Tuesday, May 28, 2013

பகுத்தறிவு

தோழர்களே!
திண்டிவனம் தாலுகா பகுத்தறிவுச் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் பேற்றை எனக்களித்ததற்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனேயாவேன்.
அதோடு தாங்கள் அன்பாய் வாசித்தளித்த வரவேற் புப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் புகழ் மாலைகளுக்கு நான் அருகனல்லவானாலும், என்னிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும், எனது கொள்கைகளையும், ஆசைகளையும் நீங்கள் வரவேற்று ஆதரிக்கிறீர்கள் என்பதையும் அறிவதற்கு இது ஓர் அளவு கருவியாய் இருக்கின்றது என்கின்ற அளவில் வந்தனத்தோடு பெற்றுக் கொள்ளுகிறேன்.
இந்த ஆண்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் ஆண் களும், பெண்களும் பல ஜாதி பல வகுப்புகளும் கூடி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நமது பகுத்தறிவுக்கு விரோதமான கூட்டத்தார்கள், மனித சமூக முன்னேற்றத்துக்குத் தங்கள் சுயநலத்தின் காரணமாக முட்டுக்கட்டையாய் இருக்கும் வகுப்பார்கள் நம்மைப் பற்றியும் நமது இயக்கக் கொள்கைகளைப் பற்றியும் விஷமப் பிரச்சாரம் செய்தும், திரித்தும், பழித்தும் கூறி வந்த இந்த ஊரில் இன்று இவ்வளவு பேர் இங்கு இந்த ஆண்டு விழாவுக்கு கூடி இருப்பதென்றால் எனக்குப் பெரும் ஆனந்தத்தையும், நம்பிக்கையையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரக் கூடியதாக இருக்கின்றது.
பகுத்தறிவு
பகுத்தறிவுச் சங்க ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் தலைவன் என்கின்ற முறையில் நான் ஏதாவது பேசுவதாய் இருந்தால் பகுத்தறிவு என்பதைப் பற்றி விளக்கிச் சில வார்த்தைகள் பேசுவது பொருத்த முடையதாகுமென்றே கருதுகிறேன்.
பகுத்தறிவு என்றால் என்ன? ஜீவப் பிராணிகளின் சிந்தனா சக்தியையும், சிந்திப்பதின் உணர்ச்சியையும் தான் அறிவு என்று சொல்லப்படுகிறது. அச்சிந்திக்கும் தன்மையின் கூர்மையை பகுத்தறிவு என்றுச் சொல் லலாம். ஆனால் அப்பகுத்தறிவை பெரிதும் மனித னுடைய சிந்திக்கும் தன்மைக்கும், சிந்திப்பதின் கூர்மைக்குமே சொல்லப்படுகின்றது.
உலகில் உள்ள பல கோடி ஜீவராசிகளில் மனிதன் என்கின்ற ஜீவப் பிராணியும் ஒன்று என்பது மக்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயமாகும். மரம், புல், பூண்டு, செடி, கொடி ஆகியவைகளும் ஜீவ வர்க்கத்தில் சேர்ந்தவைகள் என்பது நவீன ஆராய்ச்சியால், ஆராய்ச்சி நிபுணர்களால் சொல்லப்பட்டு அறிஞர்களுக்கு மெய்ப்பித்தும் காட்டப்பட்டுவிட்டது.
வங்காள மாகாணத்தைச் சேர்ந்தவரும், உலகம் போற்றுபவருமான ரசாயன சாஸ்திரியார் டாக்டர் போஸ் அவர்கள் தாவர வர்க்கங்களுக்கு ஜீவன் (உயிர்) உண்டு என்பதை மெய்பித்துக் காட்டி செடிகளில் ஒரு சிறு கிளையை துண்டித்த போதிலும் அச்செடி துடிதுடிப்பதை ருஜுப்பித்துக் காட்டி இருக்கிறார். மற்றும் மண், கல், மலை ஆகிய அசேதனப் பொருள்கள்கூட வளருவதும், சேதிக்கப்பட்டால் வளர்ச்சி தடைப்படுவதும் முதலிய காரணங்களால் அவைகளின் இயங்குதல்கள் விளங்கு கின்றன.
இப்படிப்பட்ட காரியங்கள் மனிதன் நேரே காண முடியாமலும், மிக மிக மந்த கதியிலும், இயந்திரங்கள் மூலமல்லாமல் அறிய முடியாததாகவும் இருப்பதால் மக்கள் அதை சுலபத்தில் ஒப்புக் கொள்ள முடியாதவர்களாக இருந்து வருகிறார்கள்.
