Sunday, March 11, 2012

பகுத்தறிவே நல்வழிகாட்டி


பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! நான் இந்த சீரங்கம் நகருக்குப் பல தடவைகள் வந்திருக்கிறேன்.  சென்ற ஆண்டு இங்கு நடைபெற்ற கழக மாநாட்டிற்கு கடைசியாக வந்திருக்கின்றேன். அதற்குப் பிறகு இன்று வந்திருக்கின்றேன். அதற்கு முன்னும் நான் காங்கிரசில் இருக்கும்போது பல தடவைகள் வந்து கூட்டம் போட்டும் பேசியும் இருக்கிறேன்.
எங்கள் வீடு ஒருகாலத்தில் பெரிய வைணவ பக்தர் குடும்பமாக இருந்தது. எங்கள் குடும்பத்திற்கு இந்த  கோவில் ஓர் முக்கியஸ்தலமாக இருந்து வந்தது. நான் எங்கள் குடும்பத்துடன் சிறு வயதில் பல தடவைகள் வந்திருக்கின்றேன்.
தோழர்களே! எனக்கு முன் பேசிய தலைவர் அவர் களும், நடிகவேள் அவர்களும், நண்பர் வீரப்பா அவர்களும் நமது கடவுள் சங்கதி, நம்மத சங்கதிகளைப்பற்றி விளக்கினார்கள்.
தோழர்களே, இந்த இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடிக்கக்கூடிய இந்தக் காலத்தில் நாம் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம். நம்முடைய கடவுளும், மதமும், நமது பழக்க வழக்கங்களும் வெளிநாட்டுக்காரன் கண்டு எள்ளி நகையாடக் கூடிய நிலையில்தானே நாம் இன்று இருக்கின்றோம்.
3,000, 4,000 ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டி காலத்தில் கல்லு, ஈட்டி ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்ட மனிதன் மூளையில் உதித்த காட்டுமிராண்டி கடவுளை இந்த 20ஆம் நூற்றாண்டிலும் நாம் கட்டிக்கொண்டு அழுகின்றோம் என்றால் நம்மை விட காட்டுமிராண்டி உலகில் யார் இருக்கின்றார்கள்?
நம்முடைய ராஜாக்கள் எல்லாம் பார்ப்பானுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி மடமையினை வளர்க்கும்படியான இதுபோன்ற கோவில் களை எல்லாம் கட்டி வைத்து விட்டுப் போய்விட்டார்கள்.
அதைக் கொண்டு நம்மை இன்று மடையர்களாக இந்த 20ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனர்கள் ஆக்கி தாங்கள் மட்டும் சுக வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். நமது அரசாங் கமும், அயோக்கியத்தனமாக நாம் இழிமக்களாகவும், காட்டுமிராண்டியாகவும் ஆக்கி வைத்து இருக்கும் கடவுளையும், மதங்களையும், சாஸ்திரங் களையும், பழக்க வழக்கங்களையும் அழிந்துவிடாமல் கட்டிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
எவ்வளவு அயோக்கியத்தனம்? இந்த அரசாங்கத்தின் சின்னம் மடமையினை வளர்க்கும் மதுரை கோவிலின் கோபுரம் பொரிக்கப்பட்டு இருக்கின்றது எதற்காக? மதசார்பற்ற ஆட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள் ஒரு மதசம்பந்தமான ஓர் கோவில் கோபுரத்தையா போட வேண்டும்? ஏன் பயனுள்ள ஆற்றையோ, அணையை யோ, மரத்தையோ, இன்னும்  மற்றவற்றை யோ போடக் கூடாது?
நம் யோக்கியதை, பழக்க வழக்கங்கள், நம் கடவுள், மத சம்பந்தமான செயல்கள் எல்லாவற்றையும் வெளிநாட்டான் கண்டு கேலி செய்யும் நிலையில்தானே இன்று நாம் இருக்கின்றோம்.
மற்ற நாட்டுக்காரன்கள் எல்லாம் கால மாறுதலுக்கு ஏற்றவாறு வந்து அவன் அவன் கடவுட் கொள்கை, மதம், மற்ற மற்றவைகளை எல்லாம் மாற்றிக் கொண்டு விட்டான்.
