Monday, December 30, 2013

இந்நாட்டு சமதர்மத்தின் முதல் படி

தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள 
சோஷலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழி பெயர்ப் பாகக் கையாளப்படுகிறது என் 
றாலும் சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்திற்கு ஒரு விதமான அர்த்தத்தில் 
கையாளப்படுகிறது. அநேகமாக அந்த வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும், தகுதிக்கும், 
சவுகரியத்துக்கும், அரசாங் கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக் கப்படுகிறது. சில இடங்களில் 
சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறின தாயும் 
உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது.
ஆகவே சோஷலிசத்துக்கு இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க அவ்வார்த் தையில் 
எவ்விதக் குறிப்பும் இல்லை.

சில இடத்து சோஷலிசத்துக்கும், பொதுவுடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் 
இருந்து வருகிறது. சில இடங்களில் வெகுசாதாரண விஷயத்துக்கும் அப்பெயர் இருந்து 
வருகிறது. சில இடத்தில் பொதுவுடைமை வேறாகவும் சமதர்மம் வேறாகவும் இருந்து 
வருகின்றது.

இங்கு சமதர்மம் என்கின்ற வார்த்தைக்குச் சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும், 
மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (அபேதமாய்) வாழவேண்டும் என்பதையே 
சமதர்மம் என்று நான் கருத்து கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு 
பிரயோகிக்கின்றேன்.
ஏனெனில் மற்ற நாட்டில் சமூகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற உயர்வு தாழ்வு 
பேதா பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றது. 
நமது நாட்டு சமுதாய உயர்வு தாழ் வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு 
பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்து வருகிறது.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே 
இந்நாட்டு சமதர்மத் துக்கு முதல் படியாகும். அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித 
சமூக சாந்திக்கு மருந்து என்று கருதி இருக் கும் நான் சமுதாயத்தில் வாழ்க்கையில் 
சமதர்மத்தை அபேத வாதத்தை முக்கியமாய் வலியுறுத்தி வருகிறேன்.

நிற்க பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும் சமுதாயம் 
முக்கியமானாலும், பொருளா தாரம் முக்கியமானாலும் அதற்கு கடவுள் உணர்ச்சி மத 
நம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச சமதர்ம வாதிகளும் 
பெரிதும் கடவுள் உணர்ச்சியும் மத நம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானது என்று தான் 
சொல்லியிருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் 
அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்க வில்லை. இந்த வேலை அபிப்பிராய 
பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் 
என்கின்றதான சமதர்ம முயற்சியே செய்ய வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம் பிரிவு ஆகியவை 
ஒழிந் தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார 
பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து 
வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம 
முறையை நினைக்கக்கூட இடம் கொடுக் காமல் அடக்கி வருவதுடன் பொருளா தார 
பேதத்துக்கு இடமளித்தும் வரு கிறது. எந்தக் காரணத்தைக் கொண் டாவது இன்று நாட்டிலுள்ள 
பொருள் களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி 
முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். 
மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சம தர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம் 
அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். 
நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் 
ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதார சமதர்மத்தைச் சொன் னால்தான் 
உண்மையாகக் கஷ்டப் படுகிற மக்களுக்கு உணர்ச்சி உண் டாக்க முடிகின்றது.

ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம் ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று 
கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக் 
கின்றது என்றும் பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதரவான மதத்தையும் ஒழிக்க 
வேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.  மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு 
கொள் கையைப்  பற்றியோ பேசினாலும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை 
நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் 
கண்டிப்பாய் நாஸ்தி கர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூட சொல்ல வேண்டிய தில்லை. மதக் 
கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போது மானதாக இருக்கிறது.
ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப் பட்டதாக - கடவுளால் கற்பிக்கப்பட்ட தாக - கடவுளே 
சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக் கின்றது.

அந்த மத சாஸ்திரங்கள் வேத மாகவும், வேதம் போன்றதாகவும், கருதப்படுகின்றன. 
உதாரணமாக பகவத் கீதை என்பது இந்துக்கள் என்பவர் களுக்கு மிகப் புனிதானதும் மேலானது 
மான புஸ்தகம் என்று கொள்ளப்படு கின்றது.

மகமதியர்கள் கொரானை மதிப்பதை விட கிறிஸ்தவர்கள் பைபிளை மதிப்பதை விட 
கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். ஆனால் அப்புஸ்தகத்தில் நான்கு 
ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிராமங் 
களும் சொல்லப்பட்டிருக் கின்றன. கீதை என்றாலே பகவான் வாக்கு என்று அர்த்தம்.

ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசு கிறவர்களில் கூட 100 க்கு 99 பேர்கள் கீதையைப் பகவான் 
வாக்கு என்று நம்பிக் கொண்டுதான்  இருக்கிறார்கள்! இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் 
ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல் கீழ் நிலைகள் எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தனது 
அல்ல என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி 
இருந் தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ, சொல்லத் துணியாவிட்டால், சொல்ல 
தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால் ஜாதிப் 
பிரிவு ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும்படியான 
ஒருவன் கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று 
சொல்லப்படாமல் இருக்க முடியாது.

ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்தி கனாவதற்குத் தயாராகவோ நாஸ்திகன் என்று 
அழைக்கப்படுவதற்குக் கலங் காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச 
முடியவே முடியாது.

இது மாத்திரமல்லாமல் சர்வமும் கடவுள் செயல் என்னும் மனித சமூகத்தில் பிறவி 
மூலமாகவும் வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும் பேதத்துக்கும் உயர்வு 
தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி யென்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு 
மாற்றமும் செய்ய முடியும் என்று சொல்லப் படுமானால் அதை நம்பாமல் இருப்பது 
நாஸ்திகமா னால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகராகத்தான் ஆக வேண்டும்.
ஏனெனில் செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் 
உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும். கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது 
என்றும் சொல்லப் படுமானால் அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?
அதை யார்தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் 
கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும், மனிதரில் ஒருவனை மேல் ஜாதியாக்கிப் 
பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்படிக்கும் மற்றொருவனைக் கீழ் 
ஜாதியாக்கி பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாய், 
கட்டக் கந்தையற்று, இருக்க இடமற்றுத் திரியும்படி சொல்லி இருக்கவே முடியாது.

இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்துகின்றவர்களை யோக்கியர் கள் என்றோ, 
அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.
ஊரார் உழைப்பைக் கொள்ளைக் கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.
நாட்டிலே சிலர் 10 லட்சம், 20 லட்சம் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள் ளவர்கள் 
இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டுக்கு இவர்கள் 
அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது 
இவ் வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?

ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத் தனத்தினால் தொழில் முறையினால் மன 
வலிமையினால் சம்பவங்களால் ஏற்பட் தென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?
இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதார மாயிருந்த முறையை  யார்தான் 
சரியான முறையென்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் 
கொடுத்தவர் களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான்  நல்ல 
நிலை என்று சொல்ல முடியும்? இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது 
கடவுளையும், மதக் கொள்கை களையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால், அக் 
கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?
மற்றும் கடன்பட்டு வட்டி கொடுத்த மக்க ளுடையவும் பாடுபட்டுப் பயனைக் கொடுத்த 

மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களைக் கோவில் 
கட்ட, சாசனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, 
தாசிகளை வைத்து உற்சவம் வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார்தான் 
சகித்துக் கொண்டு இருக்க முடியும்?  இந்த அக்கிரமங் களைப் பார்த்துக் கொண்டு எந்தக் 
கடவுள்தான் இருக்க முடியும்?
அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அப்படிப் பட்ட கடவுளை 
அழித்து ஒழித்து விடு வதில் யாருக்கு என்ன  நஷ்டம் வரும்?
அப்படிப்பட்ட கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால் அது ஒழிந்தது 
என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்?
தோழர்களே, இதையெல்லாம் பார்க்கும்போது கடவுளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு 
என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை.
சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள் கொடுங்கோன்மைக் காரன், பேராசைக்காரன் முதலிய 
கூட்டத்தாரின் சுயநலனுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய வேறு காரியத்துக்குக் கடவுள் 
பயன்படுவதே இல்லை. மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத்திற்கு  என்று கடவுள் 
சிருஷ்டிக்கப்பட்டிருக்குமானால் அப்படிப் பட்ட கடவுளைப் பற்றி அது இருந்தாலும் அது 
இல்லாவிட்டாலும் நமக்குக் கவலையில்லை.

இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது 
சொல்லமுடியுமா? என்று கேட்கிறேன்.கடவுளைச் சதாகாலம் கட்டியழுது அதனாலேயே 
ஜீவனம் நடத்தும் அர்ச் சகர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் 
இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்கக் காரியங்கள் நமக்குத் தெரியாதா?

கடவுளுக்காக 10 லட்சம் பணம் போட்டு கோவிலைக் கட்டிக் கும்பாபி ஷேகம் செய்து அய்ந்து 
வேளை ஆறு வேளை பூசை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்க 
மாய் யோக்கியமாய் நடக்கிறார்களா? கடவுளுக்காகவே சன்யாசியாய், குரு வாய், சங்கராச் 
சாரியாய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய் இருக் கிறவர்களிலாவது எல்லோரும் 
ஒழுக்க மானவர்கள் என்று சந்தேகமறச்  சொல் லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று 
சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரண 
பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம் யோக் கியதை எதிர்பார்க்க முடியும்?

எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக நான் 
பேச வரவில்லை. மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் 
கூடாது என்றும் அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக்கூடாது என்றும் தான் சொல்ல 
வருகிறேன். மனித வாழ்க்கைக் கும், பேதா பேதங்களுக்கும், கடவுள் சம்பந்தமில்லை என்று 
சொல்லும் பட்சத்தில் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?
ஆகவே தோழர்களே! சமதர்மவாதி கள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல் லப்படுகிறார்கள்? 
அவர்கள் ஏன் நாஸ் திகர்கள் என்று சொல்லப்பட வேண்டி யவர்களாகிறார்கள்? என்பதை 
நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துச் சொன்னேன்.

- 1935 செப்டம்பர் தேவக்கோட்டையில் முதல் வாரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய 
சொற்பொழிவு  (`விடுதலை, 2.12.1951).