ஆன போதிலும் ஓர் அளவுக்கு அதாவது ஜீவப் பிராணிகள் இன்னின்னது தான் என்று ஒப்புக் கொண்ட அளவுக்கு அதனதனின் இயங்குதலை அறிந்து அதற் கேற்றபடி அவற்றின் அறிவை ஒப்புக் கொள்ளு கிறார்கள். அவ்வறிவின் மேலான தன்மைக்குப் பகுத்தறிவு என்ற பெயர் கொடுத்து அது மனிதனுக்கே உரித்தானது என்றும், அதனாலேயே மனிதன் ஜீவப் பிராணிகளிலெல்லாம்விட உயர்ந்தவன் என்றும் சொல்லுகிறார்கள்.
அறிவின் தன்மையும், அவற்றின் படிகளும் எப்படி இருந்தாலும் பரிணாம வாதக் கொள்கைப்படி (அதாவது ஒன்று மற்றொன்றாக மாறிக் கொண்டிருப்பது) பிரபஞ்சத் தோற்றங்கள் எல்லாம் ஒவ்வொரு வஸ்துவின் ஆரம்ப தோற்றமுமே இன்றிருப்பது போன்றல்ல. ஒன்று மற் றொன்றாக மாறி வருவதாலேயே பல்வேறு தோற்றங்கள் காணப்பட்டு நாளடைவில் ஜீவப் பிராணிகள் என்று சொல்லப்படுவனவாக காணப்படுகின்றன.
எப்படி இருந்தபோதிலும் மனிதன் என்கின்ற ஜீவப் பிராணியும், அசேதனமாகவும், தாவரமாகவும், அவசர மாகவும் இருந்த வஸ்துக்களில் இருந்தே படிப்படியாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கிறானே ஒழிய வேறில்லை.
உலகம் எப்பொழுது உற்பத்தி ஆயிற்று என்பதற்கு எவ்வளவு வருஷக் காலம் தான் ஆயுள் சொல்லுவதாய் இருந்தாலும் பல லட்ச லட்சக்கணக்கான வருஷங் களுக்கு முன்பு அணுக்களாய் அணுக் கிருமிகளாய், இருந்து வந்த பொருள்கள் தான் இன்று மனித ரூபமாய் இருக்கும் (பகுத்தறிவு பெற்ற ஜீவன் என்று சொல்லப்படும்) மனிதனானவன் என்பது அறிஞர்களும், தத்துவ சாஸ்திரிகளும், விஞ்ஞான விற்பன்னர்களும் ஏற்றுக் கொண்ட விஷயமாகும்.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று மேம்பட்டது
இது இவ்வாறாக, மனிதன் பகுத்தறிவு உடையவனாவன் என்பதனாலேயே பகுத்தறிவு இல்லாத ஜீவராசிகள் என்பன வற்றைவிட மனிதன் மேம்பட்டவன் என்று சொல்லிவிட முடியாது.
ஜீவராசிகளில் ஊர்வனவற்றில் பாம்புக்கு இல்லாத கால்கள் எப்படி பல்லி ஓணான்,  பாம்பரணை முதலியவை களுக்கு இருக்கின்றனவோ, அதுபோலும் நாய், கழுதை களுக்கு இல்லாத கை சவுகரியங்கள், விரல்கள் முதலியவை எப்படி குரங்கு, தேவாங்கு முதலிய ஜாதிகளுக்கு இருக்கின் றனவோ, அதுபோல் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத ஒரு அளவு அறிவின் சிந்தனா சக்தி மனிதனுக்கு இருக்கின்றது என்கின்ற அளவு  வித்தியாசம் மாத்திரம்தான் உண்டே தவிர மற்றபடி தனிப்பட்ட மேன்மை ஏதும் சொல்லுவதற்கில்லை. ஏனெனில், மனிதனுக்கு இல்லாத பல சக்திகள் விசேஷக் குணங்கள் முதலியவை மற்ற ஜீவராசிகளிடத் தில் இருப்பதையும் காணலாம்.
அதுபோலவே, மற்ற ஜீவராசிகளிடம் இல்லாத சில கெட்ட குணங்களும், பல அசவுகரியங்களும், துன்பங் களும், கவலை களும், திருப்தி அற்ற தன்மைகளும் பகுத்தறி வுடைய மனிதனிடத் தில் இருப்பதையும் காணலாம்.
உதாரணமாக மனித னுடைய ஆசைக்கும், மற்ற ஜீவராசிகளுடைய ஆசைக் கும் எவ்வளவோ வித்தியாச முண்டு.
