Sunday, September 25, 2011

திராவிடர் என்பது - ஏன்?


தலைவர் அவர்களே! மாணவர்களே!
இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்தமானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது.
ஆனால் படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப்படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களி டத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகி விட்டது.
உங்கள் படிப்பின் தன்மை
முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருது வதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக என்று சொல்லப் படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல்லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதாவது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படுகின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர்களுமாகி விடுகிறார்கள். மாணவர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர்களாகவே இருக்க வேண்டியவர் களாகிறார்கள். உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வான சாஸ்திரம், உடற்கூறு, உலோக விஷயம் முதலியவைகளில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூடநம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, ராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்றவண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக் கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.
நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாததுமான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவதில்லை. சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் ஆகிய வர்களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறை களும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100க்கு 90 மாண வர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கர வர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞானசாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம் இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மை யென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர்களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம் பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப் படிப்பாகப் போய்விட்டது.
படிப்பால் ஏற்படும் பயன்
இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள்ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு சொல்லுவதால் கேடு எதுவும் எற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை.
ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள்
உங்களுக்கு உபாத்தியாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதினாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக்கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும் புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர் கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமையாவது காலப்போக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறை பாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரி யானதும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்கு ஆகத்தான்.  எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.
திராவிடர் கழகம் ஏன்? இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படு கிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்கவேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங் களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சி யையும் கெடுக்கப் பார்ப்பார்கள்.
இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களு மாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினை வுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. இதுகூட ஏன்? இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டுவருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச் சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகி றோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினை வுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலை என்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென் படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?
நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக் குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒருகூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக் குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ளுவ தாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.
எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்கு முள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக் கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிராமணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.
அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்ஜியம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டிய தில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல் லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்து விட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?
சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவை எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும்.
திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக்குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத் தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய் விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவை  அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமி யனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண் யுடவை நசித்துதான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும்.  சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச் சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவை  இன்றைக்கும் அப்படியே பின்பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சி யால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவை மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளை ஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக் கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள்.
அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறு வீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல் வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவை களைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக்கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார். 
 (09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)
                                                                                                                                           குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945

Sunday, September 11, 2011

ஜவகர் பேரால் காங்கரசாரின் அட்டூழியம்


ஈரோடு- பண்டித ஜவகர் காஷ்மீர் சமஸ்தானத்தில் கைதியானதை முன் னிட்டு 21.6.1946இல் ஈரோட்டில் காங் கிரஸ்காரர்கள் ஓர் ஊர்வலம் நடத் தினர். கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ள விரும் பியும் காங்கிரஸ்காரர்களால் புறக் கணிக்கப்பட்டார்கள். எனவே அவர் கள் தனியாக ஓர் ஊர்வலம் நடத் தினர். காங்கிரஸ்காரர்கள் கடைய டைப்பு நிர்ப்பந்த வேலையிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர்.

நமது இயக்கத் தோழரான லூர்து சாமி அவர்களின் கடைக்குச் சென்று கடையை மூடவும், கறுப்புக் கொடியை இறக்கவும் பலாத்கார முறையைக் கையாள முயன்றனர். ஆனால் அவர் கள் முயற்சி ஈடேறாமல் போகவே கறுப்புப் புடவை அணிந்திருந்த தோழா லூர்துசாமியின் தங்கையைக் கண்டு, கறுப்புப் புடவை அணிந் திருக்கும் பெண்கள் விபசாரிகள் என்று கூக்குரலிட்டும், கண்ணியமற்ற முறையில் கேவலமான முறையில் பேசியும் சென்றனர்.

மேலும் ஈரோட்டுத் திராவிட கழகத் தலைவர் தோழர் ஈ.வீ.பழனி யப்பா அவர்களின் கடைக்குச் சென்று காலித்தனமாகப் பேசி, கடையை மூடச் செய்தனர். ஓரு முஸ்லிம் தோழர் கடைக்குள் எறிச்சென்று கொள்ளை யடிக்க முயலுகையில் அவர்கள் பலாத்காரத்துக்குத் துணிந்தவுடன் கைகலப்பு நேரும் போலிருந்ததைக் கண்ட காங்கரஸ் காலிகள் பயந்து பின்வாங்கினார்கள்.

ஓரு மாம்பழக்கடைக்குள் சூரை யாடி, கடைக்குள்ளிருந்த நீர் மோரைக் குடித்துவிட்டு மோர்ப் பானையையும் உடைத்தனர். நஷ்டத்திற்குக் காந்தி கணக்கில் எழுதிக் கொள்ளக் கடைக் காரனுக்குக் காலிகள் யோசனை கூறியது குறிப்பிடத்தக்கதாகும். வீதி யில் வந்துகொண்டிருந்த இரண்டு மாம்பழ வண்டிகளிலிருந்த மாம்பழங் களைக் காலிக் கூட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சூரையாடியதோடல்லாமல் வண்டிக்காரர்களையும் துன்புறுத்தினர்.

மகாசன உயர்நிலைப் பள்ளியி லும், நாட்டாண்மைக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் சென்று வற்புறுத் திப் பள்ளிகளை மூடச் செய்ததுமின்றி ஆசிரியர் சிலரைக் கல் கொண்டு தாக்கினர். அரசியலார் ஆசிரியப் பயிற்சிப் பெண் பாடசாலைக்குச் சென்று கட்டிடத்தின் மதிலின் மேலே றிக் கல்லாலடித்தும், காலித்தனமாகப் பேசியும், மங்கையர் மனம் நோகும் வண்ணம் செய்தனர்.

ஆரம்பப் பள்ளி யிற்சென்று ஆசிரியர்களையும் மாணவ மாணவிகளையும் பயமுறுத் திப் பாடசாலையை மூடச் செய்தனர். ஈரோட்டுத் தோழர் மீனாட்சி சுந்தர முதலியார் பி.ஏ., எல்.டி. அவர்கள் மேற்பார்வையில் நடைபெறும் கலை மகள் கல்வி நிலையத்தில் காலிகள் புகுந்து 4, 5, 6 வயதுச் சிறுமிகளைப் .... வெளியே போகச் செய்து, பள்ளியை மூடவும் செய்தனர். சிறுமிகள் அச்சத் தின் மிகுதியால் அலறி அழுத காட்சி காண்பாருக்கும் கடுஞ்சினத்தை மூட்டியது.

மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தனித்துச் செல்கையில் அவர்களைத்தாக்க காலிகள் முயன் றனர். இன்னும் பல கடைகளை பலாத் காரமாக மூடச் செய்தும், வண்டிகளை வழிமறித்தும் வண்டிகளில் வந்த பெண்களைக் கீழே தாக்கியும் பல அட்டூழியங்களைச் செய்தனர்.

இக்காலிகளின் செயல்களைக் கண்ட பொதுமக்கள் மனம் புண்பட்டு மிகவும் ஆத்திரமடைந்தனர். 23.6.1946 இல் பாரதி வாலிபர் சங்கத்தின் ஆண்டு விழாவில் சொற்பொழி வாற்றிய தோழர் மீனாட்சி சுந்தர முதலியார், காங்கரஸ் காலிகளின் அட்டகாசச் செயல்களை, சிறப்பாக அவர் ஆதரவில் நடைபெறும் கலை மகள் நிலையத்தில் நடைபெற்ற அட்டகாசத்தை வன்மையாகக் கண் டித்துப் பேசினார் என்றறிகின்றோம்.

இதே மாதிரியாக பல ஊர்களிலும் ஜவகர் கைதியானதைக் காணரமாக வைத்துக் கொண்டு காலிகள் அட்டூழி யம் நடத்தியுள்ளார்கள். மதுரையில் காலிகளின் அட்டகாசம் விருப்பப் பூசலைக் கிளப்பிவிட்டு அதனால் சுமார் 12 பேர்கள் துப்பாக்கியால் சுடப் பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் இறக்கும் வண்ணம் செய்துள்ளது. இம்மாதிரியாகக் காலித்தனம் நடை பெறுவதற்குத் திராவிட நாட்டைப் பொறுத்த வரையில் பார்ப்பனர்களின் சூட்சிதான் காரணம் எனக் கருத வேண்டிய நிலையிலிருக்கின்றோம்.

திராவிட நாட்டில் தோழர் காமராஜ நாடார் போன்றவர்களும் ... இனப்பற்று கொண்டுள்ளதைக் கண்ட பார்ப் பனர்கள் வருங்காலத்தில் தங்கள் இனம் மேன்மையுற்று வாழ வழி யில்லாமல் போகுமோ என அஞ்சி பல சூழ்ச்சிகளைக் கையாண்டு திரா விடர்களின் ஒற்றுமையைக் குலைப்ப தற்கே இம்மாதிரியான காலித்தனம் நடக்கத் தூண்டிவிடுகின்றனர்.

உள்ள படியே காலித்தனம் செய்கின்ற திரா விடர்கள் தங்கள் வருங்கால நிலை மையை உணராத காரணத்தால் கயமை நிறைந்த பார்ப்பனர் காட்டும் பாதையில் கவனத்தை செலுத்தி நடக் கின்றார்கள் என்பது பகுத்தறிவாளர் கள் அறிந்த செய்தியே. நாம் ஏன் இங்ஙனம் கூறுகின்றோமென்றால் ஈரோட்டிலே நடந்த காலித்தனத் திற்குக் காரணம் காங்கிரசிலிருக்கும் மூன்று பார்ப்பனர்கள் தான் என்பதை உணர்ந்து கொண்டோம்.

இம்மாதிரியே காலிகளின் போக்கு போய்க் கொண்டிருக்குமானால் பொதுமக்கள் சும்மா இருக்கமாட் டார்கள் என்பதைக் காலிகளுக்கும், அவர்களைக் கைப்பாவையாகக் கொண்டு இயக்கும் கயவர்களுக்கும் எச்சரிக்கையாக விடுக்கின்றோம். அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருக்கும் அஹிம்சை மூர்த்தியின் அடியார் கள் இந்த மாதிரியான காலித்தனத் தைப் போக்குவதற்கு ஏதாகிலும் தக்க வழி தேடுகின்றார்களா என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். இல்லை யேல் வருங்காலத்தில் நாட்டின் நிலைமை மிகக் கவலைக்கிடமான தாகும் என்று மந்திரி சபையாருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: இந்தக்காரியத்தால் இந்த ஊரில் காங்கிரஸ்காரர் மீது வெறுப்பு ஏற்பட்டபிறகு இப்போது காங்கிரஸ் காரர், இந்த ஊர்வலம் தாங்கள் நடத்தவில்லை என்றும், இந்த ஊரில் காங்கிரஸ் கழகத்திலுள்ள கட்சி பேதத்தால், மற்றொரு கூட்டம், காங்கிரஸ் பெயரைக் கெடுக்கச் செய்த குழப்பம் என்றும், அதை நடத்தியவர் ஒரு பார்ப்பன வக்கீல் என்றும் காங்கிரஸ் தலைவர் சொல்லி வருகிறார்.

- குடிஅரசு, 01.06.1946

கழகத்தோழர்கள்தாக்கப்படுவதுபற்றிபெரியார்


ஓ சர்க்காரே நீ கனவு கண்டிருக்கலாம், ஒரு தடையுத்தரவு பிறப்பித்து விட்டால் இவர்கள் ஆத்திரப்பட்டு ஏதாவது செய்வார்கள். அதையே சாக்காக வைத்துக் கொண்டு திராவிடர் கழகத்தையே அடியோடு கலைத்துவிடலாம் என்று. நாங்க ளென்ன மடையர்களா? நம்மாளை நம்மவனையே கொண்டு அடிக்கச் செய்ய? தடையுத்தரவு பிறப்பிக்குமுன் உனக்கு அறிவிருந்தால் சிந்திக்க வேண்டாமா? இந்த இயக்கம் எத்தனைக் காலமாக இருந்து வருகிறது? இதுவரை எந்தெந்த இடத்திலாவது சர்க்காருக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்திருக்கிறதா என்று?

நமக்கு வேண்டுமானால் சர்க்கார் இதுவரை எவ்வளவோ தொல்லை கொடுத்திருக்கிறது. மதுரையில் நடந்த கருஞ்சட்டை மாநாட்டின்போது சில காலிகள் எங்கள் பெரிய பந்தலுக்கு பட்டப்பகல் பன்னிரண்டரை மணிக்கு தீ வைக்கப்பட்டபோது ஜில்லா சூப்ரிண்டென்டென்ட், முதல் அதிகாரிகள், மாஜிஸ்ட்ரேட் அனைவரும் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள், ஒழுங்காக தீ மூட்டப்படுகிறதா என்று. கொஞ்சம் தடுத்திருந்தால்கூட அன்று ஒரு 50 ஆயிரம் ரூபாய் பொருள் சேதம் ஏற்பட்டிருக்காது. ஏனென்று ஆட்சியாளர்கள் கேட்டதுண்டா? ஏதோ விசாரணை ஒன்று தலைவர்கள் நடத்தினார்கள்.

