Monday, February 24, 2014

மனித வாழ்க்கைக்கு இன்றைய மதமும், கடவுளும் போதியதாகாது

மனித சமுதாயத்தின் கூட்டு வாழ்விற்கு ஒரு கடவுள் என்பதும், அதை 
அடையும் மார்க்கம் (மதம்) என்பதும் அவசியம் என்று முன்னோர்கள் 
கருதினார்கள். ஏனெனில், மனித சமுதாயத்தார் கூடி வாழும் பிராணி 
களாவார்கள். அப்படிப்பட்ட கூட்டு  வாழ்க் கைப் பிராணிக்கு ஒரு நடப்பு 
முறை தேவை யாகும். அதாவது ஒரு சங்கம் என்றால், அதற்கு எப்படி ஒரு 
நடப்பு  முறைத் திட்டம் தேவையோ, ஒரு விளையாட்டு நடப்பு என்றால், 
அதற்கு நியதி தேவையோ, அதுபோல் பல மக்கள் சேர்ந்து வாழும் ஒரு 
சமுதாயத்துக்கும், விதிமுறை தேவை யாகும். அந்த நடப்பு முறை 
விதிகள்தான் மதம் என்றும், நெறி என்றும், மார்க்கம் என்றும் 
சொல்லப்படுவதாகும். அப்படிப் பட்ட மார்க்கமும், நெறியும்
தவறிப்போகாமல், அதற்குக் காப்பு அளிக்க ஒரு நிர்ப் பந்தம், நிபந்தனை 
இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
எப்படியெனில் ஓர் அரசாங்கமானது, மக்களை அடக்கி ஆளவும், மக்கள்
அவ்வடக்குதலுக்கு அடங்கி நடந்து வரவும், விதி, சட்டம், நீதிமுறை 
ஆகியவை செய்யப்பட்டு இருந்தாலும், அச்சட்டத் திலேயே இந்து சட்டப்படி, 
விதிப்படி, நீதிப்படி நடக்காவிட்டால், மீறி நடந்தால் அதற்கு தண்டனை 
இன்னது என்பதாக நிபந்தனையும் ஏற்படுத்தி, நிபந்தனை விதிக்க நீதிபதியும், 
அந்நிபந்தனை சரிவர ஈடேற கோர்ட்டு, ஜெயில், அபராதம் முதலி யவையும் 
இருப்பது போல் மதநெறியை மீறி நடக்காமல் இருப்பதற்காக வேண்டி 
கடவுள் தண்டிப்பார். அதற்கான மோட்சம், நரகம் என்பதாக மனிதனைப் 
பலப்படுத்தக் கடவுளையும் கற்பிக்க வேண்டியது அவசியம் என்று 
கண்டு பிடித்தார்கள்.

ஏனென்றால், இப்போது எங்கும் அரசாங்கமே இருந்து வந்தும் கூட, அரசாங் 
கத்துக்கு மக்களை அடக்கி ஆள சட்டம் இருந்தாலும் கூட, அரசாங்கத்திற்கு 
அதிக கஷ்டம் இல்லாமல் மக்களைத் தாங் களாகவே பயந்து ஒழுங்காய் 
நடக்கும்படி செய்ய எந்த அரசாங்கமும், மதத்தையும், கடவுளையும் பிரச்சாரம் 
செய்து மக்களை அவற்றிற்கு, ஆளாக்கி வருகிறது என்றா லும், மனித 
சமுதாயத்தை அதன் எல்லாக் காரியங்களையும் சட்டத்தினாலேயே அடக்கி 
ஆண்டு விட முடிவதில்லை. உதார ணமாக சர்க்கார் அறியாமல் சட்டத்தில் 
பட்டுக் கொள்ளாமல், மனிதன் பல தவறுதல் களைச் செய்யலாம். 
சமுதாயத்துக்குப் பல கடமைகளைச் செய்யாமல் விட்டும் விடலாம்.

இப்படிப்பட்ட காரியங்களுக்குச் சட் டமும், தண்டனையும் ஏற்படுத்த, பயன் 
படுத்த முடியாது. ஆகையால் மனிதனை தானாகவே பயந்து நடக்கும்படி 
செய்ய, அவன் எளிதில் புரிந்து கொள்ள முடியாத படியான மதமும், கடவுளும் 
பயன்படும் என்று கருதினார்கள். அந்தக் கருத்தில் ஏற்பட்ட அவை மிகமிகப் 
பாமரத் தன்மை யில் இருந்த காலத்தில் ஏதாவது பலன ளித்து 
வந்திருக்கலாம். ஆனால், அவை அதாவது அன்றைய மதமும், கடவுளும் 
இன்றைக்குப் போதுமானதாக பயன் அளிக் கக் கூடியதாக இல்லாமல் 
போய்விட்டது.