Tuesday, December 24, 2013

சுகம் அனுபவிக்க வெட்கப்படுகிறேன்

சுகம் அனுபவிக்க வெட்கப்படுகிறேன்
இரயில் பிரயாணம் செய்யும்பொழுது மூன்றாம் வகுப்பில்தான் செல்வேன். அப்படி யாராவது வலுக்கட்டாயம் செய்து முதலாவது, இரண்டாவது வகுப்பு வண்டிகளில் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்களானால் நான் அவர்களிடம் சரி என்று சொல்லிவிட்டு முதலாவது அல்லது இரண்டாவது வகுப்புக்கு உள்ள பிரயாணச் சீட்டின் கட்டணத்தை வாங்கிக்கொள்வேன். ஆனால், பிரயாணச் சீட்டு வாங்கும்பொழுது மூன்றாவது வகுப்புக்கு வாங்கிக்கொண்டு மீதி உண்டாகும் தொகையைப் பத்திரமாக முடிபோட்டு வைத்துக்கொள்வேன்.
ஏனெனில், அவசியமற்ற காரியத்துக்காகப் பணத்தை வீண் விரயமாக்குவது என்பது எனக்கு வெறுப்பானதும், பிடித்தமில்லாதது மானதாகும். காசு கையில் சிக்கிக்கொண்டது என்பதற்காகத் தேவையற்றதை அனுபவிக்க ஆசைப்படுவதா? இப்போதைய புதுப் பணக்காரர் பலர் இப்படித்தான் செய்து பணத்தைப் பாழாக்குகிறார்கள்.
நான் காங்கிரசுத் தலைவனாக இருக்கும்போதும் 3-ம் வகுப்பிலும், கட்டை வண்டியிலும்தான் செல்வேன். சுய மரியாதை இயக்கத் தலைவனாக இருந்தபோதும் கண்ணப்பர் செகண்ட் கிளாசில் வருவார். நான் கூடவே தேர்ட் கிளாசில் போவேன். ஆச்சாரியார், திரு.வி.க., டாக்டர் நாயுடு செகண்ட் கிளாசில் வருவார்கள். நான் தேர்ட் கிளாசில்தான் போவேன். (வேன் வழங்கியபோது 24.12.1955)
வெங்காயம்
எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே ‘வெங்காயம்’ என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் வெறும் காயம்; உயிரற்ற உடல் - விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையதாய் முடிவது என்பது பொருள்.
ஆகவே விதை, வித்து இல்லாத காரணத்தால்தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும் மதமும் ஆகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருளே இல்லை; கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான்.
ஆனால், சூரியன், சந்திரன், முதலானவைகளை அப்படிச் சொல்ல முடியுமா? முடியாது. ஏன் என்றால், அவை உண்மையானவை. எவ்வளவு மடையனும், எப்படிப்பட்ட பகுத்தறிவுவாதியும் அவைகளை மறுக்க மாட்டான் என்பதோடு ‘எனக்கு அவை இல்லை; என் கண்ணுக்கு, என் புத்திக்கு அவை தென்படவில்லை; ஒப்புக்கொள்ள மாட்டேன்’ என்று சொல்லவே மாட்டான். இதுதான் இயற்கைக்கும் - உண்மைப் பொருளுக்கும்; செயற்கைக்கும் - கற்பனைக்கும் ஏற்ற உதாரணம் ஆகும்.
30 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்தக் கடவுள், மத உணர்ச்சி இருந்தாலும் 24 அல்லது 30 வயதுக்கு உட்பட்ட மக்களிடம் கண்டிப்பாக இந்த உணர்ச்சி இருக்கவே கூடாது என்பது என் ஆசை. அப்படி, இந்தக் கடவுள் மத உணர்ச்சி இல்லாமல் இருந்தால்தான் மனிதப் பண்பு, மக்கள் யாவரையும் ஒன்றுபோல் கருதும் உணர்ச்சி, நேர்மை, நல்லதைப் போற்றவும் தீயதைக் கண்டிக்கவுமான துணிவு, யாவரையும் ஒன்றுபோல் கருதிச் செய்யும் பொதுத்தொண்டு உணர்ச்சியும் ஏற்பட முடியும். இன்று இவை சுத்த சுத்தமாய் இல்லாததற்குக் காரணம், இந்தக் கடவுள், மதம், மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தன்மையுள்ள மனிதப்பிறப்பு என்கிற உணர்ச்சிதான் என்பது எனது தாழ்மையான முடிந்த முடிவு.
விதவைகள் நிலை!
விதவைகளுக்கு விவாகம் செய்யலாமா என்பதற்கும் சாஸ்திரத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு சமயம், விவாகம் எந்த மாதிரி செய்வது என்பதுபற்றி யோசிப்பது என்றாலும் சமாதானம் சொல்லலாம். அப்படிக்கின்றி, விவாகம் செய்யலாமா, வேண்டாமா என்பதற்கே சமாதானம் சொல்லுவதென்றால், அது சுத்த முட்டாள்தனமென்று தோன்றவில்லையா?
என்னைக் கேட்டால், இந்தக் கொடிய நாட்டில் விதவைகளுக்குத் துன்பத்தை இழைத்தவர் நமது இராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே அபிப்பிராயம். ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும் கஷ்டப்படவும் ஏற்பட்டுவிட்டது. எப்படி என்றால் மோகன்ராய் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தாதிருப்பாரானால், ஒவ்வொரு பெண்டும் புருஷன் இறந்தவுடனே அவனோடு கூடவே அவன் பக்கத்தில் மாங்கல்ய ஸ்திரீயாகவே உயிருடன் கட்டையில் வைத்துச் சுடப்பட்டுக் கற்புலோகத்தை அடைந்து, மோட்ச லோகத்திலிருப்பாள்.
கற்புலோகமும் மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந்தாலும் ஒன்று மாத்திரம் நிச்சயம். அதாவது, உயிருடன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரம்தான் கஷ்டம் இருந்திருக்கக்கூடும். ஆனால், அந்தப்படி நடவாமல் காப்பாற்றப்பட்ட விதவைப் பெண்ணுக்கு அவள் ஆயுள்காலம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சித்தரவதை செய்வது போன்ற கஷ்டத்தை விநாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா இல்லையா என்றுதான் கேட்கிறேன்.
ஒரு பெண் சாதியை ஆண் கலியாணம் செய்துகொள்ளலாமா வேண்டாமா என்பதைப் பற்றி, எந்தப் பெண்ணாவது அபிப்பிராயம் சொல்ல வருகிறாளா? அப்படியிருக்க, புருஷனை இழந்தவள் கலியாணம் செய்துகொள்ளலாமா வேண்டாமா என்பதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல புருஷனுக்கு என்ன பாத்தியம் என்பது நமக்கு விளங்கவில்லை. நாட்டில், சிறப்பாக நமது சமூகத்தில் விதவைகள் கர்ப்பமடைந்து கர்ப்பத்தை அழிப்பதும், பிள்ளைகளைப் பெற்றுக் கொலை செய்வதும், வீடுகளை விட்டுப் பெற்றோர் அறியாமல் நினைத்த புருஷர்களுடன் ஓடுவதும், பிறகு விபச்சாரிகளாகி குச்சுகள் மாறுவதும் முதலிய காரியங்களைத் தினமும் கண்ணால் பார்த்தும் தாங்களாகவே துன்பங்கள் அடைந்து வரும்போது, விதவா விவாகம் சாஸ்திர சம்பந்தமா, சாதி வழக்கமா என்று பார்க்கும் மூடர்கள் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்களா என்று கேட்கிறேன்.
சாஸ்திரத்தில் இடம் இருந்தால் என்ன? இல்லாவிட்டல் என்ன? சாதியில் வழக்கம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அதைப் பற்றிக் கவனிப்பதில் பலன் என்ன? புருஷனை இழந்த பெண்ணுக்குப் புருஷ இச்சை இருக்குமா, இருக்காதா? அவளுக்குப் புருஷன் வேண்டுமா வேண்டாமா என்பதைத் தானே கவனித்து முடிவுகட்ட வேண்டும்? அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று ஜோசியத்திலிருந்து விட்டால், அந்தப் பிள்ளை திருடின திருட்டையெல்லாம் ஜோசியம் நம்புகிறவன் சும்மா விட்டுவிடுவானா என்று கேட்கிறேன்?
எந்தக் காலத்திலோ, எங்கிருந்தோ, யாராலோ, எதற்காகவோ, யாருக்கோ எழுதிய ஒரு புத்தகத்தை இந்தக் காலத்திற்கு, இந்த இடத்திற்கு, நமது நன்மைக்காக, நமது நன்மையில் கவலை கொண்டவர்களால் எழுதப்பட்டதென்றும் அதன்படி நடந்து தீர வேண்டும் என்றும் கருதுகின்றவன் மனிதனல்லன் என்பதுதான் எனது மாற்ற முடியாத உறுதியான அபிப்பிராயம் ஆகும். (குடிஅரசு - 27.10.1929)