நாமோ 3,000, 4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காட்டுமிராண்டி மனிதன் கடைபிடித்து ஒழுகிய கடவுளை யும், மதத்தையும், சாஸ்திரங்களையும் தானே இன்றும் கட்டிக் கொண்டு அழுகின்றோம். 3,000, 4,000 வருஷங்களுக்கு முற்பட்ட மனிதனுக்கு எவ்வளவு மூளை அறிவு இருக்க முடியும்? அன்று மனிதனுக்கு இன்றைய துப்பாக்கி போன்ற சாதனம் செய்ய தெரியாது. அவன் உபயோகப்படுத்தியதெல்லாம் கல்லு, ஈட்டி தூரத்தில் இருந்து கொண்டு விலங்குகள் மீது எறிய ஈட்டியைக் கண்டுபிடித்தான். அதற்கு அடுத்தகாலத்தில் கண்டுபிடிக் கப்பட்ட கடவுளுக்கு ஈட்டியை கையில் கொடுத்தான். அதற்கு அடுத்த காலத்தில் வேலையும் கண்டுபிடித்தான். ஈட்டி ஒரே இடத்தில்தான் குத்தும் வேலாயுதமோ மூன்று இடத்தில் குத்தும். அந்தக்காலத்தில் உண்டாக்கப்பட்ட கந்தன் அதாவது முருகன் கையில் அதைக் கொடுத்தான்.
அடுத்து இராமாயண காலம். மனிதன் சிறிது அறிவு வளர்ச்சி அடைந்தான். தூரத்தில் இருந்து வேகமாக அடிக்கக்கூடிய வில் அவனுடைய மூளையில் தோன்றியது. அதனையே அந்தக் காலத்தில் கடவுளின் அவதாரமாக கதை எழுதியவன், இராமன் கையில் கொடுத்தான். மற்றும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் ஆயுதம் இல்லாத கடவுள் இன்னது என்று விரல் விட முடி யுமா? இந்தக் காட்டுமிராண்டிக் காலத்துக் கடவுளை இந்தியன் வணங்குகின்றான். இவர்கள் அநாகரிகர்கள் என்று தானே கேலி பேசுவான்.
நம் புராணங்கள் தான் ஆகட்டும். அதைக் கேட்டால் அவன் என்ன நினைப் பான்? இராமனுடைய தகப்பன் தசரதனுக்கு 60,000 மனைவிகள் என்று எழுதி வைத் திருக்கின்றான்! தசரதன் ஒவ்வொரு பெண்டாட்டியையும் ஒவ்வொரு நாள் சந்திப்பதாக வைத்துக் கொண்டாலும் ஒரு ரவுண்டு வர 160 வருஷம் அல்லவா ஆகும்? நாரதன் சொல்லுகின்றான், கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா உனது அரைஞாண் கயிறுபடாத பெண் உலகத்தில் ஒருவர்கூட இல்லையே என்று!
இவைகளை எல்லாம் கடவுளாகவும், புராணங் களாகவும் பக்தி செலுத்தும் நம்மை அவன் என்ன நினைப்பான்?
நாம் முட்டாள்தனமாக கடவுள் சக்தியை நம்பிக் கொண்டு இருப்பவர்கள்! வெள்ளைக்காரன் விஞ்ஞான சக்தியை நம்புவான்!  எதையும் விஞ்ஞான உரைகல்லில் வைத்து உரசிப் பார்ப்பவன்! நெருப்பு என்றால் அது சுட்டால்தான் அதை நெருப்பு என்று ஒத்துக்கொள்ளு வான். சுடவில்லை என்றால் அது நெருப்புத் தன்மை உள்ளது அல்ல என்று ஒத்துக் கொள்ள மாட்டான். பனிக்கட்டியின் குணம் தொட்டால் ஜில் என்று இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது அய்ஸ் ஆகாது என்று எண்ணுவான். நாமோ அப்படி அல்ல, எதையும் சிந்திக்காமல் என்ன சொன்னாலும் அப்படியே நம்புகின்ற வர்கள். இன்று உலகத்தில் உண்டான விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் அனுபவித்தும் பல துறைகளில் மாற்றம் அடைந்து வருகின்றோம். ஆனால், கடவுள், மதம் ஆகிய துறைகளில் மட்டும் பழைய கட்டை வண்டிக் காலத் தில் தானே நாம் இருக்கிறோம். கொஞ்சங்கூட வளர்ச்சி அடையவே இல்லையே! கடவுள், மதம் ஆகியவற்றைப்பற்றி சிந்தித்தாலே, ஆராய்ந்தாலே பாவம் என்கின்றானே!