அரசாங்க சட்டத் திட்டங்கள் மனிதர் களுடைய தன்மைக்கும், அவர்களுக்கும், 
அறிவு வளர்ச்சிக்கான நிலைக்கு, காலத் தினுடைய மாறுபாட்டிற்கு 
அக்கம்பக்கத் தின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல மாற்றி யமைக்கப்படுவது 
போல் இவையும் காலத்துக்கு, நிலைக்கு ஏற்ப அமைக்கப் பட்டு 
வரவேண்டியது அவசியமாகும்.
ஒரு கடவுள் கற்பனையானது மாறி, இன்று இந்நாட்டில் பல கடவுள்களும், 
ஒரு மதம் மாறி பல மதங்களும் மலிந்து விட்டன. இவை பெரிதும் 
உண்மையில் மனித சமுதாய நல்வாழ்வுக்காகவே ஏற்பட்டவை என்று நாம் 
கருதலாம் என்றாலும், இப்ப டிப்பட்ட பலப்பல என்பவை காலக்கிரமத் தில் 
பலரின் சுயநலத்துக்காகவும், சூழ்ச்சிக்கு ஆகவும் ஏற்படுத்தப்பட்டவை என்று 

வலிந்து சொல்ல வேண்டியவையாய் இருக்கின்றன என்ற போதிலும், 
இன்றுள்ள மதங்களும், கடவுள்களும் இன்றைய மக்களை அவர்களுடைய 
இன்றைய அமைப்புக்கு ஏற்றபடி, அதாவது இன்றைய மக்களுக்கும், 
சமுதாயங்களுக்கும் இயற்கை யாக ஏற்பட்டுள்ள ஆசாபாசம், அறிவு, ஆற்றல், 
வசதி, வாய்ப்பு, சுற்றுச்சார்பு சூழ் நிலை ஆகியவற்றுக்கு ஏற்றபடி மக்களை 
அடக்கிப் பயப்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு, நலனுக்கு, எல்லையற்ற 
அமைதியான வாழ்வுக்கு பயன்படப் போகிறதாக இல்லா தவையாகி விட்டன.

எப்படியெனில் மனிதன் பிறவியில் மற்ற ஜீவன்களைவிட அதிகமான அறிவுத் 
திற மையும், சிந்தனையும், சக்தியும் கொண்ட வன் என்பதோடு மனிதனுக்கு 
அவை நாளுக்கு நாள் மாறுதலும், வளர்ச்சியும், அனுபவ ஞானமும், 
ஆற்றலும், உண்டாக் கக் கூடியவையாகவும் இருந்து வருகின்றன. 
அப்படிப்பட்ட ஓர் உயர் பிறவியான மனித சமுதாயம், பகுத்தறிவு, அனுபவ 
ஞானம், ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு மேம் பாடான நிலையை 
அடைந்து கொண்டு போகாமல், பகுத்தறிவும், சிந்தனா சக்தியும் அற்ற மிருகத் 
தன்மையைவிட மோசமான தன்மையைக் கொண்டு தன்னைத் தானே 
பாதுகாத்துக் கொள்ளக் கூடச் சக்தியற்றதாக, போதிய உதவி பெற வாய்ப்பு 
இல்லாமலும், சதா கவலையுடன் வாழ்ந்து மடிய வேண் டியிருக்கிறது 
என்றால், அதுவும் இப்படிப் பட்ட நிலை ஏற்படாமல் இருப்பதற்கென்றே பல 
மதங்களும், பல கடவுள்களும் இருந்தும் இந்த மாதிரியாகப் பயனற்று மனித 
வாழ்க்கையானது காட்டில் துஷ்ட ஜந்துக்களிடம், சாது ஜந்துக்கள் எப்படி 
பயந்து ஒடுங்கி மறைந்து வாழ்கின்றனவோ, எல்லைக்கும், பலத்திற்கும், 
துன்பத்துக்கும் ஆளாக்கி  மடிவதுடன் மனிதனுக்கு மனிதன் அன்பற்று ஆதரவு 
செய்வதற்று மனிதனை மனிதன்  தின்று வாழ்கிறான் என்றால், இதற்கு 
ஏதாவது காரணம் இருந்துதானே தீர வேண்டும்? அல்லது இந்தக் கடவுளும், 
மதமும் பலனிக்க வில்லை என்று தானே கருத வேண்டும்?

