Sunday, May 27, 2012

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?


தோழர்களே!
தலைவர் அவர்கள் என்னை உங் களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந்நியாசம் இருக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் மற்றும் பல சொற் களோடு அறிமுகப்படுத்தினார்கள்.
முதலில் நான் அவரது பாராட்டு தலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
தமிழ் பாஷை
நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன்.  நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமே யாகும்.  திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்த வன்.  என்னை என் வீட்டார் படிக்க வைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டா மல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந் தேன்.  காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல் லாம் பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள்.  அக் காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள்.  வீட்டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ் வொரு மாணவனும் எச்சில் துப்பி விட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டுமென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார்.  அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும்.  அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழையறக் கூட எழுத முடியாது என்பது தான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத்துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
பொதுவாகவே பள்ளிக் கூடங்களிலும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்ப் பந்தமுண்டு.  இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற  நியதி இருக்கிறது.  அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப்பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது.  தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரிய தரிசி சொன்னார்.  ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேசவேண்டிய வனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டிய வனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும் போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும்படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது.  மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகி விடுவார்களே என்று பயப்பட வேண்டிய வனாய் இருக்கிற படியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசுவதைக் கொண்டு திருப்தி அடையுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்
தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபார பற்று என்று தலைவர் சொன்னார்.  அதற்காகவே பாடுபடு கிறேன் என்றும் சொன்னார்.
தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை.  அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசியபாஷை என்பதற்காகவோ, அகத்தியரால் உண் டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்று கிடையாது. அது மூடப்பற்று - மூட பக்தியே ஆகும். குணத் திற்காகவும், அக் குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும்.  எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.
எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன்.  அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்.  மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார்களுடையது என்பதற்காக அல்ல.
அன்பு என்பது...
உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய், தகப்பன் முதலாகிய எல்லாரிடத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும், பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன்களும்தான் ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும் இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால் புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும்.  புருஷன் செத்தால் மனைவிக்கு சாகும்வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக்கும்.  மறுவிவாகம் செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில் துக்கம் ஆறி, மறந்துபோகும்.  தகப்பனுக் கும் - பிள்ளைக்கும் கூட பிறந்த உடன் பிள்ளை செத்துவிட்டால் பிள்ளையைப் பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம் இருக்காது.  90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று, மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும் என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம் இருக் காது.  தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை  இறந்துபோனால் படுகிற துக்கத்தின் அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசிகளில் பெண்பிள்ளை இறந்து போனால் படுகிற துக்க அளவு ஆண் பிள்ளை இறந்து போனால் படுவதில்லை.  மற்றபடி எந்த விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில் மகிழ்ச்சியோ, இன்பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில் ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுபவிப்பதும், அது இல்லாதவிடத்தில் அவ்வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.
அதுபோல்தான் நான் தமிழினிடத் தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்ட மேற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத் துகிறேன்.
அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல் தான் எதிர்க்கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
நாடும் - காலமும்
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒருவித பழக்க வழக்கமும், அவைகளிடத் தில் சில விருப்பு வெறுப்பும் இருந்து வருவதுடன் விருப்பமானதைப் பெருக் கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப் பதுமுண்டு.  ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டா ருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.
ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கலாம்.  ஆதலால், அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழை யது - புதியது என்ப தற்காகவும் எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக் காக அவன் போராடவேண்டியவனே ஆவான்.  மற்ற நாட்டு பாஷை எதினா லாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.
இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள்.  இங்கிலீஷால் தீமை இல் லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத் திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன்.  இது என் அபிப்பிராய மாத்திரமல்ல.  இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லி இருக் கிறார்கள்.  அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னி யில் போற்றப்படுகிறார்கள்.  ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலந்தான் காரணம் என்பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன்.   தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக் கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத் தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம்.  ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன்னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக் கின்றன என அறிகிறேன்.  ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.
பழங்காலம்
பழம் பெரியோர்கள், முன்னோர்கள் செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற் காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும்.  யார் என்ன சொன்ன போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர்களைவிட, பழம் பெரியோர் களைவிட, நாம் முன்னேற்றமடைந்தவர் களே ஆவோம்.  ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத சாதனங்களும், சுற்றுச்சார்பு களும் இன்று நமக்கு இருந்துவருகின்றன.  இதன் மூலம் நாம் எவ்வளவோ முற் போக்கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும் அடைந்திருக்கிறோம்.  இனி யும் எவ்வளவோ காரியங்களில் நம் பின் சந்ததியார்கள் அடையப் போகிறார்கள்.
முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்ததாகச் சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக மக்கள் அடைந்து வருகிறார்கள்.  இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான் மூடர்கள் என்று குறைகூறவில்லை.  அக்கால  மக்களுக்கு இருந்த வசதியும், சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந்தது.  இக்கால மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு மேம்பட்டதும் செய்ய முடிகிறது என்கிறேன்.
இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள் இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமையர்கள் கேட்கலாம்.  பழங்காலத் தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச் சார்புகளும் இருந்திருக்கலாம்.  ஆனால், அவைகளும், அவற்றால் ஏற்பட்ட பலன் களும் உடையனவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்க லாம்; பூகம்பத்தால் மறைந்தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல் அழித்திருக்கலாம்.  இப்போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத் திற்கு எட்டிய பழமை அ,,வில் இருந்து தான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க் கொண்டிருப்பதைக் காண் கிறோம். ஆகையால், பெரும்பான்மை யான விஷயங்கள் பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என் பது எனது அபிப்பிராயம்.  இவற்றை யெல்லாம் மாணக்கர்களாகிய உங்களுக் குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர்களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து முடிவுக்கு வர வேண்டும்.
தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக் காகப் பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள்.  நம் தாய் நமக்குக் கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது.  நாம் பயன் படுத்துவதுமில்லை.  உதாரணமாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற்றுக்கு சோச்சி என்றும், படுத்துக்கொள்வதற்கு சாச்சி என்றும் சொல்லிக் கொடுத்தார்கள்.  இன்று நாம் அவற்றையா பயன்படுத்துகிறோம்அது போவே பாஷைகள் காலத்துக்குத் தக்கபடி, பருவத்திற்குத் தக்கபடி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும்.  தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத்தில் இல்லாத பல காரியங்கள் அரசியல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரண மாகவும் இப்போது ஏற்பட்டு, அவற் றிற்காக பல அந்நிய பாஷை வார்த் தைகள் இன்று பழக்கத்தில் இருக் கின்றன.  இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால் சொல்லிவிட முடியுமாஅவசியமான வற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.  அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவைகளைப்பற்றிக் கவலை இல்லாமல் இருந்து விடலாம்.
கேடு பயப்பவைகளை வார்த்தைகளா னாலும், கலைகளானாலும், இலக்கியங் களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதே யாகும்.  இந்தக் கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை எதிர்ப்பதும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர்களே!  இவ்வளவுதான் இந்த இடத்தில் தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று கருதுகிறேன்.  இதற்கு மேற்பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல என்று கருதி இவ்வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.
(21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்  பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)
                                                   குடிஅரசு -  06.08.1939