அதன் முடிவு என்ன என்று கேட்டால் அது ரகசியம், சொல்ல முடியாது என்று பதில் கூறிவிட்டார்கள். சமீபத்தில் சங்கீத மங்கலத்தில் (விழுப்புரம் - _ செஞ்சி அருகில்) எங்கள் கழகத் தோழர்கள் காங்கிரஸ் காலிகளால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். போலீசார்கூட தமது F.I.R. புத்தகத்தில் குற்றவாளிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். என்றாலும் அவர்கள்மீது ஏதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சேலத்தில் சில காலிகளால் சோடாபுட்டி வீசப்பட்டு எங்கள் தோழர் ஒருவருக்கு கண்ணில் காயப்பட்டு 20 நாள் ஆஸ்பத்திரியில் கிடந்தார். முடிவில் கண்ணை இழந்தார். அதற்காக Nuisance Charge செய்து இரண்டு ரூபாய் அபராதம் விதித்தார்கள். அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இரண்டு ரூபாய் அபராதம் விதித்தார்கள். அண்ணாமலை யுனிவர்சிட்டியில் திராவிடர்கழக மாணவர்களை நடு ஜாமத்தில் போலீசை வைத்துக் கொண்டு அடித்துப் புடைத்து கடைசியாக அடித்தவர்கள்மீதுள்ள பிராது பைசா வாங்கிக் கொண்டு அடித்துப் புடைத்து கடைசியாக அடித்தவர்கள் மீதுள்ள பிராது; பைசா வாங்கிக் கொண்டு உதைபட்டவர்கள் மீது கேசு நடக்கிறது! வேறு எந்த அரசாங்கமாவது இப்படிப் பட்ட கொடுங்கோல் ஆட்சி நடத்துமா?

இவ்வளவையும் நாங்கள் பொறுத்துக் கொண்டுதானே வந்திருக்கிறோம்?

எங்கள் கழகத் தோழர்கள் சிலர் ஆத்திரப்படும்போதுகூட ஆத்திரப்படா தீர்கள். ஆத்திரப்பட்டால் இரண்டு கட்சிகயிலும் அடிபடுபவர் நம்மவராகத் தான் இருக்க நேரிடும்; ஆகவே சமா தானமாக நடந்து காங்கிரஸ் திராவிடத் தோழர்களின் அன்புக்கும் பாத்திர மாகுங்கள் என்று தானே அவர்களுக்குச் சமாதானம் கூறி வந்திருக்கிறோம்? இதை யாராவது இல்லையென்று கூற முடியுமா? அல்லது எங்கள் நடத்தையாவது இதற்கு மாறுபட்டிருந்தது என்று யாராவது கூற முடியுமா? இந்த உண்மைகளெல்லாம் சர்க்காருக்குத் தெரியாமலா இருக்கிறது? தெரிந்திருந்தும் ஏன் இந்த வீண் வேலை?

கனம் சுப்பராயன் (போலீஸ் உள்துறை மந்திரி) அவர்கள், பலாத்காரத்தைக் கையாளாத யாரையும் நாங்கள் வீணாகத் தொல்லை கொடுக்கப் போவதில்லை, என்று தம் வானொலிப் பேச்சில் கூறினார் என்று கேட்டு அவருடைய நல்லெண்ணத்தில் நம்பிக்கை கொண்டு அதற்காக அவரைப் பாராட்டி மெமோரியல் ஹாலில் பேசிவிட்டு வீட்டிற்குப் போகிறேன். அங்கு தந்தி வந்து சேருகிறது.  திருவண்ணாமலையிலிருந்து கருஞ்சட்டை போட்டுக் கொண்டு இருந்ததற்காகவும் கழகத்தில் கருப்புக்கொடியை இறக்காத தற்காகவும் கழகத்துக்கு வந்து ஆறு தோழர்கள் கைதியாக்கப்பட்டு லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள்

(சென்னை பெரியமேட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து 7.3.1948)

இராமாயணம்


இராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள், சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன் னைட், ஷேக்ஸ்பியர், மதனகாமராஜன், பஞ்சதந்திரக் கதைகள் முதலிய கட்டுக் கதைகளைப் போன்று இயற்கைக்கும் மனித ஆற்றலுக்கும் பொருத்த மற்றதும், அனுபவத்தில் சாத்தியப்படாததுமான அசாதாரணமானவைகளாய் இருப்பதால் இக்கதை உண்மையாய் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுவ தில்லை என்று உறுதியாய்க் கூறலாம்.

அசாதாரண சம்பவங்களால்தான் கடவுள் தன்மை அவதாரத் தன்மை முதலிய தெய்வீகத் தன்மைகளைக் கற்பிக்க முடியும் என்று சொல்லப்படுமானால், இக்கதையில் காணப்படும் அசாதாரண விஷயங்கள் பெரிதும் பொருத்தமற்றதும், தேவையற்றதும், நீதியற்றது மாய் இருப்பதோடு பொது நடத்தையில், தேவை உள்ள சந்தர்ப்பங்களில் அதாவது உயர் குணமும் முன் யோசனையும், கருணையும், சத்தியமும், தூரதிருஷ்டியும் நல்லெண்ணமும் காட்டப்பட வேண்டிய சாதாரணக் காலங்களில் அசாதாரண சம்பவத்தில் காட்டப்படும் தெய்வீகத் தன்மையோ அல்லது மிக மிக சாதாரணத் தன்மையில் காட்டப்படும் சராசரி மனிதத் தன்மையோ கூட இல்லாமல் இருக்கின்றன.

கதாநாயகனாகிய இராமனைக் கடவுளின் அவதாரம் என்று மக்கள் கருத வேண்டும் என்பதாகக் கருதியே கற்பனை செய்திருக்கும் இந்த இராமாயணக் கதையில், இராமனுடைய எண்ணம், பேச்சு, நடத்தை ஆகியவைகளில் வஞ்சகம், பொய், சூது, வன்னெஞ்சம், பேராசை, கொலை, மதுவருந்தல், மாமிசம் புசித்தல், மறைந்திருந்து கொல்லுதல், அபலைகளை, குற்றமற்ற வர்களை கொடுமை செய்தல் முதலிய தீயகுணங்களும் கூடா ஒழுக்கங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதனாலேயே இராமனும், இராமாயணக் கதையும் தெய்வீகத்தன்மை பொருந்தியவை அல்ல என்பதும், அவை சராசரித் தன்மையைவிடக் கீழ்ப்பட்டவை என்பதும் தெள்ளென விளங்கும் என்பதோடு மற்றும் இராமனுடையவும் இராமாயணத்தினுடையவும் எந்தக் காரியமும் எண்ணமும் தமிழ் மக்களுக்கு படிப் பினைக்கோ பின்பற்றுதலுக்கோ ஏற்றதல்ல என்பதை யும் தெளிவுபடுத்தும்.