இந்நிலை ஏற்பட்ட இன்றுகூட நாம், மதம் மனிதனை நல்வழியில் நடத்திச் 
செல்வதாகும், கடவுள் மனிதனுக்கு நல்வழி யும் நல்வாழ்வும்  கொடுத்து 
மனிதனது சர்வ நடத்தைக்கும் காரணபூதமாய் இருந்து நடத்திக் காப்பதாகும் 
என்று தானே கருதுகிறோம். மனிதனுக்கு அவனுடைய பகுத்தறிவு அனுபவ 
ஞான ஆற்றல் தவிர, இப்படிப்பட்ட பலமான இரண்டு சாதனங் கள் அதாவது 
மதமும், கடவுளும் இருந்தும் மனிதன் மேற்காட்டியபடி கீழ்மகனாய் 
இருக்கிறான் என்றால், இன்றுள்ள மேல் குறிப்பிட்ட மதங்களும், 
கடவுள்களும் பயன்படவில்லை என்றும், அவை மக் களைச் சரியாய் நடத்தப் 
போகிறதாய் இல்லை என்ற காரணம் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்? 
அல்லது இன்றைய மனிதத் தன்மையானது, இப்போதைய மதமும், கடவுளும் 
ஏற்பட்ட காலத்தில் இருந்த தன்மையை விட அதிக மாற்றமான தன்மை 
பொருந்திய ஒரு மேல் நிலையில் அமைந்து விட்டது என்றாவது சொல்லித் 
தானே ஆக வேண்டும். தலை பெருத்து விட்டது என்றாலும் சரி, அல்லது 
குல்லாய் (தொப்பி) சுருங்கி விட்டது என்றாலும் சரி, அதன் முடிவு தலைக்கும், 
குல்லாய்க்கும் பொருத்தமில்லை போதுமானதாக இல்லை என்பதாகத்தான் 
ஆகும்.

ஆகையால், 1948ஆம் வருடத்து ரயில் வேலையில், நேரக் குறிப்பு. 1949ஆம் 
ஆண்டுக்கு எப்படிச் சரியானதாக இருக்க முடியாதோ, அதுபோல், சென்ற 
நூற்றாண்டு என்று மாத்திர மல்லாமல், சென்ற பல நூற்றாண்டுகளுக்கு முன் 
ஏற்பட்ட மதங் களும், அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்பிக்கப் பட்ட 
கடவுளும், கடவுள் களும் இன்றைய விஞ்ஞானக் காலமாகிய 20ஆம் 
நூற்றாண்டுக்குப் பொருத்தமா யிருக்கும் என்று எதிர்பார்க்கலாமா? 
எதிர்பார்க்க முடியுமா?

மற்றும் இன்றுள்ள அப்பழைய மதத் துக்கோ, கடவுளுக்கோ, சமுதாய நெறி 
களுக்கோ மனிதத் தன்மைக்கோ ஒரு கடுகு அளவு சக்தி இருந்தாலும், 
காந்தியாரை ஓர் இந்து (ஆரிய) மதத்தைச் சேர்ந்தவன், அதிலும் பார்ப்பனன் 
(தன்னை உயர்பிறவி என்று சொல்லிக் கொள்பவன்) அதிலும் படித்த (பி.ஏ. 
படித்த) பார்ப்பனன், அதிலும் ஓர் இந்து மதத் தத்துவத்தில் பிடிவாதப் பற்றுள்ள 
பார்ப்பனன், அதிலும் இந்து மதத்தைக் காப்பதற்கு என்று ஏற்பட்ட சங்கத்தைச் 
சேர்ந்த பார்ப்பனன் இந்து மதத்தைக் காப்பதற்கு ஆக என்று கருதி சுட்டுக் 
கொன்றிருக்க முடியுமா? அதிலும் மிகக் கொடுமையான, மூர்க்கமான, 
வஞ்சக மான தன்மையில் எதிரில் நின்று அவருக்கு வணக்கம் காட்டி, பதில் 
வணக்கம் காட்டப் படும்போது, வள்ளுவர் அங்க இயலில் கூடாநட்பு என்ற 
அதிகாரத்தில் தொழுத கை யுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்துஎன்று கூறியிருக்கும் குறளுக்கு ஒப்ப 
காந்தியாரை கோட்சே கும்பிட்ட, கூப்பிய கைக்குள்ளாகவே ஆயுதத்தை 
வைத்திருந்து, அவரைக் கும்பிடுகிற பாவனை யிலேயே கொலை பாதகத் 
தன்மையை அடக்கி வைத்துக் கொண்டு அவரைச் சாகும்படி சுட்டுக் 
கொன்றிருக்க மாட்டான்.

