Saturday, June 30, 2012

சடங்குகள் மோசக்காரர் புகுத்தியது


நண்பர் பெருமாள் அவர்களின் புதுமனை புகுவிழாவின் பொருட்டு நாம் கூடியுள்ளோம். சாதாரணமாக திறப்பு விழாக்களின் உள்தத்துவம் ஒரு விளம்பரத்துக்காகவேயாகும். என்ன விளம்பரம் என்றால் நண்பர் பெருமாள் முன்பு ஒரு வீட்டில் வசித்தார். இன்று இந்த வீட்டுக்கு குடி வந்துள்ளார் என்பது சுற்றத்தாருக்கும், நண்பருக்கும் தெரிய வேண்டும். எப்படி குடிமாறிப் போனால் முகவரி மாற்றம்  குறித்து விளம்பரப்படுத்துவது போலவாகும். இதுபோலத்தான் திருமணம், புதிய கடைத் திறப்பு எல்லாம் மக்களுக்கு இச்சங்கதியை தெரியப்படுத்தச் செய்யும் ஒருவகை விளம்பர சாதனமாகும். இது எந்த நாட்டிலும் உண்டு.
இத்தகைய இந்த ஜாதி  இனத்தின் சுயநலக்காரர்கள், தந்திரக்காரர்கள். இதனை பணம் பறிக்கவும், மதத்தையும், மடத்தனத்தையும் புகுத்தவும் உபயோகப்படுத்திக் கொண்டனர். மக்களும் இதுபற்றி சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டு நடக்கின்றனர்.
சுயமரியாதைக்காரர்கள் இப்படி முட்டாள்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் இத்தகைய நிகழ்ச்சிகளில் நடந்து கொள்ளுகின்றார்களே. இதனை மாற்றி பரிகாரம் காண வேண்டாமா? என்று எண்ணியே இப்படிப்பட்ட பகுத்தறிவுக்கு ஒத்த முறைகளை கையாளுகின்றோம். பார்ப்பனரைக் கூப்பிட்டு அர்த்தமற்ற சடங்குகளை செய்கிறார்களே ஒழிய, அது ஏன் செய்ய வேண்டும்? அதன் பலன் என்ன? என்று சிந்திப்பதே இல்லை.
மனிதன் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பலன் நல்லதா? கெட்டதா? என்று ஆராய்ந்து பார்த்து  செய்ய முற்படுவதோ, செய்ய தூண்டுவதோ நம்மவர்களுக்கு இல்லை. எதுவும் சுலபத்தில் அடைய வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றார்கள்.
இம்மாதிரியான காரியத்தில் கை வைக்க எவனுமே தோன்றவே இல்லையே. தோன்றியவன் எல்லாம் இம்மாதிரியான முட்டாள்தனத்தை பாதுகாக்கவேதான் நினைக்கிறான்.
கிராமப் பஞ்சாயத்துக்களை அமைப்பதில் முன்னெச்சரிக்கை வேண்டும். இங்கு மேல்நாட்டு பாணி ஜனநாயக முறை புகுத்த இங்கு மக்கள் இன்னும் தகுதி பெறவில்லை. அரசியல் கட்சிகள் புகுந்தால் பெரும்பாலான மக்களின் சமூக வாழ்வில் சிதைவு ஏற்படும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனக் கூறி அடிக்கடி ஒத்தி வைப்பும், வெளிநடப்பு நாடகங்களுமே நடக்கும். எங்கள் இயக்கத்தைத் தவிர இருக்கின்ற அத்தனை இயக்கங்களும், அமைப்புகளும் எங்களால் ஏற்படும் மாறுதல்களை ஏற்பட ஒட்டாமல் தடுக்கவே பாடுபட்டு வருகின்றன.
எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவர்கள் கடவுள் விரோதி, மத விரோதி பார்ப்பனரை எதிர்க்கின்றார்கள். இப்படித்தான் கூறுவார்களே ஒழிய, எங்களால் என்ன கேடு என்று எவனும் கூற முடியாது. எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவற்றைக் காப்பாற்றவே பாடுபட்டு வருகின்றனர்.
நாங்கள் கூறுகிறோம் என்றால், அப்படியே உங்களை நாங்கள் நம்பச் சொல்லவும் இல்லையே? உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்து உனது புத்திக்கு சரி என்று பட்டால்தானே எடுத்துக் கொள்ளச் சொல்கின்றோம்.
மக்கள் காரண காரியங்களைக் கேட்டு நடக்க ஆரம்பித்து இருந்தால் வெகு நாளைக்கு முன்பே நாடு முன்னேறி இருக்கும். இல்லாதவன் காரணமாகத்தான் நாம் இப்படி இருக்கின்றோம். மதம், சாஸ்திரம் என்பதெல்லாம் மனிதன் அறிவு கொண்டு சிந்திக்கக் கூடியது என்று ஆக்கி வைத்தாதாகும் என்று எடுத்துக் கூறினார். அவர்கள் மேலும் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றின் மடமை பற்றியும், ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.
(19.5.1962 அன்று ஆத்தூரில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 12.5.1962