Sunday, May 20, 2012

திராவிடர் - வார்த்தை விளக்கம்


திராவிடர் மாணவர் கழகம் என்பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்கவேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப் படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவை போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். அவற்றிற்கு உங் களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண் டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். 
இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களு மாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்து அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். 
       எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. இதுகூட ஏன்? இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல் லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டு வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை.
     நமக்குச் சிறு பிரயாயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினை விலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில் லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற் பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலி களாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க் கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட் பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். 
இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?
நாம் முன் கூறின இழிநிலையும் குறை பாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர் களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒரு கூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ் வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென் படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப் பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. 
இதுவரையில் இழி நிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன் றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார் களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனி யாமல் அது திறக்கப்படவும், உடைக்கப் படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப் பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?
 ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப் பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங் கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண் டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத்தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டு கோல்தான் திராவிடர் என்பது.
எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகி விட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதே போல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக் கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிராமணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.
அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லு வதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுப விப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயன் அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த் திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும்.
கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்து போய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ் டானங்கள் கலந்துவிட்டனவா? பிரா மணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது  கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தா லென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?
சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபணை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கறுப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.
 நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவை  எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களு மாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமு மில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். 
அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்து கொண்டிருந்த அவனைப் பறையனாக்கு வதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவை அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். 
இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்துவிட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையது களுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்துதான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். 
ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவை  இன்றைக்கும் அப்படியே பின்பற்றப் படவேண்டும் என்றால் அது அறியாமையே யாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார் கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற் போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும்.
 மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டு வருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகிப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவை மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித் தாவது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டுபிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறை களை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.
(09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)
                                                                                                                                       குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945

Saturday, May 19, 2012

சமுதாயக் குறைகளை நீக்குவதே நமது பணி


நமது கழகம் 40 ஆண்டுகளாக தொண்டாற்றி வருவது வீண் போகவில்லை. மக்களுக்கு ஓரளவுக்காவது உணர்ச்சியை ஊட்டியுள்ளது என்பதை கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இப்படிப்பட்ட உள்கிராமங்களிலும்கூட நல்லவண்ணம் நமது கொள்கை பரவி இருப்பதைக் காணப் பெருமைப்படு கின்றேன்.

தமது கொள்கையினை தெளிவாக உணர்ந்து இந்த ஊர் ஊராட்சி மன்றத்தார் தங்கள் வரவேற்பில் குறிப்பிட்டு இருக் கின்றார்கள்.

அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். நாங்கள் சட்டசபைக்குப் போகின்றவரும் அல்ல, மந்திரி வேலைக்குப் போக விரும்புகின்றவரும் அல்ல. சமுதாயக் குறைபாடுகளுக்கு உண்மையாகவே பரிகாரம் காண பாடுபடுகின்றோம்.