குறிப்பு: இக்குறளின் கருத்து, நட்புக் கொள்ளத் தகுதி அற்றவர்களை நட்பாகக் 
கொண்டால், கும்பிடுகிற கைக் கூப்புத லிலேயே ஆயுதம் வைத்துக் 
கொல்லும் துரோகத்தைச் செய்வார்கள்.
அவர்கள் அழுவதாக பாவனை காட்டி, சிந்தும் கண்ணீரிலேயே விஷத்தைக் 
கொட்டி, நம்மைக் கொல்ல வகை செய்வார்கள்.
(குறிப்பு:  வள்ளுவர் கோட்சேயின் பக்கத்தில் இருந்து, அவன் காந்தியாரைக் 
கொன்ற முறையைப் பார்த்தும், அந்த ஜாதியின் இன்றைய தன்மையை 
நன்றாய் உணர்ந்தும், இன்றைய மக்களுக்கு அறிவு றுத்த நேற்று எழுதியது 
போல் இல்லையா, இந்தக் குறள்?)

இதன் கருத்து என்னவென்றால், கடவு ளையும், மதத்தையும் உண்டாக்கிக் 
காப் பாற்றிப் பிரசாரம் செய்து வருகின்றது. கடவுளுக்கு சமமான ஜாதி என்கிற 
பார்ப் பனர்களுக்கே அவர்கள் உண்டாக்கிய கடவுளும், மதமும் பயன்படாமல் 
அவர் களைக் கொலை ஜாதியாக ஆக்கி விட்ட தென்றால், அவை மற்றவர்க்கு 
அன்பு, ஒழுக்கம் உண்டாக்கப் பயன்படுமா என்ப தாகும். அதுபோலவே 
கடவுள், மதங்களுக் குச் சிறிதளவு சக்தி அல்லது ஆற்றலி ருந்தாலும், 
இன்றைய மனித சமுதாயத்தில் 100-க்கு 100 பங்காக இவ்வளவு நாணயக் 
குறைவு, அன்புக் குறைவு, நன்றி அறிதல் குறைவு ஆகியவை 
மலிந்திருப்பதுடன், மனிதனை மனிதன் தனது வாழ்வுக்கு வஞ்சித்து பதறப் 
பதற இம்சித்துக் கொன்று வாழ வேண்டிய அவசியம் தவிர்க்க முடியாத 
தன்மையில் இருக்க முடியுமா?

இன்றைய மக்களில் மதவெறியும், மதப் பிடிவாதமும், கடவுள் பக்தியும், 
தொண்டும் இல்லாத மக்கள் 100-க்கு ஒருவர் வீதமாவது காண முடியுமா? 
மதத்தின்படி வேஷம், வாழ்க்கை இல்லாதவர்கள் 100-க்கு 5 பேர் 
வீதமாகவாவது இருக்கிறார்களா? அது போலவே கடவுளுக்கு வணக்கம், 
பூசனை, கொண்டாட்டம், உற்சவம் ஆகியவற்றில் ஈடுபடாதவர்களோ, 
அவற்றுக்காகப் பணம், நேரம், ஊக்கம், செலவு செய்யாதவர்களோ 100-க்கு 10 
பேர்களாவது இருக்கிறார்களா? இப்படியாகப் பெரும்பான்மை மக்கள் கடவுள், 
மதப் பற்றில் நம்பிக்கையில், நடப் பில் ஈடுபட்டிருந்தும், பல்லாயிரக்கணக் 
கான கோவில்கள், பல லட்சக்கணக்கான பிரார்த்தனை ஸ்தலங்கள், கடவுள் 
சிலைகள் இருந்தும், அவற்றுக்குச் சதா சர்வ காலமும், மனிதன் 
உணரும்படியாகச் செய்ய பல தன்மையில் பிரசாரம் இருந்து வந்தும், ஏன் 
அவை பலன் கொடுக்கவில்லை? இதிலி ருந்து நாம் முன் கண்டபடி 
இப்போதைய மதங்களும், கடவுள்களும் இன்றைய மனித வர்க்கத்துக்குப் 
போதிமரமாக இல்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.