பகுத்தறிவுப் பணி


தோழர்களே, விசுவரெட்டிப் பாளையத்தில் என்னை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று இரண்டாண்டு களுக்கு முன்பிருந்தே முயற்சி செய்தும், இப்போதுதான் அந்த வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கு என் நன்றி.
எங்கள் கொள்கை மிகக் கசப்பான  கொள்கை! உங்களுக்கு இனிப்பாக இருக்கும் வகையில் எங்களுக்குப் பேசத் தெரியாது. இன்றுள்ள பிரத்தியட்ச நிலைமையை எங்கள் மனத்தில் பட்டதை - உங்களிடமிருந்து எதுவும் எதிர்பார்க்காமல் தைரியமாகச் சொல்கிறோம். உங்கள் அறிவுக்குப்பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள். மீதியை விட்டுத் தள்ளுங்கள். நாங்கள் சொல்லுவதுதான் சரி. இதைத்தான் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.
இப்படியே சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சித்தார்த்தன் என்பவர் எதையும் உங்கள் புத்தியைக் கொண்டு ஆய்ந்து பார்த்து உங்கள் புத்திக்கு சரி எனப்பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவருக்கு புத்தர் எனப் பெயர் ஏற்பட்டது. அதற்குப் பின் வள்ளுவர் இருந்தார். அவரும்,
  எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்று சொல்லிவிட்டுப் போனார். அதற்குப் பின் ஒருவரும் தோன்றவில்லை. எத்தனையோ நாயன்மார்களும் - ஆழ்வார் களும் தோன்றியும் மக்களுக்குள்ள இழிவு ஒழிய பாடுபட்டதில்லை. அவர்களெல்லாம் பார்ப்பனர்களுடைய தயவால் ஆழ்வார்களாகவும், நாயன்மார்களாகவும் ஆக முயற்சித்தார்களே தவிர, மக்களுக்கு ஏன் இந்த இழிவு? பாடுபடும் பாட்டாளி மக்கள் இழிஜாதியினராக - தீண்டப்படாதவர்களாக - சூத்திரர்களாக - பார்ப்பானின் வைப்பாட்டி மக்களாக ஏன் இருக்க வேண்டும்? என்று கேட்டதே இல்லை. நாங்கள்தான் துணிந்து பகுத்தறிவுப் பணியாற்ற முன் வந்திருக்கிறோம். எங்கள் கொள்கைகளை விளக்கி பல புத்தகங்கள் போட்டிருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் வாங்கி படிக்க வேண் டும். நூல் நிலை யத்திலெல்லாம் திராவிடர் கழகத்தின் ஏடுகள் இருக் காது. இன்னும் அந்தத் துணிவு அவர்களுக்கு வரவில்லை.
பேய் பிடித்தாடும் மடமை இன்னும் நம் மக்களிடம் தானே இருக்கிறது? ஜப்பான்காரன் - ஜெர்மன்காரன் இவர்களைப் பேய் பிடிக்கிறதா? இல்லையே. ஏன்? கடவுள் யோக்கியதை தான் என்ன? திருடனும் கடவுளைக் கும்பிடுகிறான் - திருட்டுக் கொடுத்தவனும் கடவுளைக் கும்பிடுகிறான். கடவுள் யாருக்கு நல்லவர்? கடவுளுக்காக நாமா? நமக்காகக் கடவுளா என்பதே விளங்கவில்லையே!
மதம் என்றால் என்ன? யாராவது சொல்ல முடியுமா? மதத்தின் தத்துவம்தான் என்ன? மதத்தின் பிரச்சாரம்தானே நாம் சூத்திரர்கள். ஜாதி இழிவைக் காப்பாற்றுவதும் இந்த மதந்தானே?  இந்த இருபதாவது நூற்றாண்டிலும் ஜாதி ஒழிய வேண்டும் என்று நாங்கள்தானே சொல்லுகிறோம்; அதற்காகப் பாடுபடுகிறோம் - சிறைக்குப் போகிறோம். ஜாதி ஒழிய வேண்டுமென்றால், இந்து மதம், சாஸ்திரம், சம்பிரதாயப் புராண, இதிகாசம் எல்லாம் ஒழிய வேண்டும். காந்தியார்கூட ஜாதியைப் பாதுகாக்க வருணாசிரம மதத்தை நிலை நிறுத்தவே பாடுபட்டார். அதனால்தான் காந்தியார் சிலையை உடைக்க வேண்டும் என்றேன். நமக்கு ஒரு அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன?  மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில்லாததின் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு ஜாதியால்தானே. இதைச் சிந்திக்க வேண்டாமா?
 (விசுவரெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் அவர்கள்ஆற்றிய பேருரை - விடுதலை 8.7.1961.)