கதை தோற்றம்

இராமாயணக் கதை தோற்றத்திற்காக அதில் கூறப்படும் காரணங்கள் பெரிதும் பகுத்தறிவுக்கும், தெய்வீகத் தன்மைக்கும் ஒத்ததாகச் சிறிதும் காண் பதற்கில்லாமல் இருக்கிறது. அதாவது:-

தேவர்கள் தாங்கள் செய்யும் யாகத்தை இராவணன் முதலிய இராட்சதர்கள் வந்து அழிப்பதாய் நான்முகனிடம் வந்து முறையிடுகின்றார்கள். நான் முகன் தன் தந்தையாகிய திருமாலிடம் சென்று முறையிடுகிறான். திருமால் தாம் பூமியில் இராமனாகப் பிறந்து இராவணனைக் கொல்லுவதாக ஒப்புக் கொள்ளுகிறார் இதுவே இராமாயண கதை தோன்றக் காரணம்.

திருமால் மனிதனாகப் பூமியில் பிறந்து பல சங்கடங்களை அனுபவிக்கக் காரணம் என்னவெனில், முன்பு அவர் செய்த பாபச்செயல்களுக்காக அவருக்கு ஏற்பட்ட சில சாபக்கேடுகள் என்பதாகத் தெய்வீகப் புராணங்கள் சொல்லுகின்றன. அவை யாவன:- திருமால் பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் ஜலந்திராசூரன் மனைவியை வஞ்சகமாய்க் கூடின பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் திருமகளைப் பகல் காலத்தில் பிறர் அறியக் கலவி செய்த பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், இன்னும் இப்படிப் பலவாறாகப் புராணங்களில் கூறப்பட்டி ருக்கின்றன.

இக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார்? அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார்? இராட்சதர்கள் என்ப வர்கள் யார்? யாகம் என்றால் என்ன? கடவுளாகிய திரு மாலுக்கு கொலை, களவு, காமம், விபச்சாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன? இக் காரியங்களைச் செய்பவர்கள் கடவுளர்கள் ஆவார்களா? தேவலோகத்துக்கும், பூலோகத்துக்கும் சம்பந்தம் என்ன? தேவர்கள் யாகம் செய்ய பூலோகத்துக்கு ஏன் வரவேண்டும்? ஜீவப்பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று, பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம்? இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும், உயர்பதவியும் மேன்மையும் அளிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கொடுமையும் கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா? கொலை செய்கிறவர்கள் தேவர்களாகவும் அதைத் தடுக்கிறவர்கள் இராட்சதர்களாகவும் கருதப் படுவதுதான் கடவுள் நீதியா? என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப்பட வேண்டியதாகும்.

இன்றைய நாட்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப்பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொது மக்களும் அரசாங்கமும் கருதி பழிப்பும் ஆக்கினையும் தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத்தடுப்பது ஒழுக்கமாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா? அதிலும் சிவபக்தனான இராவணனுடைய நாட்டிலும், ஆட்சியிலும், இம்சையும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமானதென்றும் தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக்கினையும் செய்யவேண்டியது கடமையாக இருந்திருக்காதா? இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததினாலேயே அந்த அரசனையும் அவனது குலத்தையும், குடிபடைகளையும் நாட்டையும் அடியோடு ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்து வர வேண்டியது கடவுள் தன்மையா? என்பனவும், இவை போன்ற பிறவுமே, இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங் களும் ஆபாசக் களஞ்சியமாய் இருந்து வருவதை விளக்கும்.

மகப்பேறு யாகம்

இராமாயணக் கதையின் முதல் காண்டம் என்னும் பாலகாண்டம்,அயோத்தி அரசனாகிய தசரதன் தனக்கு மகப்பேறு உண்டாக யாகம் செய்கிறான் என்றும், அந்த யாகத்தில் கொன்று பலியிடுவதற்குகாக, ஆடு, மாடு, குதிரை, பறவை, பாம்பு, ஆமை முதலிய நடப்பன, பறப்பன, ஊர்வனவாகிய ஜீவப் பிராணிகளைக் கொண்டு வந்து வைத்திருந்ததாகவும் கூறுகிறது.

ஒருவனுக்குப் பிள்ளை உண்டாக, இத்தனை ஜீவன்கள் பலியால் மாள வேண்டுமா? இந்தப் பலிகளை ஏற்றுத்தான் கடவுள் ஒருவனுக்குப் பிள்ளை கொடுக்க வேண்டுமா என்பது ஒருபுறமிருக்க, இதைக்கண்டு தேவர்கள் திருப்தி அடையலாமா? இப்படிப்பட்ட தேவர்களுக்கு ஓரரசன் இருக்கிறானாம்.அவன் பெயர் தேவேந்திரனாம்! இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயணம் ஆகலாம்.

நிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தி யாகிய கவுசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரையுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைந்து படுத்துக் கொண்டிருக்கிறாள். இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா? இன்னும் இந்த யாகத்தின் யோக்கியதையை, யாகசாஸ்திரப்படி பார்ப்போமானால், அது நினைப்பதற்கே உடல் துடிக்கும். அந்த ஆபாசங்கள் ஞானசூரியன் என்னும் மற்றொரு குடிஅரசு பதிப்பில் காணலாம். இரவு முடிந்தவுடன், இந்த கவுசலையையும் மற்றும் தசரதனின்  இரு மனைவி களாகிய சுபத்திரை, கைகேயி ஆகியவர்களையும், யாகப் புரோகிதர்களாகிய ருக்வித்துக்களுக்கு தசரதன் தட்சணையாகக் கொடுத்துவிடுகிறான்.

இந்தப் புரோகிதர்கள் மூவரும் இப்பெண்களைக் கைப்பற்றித் தங்கள் இஷ்டம்போலெல்லாம் கூடித்திரிந்து அனுபவித்து விட்டுப் பிறகு, அதற்காகக் கூலியோ, கிரையமோ தசரதனிடம் வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுத்து விடுகிறார்கள். அதன்பிறகே இம்மனைவிகள் கர்ப்பவதி களாகக் காணப்படுகிறார்கள். (ஆங்கில மொழி பெயர்ப் பாளராகிய மன்மதநாத் தத்தர் இந்த இடத்தில் அரசனது மனைவிகளை ஹோதா, அத்வர்யு, உக்தா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள் என்று எழுதுகிறார்) இதுதான் தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் தத்துவம்.