மனிதனுடைய ஆசை எல்லையற்றது. அவசிய மில்லாதது, வெறும் கற் பனையையும், மூடநம்பிக் கையையும், பொறாமையை யும், பலவீனத்தையும் அஸ் திவாரமாகக் கொண்டது மாகும். தனது தேவைக்கு மேலும் எவ்வளவு இருந் தாலும் தனது பின் சந்ததி யையும், தான் இறந்த பிறகு மோட்ச லோகம் என்பதில் பயன்படவும் வேண்டும் என்கின்ற அவிவேகமான ஆசையாகும்.
உதாரணமாக, நாடு பிடித்து ஆட்சி செய்ய வேண்டும் என்று கருதுகிறவனுக்கு எவ்வளவு நாடு இருந்தாலும் உலகமே அவனது ஏக சக்ராதிபத்திய சர்வாதிகாரத் தன்மைக்குக் கீழ் வந்து விட்டாலும்கூட மேல்லோகமும், கீழ்லோகமும் தனது ஆட்சிக்குள் வந்தால் நல்லது என்று முட்டாள்தனமான கற்பனைக்கு அடிமையாகி திருப்தி யற்றவனாகிறான். எவ்வளவு பூமி இருந்தாலும் சமுத்திரப் பரப்பெல்லாம் பூமியாகி அதற்கும் தானே மிராசுதாரனாக இருந்தால் நல்லது என்கின்ற ஆசைக்கு அடிமையாகி குறை பாட்டுக்குக் கட்டுப்பட்டவனாகிறான்.
அதுபோலவே, செல்வம் எவ்வளவுதான் கோடிக் கணக்காக இருந்தாலும்  எண்ணிக்கைக்கு எப்படி ஒரு அளவு கிடையாதோ, அதுபோல் எவ்வளவு பெருகினாலும் மேலும் மேலும் சொத்து சேர வேண்டும், வருவாய் பெருக வேண்டும் என்கின்ற ஆசையில் இருந்து விலக முடியாத வனாகி, போதவில்லையே போதவில்லையே என்கின்ற தரித் திரத்துக்கு அடிமை ஆகிறான்.
இந்த குணங்கள் பகுத்தறி வில்லாத ஜீவராசிகள் என்பவைகளிடம் காணக் கிடையாது. தன் பிள்ளைக்குட்டி, பேத்து, பிதுர் ஆகிய பின் சந்ததி களைப் பற்றிய முட்டாள்தனமான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குத்தான் இருக்கிறதே ஒழிய, பகுத்தறிவில்லாத வைகளுக்கு இல்லை. அநேக ஜீவராசிகள் தன் பிள்ளைக் குட்டிகளை கவனிப்பதே இல்லை. அனேக ஜீவராசிகள் தன் பிள்ளை குட்டிகள் தனியே இரை தேடிக் கொள்ளும் பருவம் வந்தவுடன் வெறுத்துத் தள்ளி விடுகின்றன. எவையும் அவைகளைப் பற்றி சதா கவலைப்படுகிறதில்லை.
பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவ தில்லை. தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின் மீது சவாரி செய்வதில்லை.
பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தை கீழ்ப்படுத்து கிறான், வருத்துகிறான். வாகனமாய் உபயோகப்படுத்து கிறான். சோம்பேறியாய் இருந்து, தன் இனத்தின் உழைப் பிலேயே வாழ்கிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும், பயனை அனுபவிக்க ஒரு கூட்டமாகவும் பிரிந்து கொள்ளுகிறான்.
உதாரணமாக நாய், கழுதை, பன்றி என்கின்ற இழிவான மிருகக் கூட்டத்தில் பார்ப்பன ஜாதி, பறை ஜாதி, நாயுடு ஜாதி, முதலி ஜாதி என்கின்ற பிரிவு கிடையாது. ஆனால் மனித வர்க்கத்தில் தன் இனத்தையே பிரித்து இழிவுபடுத்தப்படுகின்றது.
மனிதன் மீது மனிதன் சவாரி செய்கிறான். மனிதன் உழைப்பை மனிதன் கொள்ளை கொள்ளுகிறான். மனிதனை மனிதன் வஞ்சிக்கிறான்.
பகுத்தறிவின் பயன் இதுவாயிருக்கும்போது பகுத்தறிவு இருப்பதாலேயே மேன்மை யானவன் என்று எப்படி சொல்ல முடியும்?