Sunday, June 24, 2012

வாசக சாலைகளும், கல்வியின் நிலையும்


அன்புள்ள தோழர்களே!

பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கு இம்மாதிரி வாசகசாலைகள் பெரிதும் அவசியமானதாகும்.  பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவதொரு விஷயத்தில் விளக்கத்தையும் தான் உண்டாக்க உதவும்.  ஆனால், வாசக சாலை என்பது பொது அறிவு விளக்கத் தையும் சகல விஷயங்களிலும் ஞானத் தையும் உண்டாக்கும். நல்ல முறையில் அமைக்கப்படும் வாசகசாலையும், புத்தக சாலையும் மனிதர்களை சகல விஷயங் களிலும் ஞான பண்டிதர்களாகவும் அனுபவ ஞானமுடையவர்களாகவும் ஆக்கிவிடும்.  நம் நாட்டில் பொது உணர்ச் சியின் மீது ஏற்படுத்தப்படும் வாசகசாலை, புத்தகசாலை மிகக் குறைவென்றே சொல்லலாம்.
நம் நாட்டில் ஒரு புத்தகசாலை இயக்கம் இருப்பதாகவும், அதற்கு சர்க்கார் ஆதரவு கூட இருப்பதாகவும், 4, 5 வருடமாக அறிந்து வருகிறேன்.  ஆனால், அது யாரோ ஒரு குறிப்பிட்ட நபர்களின் சுய நலத்துக்கும், சில குறிப்பிட்ட பத்திரிகை, புத்தகம் ஆகியவை விற்பனையாவதற்கும், உள் எண்ணத்துக்கும் பயன்பட்டு வருவ தாக உணர்கிறேன்.  நம் நாட்டில் எப்படிப் பட்ட பொது நன்மையான காரியத்தையும், ஒரு சில நபர்களோ, ஒரு வகுப்போ சுவா தீனம் செய்து கொண்டு சுயநலத்திற்கே பயன்படுத்திக் கொண்டு வரப்படுகிறது.  இதற்குக் காரணம் பொது மக்களுக்குக் கல்வியறிவும், பொது ஞானமும் இல்லாத தேயாகும்.
மத விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் பக்தி செலுத்தவும், பணம் கொடுக்கவும், அடிபணியவும் ஒரு வகுப்பார் அவற்றை கொள்ளையடிக்கவும், நலம் பெறவும்தான் பயன்படுத்தப்படு கிறதே ஒழிய, மற்றபடி மதத்தால் ஒழுக் கமோ, ஞானமோ பெற முடிகிறதா? என்று பாருங்கள்.  அது போலவே அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள்.  பொது ஜனங்கள் காசு பணம் கொடுக்கவும், ஓட்டுக் கொடுக்கவும், ஒரு வகுப்பார் அதனால் நலம் பெறவும், உயர் வாழ்வு நடத்தவும் மற்ற மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும் தான் பயன்பட்டு வருகிறது.  அதுபோலவேதான் கல்வியை எடுத்துக் கொண்டாலும் சரி, வேறு எதை எடுத்துக் கொண்டாலும் சரி அவற்றிற்காக பொது மக்கள் வரி கொடுக்க வேண்டும்.  கஷ்டப்பட வேண்டும். பலனை எல்லாம் ஒரு சிறு வகுப்பார் அடையவேண்டும் என்கிறதாகத்தான் இருந்து வருகிறது.
உழைப்பு நமக்கு, பலன் யாருக்கு?