அதையும் மற்றொரு விஷயத்தையும் பார்த்தோமானால், அதாவது சர்க்கார் - 
அரசாங்கத் தன்மையையும் பார்த்தோமா னால், அதுவும் இன்றைய 
தன்மைக்குப் போதாது என்று தான் படும். அதாவது மக்களை அடக்கி ஆள 
இப்போது இருந்து வரும் சர்க்கார் சட்டங்களும், ஜெயில்களும், 
நிருவாகங்களும் போதவில்லை. இதற்கு உதாரணம், சில நாள்களுக்கு முன்பு 
மக் களுடைய சமாதானத்துக்கும், ஒழுங்குக்கும் பொறுப்பாளியான 
மந்திரியார் தனது அறிக்கைவொன்றில், ஜெயில்கள் நிருவாகத்துக்குப் 
போதியதாக இல்லை. மாகாணத்தில் உள்ள ஜெயில்கள் யாவும் நிரம்பி 
விட்டன. ஜெயிலுக்குப் போவதை மக்கள் பெருமையாய், வீரமாய்க் கருது 
கிறார்கள் என்று சொல்லித் தன்னால் இன்றைய சட்டங்களைக் கொண்டு நிரு 
வாகம் செய்ய முடியாமையைக் கண்ணிய மாய் தெரிவித்துக் கொண்டிருக் 
கிறார். மனிதனுக்கு மத ஒழுக்கம் இல்லாமல் போய், கடவுள் பயமும் 
இல்லாமற் போய், சட்ட மரியாதையும் இல்லாமற் போய், ஜெயில் பயமும் 
இல்லாமற் போய் விட்டது என்றால் சமுதாய வாழ்வு என்ன ஆகும்?

இந்தக் கேவலத் தன்மை பற்றி மக்களை வஞ்சித்து ஊரார் உழைப்பில் உண்டு 
வாழும் சோம்பேறிக் கூட்டத்திற்குள் கவலையிருக்காது. இந்த நிலை அப்படிப் 
பட்டவர்களுக்கு நல்லதும் இலாபமானது மாகும். ஆனால், பாடுபடும் மக்கள் 
அப்பாட் டின் நன்மையை அடைய முடியாமல், முழு நேரம் பாடு பட்டும் அரை 
வயிற்றுக் கஞ்சிக்குப் போதியன பெறுவதற் கில்லாமல் 
அவதிப்படுபவர்களும், மானத்தோடும், மரியாதை யோடும், நேர்மையோடும் 
வாழ வேண்டுமென்று கருதிக் கொண்டு இருக்கும் மக்களுடைய கதி என்ன 
ஆவது?

எண்ணெய் விளக்குக்குப் பதில் எலக்டி ரிக் விளக்கு போட்டுக் கொள்ளுவது 
போலும், எருமை  மாட்டு வண்டிக்குப் பதில் ஏரோப்ளேனில் போவது 
போலும், நம் காட்டுமிராண்டி மதம், கடவுளுக்குப் பதில் உண்மையில் அன்பு, 
சத்தியம், அருள் ஞானம், அருளக்கூடிய நெறியும், இறையும் அவசியமாகும். 
அதோடு கூடவே, ஒரு நீதியும், நேர்மையும்  கொண்ட நல்ல ஆட் சியும் நமக்கு 
அதிவிரைவில் வேண்டிய தாகும்.

அந்தப்படி விரைவில் ஏற்படாவிட்டால், மனித சமுதாயம் பாழுங் காட்டில் 
துஷ்ட மிருகங்களுக்குப் பயந்து சாது மிருகங்கள் மறைந்து வாழ்ந்து கொண்டு 
நாளாவட்டத் தில் அத்துஷ்ட ஜந்துக்களுக்குச் சாது ஜந்துக்கள் இரையாகி 
வருவது போல இரையாக வேண்டி வரும். ஆகையால், இன்றையக் 
கடவுளும், மதமும் மாற்றப் பட்டே ஆக வேண்டும். முடியாவிட்டால் 
அழிக்கப்பட்டு ஆக வேண்டும்.

- விடுதலை நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை 
(விடுதலை - 20.11.1954)