இந்த யாகத்தின் முறைகளையும், அங்கு நடந்த காரி யங்களையும், சாஸ்திரப்படியும், கதைப்படியும், பகுத் தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூன்று மனைவிமாருக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் நான்கு குழந்தைகளும் தசரதனுக்குப் பிறந்த குழந்தைகளாக இருக்க முடியாது என்றும், அவை அந்த யாகப் புரோகிதர்களுக்குத்தான் பிறந்திருக்க வேண்டுமென்றும் விளங்கும். இதை விளக்கமாகச் சொல்லவேண்டு மானால் யாகம் செய்யும்போது தசரதனுக்கு வயது அறுபது ஆயிரம். அவனுக்கு மனைவிமார்களோ அறுபது ஆயிரம் பேர்கள் என்று, கம்பன் சொல்லி இருந்தாலும், முன்னூற்று அய்ம்பது மனைவிகள் என்று வால்மீகி கூறுகிறார்.

இதிலிருந்து தசரதன் படுகிழவன் என்பதும், அவன் பல நூற்றுக் கணக்கான மனைவிகளை மணந்து, கலந்து வாழ்ந்த காமாந்தகன் என்பதும் நன்கு விளங்கும். இப்படிப் பட்டவன் தனக்கு ஆண்மை இழந்து பிள்ளை உண்டாகும் சக்தி இல்லாமல் போவதும், வெறும் சபலத்தால் பெண்களுடன் கூடிக் குலாவித் திரிவதும் இயற்கையேயாகும். ஆகவே இந்தக் காரணங்களால், இத்தனை காலம் கர்ப்பமடையாதிருந்த இவனது மனைவிமார்கள் அந்த யாகம் செய்த அன்று ஒரு நாளில் மூன்று பேரும் ஏக காலத்தில் கிழவனாகவும் ஆண்மை யற்றவனாகவும் இருந்த தசரதனால் கர்ப்பம் அடைந்திருக்க முடியுமா? என்பதும் யோசிக்கத் தக்கதாகும்.

அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இஷ்டப்படி அனுபவித்து விட்டு, அதற்காக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண் களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும்?

உண்மையிலேயே இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் என்கின்ற நான்கு பிள்ளைகளும் தசரத னுக்கே பிறக்காமல், யாகப் புரோகிதர்களுடைய கருவுக்கே பிறந்திருந்தாலும், ஆரிய தர்மப்படி அதில் குற்றம் சொல்லவோ இழிவு கற்பிக்கவோ இடமில்லை. ஏனெனில், ஆரியரில் ஒருவன் அல்லது ஒருத்தி தனக் குப் பிள்ளை இல்லாவிட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேறு ஒருவனிடம் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரங்களும், ஸ்மிருதிகளும் கூறுகின்றன.

இதற்கு அனுபவ பூர்வமாய் ஆதாரம் வேண்டுமானால் மற்றொரு ஆரியக் கதையாகிய பாரதத்தில் பார்க்கலாம். அதில் யாகம் என்கின்ற (சாக்கு) காரணம்கூட இல்லாமல், பல விதவைகள் தமது குல குருவாகிய வியாசனிடம் கூடி, பல பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள்.

திருதராஷ்டிரன், பாண்டு முதலியவர்கள் அந்தப்படி பிறந்தவர்களேயாவார்கள். இன்னும் அநேகம் பேர்கள் பாரதத்தில் இதுபோலவே காணப் படுகிறார்கள். மற்றும் சீதையின் பிறப்பைப் பார்த்தாலும், அவளது தாய், யாராலோ சீதையைப் பெற்று காட்டில் எறிந்து, புழுதியில் கிடந்த பெண்ணாகவே கிடைத் திருக்கிறாள். இந்தக் காரணத்தால் சீதைக்குத் திருமணம் கூட வெகுநாள் தடைப்பட்டிருக்கிறது. இதை சீதையே சொல்லுகிறாள்.

மற்றும், ஆரியர்களின் இதிகாச புராண சாஸ்திரங் களைப் பார்த்தால், அதில் வரும் மக்களுக்குக் கருவு உண்டாக்கியவர்கள் அல்லது பெற்றவர்கள், மனிதர் களாகக் கூட இருந்திருக்கவில்லை என்பது தெரியவரும். ஆதலால் இந்த யாகத்துக்கும் மகப்பேறுக்கும் சம்பந்த மில்லை என்பதும், யாகம் என்றால் மதுவருந்தி மாமிசம் சாப்பிட்டுக் கோலாகலமாய்த் திரியும் பண்டிகை என்பதும், அதனால் மதிக்கத்தக்க பலன் இல்லை என்பதும் இனிது விளங்கும்.
குடிஅரசு - கட்டுரை - 11.12.1943