நம்மைவிட காட்டுமிராண்டியாக இருந்த வெள்ளைக் காரர்களும், முஸ்லிம்களும் இன்று உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் நாட்டை அவர்கள் ஆளுகின் றார்கள் என்றால் காரணம் அவர்கள் மதம் அவர்களை சீர்திருத்தியது. அறிவாளியாக ஆக்கியது. ஆனால், நீ இழிமகனாக, காட்டுமிராண்டியாக கல்வி அறிவு அற்ற வனாக இருக்கின்றாய் என்றால் உன்னுடைய இந்து மதமும், கடவுள்களும் தானே என்று எடுத்துரைத்தார்.
மேலும் பேசுகையில், இன்றைய நம் மாநில ஆட்சியில் காமராசர் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் ஆட்சியில் தமிழ் மக்கள் அடைந்துள்ள நன்மைகள் பற்றியும், இவைகளைக் கண்டு மனம் பொறாத ஆச்சாரி யார் ஆரம்பித்து உள்ள சுதந் திரா கட்சி பற்றியும் தெளிவு படுத்திப் பேசினார். கூட்டத்தில் நீங்கள் காமராசரிடம் கைக்கூலி பெற்றுக் கொண்டு தானே காங்கிரசை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருகின்றீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சுடச்சுட பதில் அளித்தார்.
அந்த பதில் வருமாறு: நான் காமராசரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஆதரவு பிரச்சாரம் செய்கின்றேனா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவர் பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவரை ஆதரிக்க வேண்டியது தமிழனுக்காகப் பாடுபடும் எனது கடமை யாகும். நேற்று தூத்துக்குடியில் உபதேர்தல் நடைபெற்றது. நானாக வலிய 120 ரூபாய் செலவு செய்து கொண்டுபோய் அங்கு மக்களுக்கு காமராசரைப் பலப்படுத்த காங்கிரஸ் அபேட்சகர் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு வந்தேன். அதை எல்லாம் உங்களிடம் நான் கூற வரவில்லை.
தமிழன் - தமிழனுக்குப் பிறந்த தமிழன்தான் நான் - என்று சொல்லிக் கொள்பவனுடைய கடமை, தமிழனுக் காகப் பாடுபடும் காமராசரை ஆதரிப்பது அவர் ஆட்சியை நிலை பெறச்செய்து அவரை ஒழிக்கப் பாடுபடும் ஆச்சாரி யாரை முறியடிக்க வேண்டியதுதானே கடமை.
அதுபோலவே பார்ப்பானுக்குப் பிறந்தவன் பார்ப்பான் என்று கூறிக் கொள்பவனுடைய கடமை தமிழருக்காகப் பாடுபடும் காமராசரை முறியடித்து தங்கள் நலனுக்காகப் பாடுபடும் ஆச்சாரியாரை ஆதரிப்பதுதானே அவர்கள் தர்மம்?
காமராசரை ஒழிக்க நானும் உன்னோடு வருகின்றேன் என்று ஆச்சாரியாரின் திருவடியை சரணம் என்று போய்ச் சேருகின்ற நமது முண்டங்களை நாம் எப்படி அழைப்பது என்று எடுத்துரைத்தார்.
- (விடுதலை 10.2.1960)

Sunday, March 4, 2012

எனது சுயநலம் திராவிட சமுதாயமே!