மனிதன் வாழ்க்கை நிலை
பொதுவாகவே, மனித வாழ்க்கையின் தன்மை மிக்க குறைபாடும், கவலையும், அதிருப்தி கொண்டதாகவே இருக்கிறது. இந்த குணம் எல்லா தேசத்திலும், எல்லா மனிதர்களிடையும் அரசன், குடிகள், பணக்காரன், ஏழை-மேல் ஜாதிக்காரன், கீழ் ஜாதிக்காரன், முதலாளி, தொழிலாளி என்கின்ற பேதங்களாக, தாரதம்மியங்களாக இல்லாமல் எல்லா மக்களிடமுமே இருந்து வருகின்றது.
அறிவில்லாததால் கஷ்டப்படுகிறான் என்று சொல்லுவதற்கு இல்லாமல் பகுத்தறிவு என்பதும் இருந்தும் மனிதன் ஏன் இத் தன்மையில் இருக்க வேண்டும்? மனிதன் காட்டுமிராண்டியாயும், சமுக வாழ்க்கை இல்லாமலும் காட்டில் தனித்தனியாய் திரியும்போது இல்லாத கஷ்டங்கள், கெட்ட எண்ணங்கள் எல்லாம் சமுக வாழ்க்கைக்கு வந்த பின்பு அனுபவிக்கின்றவனாகவும், உடைய வனாகவும் இருந்து வருகிறான்.
மனிதன் காட்டுமிராண் டித் தனி வாழ்க்கைக்கு வரும்போது ஒவ்வொரு மனிதனும் சமுதாய வாழ்க் கையில் ஒருவனுக்கொரு வன் உதவி செய்து வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி வந்திருப்பானே ஒழிய, மற்ற மனிதனைக் கொடுமைப் படுத்தி, இழிவுபடுத்தி, கஷ் டப்படுத்தி, அதன் பயனாய் தான் வாழலாம் என்று கருதி இருக்க மாட்டான். அப்படி கருதி இருந்தால் சமுக வாழ்க்கை ஏற்பட்டே இருக்காது.
பரஸ்பர உதவிக்காக ஏற்பட்ட சமுக வாழ்க்கை பரஸ்பர தொல்லைக்கும், உபத்திரவத்துக்கும் ஆளாக ஏற்பட்டு விட்டது. சமுதாயத் துறையில் இன்று உள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடமை முதலிய குணங்கள் மனிதன் அறிவுக் குறைவினால் பகுத்தறிவு இல்லாததால் அல்லது பகுத் தறிவை செவ்வனே பயன்படுத்தாததால் ஏற்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, காலக் கொடுமையாலேயோ, கடவுள் தன்மையாலோ, அரசாட்சியாலோ ஏற்பட்டது என்று எவரும் சொல்லிவிட முடியாது.
ஏனெனில், சமுக வாழ்க்கையில் சரித்திர ஆரம்ப காலம் எதுவோ அக்காலத்திலிருந்தே இக் குணங்கள் மனித சமுகத்தில் இருந்து வந்திருப்பதை சரித்திர ஆதாரங்களில் பார்க்கக் காணலாம்.
கடவுள் தன்மை என்பதிலும், எப்படிப்பட்ட கடவுள் காலத்திலும், அவதாரங்களின் காலத்திலும் கடவுள் தன்மை பெற்ற தூதர்கள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், சமயக் குறவர்கள் என்பவர்கள் காலத்திலும், இக்கொடுமைகளும், குறைவுகளும், இழி குணங்களும் நிலவி வந்திருக்கின்றன.
அதுபோலவே அரசாங்க விஷயத்திலும் இன்றுள்ள அந்நியர் வெள்ளைக்காரர் வியாபார உணர்ச்சியோடும், பொறுப்பில்லா மலும் ஆளுகின்ற ஆட்சி என்பன மாத்திரம் அல்லாமல் கடவுள் அவதார ஆட்சி, கடவுள் அருள்பெற்ற ஆட்சி, தர்ம தேவதைகள் ஆட்சி, மனு நீதி ஆட்சி, மற்றும் சேர, சோழ, பாண்டியன், பார்ப்பனர், நாயக்கர், முகமதியர் ஆகிய எல்லா ஆட்சிக் காலத்திலும் இருந்து வந்த குறைகளேதான் இன்று காணப்படுகின்றன.
எந்தக் காலத்திலும், எப்படிப்பட்ட கடவுளாலும், யாருடைய ஆட்சியிலும் இக்குறைபாடுகள் நீங்கி இருந்ததாகவோ, நீக்கப் பட்டதாகவோ காண முடியவில்லை.