Sunday, September 4, 2011

ஆதி முதற்கொண்டே சூழ்ச்சி

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பது நேற்றா? இன்றா?
காஞ்சிபுரம் மகாநாடு நடந்து இரண்டு வாரங் களாகிவிட்டன. மகாநாட்டின் சம்பவங்களும் பழைய கதை ஆகிவிட்டன. ஆனால் அம்மகாநாட்டின் சம்பவங்களால் ஒவ்வொரு நிமிஷமும் புதிய எண்ணங்களே தோன்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு காங்கிரஸ் ராஜீய நாடகத்தில் பிராமண ரல்லாதவர்களின் சார்பாக ஸ்ரீமான்கள் வரதராஜூலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர், ஆகிய இம்மூவர்களின் வேஷமும், விளம் பரங்களும்தான் அடிக்கடி விசேஷமாய்த் தோன்றும். இம்மூவர்கள் தான் காங்கிரஸில் பிராமணரல்லா தாருக்கு உள்ள பற்றுதலுக்கும் காங்கிரஸை பிராமணரல்லாதார் ஆமோதிக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரமாய் எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள்.
தென்னிந்திய நல உரிமைக் கூட்டுறவு சங்கம் அதோடு மாத்திரமல்லாமல், காங்கிரஸ் பிராமண ராஜ்யம் தாபிக்கத் தகுந்த சாதனமென்றும் சுய ஆட்சி என்பது - பிராமண ஆட்சிதானெறும் கருதிய பெரியோர்களான டாக்டர் டி.எம்,நாயர், ஸர்.பி. தியாகராய செட்டியார் போன்ற தேசாபிமானமும், அநுபவமும் வாய்ந்த பல பெரியோர்களால் சொல்லி, காங்கிரஸை ஒதுக்கி தென்னிந்திய மக்கள் நல உரிமைச் சங்கம் என்பதாக ஓர் சங்கத்தைக் கண்டு அதன்மூலமாய் பிராமணரல்லாதார் நன்மைக்கென ஜடி, திராவிடன் என்கிற இரண்டு பத்திரிகைகளையும் தோற்றி, தீவிர பிரசாரங்களைச் செய்து, அதுகாலையில் பிராமணர்கள் வயப்பட்டுக் கிடந்த பெருவாரியான பல அதிகாரங்களையும் பதவிகளையும் பிராமணரல்லாதார் தங்கள் உரிமைக்குத் தகுந்த அளவு அடைய வேண்டும் எனக் கருதிப் பிரசாரமும் தொடங்கினார்கள்.
சென்னை மாகாணச் சங்கம்
அச்சமயத்தில் மேற்படி சங்கமும், பிரசாரங்களும் தென்னிந்திய மக்கள் பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்ல வென்றும், ஏதோ சிலர் அரசாங்கத்தின் வயப்பட்டு அவர்கள் தூண்டுகோலால் நடைபெறுகிற சங்கமென் றும், இதில் பிராமணரல்லாதார் கலந்துக் கொள்ளக் கூடாது என்றும் தென்னிந்திய பிராமணரல்லாத மக்களுக்கு நன்மை செய்யவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை அளிக்கவும் சென்னை மாகாண சங்கம் என்பதாக ஓர் சங்கத்தை தோற்றியிருக்கிறோம். அதில் பிராமணர்கள் யாரும் கலப்பில்லை. அதன் தத்துவமே காங்கிரஸ் மூலமாய் சுயராஜ்யம் பெறுவதும், பிராமணரல்லாதாருக்கு வகுப்புப் பிரதிநிதித்துவம் பெறுவதும்தான் முக்கியமானது என்றும் அதன் அக்கிராசனாதிபதி திவான் பகதூர் பி. கேசவப் பிள்ளையாக வும், உப அக்கிராசனாதிபதி ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் முதலியோராக வும், காரியதரிசி ஸ்ரீமான் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு முதலியோராகவும் இதற்குப் பிரசார பத்திரிகைகள் இந்தியன் பேட்ரியாட் என்ற  ஆங்கிலப் பத்திரிகை யையும் தேசபக்தன் என்ற தமிழ் பத்திரிகையையும் இவற்றிற்கு திவான்பகதூர் சி. கருணாகரமேனன், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் ஆகியவர்கள் முறையே பத்திரிகை ஆசிரியர்களாகவும், இருந்து நடத்திவரப்பட்டதோடு, இதன் பலனால் ஜடி கட்சிக்கு, பிராமணரல்லாத பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்கில்லாமற் செய்ததுடன், காங்கிரஸ் தான் தேச விடுதலைக்குச் சாதனமென்றும், சென்னை மாகாணச் சங்கம்தான் பிராமணரல்லாதாரின் நன்மையைக் கருதக்கூடியதென்றும் சென்னை மாகா ணத்திலுள்ள பிராமணரல்லாத மேற்கண்ட முக்கியஸ் தர்கள்தான் தென்னாட்டுப் பிராமணரல்லாதார் பிரதி நிதிகளென்றும் சொன்னது கிடைத்தாய் விட்டது.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
இதோடு மாத்திரமல்லாமல், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தாரும், சென்னை மாகாணச் சங்கத்தாரும் போட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கூச்சலினால் கிருத்தவர், மகமதியர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் முதலிய வகுப்பாருக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவமும், விவசாயிகள், லேவாதேவிக் காரர்கள், இந்திய வியாபாரிகள், ஐரோப்பிய வியாபாரிகள் முதலிய தொழிலாளர்களுக்கு தொழில்வாரி பிரதிநிதித்துவமும், தேர்தல்களில் கொடுக்கப்பட்டதோடல்லாமல், பிராமணரல்லா தாருக்கென பல தானங் களையும் ஒதுக்கிவைக்கப்பட அரசாங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
காங்கிரசில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
இது இப்படி இருக்க, ராஜீய சபைகளான காங்கிரஸ் முதலிய சபைகளிலும் மகமதியர், கிருஸ்தவர், முதலியோ ருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர்களோடு ஒப்பந்தமும் செய்து கொள்ளப் பட்டது. இதுமாத்திரமேயல்லாமல் காங்கிரஸ் தாபனங்களிலும் உதாரணமாக எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும், மகமதியர்களுக்கு இத்தனை தானம், தீண்டாதாருக்கு இத்தனை தானம், கிருஸ்தவருக்கு இத்தனை தானம்,  இவை நீங்கிய மற்றவர்களுக்கு இத்தனை தானம் என மாகாணவாரியாக ஒதுக்கி வைக்கப்பட்டு - அந்தப்படி இப்பொழுது காங்கிரசின் அமுலில் நடந்து வருகிறது. இவ்வளவிருந்தும், மேலும் இவை போதாதென்றும் இன்னும் சில தாபனங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட வேண்டுமென்றும், ராஜீய காங்கிரஸிலும், கான்பர களிலும் கிளர்ச்சிகளும் முயற்சிகளும் செய்து கொண்டே வரப்பட்டிருக்கிறது.