தோழர்களே! தோழர் வெங்கலவன் அவர்கள் என்னை பாராட்டிப் புகழ்ந்துப் பேசினார். அவ ருக்கு என்னால் ஒன்றும் செய்யமுடிய வில்லை என்பது உண்மைதான். நான் செய்து வரும் தொண்டு பெரிதும் பொது மக்களையும், சிறப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களையும் பொறுத்து பொதுவில் ஆற்றி வருகிறேனே ஒழிய, தனிப்பட்ட மனிதர்கள் விஷயத்தில் நான் அதிகம் செய்ய முயற்சிப்பதில்லை என்பதோடு, அது என்னால் முடியக் கூடிய காரியமும் அல்ல; முடிவதானாலும் தனிப்பட்ட மனிதர்களைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு கவலை எடுத்துக் கொள்ளுகிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனது சிறிது செல்வாக்குக்கும் பலக் குறைவு ஏற்பட ஏதுவாகிறது.
அப்படி இருந்தும் நான் தவறாமல் தினம் ஒன்றுக்கு 4, 5 சில சமயங்களில் 10 வீதம் கூட சிபாரிசு கடிதங்கள் கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். சில சமயங்களில் நான் வெளியூர் போகும் நிகழ்ச்சியைக் கூட பத்திரி கையில் தெரிவிப்பதில்லை. காரணம் என்னவென்றால் நான் போகும் ஊர்களுக்குக்கெல்லாம் 10, 15 பேர்கள் வந்து அதற்கு சிபாரிசு இதற்கு சிபாரிசு என்று என்னால் முடியாததற்கெல்லாம் கேட்கிறார்கள். கொடுக்காவிட்டால் அவர்கள் புது விரோதிகள் ஆகி விடுகிறார்கள். கொடுத்து அது பயன்படாவிட்டால் நான் சரியாய் முயற்சித்திருந்தால் கிடைத்திருக்காதா என்று நிஷ்டூரப் பட்டுக் கொள்ளுகிறார்கள், சில சமயம் ஒருவருக்கு கொடுத்தது போதாதென்று வேறு நமக்கு தெரி யாத நபருக்குக் கேட்கிறார்கள். கொடுக்காவிட்டால் முன் கொடுத் ததும் வீணாகி விரோதமும் கொண்டு விடுகிறார்கள். 10 தடவை கொடுத்து ஒரு தடவை கொடுக்க முடியாமல் போனால் வெளிப்படையான எதிரி யாகவே ஆகி விடுகிறார்கள். சிபாரிசு கொடுத்து அனுகூலம் ஆகி அவர்கள் தகுந்த யோக்கியதைக்கு வந்தாலும், அதற்கும் மேல், யோக்கியதைக்கு போக நம்மை வைதால் அனுகூலமாகும் என்று கருதினால், தைரியமாய் வைகிறார்கள். தங்களுக்குக் கீழ் இருப்பவர்கள் நமக்கு வேண்டியவர்களாயிருந்தால் தொல்லை கொடுக்கிறார்கள். நமக்கு விரோத மாகவும் சதியாலோசனையில் கலந்து கொள்ளுகிறார்கள். சிபாரிசோ, அல்லது வேலையோ நம்மால் கிடைக்காவிட்டால் இந்தக் கட்சி என்ன சாதித்தது என் கிறார்கள். வேலை கிடைத்து நல்ல பதவியில் உட்கார்ந்து கொண்டு மேலால் நம் தயவு தேவை இல்லை என்று கண்டு கொண்டால் நான் ஒரு கட்சியாலும் ஒருவர் ஆதரவாலும் இப்பதவி பெற்றவன் அல்ல. இந்த கட்சியால் கட்சித் தலைவரால் எனது முற்போக்கு கெட்டுப் போய்விட்டது. என்னுடைய தனிப்பட்ட கெட்டிக்காரத்தனத்தினால் முன்னுக்கு வந்தேன் என்றும், என்ன கட்சி? கட்சிக்கு என்ன செல்வாக்கு? கட்சி எங்கே இருக்கிறது? என்றெல்லாம் கூடப் பேசுகிறார்கள். இந்த விதமான நிலைமை நம் மக்களிடம் இன்று நேற்றில்லாமல் கட்சி தோன்றிய காலம் முதல் தியாகராயர், பனகல் அரசர், பொப்பிலி அரசர் காலம் முதல் இருந்து வருகிறது.