மக்களை பகுத்தறிவுவாதிகளாக ஆக்கும் வண்ணமாக உள்ள சாதனம், சொத்துக்கள் தான் நாங்கள் வெளியிட்டுள்ள புத்தகங்கள் ஆகும்,

இந்த நாடு தமிழ்நாடு. நாம் தமிழர்கள். 100-க்கு 90 பேர்கள் தமிழர்களாகவே உள்ளோம். உடலுழைப்புச் செய்கின்ற மக்கள் நாம்தான். யாரும் மறுக்க முடியாது. பார்ப்பான் ஏர் உழுதலே பாவம் என்று எழுதி வைத்துக் கொண்டுள் ளான்.

இப்படி மக்களுக்குத் தேவையான தொழில் செய்யக் கூடிய நமக்குக் கிடைத்த பலன் என்ன? என்றால் நாம்; இழிமக்கள், சூத்திரர்கள், நம் பெண்கள் சூத்திரச்சிகள், பார்ப்பானுக்கு வைப்பாட்டியாக இருக்க வேண்டியவர்கள் என்று எழுதி வைத்துக் கொண்டுள் ளார்கள்.

மேலும் பார்ப்பான் மனு நீதியில் எழுதியுள்ளான். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவு ஏற்படும்படி கல்வி மட்டும் கொடுக்கக் கூடாது என்று எழுதி வைத்துள்ளான்.

இதன் காரணமாக நாம் வளர்ச்சி அடையவே இல்லை. காட்டுமிராண்டியாக இருந்த வெள்ளையன் இன்றைக்கு அறிவு பெற்று புதிய உலகத்தையே உண்டு பண்ணத்தக்க பெரிய அறிவாளிகளாக ஆகி விட்டார்கள். ஒரு பெண்மணிக்கு 10,000 மைல் பறக்கும்படியாக இன்று முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.

ஆனால், நாம் அப்படி இருந்தோம், இப்படி இருந்தோம் என்று எழுதிக் கொண்டு பெருமை பேசும் நாமோ உலகிலேயே  இன்றைய தினம் சுத்த காட்டுமிராண்டிகளாக உள்ளோம். நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வரக் காரணமாக இருப்பது நாம் கைக்கொண்டு உள்ள காட்டுமிராண்டி மதமும், கடவுளும், சாஸ்திரங்களுமே யாகும். இவற்றைக் கட்டிக் கொண்டு அழும் வரைக்கும் நாம் உருப்படியாக முடியாது என்று எடுத்துரைத்தார்.

மேலும், கடவுள், மதம், சாஸ்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.

(விடுதலை 9.11.1963).

பகுத்தறிவுக்கு ஒத்த மாறுதல்


நம்மிடையே உள்ள ஜாதி இழிவும், மூட நம்பிக்கையும், அர்த்தமற்ற சடங்குகள், வீண் செலவுகள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பது நம்மிடையே இருந்து வரும் திருமண முறைதான். எனவே, இதை உணர்ந்து இதனை ஒழித்து பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையிலேயே இத்தகைய மாறுதல் திருமணத்தை வகுத்து நடத்தி வருகின்றோம்.

சீர்திருத்தத் திருமணத்தில் நமது இழிவு துடைக்கப்படுகின்றது. பார்ப்பானுடைய கடவுள், மதம், சாஸ்திரம் முதலியன விலக்கப்படுகின்றன.

நம்மிடையே திருமணத்துக்கு முதலாவதாக பொருத்தம் பார்க்கின்றார்கள். மணமக்களின் வயதுப் பொருத்தம், உடலமைப்பு, அழகு, கல்விப் பொருத்தம் இவற்றைவிட ஒருவருக்கு ஒருவர் திருமணத்துக்கு சம்மதிக்கின்றார்களா என்ற பொருத்தம் இவற்றைப் பார்க்காமல் முட்டாள்தனமாக பெயர், ராசிப் பொருத்தம் பார்க்கின்றார்கள். இத்தகைய முட்டாள் தனத்தை எல்லாம் மக்கள் விட்டொழிக்க வேண்டும்.

நம்மிடையே ஒருவனுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்று தொடங்குவது, வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படு கின்றது என்பதற்காகவே செய்கின்றார்களே ஒழிய, தம் பையன் வாழ்க்கைக்கு என்று சொல்ல மாட்டார்கள். நம்மிடையே பெண்களை அடிமையாகவே வீட்டுக்கு வேலையாளாகவே வெகுநாளாக நடத்திக் கொண்டு வருகின்றோம்.

எங்களுடைய திருமண முறை காரணமாக ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிக நன்மை ஏற்பட்டுள்ளது.

புரோகித திருமணம் என்ற பேரால் ஏற்பாடு செய்யப்பட்ட அத்தனையும் முட்டாள்தனமானதும், அர்த்தமற்றதுமேயாகும் என்று எடுத்துரைத்து, கடவுள், மதம், சாஸ்திரம் ஆகியவற்றின் பேரால் நாம் அடையும் இழிவுகள் குறித்து தெளிவுபடுத்தியும் மணமக்களுக்கு அறிவுரை கூறியும் பேசினார்.