ஆகவே, இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிப்பதாய் இருந்தால் இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று மனிதனுக்கு பகுத்தறிவு ஏற்பட்ட காரணத்தினாலேயே மனிதன் இத்யாதி கொடுமைக்கும், துக்கத்துக்கும், இழிவுக்கும் ஆளானான் என்று சொல்ல வேண்டும்.
இதை அறிஞர் ஒப்புக் கொள்ள முடியுமா? முடியாது. மற்றென்னவென்றால் மனிதன் அறிவை தப்பாய் பயன்படுத்தி இயற்கையையும், மனித சுபாவத்தையும் மனிதன் தவறுதலாய் கற்பித்துக் கொண்டு மனித ஜன்மமே அளவற்ற ஆசைக்கு அடிமைப்பட்டதென்றும், மனித ஜன்மமே துக்கம் அனுபவிக்கவும், கவலையால் மூழ்கவும் ஏற்பட்டதென்றும், மனிதன் தனது சமுக வாழ்க்கையே (சம்சார சாகரம்) துக்கம் என்று கருதி அதையே இயற்கை ஆக்கிவிட்டதால் இந்நிலையில் இருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.
மனித வாழ்க்கை நிலை முழுவதையும் கட்டுப்படுத் திக் கட்டுப்பாட்டுக்கு அடிமைப்படுத்திக் கொண்டான். மனிதனுடைய இந்த சிந்தனா சக்தியையும்கூட கட்டுப் படுத்திவிட்டான். இயற்கைக்கு மாறாக இன்னின்ன படிதான் நடக்க வேண்டும். இன்ன இன்னபடி தான் சிந்திக்க வேண்டும் என்கின்ற கட்டுப்பாட்டுக்கும் கூட ஆளாகி விட்டான்.
மனிதன் தனக்கு என்று ஏற்படுத்திக் கொண்ட கடவுள், மதம், மதக் கட்டளை, கடவுள் கட்டளை என்பவைகள் முதலியவைகள் எல்லாவற்றையும் பெரிதும் இயற்கைக்கும், உண்மைக்கும் விரோதமாகவும், அனுப வத்திற்கு முடியாததாகவுமே கற்பித்துக் கொண்டான்.
இந்தத் தவறுதலோடு மாத்திரம் நிற்காமல் மனித சமுகத்தையே தேசம், பாஷை, மதம், ஜாதி என்பவை களால் பிரித்து வேற்றுமைப்படுத்திக் கொண்டான். அதோடு நிற்காமல் பல மதம், பல கடவுள், பல வேதம் என்பதாக ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களுடன் கற்பித்துக் கொண்டான். இவற்றில் ஒன்றுக்காவது பகுத்தறிவை சுதந்திரமாய் பயன்படுத்த உரிமை இல்லாதவனாகி விட்டான். வஸ்துக்களை, உனது, எனது என்று பிரித்துக் கொண்டான். மனிதனின் ஓய்வு எல்லாம் மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்தி, அடிமைத்தனத் திற்குப் போவதற்கே பயன்பட்டதே தவிர பகுத்தறிவால் பயன்படவோ, மேன்மை அடையவோ முடியவில்லை.
மனித சமுக நன்மைக்காக, அதாவது மக்கள் சமுகம் சரீர உழைப்பினின்றும், கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிக பயன் அடையவும் கண்டு பிடிக்கப்பட்ட யந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு ஆளாகி உழைப்பாளி, பாட்டாளிகட்கும் பட்டினியாக பயன்படுகின்றதோ, அதுபோலவே மனிதனுக்கு மேன்மையையும், திருப்தியையும், கவலை யற்ற தன்மையையும் உண்டாக்கித் தீர வேண்டிய பகுத்தறிவானது சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமை யாகி மக்களுக்கு துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகின்றது.
இவற்றாலும், இன்னும் இவை போன்ற காரணங் களாலேயும் மனிதன் பகுத்தறிவு பெற்றதால் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத தொல்லையையும், கவலையையும், குறைவும், அதிருப்தியும், தரித்திரமும் அடையக் காரணஸ்தவனாகிவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
எனவே மனிதன் இப்படிப்பட்ட கீழ்மை நிலையில் இருந்து மேம்பாடு அடைய வேண்டு மானால், முதலாவ தாக தன்னம்பிக்கை உடையவனாகவும், தனது சக்தி என்ன என்பதை உணர்ந்தவனாகவும் இருக்க வேண்டும்.