பனகல் அரசர், ஒரு வேலை காலியானால், அதனால் எனக்கு 20 விரோதியும் ஒரு சந்தேகப்படத் தக்க நண்பனும் ஏற்படுகிறான் என்று சொல்லி இருக்கிறார்.
கட்சி என்றால் தனிப்பட்டவர்களுக்கு உத்தியோகம், பதவி, பட்டம், பொருள் லாபம் என்பதாகத்தான் பெரும்பாலான மனிதர்கள் நினைத்திருக்கிறார்களே தவிர, பொது உழைப்பு என்றோ, பயன் அடைந்தவர்கள் நன்றி காட்டுவது என்றோ வெகு பேர் கருதுவதே இல்லை. பார்ப்பனர் அப்படி நினைப்பதே இல்லை. கட்சிக்காகப் பொதுவாகப் பாடுபடுவதும் பலனை வரும்போது அனுபவிப்பதும் என்று கருதுகிறார்கள். நம்மவர்கள் பாடுபடாமல் தனக்கு தனக்கு தனக்கு என்கின்றார்கள். இந்த லட்சணத்தில் நன்றியும் கிடையாது. அது மாத்திர மல்லாமல் எதிரியுடனும் சேர்ந்து கொள் ளுவது சகஜமாக இருக்கிறது.
உதாரணமாக அய்க்கோர்ட் ஜட்ஜு தேவஸ்தானபோர்டு கமிஷனர் முதலிய பதவியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பனரல்லாத அய்க்கோர்ட் ஜட்ஜுகளும், தேவஸ்தான போர்டு ஆரம்பமான காலமுதல் இன்று வரை அதில் நியமனம் பெற்ற கமிஷனர்கள் அத்தனை பேரும் கட்சி ஆதரவி னாலேயே நியமனம் பெற்றார்கள். அப்படி இருந்தும் அவர்களில் பெரும்பாலோர் கட்சிக்கு எதிரிகளானார்கள். எதிரி களுடன் சேர்ந்தார்கள், கட்சியைப்பற்றிக் கவலையற்றவர்களானார்கள். கட்சி மக்களுக்கும், கட்சி கொள்கைக்கும் துரோகம் செய்து தங்கள் முற்போக்கை கருதுபவர்களானார்கள்.
இன்னும் இப்படி எத்தனை உதா ரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். ஒருவர் தன் மகனுக்கு ஒரு புரோ மோஷனுக்கு சிபாரிசு கேட்டு, அது ஒரு அளவுக்கு செய்யப்பட்டு, அந்த அளவு அவருக்கு திருப்தி இல்லையானால் உடனே வேறு தலைவர் ஏற்பட்டால் தான் கட்சியால் மக்களுக்கு நன்மை ஏற்பட முடியும் என்று சொல்லி விடு கிறார். இப்படி ஒரு கட்சியை தனிப் பட்டவரின் பெரும் பதவிக்கும் லாபத்துக்கும் மாத்திரம்தான் என்று கருதினால் கட்சி எப்படி முன்னுக்கு வர முடியும்? பதவியும் லாபமும் கிடைத் தாலும் கிடைத்ததின் செல்வாக்கை கட்சிக்கோ கட்சி மக்களுக்கோ பயன் படுத்தாவிட்டால் எப்படி முடியும்? எல்லோரும் இப்படி என்று நான் சொல்ல வரவில்லை. அநேக நல்லவர்களும் யாதொரு நலனும் இல்லாவிட்டாலும் கட்சிக்குத் தன் கைக்காசைச் செலவழித்துக் கொண்டு அநேக அசவுகரியங்களையும், ஏமாற்றங்களையும் பொறுத்துக் கொண்டு பாடுபடுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் களால் இன்று கட்சியின் காரியம் பெரிதும் நடந்து வருகிறது. அவர்கள் இந்த சமுதாயம் உள்ளவரையில் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதில் சந்தேகமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.