(விடுதலை 10.7.1963)

Sunday, May 6, 2012

திராவிடர் என்ற மாறுதல் ஏன்?


தோழர்களே, திராவிடர்களாகிய நாம் பிறந்ததால், வளர்ந்ததால், வாழ்வதால், திராவிட நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்த நமதுநாடு இன்று பொருளாதார வாழ்வில், சமூக மேம்பாட்டில் சமூகக் கொள்கையில் அரசியல் ஆதிக்கத்தில், இது பிறருடைய - அந்நிய ருடைய நாடாக இருக்கிறது. எப்படி எனில் நம் உழைப்பையும், நம் நாட்டின் வளப்பத்தையும், அந்நியர்களே கொள்ளை கொண்டு அனுபவிக்கிறார் கள். நம் நிலை ஆப்பிரிக்கா நாட்டு சுதேசிகள் நிலையில் இருக்கிறது.
இதை மாற்றுவதற்கு ஆகவே இப்படிப் பட்ட மாநாடுகளைக் கூட்டி மக்களுக்கு உணர்ச்சி ஊட்டி தொண்டாற்றச் செய் கிறோம். இம்மாநாடு தேர்தல்களுக்காக செய்யப்படும் பிரச்சார மாநாடல்ல. நம் இன்றைய நிலையை நாம் உணர்ந்து நம் கடமையைச் செய்யத் தூண்டும் மாநாடே யாகும்.
தேர்தலும், நாமும்
தேர்தல் பற்றி என்னுடைய அபிப் பிராயம் உங்களுக்கெல்லாம் தெரியும். பலதடவையும் சொல்லியிருக்கிறேன். இன்று நம் லட்சியம் தேர்தலல்ல. ஆனால், தனிப்பட்டவர்கள் தம் சொந்த முறையில் தேர்தலில் நிற்பதையோ வெற்றி பெறுவதையோ நான் வெறுக்க வில்லை; இன்று வேண்டாமென்றும் சொல்ல வில்லை. இயக்கத்தின் பெயரால் இப்போது தேர்தலில் ஈடுபடக்கூடாது என்பதும் இயக்க வேலை தேர்தல் பிரச்சாரமென் றிருக்கக்கூடாது என்பதும் என் கருத்து. தவிர இன்று தேர்தலில் நிற்பதற்கு நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்னை சுயமரியாதை இயக்கத் தலைவரென்றும், ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரென்றும் சொல்லு கிறீர்கள். நான் சொல்கிறபடி என் பேச்சைக் கேட்டு நடக்க பல முக்கிய ஸ்தர்களும் தொண்டர்களும் இருக் கிறார்கள். அப்படி இருந்தும் ஒரு சிறு பஞ்சாயத்து எலக்ஷனுக்கு நான் நின்றேனென்றாலும் நான் வெற்றிபெற மாட்டேன். இயக்கப் பிரமுகர்கள் பலர் நிலையும் இப்படித்தான். இதிலிருந்து பொதுமக்களிடத்தில் நமக்குச் செல்வாக்கு இல்லை என்று அருத்தமல்ல. இன்றைய தேர்தல் என்பது பாமர மக்களை ஏய்க்கும் ஒரு வித்தை. அதில் தேர்ச்சி பெற முதலில் முன்வரவேண்டும். அதற்கேற்ற துணிவும் தொண்டும் நமக்கு வேண்டும்.
பெருந்தோல்விக்குப் பின்
1937ஆம் ஆண்டில் ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்விக்குப் பின்னர் தான் நம்மை நாம் உணர முடிந்தது. பாமர மக் களிடம் நேரிடை சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றிற்று. ஆகவே, தோல்வியின் காரணமாக நாம் நம்மைத் திராவிடரென்று உணர்ந்திருக் கிறோம்; நம் மக்களிடையே ஒரு புது உணர்ச்சியை ஊட்டி நமது கொள்கை களைப் பயமின்றி எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்து வருகிறோம் திருவாரூர் தீர்மானப்படியே.
சேலத்தில் சென்ற ஆண்டில் நடை பெற்ற நிர்வாகசபைக் கூட்டத்தில் ஜஸ்டிஸ்கட்சி எனப்படுவது திராவிடர் கட்சி என்ற பெயரால் வழங்கப்பட வேண்டு மென்றும், சமுதாயத்திலே பார்ப்பனரல்லாதார் என்ற பெயர் மறைந்து திராவிடர் என்ற பெயர் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றும் சொன்னேன். அதை அநேகர் ஆதரித்தார்கள். வரப்போகும் மாகாண மாநாட்டில் இதுதான் முக்கியமான முதல் பிரச்சினையாக இருக்க முடியும்.
திராவிடர் என்ற மாறுதல் ஏன்?
