Sunday, March 10, 2013

சிவராத்திரியின் யோக்கியதையைப் பாரீர்!

சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப் போல், சைவர்கள் என்று கருதக் கூடியவர்களின் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங் களில் குளிர் நிறைந்துள்ளபடியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக் கோளாறு உண்டாகும்.
ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமை பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு - பண்பாடுகளுக்கும் பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!
முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலை முதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லையாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தன. ஒரு புலி இந்த வேடனைக் கண்டுவிட்டது. இவனைப் பின்தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வ மரத்தின் மேல் ஏறிக் கொண்டானாம்.  அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின்கீழ் படுத்துக் கொண்டது. புலியும் அவன் இறங்குகிறானா என்று பார்த்துக் கொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக் களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வ மர இலைகளைக் கொத்துக் கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழையின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப் பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக் கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம். அன்று இரவு வேட்டை கிடைக் காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.
(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டு சென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம்தான்).
அவன் மாலை மழையில் நனைந்து குளித்ததுபோல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல், அவன் அறியாத லிங்கத்தின்மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்ததுபோல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிட வேண்டும் என்ற எண்ண மில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட, மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின்மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான்உலகை அடைந்தானாம்.
அடுத்த கதை -
ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும் ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுரவன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்குச் சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால்,  கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டி விட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன், பார்ப்பன இளைஞன் பல காரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு, ஆத்திரத்தில் அவனை அடித் துக் கொன்றான். அன்று மகா சிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி விரத பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈஸ்வரலிங்க சிலைக்கு தீப ஆராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பனப் பூசாரியால் கொல்லப் பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத் திரியில் மனிதக் கொலை; இவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்ச கனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை. மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்தச் சிவராத்திரிகள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல, மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்றுதான் நாம் கேட்கின்றோம். இந்தப் பாழும் அர்த்தமற்ற - பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத, நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டி கைக்கும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும், பணத்தையும் விரயப்படுத் துவது மக்களின் அறியாமையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின் ஆதிக்கமும் தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்க வேண்டும்.