தவிர, தோழர் வெங்கலவன் அவர்கள் என்னை சுயநலமில்லாதவன் என்றும், பதவியில் ஆசையில்லாதவன் என்றும், இருந்தால் சில பெரியவர்களைப் போல் பெரிய பதவிக்கு வந்திருக்கக் கூடும் என்றும், இந்த நெருக்கடியில் பெரும் பணம் சம்பாதித்தும் இருக்கக் கூடும் என்றும் நான் பெரிய தியாகம் செய் திருப்பதாகவும் சொல்லிப் புகழ்ந்தார். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
நான் இந்த தொண்டு வேலை செய்வதைத் தவிர வேறு எந்தப் பதவிக்கும் தகுதி அற்றவன் என்பது எனக்குத் தெரியும். பதவி வந்தாலும் அதை சுமந்து கொண்டு இருக்க என்னால் முடியாது என்பது உங் களுக்குத் தெரியும்.
அன்றியும் இன்று எனக்கு பணம் இல்லாமலோ, பதவி இல்லாமலோ நான் இருக்கவில்லை. எனக்கு செலவுக்கு வேண்டியதற்கு மேல் என்னிடம் பணம் உண்டு - அதை என்ன செய்வது என்பதே எனக்குப் பெரிய பிரச்சினை யாய் இருக்கிறது. எனக்கு இருக்க வேண்டியதற்கு மேலான பதவியையும் நீங்கள் அளித்திருக்கிறீர்கள்.
நீங்கள் கருதுகிற அளவு செல்வ மும், நீங்கள் கருதுகிற பெரிய பதவி யும் எனக்கு இருந்தால் எனக்கு இன்றுள்ள மதிப்பு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் கருதுகிற பணக்காரரைவிட, நீங்கள் கருதுகிற பதவியாளர்களைவிட உங்கள்முன் நான் பெருமை உள்ள வனாக இருக்கிறேன். நீங்களும் பெருமையாய்க் கருதுகிறீர்கள் என்றே கருதுகிறேன்; எனக்கு சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன்; என்னுடைய ஆசை யும் சுயநலமும் எல்லையற்றது. நான் என் சொந்த சுயநலம் என்பதை திராவிட சமுதாயம் என்று எண்ணியிருக்கிறேன். அச்சமுதாயத்திற்கு வேண்டிய செல் வமும் பதவியும் என்பவற்றில் அளவற்ற ஆசை கொண்டிருக்கிறேன். அந்தச் சுயநலத்திற்கே உழைக்கிறேன். அதைத் தவிர, என் சொந்தம் என்று எண்ணுவ தற்கு அவசியமான சாதனம் எனக்கு ஒன்றுமே இல்லை. இருந்தாலும் இதற்கு மேல் என்ன வேண்டி இருக்கிறது?
ஏன் இவ்வளவு தூரம் (தற்பெருமை யாய் கருதும்படி) சொல்லுகிறேன் என்றால், ஒவ்வொரு மனிதனும் தோழர் வெங்கலவன் அவர்கள் குறிப்பிட்டவர் களான ராஜா சர் போலவோ, சர். இராமசாமி போலவோ, சர். சண்முகம் போலவோ வர வேண்டும் என்று கருதுவதைவிட அதாவது பெரிய செல்வவான்களாகவும், பதவியாளர் களாகவும் வர வேண்டுமென்று கருதுவதைவிட, நல்ல தொண்டனாக தாழ்த்தப்பட்ட, கொடுமை செய்யப் பட்ட மக்களுக்கு விடுதலை அளிப்ப வர்களாக, அவர்களை செல்வவான் களாகவும் பதவியாளர்களாகவும் ஆக்குபவர்களாக இருப்பதினால் பெருமை இல்லாமல் போகாது என்பதை வாலிபர்களுக்கு எடுத்துக் காட்டவேயாகும். முன் சொன்னவர் களால் ஏற்படும் நன்மையைவிட பின் சொன்னவர்களால் ஏற்படும் நன்மை குறைந்து போகாது. ஆதலால் வாலிபர்களுக்கு செல்வத்திலும் பதவி யிலுமே கண்ணும் கருத்தும் இருக்கக் கூடாது என்றும், பொதுத் தொண் டுக்கு இறங்கி தொண்டனாகவே ஆக ஆசைப்பட வேண்டும் என்றும், நம் சமுதாயத்துக்கு தொண்டாற்ற செல் வமும் பதவியும் கருதாத தொண்டர்கள் அநேகர்கள் வேண்டி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