இப்பொழுது திராவிடர் என்ற மாறுதல் ஏன்? இது பலரும் கேட்கக்கூடிய நியாயமான கேள்வியாகும். அதைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் கூற ஆசைப்படுகிறேன். இந்த நாட்டு மக்களாகிய நமக்கு ஏராளமான குறைபாடுகள் இருப்பது கண் கூடு. அதை உத்தேசித்தே நமது பெரியார்கள் 27 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிக்கட்சியை தோற்றுவித்தார்கள். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் நீதிக்கட்சி என்ற பெயர் இருந்த தில்லை. தெ.இ.ந.உ. சங்கம் எனப்படுவது தான் அதன் பெயர். அந்தக் கட்சிக்காக ஏற்பட்ட ஆங்கிலப் பத்திரிகையின் பெயரே (துரளவஉந) ஜஸ்டிஸ். பத்திரிகையின் பெயரே கட்சிக்கு நிலைத்துவிட்டது. கட்சியின் தமிழ்ப் பத்திரிகைக்குத் திராவிடன் என்ற பெயரிருந்தும் நம் கட்சிக்கு திராவிடர் கட்சி என்ற பெயர் ஏற்படாமல் ஆங்கிலப் பத்திரிகையின் பெயராலே கட்சியின் பெயர் வழக்காற்றில் வந்துவிட்டதற்குக் காரணம் ஆங்கிலம் அறிந்தவர்களே அக்காலத்தில் நம் கட்சியில் செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்ததுதான். அந்தக் காலத்தில் இந்தக் கட்சி எந்த மக்களின் நல்வாழ்விற்காக ஏற்பட்டதோ, அந்த மக்களுக்குப் பெயரென்ன என்ற பிரச்சினை எழுந்தது. ஆனால், திராவிடர் என்ற பெயருக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்காத காரணத்தால் பெரிதும் ஆந்திரர் ஒப்புக்கொள்ளாததால் தென் இந்தியர் என்று ஏற்படுத்திக் கொண் டார்கள்.
தென் இந்தியர், பார்ப்பனரல்லாதார் என்ற இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களைக் கொண் டுள்ளன. உத்தியோகங்களைப் பிரித்துக் கொடுப்பதில் பார்ப்பனரல்லாதார் என்ற பிரிவினை ஒப்புக்கொள்ளப்பட்டதே தவிர, இன உணர்ச்சி ஏற்படவேண்டிய முறையில் ஒப்புக்கொள்ளப்படவில்லை. அந்தக் குறைபாடு நம் மனத்தில் பல நாட்களாகவே இருந்து வருகிறது. தென் இந்தியப் பெருங்குடி மக்களுக்கு லட்சியச் சொல் ஒன்றில்லாமலிருப்பது பெருங்கேடு. இந்தக் காரணத்தாலேயும், அல்லா தார் என்ற பட்டம் நமக்குக் கூடாது என்பதாலேயும், நாமெல்லோரும் ஒரு கூட்டிற்குள் வர வேண்டும் என்பதாலேயும் ஒரு குறிச்சொல் தேவை; மிகமிகத் தேவை. இதைப் பல நாட்களாகவே நான் கூறி வருகிறேன்.
நம் மடமை மடியவேண்டாமா? நம்மை, யார்? என்று கேட்டால், பார்ப்பனரல்லதார் என்று சொல்கிறோம். மற்றபடி நம் நாடு எது? என்று கேட்டால், நமது அருமை நாட்டின் பெயரை மறந்து, பெரிய நிலப்பரப்பின், நமக்குச் சம்பந்த மில்லாத நாட்டின் பெயரை (இந்தியா என்று) கூறுகிறோம்; அதன் காரணமாக இந்தியர் என்றும் அழைக்கப்படுகிறோம். அரசாங்கத் தார் நம்மை மகமதியரல்லாதார் என்று அழைக்கிறார்கள். நம் தொகுதிக்கு அதுதான் பெயர். மேல் நாடுகளாகிய ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், எகிப்து, துருக்கி ஆகிய எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் மொழி, கலை, நாகரிகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் பெயரை வைத்துக் கொண்டு, அதைக் காப்பாற்றவேண்டி மற்றவர்களு டன் போராடியே வந்திருக்கிறது.
ஜெர்மானியன், ஜெர்மனிக்குள் யூதன் ஏன் வாழ்ந்திருக்கவேண்டும்? அவன் நமது நாட்டை ஏன் சுரண்டவேண்டும்? வெளி நாட்டானுக்கு இங்கு என்ன வேலை? வெளி யான் ஏன் நம்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும்? என்ற உணர்ச்சிகளால் உந்தப்பட்டு போராடி வந்ததன் காரணமாக, இன்று ஜெர்மனி உலகில் பெரியதோர் வல்லரசாகவும், மற்ற நாடுகள் கண்டஞ்சும் படியாகவும் இருக்கிறது. நாமேன் அப்படி ஆகக்கூடாது, என் பதைத் திராவிட மாணவராகிய நீங்கள் யோசிக்க வேண்டும்.
திராவிடர் இந்துக்களல்லர்