இன்று மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லை. தன்னைத்தான் நடத்துவதாக அவன் நினைப்பதில்லை. தனது காரியத்துக்குத்தான் பொறுப்பாளி என்பதில் நம்பிக்கை இல்லை. மனிதன் தான் கற்பித்துக் கொண்ட கடவுளையும், கடவுள் கட்டளையையும், கடவுள் சித்தாந் தத்தையும் வெகு குளறுபடி ஆக்கிக் கொண்டான்.
அதோடு மாத்திரமல்லாமல் தனது சவுகரியத்துக்கு ஏற்றபடியெல்லாம் மாற்றிக் கொள்ளுகிறான். பெரிதும் சோம்பேறி வாழ்க்கைக்கே கடவுளை பயன்படுத்திக் கொள்ளுகிறான். இவ்வளவோடு அல்லாமல் தலைவிதி, முன் ஜன்ம கர்ம பலன் என்பவைகளை கற்பித்துக் கொண்டு தனது முட்டாள்தனத்துக்கும், அயோக்கியத் தனத்துக்கும் பரிகாரமாக்கிக் கொண்டான்.
மனிதன் முதல் முதல் தவறிப் போன இடம் இதுவேயாகும். கடவுளும் கருமமுமே மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்திப் பகுத்தறிவு அற்ற ஜீவராசிகளைவிட கேவலமாக்கி இன்று மனிதனைத் துக்க ரூபமாகவும், கவலைக் களஞ்சியமாகவும் ஆக்கிவிட்டது.
பகுத்தறிவுக்கு கடவுளும், கருமமும் நேர் விரோதி களாகும். ஏனெனில் கடவுளுக்கும், கருமத்துக்கும் அடிமைப்பட்டவனிடம் சொந்தமாக ஒன்றுமே கிடையாது. அவன் மரக்கட்டை. தண்ணீர் அலையில் அலைவது போன்றவனேயாவான். ஆதலால், இந்த உணர்ச்சிகளில் இருந்து விடுபடுவதே பகுத்தறிவின் வெற்றிக்கு முதல் படியாகும்.
இந்தப்படி சொல்லுவதை மக்கள் நாஸ்திகம் என்கின்றார்கள். இதனாலேயே பகுத்தறிவு வாதிகள் நாஸ்திகர்கள் என்று உலகமெங்கும் பழிக்கப்படு கிறார்கள். பகுத்தறிவு மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப் பட்ட சங்கமானது நாஸ்திகப் பழிப்புக்கு பயப்படக் கூடாது.  (18.05.1935 அன்று திண்டிவனம் தாலுகா இராஜாகுளம், வடகரைத் திடலில் நடைபெற்ற பகுத்தறிவு சங்கத்தின்  முதலாவது ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு.)
குடிஅரசு - சொற்பொழிவு - 26.05.1935

Sunday, May 12, 2013

தீண்டாமை


இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை ஒரு பெருமை யெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்ச மும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன்.
ஆதி திராவிடர்களுக் கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரம மென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மை விடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக்குறியும் ஏற்படுத்துவ தாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக் கிணறு வெட்ட வேண்டும்? சிலர் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும்.
நமது கிணறு குளங்களில் ஆதி திராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அனுமதிக்கலாகாது? பட்சிகளும் மிருகங்களும் குளங் களில் தண்ணீர் சாப்பிடுவதில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்னென்ன வருகிறதென்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்விதத் தண்ணீரை இந்த ஆதி திராவிடர்கள் எடுத்துச் சாப்பிட்டுவிடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும். என்று சொல்லிவிட்டு நீங்கள் எனக்களித்த வரவேற்புப் பத்திரத்தில் உங்களுக்காக நான் அதிகவேலை செய்திருப்பதாகச் சொல்லிப் புகழ்ந்திருக்கிறீர்கள். அது கொஞ்சமும் உண்மையல்ல. உங்களை உத்தேசித்து நான் ஒரு காரியமும் செய்யவேயில்லை.
ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு உழைப்பதாய் நினைத்துக் கொள்வதும் ஆதி திராவிடர்களுக்கு உழைப்பதாய்ச் சொல்லுவதும் வேஷத்திற்காகத்தான் உழைக்கிறவர்களும் பேசுகிற வர்களுமாயிருப்பார்களென்பது எனது அபிப்பிராயம். அதாவது, இந்தியாவின் நன்மைக்காக அய்ரோப் பியர்கள் இந்தியாவை ஆளுகிறார்கள் என்பது போலத் தான் ஆகுமேயல்லாமல் வேறல்ல. நான் அப்படி நினைக்கவேயில்லை.