காக்கி நாடா காங்கிரஸ்
உதாரணமாக, காக்கி நாடா காங்கிரஸில் ஸ்ரீமான் தா அவர்களால் கொண்டுவரப்பட்டு ஸ்ரீமான் ராஜகோபாலாச் சாரியாரால் ஆமோதிக்கப்பட்ட கல்கத்தா பேக்டினாலும் (அது தோற்றத்திற்கு ஒரு காரணம் உண்டு. ஆனால் ரகசியம்) டாக்டர் அன்சாரி, லாலா லஜபதிராய் முதலி யோர்களை இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வழி காண ஒரு ஏற்பாடு கண்டு பிடிக்கும்படி காக்கி நாடா காங்கிரஸில் ஏற்படுத்திய கமிட்டியினாலும், அதன் குறிப்புகளினாலும் நன்றாய் விளங்கும்.
இன்னமும் தமிழ்நாட்டில் நடந்த மாகாண கான்பரன்ஸ்களின் போதெல்லாம் நடந்த பிராமணரல்லாத தனி கூட்டங்களாலும் நன்றாய் விளங்கலாம். அதாவது
25-வது ராஜீய மாகாண மகாநாடு
1919 -ஆம் வருஷத்தில் திருச்சியில் நடைபெற்ற 25-ஆவது ராஜீய மாகாண கான்பரஸின் போது அதே கொட்டகை யில் ஸ்ரீமான் சோமசுந்தர பாரதியாரின் அக்கிராசனத்தின் கீழ் இதைப்பற்றிப் பேசி, ஈரோட்டில் சென்னை மாகாணச் சங்கத்தை நடத்த வேண்டுமென்றும், அதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை வலியுறுத்த வேண்டு மென்றும் தீர்மானிக்கப்பட்டு அது போலவே தீர்மானமும் நிறைவேற்றியும் இருக்கிறது.
26 -ஆவது ராஜீய மாகாண மகாநாடு
1920-ஆம் வருஷம் திருநெல்வேலியில் நடந்த 26-வது ராஜீய மாகாண கான்பரஸ்ஸின் போது பிரதிநிதிகள் சாப்பாட்டு விடுதியில் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக் கருடைய அக்கிராசனத்தின் கீழ் பிராமணரல்லாத கூட்டம் ஒன்று கூடி சட்டசபைகள் முதலிய தேர்தல் தானங் களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தி யோகத்திலும் வகுப்பு ஜனசங்கைக்குத் தகுந்தபடி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை காலஞ்சென்ற ஸ்ரீமான் சோம சுந்தரம் பிள்ளை, ஸ்ரீமான்கள் வி.ஓ.சிதம்பரம்பிள்ளை, தண்டபாணிப் பிள்ளை மற்றும் திருநெல்வேலி ஸ்ரீவைகுண்டம் முதலிய தலங்களிலுள்ள சில வக்கீல்களும் ஆகச் சேர்ந்து உடனே  விஷயாலோசனைக் கமிட்டிக்கு அனுப்பிய அத் தீர்மானத்தை ஸ்ரீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் பிரே ரேபிக்க, ஸ்ரீமான்கள் வி.ஓ. சிதம்பரம் பிள்ளை, தண்ட பாணிப்பிள்ளை முதலியோர்கள் ஆமோதிக்க, காலஞ் சென்ற ஸ்ரீமான் எ. கஸ்தூரி ரெங்கய்யங்கார் எழுந்து வீதாச்சாரம் (ஞநசஉநவேயபந) என்கிற வார்த்தைக்குப் பதிலாக போதுமான என்னும் அர்த்தத்தைக் கொடுக்கத் தகுந்த (ஹனநளூரயவநடல) அடிகுவேட்லி  என்கின்ற பதத்தை போட்டுக்கொள்ளும்படி ஒரு திருத்தப் பிரேரேபினை கொண்டுவந்தார். இந்த அடிகுவேட்லி என்ற பதத்திற்கு என்ன பொருள் என்று ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் அம்மகாநாட்டிற்கு அக்கிராசனாதிபதி யாயிருந்த இதே ஸ்ரீமான் எ.ஸ்ரீனிவாசயங்காரவர்களைக்கேட்க, அவர் இரண்டும் ஒரே அர்த்தம் தான். ஆனால் பெர்சண்டேஜ் என்பதைவிட அடிகுவேட்லி  என்பது நல்ல வார்த்தை யென்று சொல்லித் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார்.
இதுசமயம் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் முதலியோர் களும் அக்கூட்டத்தில் ஆஜராகித்தான் இருந்தார்கள். அதோடு ராஜாங்கக் கல்வித் துறைகளில் சமஸ்கிருதக் கல்விப் பயிற்சிக்கு உள்ள யோக்கியதையும், செய்முறையும், தமிழ் கல்விக்கும் இருக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம், ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரால் பிரேரபிக்கப்பட்டு, ஸ்ரீமான் வி.ஓ.சிதம்பரம்பிள்ளையால் ஆமோதிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது. ஆனால் விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டம் முடிந்ததும் வெளியில் வந்து ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் சில ஆங்கிலம் படித்தவர்களைக் கண்டு அடிகுவேட்லி என்ப தற்கும் பர்சண்டேஜ் என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டபோது, அவர்கள் அடிகுவேட்லி என்பது இருபொருள் கொண்டதென்றும், அதாவது யோக்கியதைக்கு தகுந்த என்கிற பொருள் கூடக் கொள்ளலாம் பர்சண்டேஜ்   என்கிற வார்த்தை தான் மிகத் தெளிவானது என்றும் சொன் னார்கள். பிறகு மகாநாட்டில் இத்தீர்மானம் வரும்போது. பெர்சண்டேஜ் என்கிற வார்த்தையையே போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீமான்கள் நாயக்கரும், தண்டபாணிப்பிள்ளையும், அக்கிராசனர் ஸ்ரீமான் ஸ்ரீனி வாசய்யங்காரிடம் சொன்னார்கள். அவரும் அப்படியே ஆகட்டுமென்று ஒப்புக்கொண்டார்,
கடைசியாக மகாநாட்டில் இது தவிர மற்ற தீர்மானங்கள் முடிந்தவுடன் அக்கிராசனாதிபதி எழுந்து தீடீரென்று தமது முடிவுரையை ஆரம்பித்து விட்டார். ஸ்ரீமான் தண்டபாணிப்பிள்ளை தன்னுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானம் என்ன ஆயிற்றென்று அக் கிராசனரைக் கூட்டத்தில் கேட்டார். அக்கிராசனர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங் கார் அது பொது நன்மைக்கு விரோதமான தீர்மானமாதலால் அவற்றை ஒழுங்குத் தவறானது என்று தீர்மானித்து விட்டதாகச் சொல்லிவிட்டார்.
உடனே ஸ்ரீமான் தண்டபாணிப்பிளை எழுந்து விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றப் பட்டதன் தீர்மானம் இங்கு எப்படி ஒழுங்குத்தவறு என்று கேட்டார்.  அப்போது அங்கிருந்த பிராமணர்கள்ஸ்ரீமான் பிள்ளையை உட்காரும் படிக் கூச்சல்போட்டு அடக்கி விட்டார்கள். கடைசியாக முடிவுரையில்  ஸ்ரீமான், அய்யங்கார் காஞ்சி மகாநாட்டில் ஸ்ரீமான் முதலியாரைக் கொண்டு சமாதானம் சொல்லச் சொன்னது போல் வருத் தப்படுவதாகப் பொய்வேஷம் போட்டு மறைத்துவிட்டார்.