இனத்தைக் குறிப்பாக வைத்துக் கொண்டு ஒற்றுமைபெற வழியில்லாத வர்கள், சமயத்தைச் சொல்லி அதன் மூலம் ஒற்றுமைப்படுகின்றார்கள். முஸ்லிம்கள் தங்கள் இனம் இன்னது என்று சொல்லா விட்டாலும், தங்களுக்குள்ளே பல இனங்கள் இருப்பதன் காரணமாக, இஸ்லாம் என்ற ஒரு சமயத்தின் மூலம் ஒன்றுபட்டிருக்கின்றனர். உலகத்திலுள்ள பல்வேறு மக்கட் கூட்டத்தினரின் நிலை நாளுக்குநாள் முன்னேற்றமும், ஒற்று மையும் ஏற்படுவதாக அமைந்திருக்க, இந்த நாட்டு மக்களாகிய நாம் நம்மைப் பார்ப்பனரல்லாதார் என்ற பொருளுள்ள வார்த்தையால் அழைத்து கொண்டு இருப்பதால், நம்மிடையே இன உணர்ச் சியும், ஒற்றுமை உணர்ச்சியும் எப்படி ஏற்பட முடியும்? நம் சமயம் இந்துவென்றும், நாடு இந்தியா என்றும், இனம் இந்தியர் என்றும் கூறிவருகிறோம்; இதைத் தப்பு என்று மட்டும் நான் கூறவில்லை. வெறுங் கற் பனையுங்கூட.  இந்து என்று சொல்வதால் நாம் இவ்வளவு பெரிய இனம் பல சிறுசிறு வகுப்புகளாகப் பிரிந்து ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டிருக்கத்தான் முடி கின்றதே தவிர, அவ் வார்த்தையில் வேறென்ன தத்துவார்த்தம் இருக்க முடியும்? 500 அல்லது 600 ஆண்டு களுக்கு முன்னர் எழுதப்பட்ட எந்த நூலிலாவது இந்த நாட்டுப் பெருங்குடி மக்களை இந்து என்று குறிப்பிடப்பட்டி ருக்கிறதா? என்று பண்டிதர்களையே நான் கேட்கிறேன்.
இந்தியாவின் சீர்கேடு
உலக சமுதாயத்தைப் பொதுவாக எடுத்துக் கொண்டால், இவ்விந்திய நாட்டைப் போன்ற நாடு இருந்ததில்லை. இருக்கவு மில்லை. கையிலே வலுத்தவன் மற்றவர் களைச் சுரண்டிப் பிழைக்கவும், உண்ண ஒரு கூட்டமும், உழைக்க மற்றவர்களும் இருக்கும்படியானதுமான சீர்கேடான நிலை ஏற்படத்தான் இப்பெரிய விஸ்தீரணமும் இந்தியா என்கிற பெயரும் பயன்படுகிறதே ஒழிய இந்தக் கண்டத்தின் பல்வேறு இனங்கள் ஒன்றுபடும்படியான அறிகுறிகள் ஏதும் தோன்றவேயில்லை. இவ்வாறு பல்வேறு இனங்கள் 400, 500 மொழிகள் 1000, 2000 வகுப்புகள் பலப்பல கொள்கைகள் பழக்க வழக்கங்கள் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பை ஒரு நாடு (நேஷன்) என்று சொல்வதால் பயனென்ன? என்று யோசிக்க இந்த நாட்டு மேதாவிகளுக்கு அவகாச மில்லை. 4 கோடி, 2 கோடி, 50 லட்சம், 20 லட்சம் என்பன போன்ற எண்ணிக்கை யுள்ள மக்களைக் கொண்ட தனிச் சிறு நாடுகள் நமது ஒரு ஜில்லா 2 ஜில்லா போன்றவைகள் சுதந்திர நாடுகளாக அய்ரோப்பாவிலே இருக்கின்றன. அம்மாதிரி சிறு நாடுகள் சுதந்திர நாடுகளாக இருக்க முடிவது ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை முக்கியமாகக் கருதிய தால்தான். அந்தப்படி இந்திய கண்டத்தில் வாழ்ந்து வரும் தனி இனத்தவராகிய நாம், பிறருடைய சம்பந்தத்தை விட்டு நமக்குரிய இலட்சி யத்தை விடாப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு முன்னேற்றமடைய முயற்சி செய்ய வேண்டும். அதற்காகத்தான் இதை திராவிடர் மாநாடு என்கிறோம்.
மாணவர் மாநாடு - அவசியம்
இறுதியாக, தோழர்களே! மாணவர் மாநாடு எதற்கு இந்த மாநாட்டை மாணவர் மாநாடு என்று ஏன் கூறவேண்டும்? நாங்கள், அதாவது மாணவரல்லாதார் செய்த காரியம் போதும். ஒவ்வொரு பெரியவருக்கும் ஒவ் வொரு ஜோலி வந்துவிட்டது. எக்காலத்திலும், இலாப நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல், கிளர்ச்சியில் தீவிரமாக இறங்கித் துணிந்து தொண்டாற்ற ஒரு கூட்டம் வேண்டும். முந்நாட்களில் தொண்டர் கூட்டத்திலிருந் தவர்கள் இன்று பெரியவர்களாகி விட் டார்கள். லாபநஷ்டம் பார்க்கவேண்டியவர் களாக ஆகிவிட்டார்கள். இது இயற்கை, செடிகள் மரங்களாகி விட்டன. செடிகளை நம்பித்தான் நான் இயக்கப் பணியாற்றி வந்திருக்கிறேன். மரங்களைப் பற்றி நான் கவலை கொள்ளுவதில்லை.
எனவே, இன்றைய திராவிட மாண வர்கள், இளைஞர்கள் நம்முடைய இயக் கத்திற்கு பற்றுதல் கொள்ளவேண்டியதும், மாநாடுகள் நடத்தவேண்டியதும் காலத் தாற் செய்யத்தக்கனவாகும். ஆதலால் மாணவ மாநாடு கூட்டுகிறோம்.
(11.06.1944 அன்று விருதுநகரில் இராமநாதபுர மாவட்ட மாநாட்டைத் திறந்து வைத்து பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு) குடிஅரசு - சொற்பொழிவு - 17.06.1944