பறையர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருப்பதால்தான் சூத்திரர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருக்கிறது. பறையர் என்கிற ஜாதிப் பெயரைவிட சூத்திரர் என்கிற ஜாதிப் பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரீகளில் பதிவிரதைகளும், சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்களுமிருக்கலாம். சூத்திரர்களில் அப்படி யிருக்க இடமேயில்லை. ஏனென்றால் சூத்திரச்சி என்றால் தாசி, வேசி என்றுதான் பொருள். சூத்திரன் என்றால் தாசி மகன், வேசி மகன் என்றுதான் பொருள்.
இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்பந்தம். ஆகையால் என் போன்ற சூத்திரன் என்று சொல்லப்படுபவன் பறையர்கள் என்று சொல்லப்படு வோர்களுக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம் சூத்திரர்கள் என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறல்ல. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்று கிறது.
உங்களைத் தாழ்மையாய் கருதும் ஸ்திரீகளும், புருஷர்களும் தாங்கள் பிறரால் உங்களைவிடக் கேவலமாய் தாழ்மையாய்க் கருதுவதை அறிவதில்லை. அந்நியர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக் கும் அறியாமை யால், தங்களை மற்றவர்கள் தாழ்மை யாய் நினைப்பது தங்களுக்கு ஈனமாய்த் தோன்றுவதில்லை.
இந்த லட்சணத்தில் உங்களிடம் தப்பிதங் கண்டு பிடித்து, உங்கள் உடம்பில் துர்வாடை அடிக் கிறது, நீங்கள் ஸ்நானம் செய்வதில்லை, துணி துவைப்ப தில்லை, மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள், மதுவருந்துகிறீர்கள், இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள். நீங்கள் வேஷ்டி துவைக்காமலும் குளிக்காமலும் இருப்ப தற்கு யார் ஜவாப்தாரி என்பதை அவர் உணருவதில்லை. உங்களுக்குக் குடிக்கவே தண்ணீரில்லையென்றால் குளிப்பதெப்படி, வேஷ்டி துவைப்பதெப்படி? அழுக்கும் நாற்றமும் உங்கள் கூடவே பிறந்ததா என்று கேட்கிறேன்.
குளிக்கவும், வேஷ்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல் மகந்துகள் என்போரையும், சங்கராச்சாரிகள் என்போரையும் கொண்டு வந்து வீட்டிலடைத்து வைத்து விட்டால் அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக்குமா? அவர்கள் உடம்பும் வாயும் நாற்றமடிக்காமலிருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். நாமே ஒருவனைப் பட்டினி போட்டுவைத்து, அவன் இறந்துபோன பிறகு பட்டினியினால் இறந்துபோய் விட்டான் பாவி என்று சொன்னால், யார் பாவி யென்பதை நினைத்துப் பாருங்கள்.
அல்லாமலும், மாடு தின்பதும், மதுவருந்துவதும், நீங்கள் பறையர்களாயிருப்பதற்குக் காரணமென்று சொல்லுவது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக் கொண்டும் மதுவருந்திக் கொண்டும் இருக்கிறவர்கள் தான் இப்பொழுது உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தவிரவும், நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சேர்ந்ததல்ல.
உங்களை மற்றவர்களைப் போல சரியானபடி சம்பாதிக்கவும், தாராளமாய் சாப்பிடவும், தெருவில் நடக்கவும், தாராளமாய் எங்கும் போய் வேலை செய்து சம்பாதிக்கவும் வழியில் லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப் பணத்தில் அதிக ஆகாரம் ஆகக் கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டியதாயிற்று.
மாட்டு மாமிசத்தை அனுமதிக்கும் மதத்தைச் சேர்ந்த மகமதியாரும் கிறிஸ்தவரிலும் கூட சிலர் கைப்பணந் தாராளமாய்க் கிடைப்பதாயிருந்தால் நாங்கள் மாட்டுமாமிசம் சாப்பிடுகிற வழக்கம் இல்லை என்று சொல்லு கிறார்கள்.
ஆதலால், நமது நாட்டார் மாட்டிறைச்சி சாப்பிடுவ தற்குத் தரித்திரந்தான் முக்கியக் காரணம். அல்லாமலும், மாட்டு மாமிசம் சாப்பிடுவது ஆடு, கோழி, மீன், பன்றி இவைகளைவிட என்ன அவ்வளவு அதிகமான பாவமாய்ப் போய்விட்டது. கோழியும், மீனும், பன்றியும் எச்சிலையும், பூச்சு புழுக்களையும், அழுக்குகளையும், மலத்தையும் சாப்பிடுகிறது. இப்படியிருக்க இதைச் சாப்பிடுகிற வட நாட்டு பிராமணர்கள் முதல் தென்னாட்டு சூத்திரர்கள் வரை நல்ல ஜாதியும், தொடக்கூடியவர்களாயு மிருக்கும் போது, புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும், புண்ணாக்கும் சாப்பிடுகிற மாட்டிறைச்சி சாப்பிடுவதனால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான்.