27 -ஆவது ராஜீய மாகாண மகாநாடு
பின்னர் 1921 - ம் ஆண்டு தஞ்சையில் நடந்த 27-வது தமிழ் மாகாண மகாநாட்டில் கோயம்புத்தூர் ஜில்லா பிரதிநிதிகள் கொட்டகையில் ஸ்ரீமான் சர்க்கரைச் செட்டி யார் அக்கிராசனத்தில் தமிழ்நாடு பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பேசி ஸ்ரீமான்கள் சென்னை சிங்காரவேலு செட்டியார், கல்யாண சுந்தர முதலியார், சர்க்கரை செட்டியார், வரதராஜூலு நாயுடு, ராமசாமி நாயக்கர் ஆகியவர்கள் அடங்கிய கமிட்டி ஒன்று நியமித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு வேண்டிய வேலை செய்யும், ஜஸ்டிஸ் கட்சிக்குப் போட்டியாய் ஆரம்பித்த சென்னை மாகாண மகாநாட்டைக் கூட்டவும் தீர்மானிக் கப்பட்டது.
28 -ஆவது ராஜீய மாகாண மகாநாடு
1923 - ம் வருஷம் திருப்பூரில் கூடிய 28-வது மாகாண மகாநாட்டிலும் நாடார்கள் முதலியோர்க்கு ஆலயப் பிரவேஷம் கொடுக்கவேண்டும் என்றும் அதற்கு விரோத மான சாஸ்திரங்களையும், பழைய ஆசார வழக்கங்களையும் மாற்ற வேண்டும் என்றும் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் பிரேரபிக்கப்பட்டு, விஷயாலோசனைக் கூட்டத்தில் தீர்மானத்தை வெளி மகாநாட்டில் பிரேரபிக்க முடியாதபடி பல பிராமணர்கள் செய்தும், கடைசியாக பெரிய தகராறின் பேரில் ஸ்ரீமான்கள் கல்யாணசுந்தர முதலியார் பிரேரபிக்க, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆமோதிக்க அதன் பேரில் ஸ்ரீமான்கள் எ. சத்தியமூர்த்தி, மதுரை ஏ. வைத்திய நாதய்யர், கும்பகோணம் பந்துலுவய்யர் முதலியோர் ஆட்சேபித்து கூச்சல்களையும், கலகத்தையும் உண்டாக்கி எப்படியோ அத்தீர்மானத்தை அப்படியே ஓட்டுக்கு விடாமல் அதன் ஜீவ நாடியை  எடுத்துவிட்டு ஒரு சொத்தைத் தீர்மா னத்தை நிறைவேற்றினார்கள். அதுசமயம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு மதில் மேல் பூனை போலவே நடந்து கொண்டார் என்கிற பழியும் அவருக்கு வந்தது.
மதுரை - இராமநாதபுரம் மகாநாடு
1923 - ம் வருஷத்திய மதுரை - இராமநாதபுரம் மகா நாட்டிலும், பிராமணர் - பிராமணரல்லாதார் தகராறு ஏற்பட்டது. ஸ்ரீமான் சோமசுந்தர பாரதியார் இதில் சிக்கிக்கொண்டு வெகு பாடுபட்டார்.
பிறகு 1923 - ம் வருஷத்தில் திருச்சியில் டாக்டர் ராஜன் வீட்டில் கூட்டிய மாகாண காங்கிர கமிட்டிக் கூட்டத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாய் ஸ்ரீமான் பி. வரதராஜூலு நாயுடு ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானத்தை அடுத்த மீட்டிங் கில் வைத்துக்கொள்ளலாம் என்று ஸ்ரீமான் சி. ராஜ கோபாலாச்சாரியார் தந்திரமாய்த் தள்ளி  வைத்து விட்டார்.
29 - ஆவது ராஜீய மாகாண மகாநாடு
1923-ம் வருஷத்தில் சேலத்தில் கூடிய 29 -வது தமிழ் மாகாண மகாநாட்டு விஷயாலோசனைக் கமிட்டியில் ஸ்ரீமான் வரதராஜூலு நாயுடு அதுசமயம் இல்லாவிட்டாலும், அவருக்காக அவரது நண்பர்கள் ஸ்ரீமான்கள் தண்டபாணிப்பிள்ளையோ அல்லது பவானி சிங்கோ இதே தீர்மானத்தைப் பிரேரேபித்த போது, ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் இது சமயம் ஒத்துழையாமையே போய்விடும்போல் இருக்கிறது. டெல்லி மகாநாடு தீர்ந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி அதை நிறுத்தச் செய்துவிட்டார்கள்.
30- ஆவது ராஜீய மாகாண மகாநாடு
பின்னர் கூடிய 1924-ம் வருஷத்திய திருவண்ணா மலையில் கூடிய 30 - வது மாகாண மகாநாட்டில் அக்கிராசனம் வகித்த ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக் கருடைய அக்கிராசனப் பிரசங்கத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்து வத்தைப் பற்றி விசேஷமாய் சொல்லப் பட்டுமிருக்கிறது.
பெல்காம் காங்கிரஸ்
பெல்காமில் கூடிய ராஜீய காங்கிரஸின் போதும் பிராமணரல்லாதாருக் கெனத் தனியாக ஓர் மகா நாட்டைக் கூட்டி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பேசியதோடு, ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றியும் தீர்மானம் செய்திருக்கிறது. அதே சமயம், மகாத்மாவிட மும் இதைப் பற்றி விரிவாய் எடுத்துச் சொன்ன தோடு ஸ்ரீமான்கள் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், பி. வரதராஜூலு நாயுடு, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் முதலியவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தைப் பற்றிச் சொல்லியுமிருக்கிறார்கள். மகாத்மா காந்தியும் யோசித்து தக்கது செய்வதாய் சொல்லியுமிருக்கிறார்.
தஞ்சை தேசிய பிராமணரல்லாதார் மகாநாடு
இவ்வருஷம் தஞ்சையில் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியார் உட்பட பிரதிநிதிகளாயிருந்த தேசிய பிராமணரல்லதார் மகாநாட்டிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துகிறது.
இன்னும் எத்தனையோ விஷயங்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ சரித்திரத்தைப் பற்றியும், தலைவர் களென்று சொல்லப்படுவோரின் தந்திரம், சூழ்ச்சி, குட்டிக்கரணம், குலத்தைக்கெடுக்கும் கோடரிக் காம்புத் தன்மை முதலியவற்றைப் பற்றியும் விரிவாய் எடுத்துச் சொல்ல அடுத்த சந்தர்ப்பத்தை எதிர் பார்க்கிறோம். அல்லாமலும் பிராமணரல்லாதவர் வகுப்பைச் சேர்ந்த உண்மைத் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதையும் அடுத்தாற்போல் எழுதலாமென்றிருக்கிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 06.12.1925