Saturday, May 5, 2012

மக்களைப் பகுத்தறிவாளர்களாக்குவதே எமது குறி!


எவன் வரவுக்கு மேல் செலவு செய்கிறானோ அது விபசாரத்திற்கொப்பாகும். நம்முடைய வாழ்க்கையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் மூடக் கொள்கைகளுக்கு இடமளிக் கக் கூடாது. கோவிலுக்குச் சென்று கும்பிட்டு அழுக்குத் தண்ணீரில் முழுகுவதையும், குழவிக் கல்லைச் சுற்றுவதையும் சினிமாவுக்குப் போகும் பழக்கத்தையும் அறவே விட்டுவிட வேண்டும். காட்சிக்காக சொல்ல வேண்டு மானால், பம்பாய், கல்கத்தா, மலேயா போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ள இயற்கை வனப்பைப் பார்த்து பொது அறிவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
பிள்ளை பெறுவதைக் கூடுமான வரையில் குறைத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமான ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால், பள்ளியில் ஒன்று படிக்கிறது, கையில் ஒன்று இருக்கிறது, வயிற்றில் ஒன்று இருக்கிறதைப் பார்க்கிறோம். இப்படி இருப்பதால், பெற்றவர்களுக்கு வேண்டுமானால் ஆசையிருக்கலாம். இதனால் பொது உணர்ச்சி இருக்காது. இதன்மூலம் மனிதனுடைய ஒழுக்க மும், நேர்மைக் குணமும் நாளுக்கு நாள் குறையும். கடன் உண்டாகும். அதன்மூலம் கவலைகள் ஏற்படும். இவ்வளவுக் கும் காரணம் இந்தக் குழந்தைகள்தான். இதனால் தொல்லைபடுவதைவிட கர்ப்பத் தடை செய்து கொள்ளலாம். சர்க்கார் கர்ப்பத்தடை செய்துக் கொள்கிறவர்களுக்கு முப்பது ரூபாய் வீதம் தருகிறார்கள்.
அதை நல்ல முறையில் நாம் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழிக்க வேண்டும். ஒன்றிரண்டு குழந்தைகள் இருந்தால் போதும். அதை நன்றாக வளர்த்து ஒழுக்கமுடையதாக ஆக்க வேண்டும்.
இது ஆனி மாதம். இந்த மாதத்தில் திருமணம் செய்து கொண்டு பங்குனி மாதம் முடிந்த பிறகு நான்கு மாதமாகியும் இன்னும் குழந்தைப் பிறக்கும் அறிகுறி தெரியவில்லையே என்று கவலைப்பட்டு ராமேஸ்வரம் அழைத்துப் போய் குழவிக் கல்லை சுற்ற வைப்பார்கள். குழந்தை பிறப்பதற்கும் ராமேஸ் வரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சிந்திப்பதே இல்லை. நம்முடைய சமுதாயத்தைத் திருத்துவதற்கென்று துணிந்து நிற்பவர்கள் நாங்கள். மனிதனுடைய அறிவைக் கெடுத்து அடிமைத் தனத்தை உண்டாக்குகின்ற சாஸ்திரம், வேதம், புராணங்களை ஒழிக்க வேண்டும். கடவுள் தன்மை களை அழித்து ஒழிக்க வேண்டும். ஜாதி, மதப் பூச்சாண்டியை நாட்டை விட்டே துரத்த வேண்டுமென்று முதன்முதல் சொன்னபோது இந்த நாட்டில் எங்களுக்குக் கிடைத்தது சாணி அடி, முட்டையில் மலத்தை ஊற்றி அடிப்பான். இதை எல்லாம் அனுபவித்தவர்கள் நாங்கள். எதற்காக இவ்வளவு தொல்லைக்கும் பாடுபட்டு வருகிறோம்? எனக்குப் புள்ளைக் குட்டி ஒன்றும் கிடையாது. இருப்பதை வைத்துக் கொண்டு  சுகமாக வாழலாம். அரசியல் கட்சிக்காரன் புரட்டுக்கும் பார்ப்பானுடைய வசைவுக்கும் மதவாதிகளுடைய எதிர்ப்பிற்கும் ஈடு கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வளவு தொல்லை களுக்கும் சளைக்காமல் பாடுபடுவது யாருக்காக என்பதை நீங்கள் நன்கு உணர வேண்டும்.
நம்முடைய சமுதாய நிலைக்கு அதன் கேடுகளை உணர்ந்து காரியம் செய்யக் கூடியவர்கள் ஒருவரும் கிடைக்கவில்லை. இப்பொழுது அரசியலில்  காமராசர் வந்ததும் ஓரளவு நன்மை செய்கிறார். அதைக் கண்டு இந்தப் பார்ப்பனர்கள் கச்சைக் கட்டிக் கொண்டு ஒழிக்கப் பார்க்கிறார்கள். அவரும், அவருக்கிருக்கும் எதிர்ப்புகளை எல்லாம்  சமாளித்துக் கொண்டு நமக்கு ஓரளவு நன்மை செய்கிறார். காரணம் என்ன? காமராசருக்கு குடும்பம் இல்லை. புள்ளைக் குட்டி ஒன்றும் கிடையாது. தனி மரம். அதனால்தான் எதையுமே இலட்சியம் செய்யாமல் துணிந்து காரியம் செய்ய முடிகிறது.
ஒரு மனிதன் தனக்காக பிறக்கவில்லை. தன்னால் மற்றவர்களுக்கு என்ன நன்மை செய்தோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து செயல் புரிவதுதான் மனிதத் தன்மை ஆகும்.
நம்முடைய நாட்டில் பொது வாழ்க்கை என்பது பொறுக்கித் தின்பது என்று ஆகிவிட்டது. அது மட்டுமல்ல, மதம், அரசியல், கடவுள், வேதம் என்று இருப்பதெல்லாம் மக்களை ஏமாற்றி கிடைத்தவரையில் சுரண்டி வாழ்வதற்காக ஆகும். இதை விளக்கி எவ்வளவுதான் சொன்னாலும் கவலை எடுத்து சிந்திப்பதில்லை. சிந்தித்துப் பார்த்து எந்த காரியத்தையும் செய்தால்தான் தெளிவு ஏற்படும். ஆகவே, என் அபிப்பிராயத்தை இந்த திருமணத்தின் மூலம் சொன்னேன். அவற்றை அப்படியே நம்பி விடாதீர்கள். நீங்கள் மனிதர்கள், உங்களுக்கு பகுத்தறிவு இருக்கிறது. அதிலே இதை ஆராயுங்கள். அதன் முடிவை பாருங்கள். தப்பு என்று பட்டால் விட்டு விடுங்கள். சரி என்று பட்டால் பகுத்தறிவுள்ள மனிதர்களாவதற்கு முன்வாருங்கள் என்று கூறினார்.
(9.7.1962 அன்று சோழபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - விடுதலை 21.7.1962.)