(திருச்சி சலவைத் தொழிலாளர் தோழர் முத்து அவர்கள் மகள் திருமணத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 24.06.1944

Saturday, March 3, 2012

நாத்திகர்கள் சங்கம்


1000, 2000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதனுக்கு எந்த அளவு அறிவு இருந்திருக்க முடியும்? அதிசய அற்புதங்களைச் சிந்திக்க அவனுக்கு எப்படி வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்? என்று கேட்டால் எவனும் பதில் சொல்ல முடியாது. நமது பாட்டன் கட்டை வண்டியில் போனான்; குச்சு வீட்டில் இருந்தான். ஆகவே நானும் கட்டை வண்டியில்தான் போவேன்; குச்சு வீட்டில்தான் இருப்பேன். மோட்டாரோ, ரயிலோ, மச்சு வீடோ வேண்டாம் என்று எவன் சொல்லுகின்றான்? தோழர்களே மேல்நாடுகளில் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பே - நாத்திகர்கள் சங்கம், சிந்தனையாளர்கள் சங்கம், தாராள நோக்காளர்கள் சங்கம், கடவுள் மறுப்பாளர்கள் சங்கம் என்ற பல பெயர்களில் பல சங்கங்கள் தோன்றி வேலை செய்து வருகின்றன.
நான் பாரிசில் ஒரு பகுத்தறிவு பத்திரிகையை பார்த்தேன். அதில் சிலுவையை ஒரு காலில் மிதித்துக் கொண்டு இரண்டாக பிளப்பதாகப் போடப்பட்டு இருந்ததை கண்டேன். தோழர்களே! இந்த பகுத்தறிவு, சிந்தனை வளர்ச்சி எங்கு கொண்டு விடுமோ சொல்லவே முடியாது 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் விளையாட்டுப் போல சொல்லி உள்ளேன்.
விடுதலை 16.11.1971

பகுத்தறிவே முக்கியம்! பகுத்தறிவே முக்கியம்!


பெண்கள் எவ்விதத்திலும் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல. அவர்களும் மனித ஜீவன்கள் என்றும் அவர் களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்பதை எடுத்துக்காட்டவே இம்மாதிரியான திருமணமாகும். எங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வேலை இல்லை என்றாலும் இம்மாதிரியான நிகழ்ச்சியின் காரணங் கள் தேவைகள் ஆகியவற்றை எடுத்துச் சொல்லவே யாகும்.
இந்த நாட்டில் படித்தவன் பணக்காரன் என்பவன் எல்லாம் பகுத்தறிவு பற்றி கவலைப்படாதவர்கள். படிப்பாளிகள், அறிவாளிகள் என்பவர்கள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காகப் படித்தவர்களேயாவர். இந்த நாட்டு மக்களின் சமுதாய இழிவுகள் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. எனவே தான் நாங்கள் தான் எங்கள் கழகந்தான் இந்தத் துறையில் ஈடுபட்டு உழைக்கின்றோம். எங்கள் கருத்தில் மக்கள் மானமற்ற வர்களாக மனிதத் தன்மையற்ற காட்டு மிராண்டிகளாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையிலுள்ள மக்களைச் சீர்திருத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கழகத்தின் குறிக்கோளாகும்.
தோழர்களே, மனிதன் என்றால் ஓர் பெண் துணையும் பெண் என்றால் ஓர் ஆண் துணையும் இருக்க வேண்டும் என்பது இயற்கை. இது மிருகங்கள், புழு பூச்சிகள், மரங்கள், பூ பிஞ்சுகள் எல்லாவற்றிலும் ஆண், பெண் இருக்கின்றன. இது இயற்கை.
