்களுக்கு என்ன செய்தது? வம்சம் இருந்ததா? அவர்கள் வாரிசு தாரர்களுக்குக் கடவுள் தர்மம் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளைக் காரன் தான் சொத்துக்கு கொடுக் கிறான். அந்த சாஸ்திரங்களுக்கு மதிப்பு இருந்தால் அந்த தஞ்சாவூர் முதலிய அரசர்கள் இப்படி அழிந்து போயிருப்பார்களா?
பழனியில் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டுகிறார்கள். அது தொட்டியில் விழுந்து துர்நாற்றம் எடுத்துப் போய் காலரா ஏற்பட வழியாகிறது. ஏழைகளின் குழந்தை கள்பால் இல்லாமல் குரங்குக் குட்டிப்போல் மெலிந்து தவிக்கையில் குழவிக்கல்லின் தலையில் அதைக் கொட்டி வீணாக்குகிறார்கள். அந்த குழந்தைகளின் வாயில் கொட்டு என் தலையில் கொட் டாதே என்று தான் யோக்கியமான கடவுள் சொல்லுமே யொழிய எந்த கடவுளும் அதில்லை என்று கோபித் துக் கொள்ளாது. அப்படி கோபித் துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டுமே. அது நம்மை என்ன செய்யமுடியும்? (சிரிப்பு) இப்படி இருந்தால் மக்களுக்கு ஜீவகாருண் யம், பரோபகார சிந்தை, இரக்கம் இவை எப்படி ஏற்படும்?
கைலாசம், வைகுண்டம், சொர்க்கம் என்ற இவை கற்பிக்கப்பட்டது. முதல் மனிதன் அயோக்கியனானான். இவற்றின் பெயரால் மனிதனை மனிதன் இம்சித்தான். கொடுமை செய்தான். ஒரு சிம்டா விபூதிக் காக எல்லாப் பாவமும் போக்கி மோட்சம் கொடுத்ததால் மனிதனது அறிவு மயங்கிப்போயிற்று. இந்த மோட்ச நம்பிக்கைகள் ஒரே அடியாய் ஒழிய வேண்டும். இவ்வுலக அனுபவங்கள் லட்சியம் செய்யாமல் நாம் எப்பொழுது மேல் உலகமே பெரிது என்று கருதினோமோ அப்பொழுதே ஜீவகாருண்யத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடமில்லாமற் போய் விட்டது. தான் மோட்ச மார்க்கத்தை நாடுவதற்காக ஒருவன் அயோக்கியனாகவும், கொடுமை செய்பவனாகவும் இருக்க வேண்டி யதாயிற்று. இது ஒருகாலும் உண்மையான நாகரிகம் அல்ல. அன்பு அல்ல, இரக்கம் அல்ல, பரோபகாரம் அல்ல.
- குடிஅரசு - சொற்பொழிவு  10.08.1930, 17.08.1930