என்ன வெங்காய மொழி?

என்ன வெங்காய மொழி?
நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்,
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்,
நம் அரசாங்கம் - சாதி காப்பாற்றும் அரசாங்கம்,
நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்,
நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி,
இதை உயர்ந்த மொழி என்கிறார்கள். என்ன வெங்காய மொழி? இரண்டாயிரம் வருடங்களாக இருக்கும் தமிழ்மொழி சாதியை ஒழிக்க என்ன செய்தது? மொழி மீது என்ன இருக்கிறது? ஏதோ மொழி மீது நம்முடைய பற்று; விவரம் தெரியாமல் சிலருக்குப் பற்று. எந்த இலக்கியம் சாதியை ஒழிக்கிறது? நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - வெங்காயம் என்று பாடியிருக்கிறான்; இந்த மடையனும் தினமும் படிக்கிறான். அது முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை சாதியைக் காப்பாற்றுவதுதானே? அதை அனுசரித்துத்தானே புலவன் பாடியிருக்கிறான்? கோபித்துக் கொள்ளாதீர்கள்! நிலைமை அப்படி.
நம் மக்களை நெருக்கடியில் வைத்து, கீழே அதை எதிர்ப்பதற்கில்லாமல் ஏற்பாடு செய்தார்கள்; எதிர்த்த வர்களைக் கொன்றார்கள்; ஒழித்துக் கட்டினார்கள். எதிர்த்தால், இரணியனைப் பார்த்துக்கொள்; இராவணனைப் பார்த்துக்கொள்; சூர பதுமனைப் பார்த்துக்கொள் என்று சொல்லி மக்கள் எல்லோரையும் மடை யர்களாக்கிவிட்டர்கள். அதிலிருந்து வெளியில் வர யாரால் முடிந்தது? வெளியிலே வந்தால் அவர்கள் எல்லாம் நாத்திகர்கள்! துவேஷிகள்! 
(சென்னையில் சொற்பொழிவு 16.09.1961)
மாறுதலுக்குக் கட்டுப்பட்டவனே மனிதன்
நான் சொல்லும் சில கருத்துகள் இன்று தலைகீழ்ப் புரட்சியாகச் சிலருக்குத் தோன்றுகின்றன. அடுத்த 20 வருடங்களில் - என்னையே மகா பிற்போக்குவாதி என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அதிகமாயிருக்கிறதே! மாறுதலுக்குக் கட்டுப்பட்டதன்றோ உலகம்? மாறுதலுக்கு வளைந்துகொடாத மனிதன் மாயவேண்டியதுதானே! இதுவரை மாறுதலை எதிர்த்து வெற்றிபெற்றவர்கள் கிடையாதே! நமது போக்குவரத்துச் சாதனங்கள், நமது வாத்தியங்கள், நமது உடைகள், நமது ஆபரணங்கள் இவையெல்லாம் இன்று எவ்வளவு மாறுபட்டுவிட்டன? 20 வருடத்திற்கு முன் எத்தனை பேர் கிராப் வைத்திருந்தார்கள் - இன்று எத்தனை பேர் குடுமி வைத்துள்ளார்கள்?
இப்பெரிய கூட்டத்தில் குடுமி வைத்தவர்கள் எத்தனை பேர் என்று சுலபத்தில் எண்ணிவிடலாமே! இயற்கை மாறுதலால் ஏற்பட்டதா இது? அல்லது சர்க்கார்தான் குடுமி வைத்திருக்கக்கூடாதென்று சட்டம் போட்டதா? இல்லையே! இன்று எத்தனை பேர் நெற்றியில் பூச்சுடன் காணப்படுகிறார்கள்? விரல்விட்டு எண்ணிவிடலாமே! பூச்சுடன் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றா அரசு உத்தரவு போட்டுப் பூச்சுகள் மறையும்படி செய்யப்பட்டது? இல்லையே! காலம் மாறிவருகிறது; அம்மாறுதலுக்குக் கட்டுப்பட்ட மனிதனும் தானாக மாறுகிறான். பணக்காரர்களின் உயர்வெல்லாம் இன்று எங்கு போயின? அவர்களுடைய பிடிவாதம்தான் எங்கே போயிற்று?
முன்பெல்லாம் தாய்மார்கள் எத்தனை முழம் சேலை கட்டினார்கள்; இப்போது எத்தனை முழம் சேலை கட்டிக்கொள்கிறார்கள்? 18 முழத்துக்குக் குறையாது சேலை கட்டுவதுதான் பெருமை என்று கருதிய தாய்மார்கள், இன்று 6 கெஜத்துக்கு மேல் கட்ட கூச்சப்படவில்லையா? அன்று மட்டும் அவர்கள் தாமாகவா விரும்பினார்கள், 9 கெஜ சேலையை? சேலை சுற்றுக் குறைந்திருந்தால் எங்கே ஓடிவிடுவார்களோ என்று ஆண் பிள்ளைகள் செய்த தந்திரம் அது! அன்றிருந்த கட்டுப்பாடு அவ்வளவு! இன்று பெண்களுக்கு அவ்வளவு கட்டுப்பாடு இல்லை.
எனவே, நைசான சேலை கட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். நகைகளில்தான் எவ்வளவு மாற்றம்! அன்று தங்கச் சங்கிலி எல்லாம் எருமைமாட்டுக் கழுத்து இரும்புச் சங்கிலிபோல் இருக்கும்; இன்று சங்கிலி கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாத அளவுக்கு நைசாக இருக்கிறதே! சட்டம் போட்டா இம் மாறுதல் செய்யப்பட்டது? இப்படி எவ்வளவு வேண்டுமானாலும் உதாரணம் காட்டிக்கொண்டே போகலாமே!. (விடுதலை - 24.10.1948)
புதிய பெயர் - பழைய கொடுங்கோல்
1935 வரை அகில இந்தியா என்று பேசிவந்த நான், வடநாட்டார் ஆதிக்கத்தை உணர ஆரம்பித்ததும் 1938-ல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை முக்கியக் கொள்கையாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். 1950 ஜனவரி 26-ம் தேதிய பலம் 1947 ஆகஸ்ட் 15-ம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான்; அதே பணப்பெட்டிதான்; அதே தராசுதான்; அதே படிக்கல்தான்; அதே சரக்குதான்; அதே பித்தலாட்டம்தான்.
ஆனால், விலாசம் அதாவது ‘டிரான்ஸ்ஃபர்’ செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடி அரசு ஆட்சி என்கிற புதுப்பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதிக பலத்துடனும், மேலும் அதிகப் பாதுகாப்புடனும் 26-ம் தேதி முதற்கொண்டு நடைபெறப் போகிறது. இந்த உண்மையைத் தெளிவாக உணரும் நாம் இதை ஏன் புரட்டு என்று எடுத்துச் சொல்லக்கூடாது? உண்மையை எடுத்துச் சொல்ல நாம் ஏன் பயப்பட வேண்டும்? அக்கிரமத்தை எடுத்துச் சொல்ல நமக்கேன் அச்சம்? (விடுதலை 20.01.1950)