இதுவரை நம்மில் ஆணும், பெண்ணும் கூடி வாழ்வதற்காக நடத்தப்பட்ட கலியாணம் என்னும் நிகழ்ச்சி மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்தே சில மாறுதல்கள் ஏற்படுத்த இம்மாதிரி காரியம் செய்கின்றோம்.
இதுவரையில் இருந்து வந்த கருத்து ஓர் ஆணும், பெண்ணும் கூடி வாழ வேண்டும் என்ற கருத்தால் அல்ல, ஓர் ஆணுக்கு ஓர் பெண் சம்பளமில்லாத வெறும் சோற்றுக்காக வேலை செய்யும் அடிமை என்ற கருத்தில்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. நாங்கள்தான் இப்போது அந்தக் கருத்தை மாற்றி ஆணும், பெண்ணும் சரிசமம் உடையவர்கள் என்ற கருத்தில் மாற்றியிருக்கின்றோம். ஆண், பெண் சம உரிமையுடையவர்கள், பகுத்தறிவு உடையவர்கள், மானம் உடையவர்கள் என்பதை உணர்த்தவேயாகும். மனிதன் என்ற சொல்லே மானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுந் திருக்க வேண்டும்.
கலியாணம் என்ற பெயரால் நடத்தப் பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் மனிதன் மடையனாக கீழ்ஜாதி யாக, சூத்திரனாக, இழிபிறவியாக, காட்டுமிராண்டி யாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்துத்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. எவனுக்கு நடந்த திருமணமாக இருந்தாலும் சரி, ராஜா வாகவோ, பிரபுக்களாகவோ, படிப்பாளியாகவோ யாராய் இருந்தாலும் இந்த அடிப்படையில்தான் இருந்து வந்திருக் கின்றது. இந்த சீர்திருத்த முறையில் மடைமைக்கோ, காட்டுமிராண்டித் தனத்துக்கோ, இழிவுக்கோ வகை இல்லை. நாம் மானமற்ற இழிபிறவிகள் என்பதன் அறிகுறியாகவே பார்ப்பானை அழைத்துத் திருமணம் நடத்துவது ஆகும். நாம் கூப்பிடுவதே அவனை பெரிய ஜாதி என்ற கருத்தில்தான் ஆகும். அதன் காரணமாக அவன் உயர்ந்தவன் நம் வீட்டில் சாப்பிட மாட்டான் என்பதற்கு அறிகுறியாகவே அவனுக்கு அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றை பச்சையாகவே மூட்டை கட்டி அவன் வீட்டில் கொண்டுபோய் வைக்கின்றோம். நாம் நம் அறிவைப் பயன்படுத்தாமல் அவன் மேல் ஜாதி என்று ஒத்துக் கொண்டு அதன்மூலம் நாம் இழிமக்கள் என்பதை ஒத்துக் கொள்கின்றோம் என்பதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்?
ஆதியில் பார்ப்பானைக் கூப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் கூட பெருமையெனக் கருதி சமீபகாலமாக பார்ப்பானைக் கூப்பிட ஆரம்பித்து இருக்கிறான். ஆணும், பெண்ணும் திரு மணம் செய்து கொண்டு வாழும் உரிமை, சாஸ்திரத்தில் சூத்தி ரர்களாகிய நமக்கில்லை. நாளாவட்டத்தில் பார்ப்பா னுடைய முறையானது எல்லா வகுப்பாரிடையேயும் வந்துவிட்டது. இதன் காரணமாக நாம் அறிவு, மானம் இல்லாதவர்களாக, காட்டுமிராண்டிகளாக, இழி மக்களாக ஆக்கப்பட்டு விட்டோம்.
எங்களுடைய முயற்சியால் இப்படி நடைபெறும் திருமண முறையால் நாங்கள் மட்டும் பயன் அடைய வில்லை. நாங்கள் மட்டும் செய்யவில்லை - ஆனால், எங்களின் எதிரிகளான காங்கிரஸ், கண்ணீர்த்துளி, கம்யூனிஸ்டு ஆகிய கட்சிக்காரர்கள் கூட செய்து வருகின்றனர்.

                                                                                                                                                                     (விடுதலை 6.9.1960)