Sunday, March 3, 2013

நாஸ்திகமும் சமதர்மமும்

என்னை நாஸ்திகன் என்று சொல்லு கிறவர்கள் நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அருத்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன். நாஸ்திகத்திற்குப் பயந்தவனா னால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாஸ்திகத்தினால்தான் முடியும். நாஸ்திகமென்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ருஷியாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள். பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம், அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயன்றதால்தான் நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல, சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழைய கொள்கையை மாற்ற வேண்டுமானால், அந்த மாற்றத்தையும், ஏன், எவ்விதச் சீர்திருத்தத்தையுமே நாஸ்திகம் என்றுதான் யதா பிரியர்கள் சொல்லித்திரிவார்கள்.
எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றது. கிறிஸ்துவையும், மகமது நபியையும் கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன் னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான்  காரணமாகும். துருக்கியில் பாட்சாவும், ஆப்கானி ஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக்கப் பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம். ஏனென்றால், இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்தவையென்றும், கடவுள் கட்டளை என்றும், கட வுளால் சொல்லப்பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகி யவைகளின் கட்டளையென்றுமேதான் யதாப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள். ஆகவே நாம் இப்போது எதை எதை மாற்றவேண்டும் என்கின்றோமோ அவை எல்லாம் கடவுள் செய்ததாகவும்  அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால் அவைகளைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட் டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத் ததேயாகும்.
உதாரணமாக மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லப்படுகையில், மேற்படி ஜாதி ஒழிய வேண்டுமென்றால், அவன் கண்டிப்பாகக் கடவுளை மறுத்தோ அலட்சியம் செய் தோதான் ஆகவேண்டும். எல்லா மதங்களும், மதக் கொள்கை களும் கடவுளாலோ, அவதாரங்களாலோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டவை என்று சொல்லப்படு கையில், அம்மத வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக்கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என்றும் சொல்லும்போது, அப்படிச் சொல்லுபவன் அந்தந்தக் கடவுள்களை, கடவுள்களால் அனுப்பப் பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தினவர்களை அலட்சியம் செய்த வனேயாகின்றான். அதனால் தான் கிறிஸ்துவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும், மகமதிய ரல்லாதவர் காபர் என்றும், இந்து அல்லாதவர் மிலேச்சர் என்றும் சொல்லப்படு கின்றது. அன்றியும் கேவலம் புளுகும், ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும்போது ஜாதியையும், கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்லமாட்டார்கள்?
ஜாதி, உயர்வு-தாழ்வு, செல்வம்-தரித்திரம், எஜமான்-அடிமை ஆகியவை களுக்குக் கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்வதானால், பிறகு மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய, அதற்காக மனிதன் எப்படிப் பாடுபடமுடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமேயாகும். மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் அதாவது ஓரளவுக்கு நாஸ்திக மான காரியமேயாகும். அதிலும் சவரம் செய்யச் செய்ய மறுபடியும் மறுபடியும் மயிர் முளைப்பதைப் பார்த்தும் மேலும் சவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும். பிச் சைக்காரனுக்கு சோறு போடுவதும் நாஸ்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காக பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோத மான காரியமேயாகும். அதாவது, கடவுளை நம்பாத கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மையேயாகும். இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் ஆஸ்திகன் ஒருவனும் இருக்க முடியாது.
ஆதலால், நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசியாய் நாஸ்திகமே யாகும். நாஸ்திகமும் சாஸ்திர விரோதமும் தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது. நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொள்வதால் தினமும் ஏய்த்துக் கொண்டே வருகின்றார்கள். அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய் தரித்திரர்களாய் இருப்பதற்கு கடவுள் செயல் காரணமல்ல; உங்கள் முட்டாள்தனம்தான் காரணம், ஆதலால் நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யாதீர்கள் என்று சொன்னால்தான், செல்வந்தர்களின் அக்கிரமங்களைப் பாமர மக்கள் அறியக்கூடும். அப்பொழுது கடவுள் செயலையும், அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆகவேண்டும். இந்த நாட்டில் ஒரு புறம் ஏழைகள் பட்டினி கிடக்க, ஒரு புறம் சிலர் கோடீஸ்வரராய்  இருந்துகொண்டு தலை கொழுத்து டம்பாச்சாரியாய்த் திரிவது கடவுள் செயல் என்றால், இந்த நாட்டுச் செல்வத்தை வெளியாள் சுரண்டிக் கொண்டு போவதும், அவன் இங்கு ஆடம்பரமாய் வாழ்வதும் கடவுள்செயல் என்றுதான் சொல்ல வேண்டும். ஆகையால், கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே தர்மமும், நீதியும்கூட ஒரு சமயத்திற்கும் மற்றொரு சமயத்திற்கும் மாறுபட வேண்டியனவேயாகும். ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமாய் இருந் தார்கள். ஆனால் இப்போது அரசர்கள் கொள்ளைக் காரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் லட்சுமி புத்திரர்களாய் இருக்கிறார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சகப் பகற் கொள் ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டுப் பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்களைப்பிடுங்கிக் கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆவார்கள். உதார ணமாக மனுதர்ம சாஸ்திரத்தில் சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால், பார்ப்பனன் அதைப் பலாத் காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்று இருக் கிறதை இன்னும் பார்க்கின்றோம். கொஞ்சகாலத்திற்கு முன் இது அமலிலும் இருந்திருக்கிறதாம். இனி கொஞ்சநாள் போனால் பார்ப்பான் பணம் வைத்திருந் தால் பார்ப்பனரல்லாதார் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ளலாம் என்று தர்மம் ஏற்பட்டாலும் ஏற்படும். அப்படி ஏற்படுவது முன்னைய வழக்கத்திற்கு விரோதம் என்பதாக யாரும் சொல்ல முடியாது. காலம் போகப்போக நேரில் உழுது பயிர்செய்ய முடியாதவனுக்கு பூமி இருக்க வேண்டியதில்லை என்றும், அப்படியிருந் தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பதுபோல் ஒரு சிறு அளவுதான் பாத்தியமுண்டேயொழிய, இப்போது இருப்பதுபோல் உழுகின்றவன் தன்வயிற்றுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு, ஏன் சில சமயங்களில் அதற்கும் போதாமலும் இருக்கப் பூமிக்குடையவனுக்கு பெரும்பாகம் கொடுப்பது என்கின்ற வழக்கம் அடிபட் டாலும் அடிபடலாம். அதுபோலவே இன்று கோவில் கட்டுவது தர்மமாக இருக்கின்றது. ஆனால் பிற்காலத்தில் கோயிலை இடித்து விக்கிரகங்களை உடைத்து பள்ளிக் கூடங்களும், தொழிற்சாலை களும் ஏற்படுத்துவது தர்மம் என்றானாலும் ஆகலாம்.
இதுபோலவே அநேக விஷயங்களில் இன்றைய தர்மம், நாளைக்கு அதர்மமாகி, தலைகீழாக மாறக்கூடும். அப்பேர்ப்பட்ட நிலைமைவரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற முற்படுகின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க, ஏன் கடவுளையே மறுக்கத் துணிந்தாக வேண்டும். கடவுளை மறுக்கத்துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன்றைய கொடுமைகளை ஒழிக்க முடியும். அப்படிக்கில்லாமல் கடவுளுக்கும், மோட்சத் திற்கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்யமுடியாது என்பதுறுதி. ஏனெனில் அரசியல், சமுக இயல், பொருளாதார இயல் ஆகியவைகளில் உள்ள இன்றைய கொடுமை யான நிலையும், முட்டாள்தனமான நிலையும், அயோக் கியத்தனமான நிலையும் எல்லாம் கடவுள் கட்டளை யாலும், மோட்ச சாதனங்களாலும், சாஸ்திர தர்மங் களாலுமே ஏற்பட்டவைகளாகும். ஆகையால்தான் அவ் விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக்கிறேன்.
                                                                                                                                                         குடிஅரசு - கட்டுரை - 21.05.1949