நான் சொல்வது…

நான் சொல்வது…
‘நான் சொல்லுவதை நம்பு, இல்லாவிட்டால் பாவம்!’ என்று நான் சொல்லவில்லை. எதிலும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம் நாடு முன்னேற்றமடையுமேயன்றி, ‘என்னுடைய பாட்டன், முப்பாட்டன் போன வழியில்தான் போகிறேன்’ என்ற மூடக்கொள்கையினால், நாடு நாளுக்கு நாள் நாசமடைவது திண்ணம். என் புத்திக்கு எட்டியதை எடுத்துக் காட்டினேன். அதில் சரியானது எனத் தோன்றியதை ஒப்புக்கொண்டு அதன்படி நடக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் சொல்லுவதில் பிசகிருந்தால் என் அறியாமைக்குப் பரிதாபப்படும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.(குடிஅரசு 28.05.1949)
மதம் என்பது?
‘நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்! நான் சொல்லுவது கடவுள் வாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்’ என்ற வேதம், சாஸ்திரம், புராணம்போல நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்வது, ‘உங்கள் அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள்; ஒத்துவந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள். உங்கள் சகோதரர்களுக்கும் இதைச் சொல்லி அவர்களையும் ஈடேற்றுங்கள்’ என்றுதான் நான் சொல்லுகிறேன். இப்படிச் சொல்வதனால் எனக்கு இதில் ஒரு சுயநலப் பலனும் இல்லை என்பதையும் அறியுங்கள்.
நான் எந்த மதக்காரனுக்காவது ஏஜண்டு அல்ல; அல்லது நானும் எந்த மதக்காரனுக்காவது அடிமையும் அல்ல. அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவங்களுக்கு மாத்திரம் ஆட்பட்டவன். ஆதலால், எனக்குப் பட்டதை உங்கள் முன் சொல்லுவதில் எனக்கு ஒரு கடமையும் ஆசையும் மகிழ்ச்சியும் இருப்பதால் சொல்லுகிறேன். மற்றபடி அதைப் பற்றிய உங்கள் கடமைகளை உங்கள் சுதந்திரத்திற்கே - அதாவது உங்கள் பகுத்தறிவுக்கே விட்டுவிடுகிறேன்.
மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ சமூகத்தையோ கட்டுப்படுத்தி, ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டதா? அல்லது, ஒரு மனிதனின் மனச்சாட்சியைக் கட்டுப்படுத்தக் கூடியதா? மனிதனுக்காக மதமா? மதத்துக்காக மனிதனா? என்பவைகளைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள். 
(குடிஅரசு - 11.09.1927)
மனிதனை மதிப்பது என்பது?
பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் ரிசர்வ் பேங்க்கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் என்சைக்ளோபீடியா, ரேடியோ ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியாக அனேகவற்றை, ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல.
ஜீவன் என்றால் சுயஉணர்ச்சி என்றுதான் கருத்து. சுயஉணர்ச்சி என்பது தன்னைப் பற்றிய, தன் வாழ்வைப் பற்றிய, தன் பாதுகாப்பைப் பற்றிய உணர்ச்சி என்பதாகத்தான் முடியும். இத்தன்மையை உடையவர்களை ஜீவப் பிராணிகளில் நத்தை, சங்கு, ஈ. எறும்பு, பாம்பு, தேள், குயில், கழுகு, புலி, சிறுத்தை, குதிரை, யானை, ஆடு, மாடு, குரங்கு, மனிதன் என்பதாக மனிதனை மற்றவைகளோடு சேர்த்துச் சொல்வதற்கு அல்லாத தனிக்குணம் வேறு என்ன பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கிறது என்று கருதிப் பாருங்கள்.
ஜீவ சுபாவ உணர்ச்சியான தன்மை உணர்ச்சியும், தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட்சியம் செய்து - அதாவது தன்னைப் பற்றிய கவலையும் தனது நலத்தையும், தன் மேன்மை பற்றிய கவலையும், தனது மேல்வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின் மேன்மைக்காகப் பணியாற்றவே மற்ற மனித ஜீவன்களுக்கு இருக்க முடியாத வசதி என்னும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி தன்னலத்தையும், தன் மானாபிமானத்தையும் விட்டு, எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற ஜீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான். மனித உரு ஜீவப்பிராணி என்பதில் மனிதனை மதிப்பதானாலும், நினைவு நாள் கொண்டாடப்படுவதனாலும் இந்தக் குணத்திற்காகத்தான் இருக்கலாமே ஒழிய வேறொன்றுக்கும் ஆக இருக்க முடியாது. (குடிஅரசு - 14.04.1945)

எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா?

எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933ந் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா, மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு இலாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.
வெட்கப்படுகிறேன்
எப்படியிருந்தாலும், நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை. நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறக்க முடியாத காரியம்.
பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ - போதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை. ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்துகொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடு கிறேன்.
சின்ன சமாதானம்
நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும் வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்துவந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநலச் சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நாகம்மாள் நான் காங்கிரசிலிருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்துவந்தது உலகம் அறிந்ததாகும்.
ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற் றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே!
அதிசயமில்லை
எது எப்படியிருந்தபோதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.
நாகம்மாளை அற்ப ஆயுள்காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு 48 வயது ஆனபோதிலும், அது மனித ஆயுளில் பகுதிக்கே சிறிது குறையானபோதிலும் இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய இருபத்தி மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும்; பிறந்தால் அழ வேண்டும் என்ற ஞானமொழிப்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும் ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல், அதை ஒரு மகிழ்ச்சியாகவும் இலாபமாகவும் கருத வேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்றும் கருதுகிறேன்.
எப்படியெனில், எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமிருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் யானும் சிறிது கலங்கக்கூடும்.
ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத்தொல்லை ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.
இது நிற்க, நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் இலாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக்கொள்கின்றேனோ அந்த மாதிரி எனது மறைவையோ நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக்கொள்ள மாட்டார். அதற்கு நேரெதிரிடையாக்குவதற்கே உபயோகித்துக்கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.
நஷ்டமல்ல
என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுபடுத்த முடியாத நஷ்டம் என்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயமல்ல. அவர்கள் சற்றுப் பொறுமையாய் இருந்து, இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்களேயானால் அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே, எனது மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் காரணமாய் ஒரு வருட காலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது, ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது.
மூன்றாவதாக, நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம், ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்குக் கூற்றாக நின்றது என்றால், இனி இவற்றைவிட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள்போல (அவ்வளவு ஆடம்பரத்துடனல்ல - பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப்பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்தது உண்டு. ஆனால், அதற்கு வேறு எவ்விதத்தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக!
(குடி அரசு - தலையங்கம் 14.05.1933)

பூணூல் போடாதவனெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவன்

(குளித்தலை, பசுபதிபாளையம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் 
பெரியார் பேசிய பேச்சுகள் வன்முறையைத் தூண்டு கின்றன என்று கூறி 
தந்தை பெரியார்மீது தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் 
நடந்தவைகளை தந்தை பெரியார் கூறும் சுவையும் சூடும் நிறைந்த பகுதி இது)
என் வழக்கில் முதலில் அவர் களேதான் சொந்த முச்சலிகாவில் நீங்கள் 
போகலாம் என்றார்கள். பிறகு திடீரென்று 25-ஆம் தேதி முச் சலிக்காவை ரத்து 
செய்ய வேண்டும். பழையபடி ஊர் ஊராகப் போய் குத்து வெட்டு என்று 
பேசுகிறான் என்று விண்ணப்பம் போடுகிறான். நினைத் தால் 
கஷ்டமாகத்தான் 
உள்ளது. எவ்வளவு ஆதிக்கம் செலுத்து கிறான்? 20-ஆம் தேதி எங்களிடம் 
கையொப்பம் வாங்கி இருக்கிறான்; 22-ஆம் தேதி மதுரையில் எனக்குச் சம்மன் 
சார்வு செய்தான்; 22-ஆம் தேதி மாலை வரையில் எங்கும் பேசவில்லை; 
கூட்டமுமில்லை. நான் வாய் திறக்கவேயில்லை. பழையபடி குத்து வெட்டு 
என்று பேசுகிறான்' என்று சொல்கிறான். எப்போது பேசினார் என்றால் 17, 18, 
19- ஆம் தேதி பேசியிருக்கிறார் என்கிறான். என்னிடம் கையொப்பம் வாங்கிக் 
கொண்டு 20-ஆம் தேதி விட்டிருக் கிறான். அதிலும் பேசக்கூடாது என்ற 
நிபந்தனை ஒன்றுமில்லை. இருந்தும் பேசாத போதே 22-ஆம் தேதி சம்மன் 
வருகிறது 'ஏமாற்றி விட்டார்', 'ந ம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்', 
சாட்சிகளைக் கலைப்பார்', 'சாட்சி களுக்குத் துன்பம் கொடுப் பார் அதாவது 
காயப்படுத் துவார்' இப்படி ஏதேதோ கேவலமாக எழுதியிருக் கிறான்.