Friday, May 4, 2012

பார்ப்பனர் பார்வையில் பொங்கல்!


பொங்கல் விழாவைத் தமிழர் திருநாள் என்றும், உழைப்பின் உயர்வை உலகுக்கு அறிவிக்கும் நாள் என்றும், தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து, அவ்விழாவிற்கு நாட்டில் ஒரு மரியாதையை ஏற்படுத்தினார் .
ஆனால், அதையும் விட்டுவைத்தார்களா இந்த பார்ப்பனத் திமிங்கலக் கூட்டம்? அதனிலும் மதச் சேற்றைப் போட்டுக் குழப்பி; சங்கராந்தி என்றும் பெயரிட்டு, தங்கள் முத்திரையைக் குத்தி வைத்து இருக்கின்றனர்.
அந்த மாற்றத்தை இதோ கேளுங்கள்: சூரியன் தனு ராசியில் சஞ்சரிக்குங் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிராமே சக்தி எனும் சக்தி தக்ஷிணாயன ஆறு மாதத்தில்  மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கினதால் தை முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப்பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களை புலியுருவமாய் அது செய்திருந்தப்படியால், அப்பசுக்களைக் கொண்டு, அப்புலியுரு கொண்ட சக்தியை ஒட்டின நாள். இதனை மாட்டு பொங்கல் என்பர்.
இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பன். ஆதலால், அவன் செய்த நன்மை பொருட்டு தை மாதம் முதலில் அறுத்த, முதற்பயிரை மழைக்கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்த பின், அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெரு மழை பெய்விக்க, குடிகள் நிலை குலைந்து மாடுகள், கன்றுகளை இழந்து தடுமாற கண்ணன் கோவர்த்தனம் எடுத்து மக்களைக் காத்தனர் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கிராந்திக்கு முன்னாள் அவன் பெயரால் பண்டிகை செய்வித்தனர். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத்  தளை அவிழ்த்துவிட்டுக் களித்தன்மையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகா சுகங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண் பொங்கல் எனவும் கூறுவர்.
இவ்வாறு அறிவுக்குப் பொருத்தமற்றவைகளை எல்லாம் புராணங்களின் பேரால் புளுகித் தள்ளியுள்ளனர் இந்த பார்ப்பனர்கள். மழை பொழிவதாம் - அதை மலையைக் குடையாக்கித் தடுப்பதாம்! கேழ்வரகிலே நெய் வடிகிறதாம் - பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள்! தமிழர்களே! அதை நம்பப் போகிறீர்களா? - தந்தை பெரியார்
(இந்து மதப் பண்டிகைகள் நூலிலிருந்து எடுக்கப்பட்டது, பக்கம் 39)