அப்படிப் பார்த்தாலும் மாடு சாப்பிடுகிறவர்களை யெல்லாம் தொடாதே, தெருவில் நடக்காதே, குளத்தில் தண்ணீர் சாப்பிடாதே, ஊருக்குள் குடியிருக்காதே என்று சொல்லுகிறார்களா? இது வீணாய், வேண்டுமென்றே உங்களைத் தாழ்த்தி வைப்பதற்காகச் சொல்லும் ஒரு யோக்கியப் பொறுப்பற்ற காரணமேயல்லாமல் உண்மையான காரணமல்ல என்பதுதான் எனது முடிவு.
மதுவையும், மாட்டு மாமிசத்தையும் தள்ள வேண்டும் என்பதை நான் ஆட்சேபிக்க வரவில்லை. மதுவையும் மாட்டு மாமிசத்தையும் தள்ளினால்தான் உங்கள் ஜாதி உயரும் என்று சிலர் சொல்லும் அயோக்கியத்தனமான காரியத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஜாதி உயருவதற்காக, மதுவையும் மாட்டு மாமிசத்தையும் விடுங்களென்று கேட்க மாட்டேன்.
அதற்காக நீங்கள் விடுவதும் அவ்வளவு அவசியமில்லை. நம் நாட்டில் தென்னை, பனை மரங்களில் ஊறும் கள்ளும், காய்ச்சும் சாராயமும் வெளிநாடுகளிலிருந்து வரும் சாராய தினுசுகளும் சென்னை மாகாணத்தில் மாத்திரம் சுமார் 15, 20 கோடி ரூபாய் பெரும்படியானதை யெல்லாம் நீங்க ளேவா குடித்து விடுகிறீர்கள்? யாராவது நம்புவார்களா? ஒருக்காலும் நம்பமாட்டார்கள். ஆதலால், ஜாதி உயர்வை உத்தேசித்து இவற்றை விட்டு விட வேண்டுமானால் மற்றவர்கள் முதலில் விடட்டும்.
மதுபானம் மனிதனின் ஒழுக்கத்திற்கு விரோதமென் பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். மதுவிலக்குக்காக நானும் சிறிது தொண்டு செய்திருக் கிறேன். ஆனால், ஜாதி உயர்வுக்கு எல்லா ஜாதியாரும் சாப்பிடும் மதுவிலக்கு ஒன்றும் தடை செய்வதில்லை. ஆகையால், மதுவிலக்கும் மாமிச விலக்கும் ஜாதி உயர்வுக்கு அவசியம் என்று சொல்வது வேண்டுமென்றே சொல்லும் பொய். அல்லாமலும் உங்களிடமும் சில குற்றங்கள் இருக்கிறதைச் சொல்லா மலிருக்க முடியவில்லை.
அதாவது, நீங்க ளாகவே உங்கள் ஜாதிக்கு இழிவு சம்பாதித்துக் கொள்ளுகிறீர்கள். அனாவசியமாய் யாரைக் கண்டாலும் சுவாமி என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதை மாற்றிவிட வேண்டும். ஒரு மனிதனைப் பார்த்தால் அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்கிற எண்ணம் உங்கள் மனதில் உதிக்க வேண்டும்.
சுயமரியாதையில் கவனமில்லாத ஜாதியாரை உயர்த்தினாலும் உயராது. அவனவனுக்கே, தான் மனிதன் என்கிற உணர்ச்சி வரவேண்டும். நீங்கள் இனிமேல் யாரையும் சுவாமி  என்று கூப்பிடக் கூடாது. வேண்டு மானால் அய்யா என்று கூப்பிடுங்கள். நீங்களாகவே பதுங்குவதும் ஒதுங்குவதுமான துர்க்குணங்கள் உங்களை விட்டுப் போகவேண்டும். அன்றுதான் நீங்கள் சமத்துவமாக நடத்தப்படுவீர்கள். என்று பேசி முடித்தார்.
(காரைக்குடி - சிராவயலில் நடைபெற்ற காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் காந்தி கிணறு திறப்பு விழாவில்  06-04-1926 ந்தேதி ஆற்றிய சொற்பொழிவு)
- குடிஅரசு -  25.04.1926