ஜட்ஜே (நீதிபதி) கேட் டாராம். என் காதில் விழ வில்லை. சாட்சியைக் கலைப் 
பார் என்கிறாயே எல்லா சாட்சியும் போலீஸ்காரர்கள் தானே? அதுவும் 
ரிக்கார்டு சாட்சிதானே; அதை எப்படி கலைப்பார்? என்று கேட்ட தற்கு அந்த 
பப்ளிக் பிராசிக் யூட்டர் (அவர் பார்ப்பனர்) போலீஸ்காரர்கள் எல்லாரும் அந்த 
உணர்ச்சி உள்ள வர்கள்; அதாவது என் கட் சியைச் சேர்ந்தவர்கள்தான் என்று 
பதில் சொல்கிறார். என்ன அக்கிரமம்? நீதியைக் கெடுத்துவிடுவார் என் 
கிறான்; 
நான்தான் எதிர் வியாஜ்ஜியமே (எதிர் வழக்கு) ஆடப்போவதில்லை என்கிற 
போது நீதி எப்படிக் கெட்டுப்போகும்? அந்த நீதிபதிக்கு, எங்குப் பேசினார்? எந்த 
தேதியில் பேசினார்? ஆதார மென்ன? என்று கேட்டு 20-ஆம் தேதிக்குப் பிறகு 
எங்கும் பேசவில்லையே! ஆகையால் இந்த மனுவைக் கேன்சல் (தள்ளுபடி) 
செய்கிறேன் என்று சொல்லத் தைரியம் வரவில்லையே? என்னைக் 
கேட்கிறார் "இனிமேல்" பேசவில்லை என்று எழுதிக்கொடு" என்கிறார்.
என்னய்யா, நான்தான் பேசவே இல்லை என்கிறேன் இனி மேல் பேச வில்லை 
என்று எழுதிக்கொடு என் கிறீர்களே என்றால், "உனக்கு நான் சொல்வது 
புரியவில்லை. நீ சொல்வதும் நான் சொல்வதும் ஒன்றுதான் எதை யாவது 
எழுதிக் கொடு; இப்ப, நீ வாயால் சொல்கிறாயே அதையே எழுதிக் கொடு" 
என்கிறார். என்னய்யா இது உங்கள் எதிரேயே சொல்கிறான் போலீஸ்காரன் 
எல்லாம் என் கட்சி என்று; அய்க்கோர்ட் (உயர்நீதிமன்றம்) போனாலும் 
நீதிபதிகூட என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான். பூணூல் 
போடாதவனெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான்.

இப்படிப் பித்தலாட்டம் செய்கிறவர்கள் நான் ஏதாவது எழுதிக் கொடுத்தால் 
"எழுதிக் கொடுத்துவிட்டான்! எழுதிக் கொடுத்துவிட்டான்" என்று பத்திரிகைக் 
காரன் எல்லாம் பிரச்சாரம் செய்வானே? நான் பொதுவாழ்வில் இருப்பவன் 
அது பற்றியும் கவலைப்பட வேண்டும். நான் வேண்டுமானால் உடனடி யாக 
'வெட்டு' 'குத்து' என்று சொல்லவில்லை என்று எழு தித் தருகிறேன் என்றேன். 
உடனடி யாக' என்று போட்டி ருக்கிறாயே அந்த வார்த் தையை எடுத்துவிடு 
என்றார்.

"நான் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். அது முடியாவிட்டால் வெட்டு, 
குத்து என்று சொல்ல வேண் டிய அவசியம் வந்தால் சொல்லுவேன் 
என்றுதான் இப்போதும் சொல்கிறேன். வேண்டுமானால் உங்கள் விசாரணை 
முடியும் வரையில் அதுபோலச் சொல்ல வில்லை. அதற்குமேல் என் னைத் 
தொந்தரவு செய்யா தீர்கள் மன்னிக்க வேண்டும்; நான் மூட்டை முடிச்சோடு 
வந்துவிட்டேன்; என்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுங்கள்; நிம்மதியாக 
இருப்பேன்", என்றேன். பின்னர் ஏதேதோ செய்து எழுதி வாங்கியதாகப் பேர் 
செய்து கொண்டு, விட்டார்கள்.

நான் 23-ஆம் தேதி இருக்கக் கூடாது என்பது எண்ணம்; அதற்கு ஏதேதோ 
காரணம் சொல்லி (சிறையின்) உள்ளே பிடித்துப் போடு என்றான். திரும்ப 
சீரங்கம் கூட்டத்திற்குப் புறப்படும் நேரம் வந்ததும் அழைத்துக் கொண்டு 
போய்விட்டார்கள்.

28.11.1957-அன்று திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் ஈ.வெ.ரா பெரியார் 
சொற்பொழிவு -விடுதலை 30.11.1957


Read more: http://www.viduthalai.in/e-paper/72595.html#ixzz2oPSRALT1

Sunday, December 22, 2013

இன இழிவு ஒழிய...

தோழர்களே, பகுத்தறிவுக் கழகம் என்பது மக்கள் எல்லோருமே சேர்ந்ததுதான் பகுத்தறிவாளர் 
கழகம் மனிதன் என்றாலே பகுத்தறிவுவாதிதான்; அப்படி இருக்கும்போது பகுத்தறிவாளர் 
கழகம் 
என்று வைத்துக் கொண்டு அதில் சிலர் மட்டும் உறுப்பினர் களாக இருப்பது என்றால் அதில் 
பங்கு பெறாதவர்களுக்கு என்ன என்று பெயர்? அவர்கள் எல்லாம் பகுத்தறிவற்றவர்களா?
மனிதன் எனப்படுகிறவன் கூடுமான வரை எல்லாக் காரியங்களிலும் பகுத்தறிவுவாதி 
யாகத்தான் இருந்து வருகிறான். ஆனால், கடவுள் - மதத் துறையில் மட்டும் பகுத்தறி 
வற்றவனாக வாழ்கிறான். இந்தத் துறையில் சிந்திப்பதைப் பாவம் என்றே ஆக்கி விட்டதால் 
மனிதன் சிந்திக்கப் பயந்து விட்டான்.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், தி.மு.க. தோழர்களிலே குறிப்பிட்ட பகுதியினர் 
இவர்களைத் தவிர, மற்ற அத்துணை பேரும் நமது மதப்படி, சாஸ்திரப்படி, இந்து சட்டப்படி 
எல்லோரும் சூத்திரர்கள்தானே. பார்ப் பனர்க்கு வைப்பாட்டி மக்கள் தானே; இதை இல்லை 
என்று எவனாவது நிரூபித்தால் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.
முதன்முதலாக நமக்குத் தேவை எல்லாம் நமது இழி ஜாதித் தன்மை ஒழிய வேண்டிய தாகும். 
இதற்காகத் தான் கடந்த 50 ஆண்டு காலமாக இயக்கம் நடத்தி வருகின்றேன்.
எங்கள் கழகத்தைத் தவிர, இந்த மனிதத் தொண்டுக்கு பாடுபடுகிறவர்கள் எவன் இருக்கிறான்? 
அரசியல் கட்சிக்காரன் கவலை எல்லாம் சட்டசபைக்குச் சென்று பொறுக்கித் தின்பதுதானே!
இந்த கம்யூனிஸ்டுக்காரனைத் தான் எடுத்துக் கொள்ளுங்களேன். அவன் வாயிலே கூட ஜாதி 
ஒழிக என்று வராதே! காந் தியைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன் - அந்த ஆளும், ஜாதி ஒழிய 
வேண்டும் என்று பாடுபடவில்லையே! நாங்கள் பாடுபட்டு வந்த காரணத்தால்தான் 
இன்றைக்குப் பார்ப்பான் நம்மைப் பார்த்து சூத்திரன்' என்று சொல்ல முடியாத நிலைமை 
உண்டாகி விட்டது.
எதிரியின் வாயை அடைத்து விட்டோம். இன்றைய நிலைமை என்ன என்றால் நாம் இழி ஜாதி 
என்பதை நாமேதான் ஏற்றுக் கொள் கிறோம். இனி நம் ஆட்களோடுதான் போராட 
வேண்டியிருக்கிறது.
பார்ப்பானை இன்றைய தினம் ஒழித்தே கட்டி விட்டோம். இனி அவன் தலை எடுத்து நம்மை 
ஆட்டிப் படைப்பது என்பது கனவிலும் கிடையாது. அவன் ஒழிந்தே போய்விட்டான்.
நம்ப ஆட்கள் அவனுக்குக் காட்டிக் கொடுத்து இடம் தந்தால்தான் உண்டு. இன்றைக்கு 
பார்ப்பான் 
மனித சமுதாயத்தில் தீண்டத்தகாதவனாகி விட்டான். எங்களுக்கு விகிதாசாரம் தேவை என்று 
கூப்பாடு போடுகிற அளவுக்கு பார்ப்பான் நிலைமை கேவலமாகி விட்டது.
நாங்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை கேட்டபோது, இது வகுப்புத் துவேசம் என்று 
சொன்ன பார்ப்பான் இன்றைக்கு அவனே தங்களுக்கு வகுப்புவாரி உரிமை வேண்டும் 
என்கிறான்! நிலைமை என்ன ஆயிற்று என்றால், இன்றைக்கு உயர்நீதி மன்றத்திலே ஒரு 
ஆதிதிராவிடன் நீதிபதி கீழே இருக்கிற பார்ப்பன வக்கீல் எல்லாம் அவனைப் பார்த்து ஓ! மை 
லார்டு' என்கின் றான்! நிலைமை எவ்வளவு மாறி இருக்கிறது!!

இன்றைய தினம் நமது தொண்டால் சமுதாயத்தில் பலன்கள் பெருகி இருக்கிறதே தவிர, 
வெற்றி பெற்று இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. இதற்குக் காரணம் நாமேதான்.
கோயிலுக்குள் செல்கிறாயே, கம்பிக்கு வெளியே நின்று கொண்டு இருக்கிறாயே - 
கர்ப்பக்கிரகத்திற்குள் உன்னால் நுழைய முடியவில்லையே! காரணம் - நீ சூத்திரன் என்பதால் 
தானே! உன்னை சூத்திரன் என்று ஒப்புக் கொண்டு எதற்கு அந்தக் குழவிக் கல்லு கோயிலுக்குப் 
போக வேண்டும்?
உலகத்திலே இருக்கிற மதங்களிலேயே ஆதாரமற்றதும் தெளிவற்றதுமான ஒருமதம் 
இருக்கிறது என்றால் அது இந்த இந்து மதம்தானே!
கிறித்தவனுக்கோ, இஸ்லாமியனுக்கோ வரலாறு, மத நூல்கள் ஒழுங்காக இருக்கின் றனவே! 
உன் இந்து மதத்தில் ஸ்தாபகனோ, மத நூலோ, வயதோ உண்டா? இந்து மதத் திற்கு ஆதாரம் 
என்னடா என்றால் உன்னைப் பார்த்து சூத்திரன் என்று சொல்வதைத் தவிர, வேறு என்ன 
ஆதாரம் இருக்கிறது?
கடவுளைப் பற்றி பெரிதாக பேசுகிறார்கள். எந்தக் கடவுளிடத்தில் நீ சொல்கிற கடவுள் தன்மை 
இருக்கிறது? உன் இந்து மதக் கடவுள்களின் யோக்கியதையை நான்கு பெண்களை வைத்துக் 
கொண்டு பேச முடி யாதே! அவ்வளவு நாற்றம் அடிக்குமே! தோழர் களே, உங்களிடம் 
வலியுறுத்திக் கூறுவது எல்லாம் நம்முடைய இழிவை நாமே எதிரி இல்லாமலேயே 
ஒப்புக்கொண்டு வாழ்கிறோம். இதற்கு நாம் ஒரு முடிவுக்கு வந்தாக வேண் டும். சும்மா வெறும் 
பொதுக்கூட்டங்களை போட்டுக் கொண்டு பேசிக் கொண்டே போனால் என்ன பிரயோசனம்?
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் கத்திக் கொண்டு இருப்பேன்? எனக்குப் பின்னால் 
இதை எல்லாம் எடுத்து  சொல்ல எவன் இருக்கிறான்? உலகம் இருக்கிறவரை இதையே பேசிக் 
கொண்டுதான் நாம் சாக வேண்டுமா? நாம் என்றைக்குத் தான் மனிதராக மாற வேண்டியது?

நாம் இந்து அல்ல' என்று பத்திரிகையில் எழுதி விடுங்கள். கோயிலுக்குப் போவதில்லை என்று 
கூறுகிறவர்களின் பெயர்களை எல்லாம் கெஜட்டிலேயே வெளியிட வேண்டும்.

(14.4.1973 அன்று சீர்காழி பகுத்தறிவாளர் கழக இரண்டாம் ஆண்டு விழாவில்

தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை

- விடுதலை' 30.4.1973



Read more: http://www.viduthalai.in/e-paper/72457.html#ixzz2oDAuwJmG