கல்விக்காக செலவாகும் பணம், நேரம், உழைப்பு ஆகியவைகளை எடுத்துக் கொள்வோமேயானால் அதனால் கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் என்னும் கூட் டத்தார் அடையும் பலனில் 4இல் ஒன்று 8இல் ஒன்று கூடப் படிக்கும் மக்களுக்கோ, படிக்கச் செலவுக்கு பணம் கொடுக்கும் பெற்றோர்களுக்கோ பயன்கிடையாது.  நம் கல்வித் திட்டம் பெரிதும் கற்றுக் கொடுப்பவர்கள் நன்மைக்கு ஆகவே இருந்து வருகிறது.  இவற்றிற்கு எல்லாம் காரணம் பொது மக்களுக்குப் பொது ஞானம் இல்லாததேயாகும்.
புத்தக சாலை, வாசக சாலை ஆகியவைகளை வெளிநாடுகளில் நான் பார்த்து இருக்கின்றேன்.  ஒரு புத்தக சாலையில் 500 பேர் 600 பேர் வேலை யாட்கள் இருந்து வருவதைப் பார்த்தேன்.  3 லட்சம் 4 லட்சம் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.  தினம் ஒன்றுக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் பேர்கள் வந்து படிப்பதும், எழுதிக்கொண்டு போவதும், புத்தகங்கள் எடுத்துக் கொண்டு போவது மான காரியங்களை ஒரு நாள் முழுதும் இருந்து பார்த்து இருக்கிறேன்.
கிராமங்களுக்கும் மற்ற சின்ன ஊர்களுக்கும் புத்தகங்கள் வாரா வாரம் அனுப்பப்படுவதையும் திரும்பி வந்து சேருவதையும் பார்த்தால் மிக மிக ஆச்சரியமாய் இருக்கும்.  ரயில்வே வாகன் புத்தகசாலையின் முன் வாசலில் வந்து நிற்கும்.  அந்த ரயில் தொடர்ச்சியாகப் போய்ச் சேரும் ஊர் வரையில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கட்டு வீதம் பல புத்தகங்கள் கட்டப்பட்ட கட்டுகள் வாகன் நிறைய அடுக்கப்படும்.  தபால் கட்டுபோல் அது டேஷன் டேஷனுக்கு எடுத்துக் கொடுக்கப்படும்.  அதுபோலவே வரும் போது படித்து முடித்த புத்தகங்கள் கட்டுக்கட்டாய் வாங்கிவரப்படும்.  இந்தக் காரியம் ஒரு பெரிய இலக்காவாக நடைபெறுகிறது.
பத்திரிகை அபிமானம்
அது போலவே பத்திரிகை படிப்பதும் நடைபெறுகிறது. பத்திரிகை படிக்காத மனிதன் சமுகத்தில் கேவலப்படுத்தப் படத்தக்கவராவர். சகல கூலிக் காரர்களும், தொழிலாளிகளும் வீட்டு வேலைப் பெண்களும் தினம் 2 முறை யாவது பத்திரிகை படிப்பார்கள்.  வீடுமெழுகும் ஒரு வேலைக்காரப் பெண் ஒரு கையில் லோஷன் நனைத்த துணியில் நிலத்தை மெழுகிக் கொண்டே மற்றொரு கையால் பத்திரிகை படித்துக்கொண்டே இருப்பதை நான் பார்த்தேன்.  பத்திரிகை விநியோகிக்கப் பட்ட  2 மணி 4 மணி நேரத் திற்குள் பழைய பத்திரிகையை வாங்கும் வியாபாரி வந்துவாங்கிக் கொண்டுபோய் கடைகளுக்கு விற்றுவிடுவான்.  அன் றாடப் பத்திரிகையை அன்றாடமே கடையில் சாமான் மடித்துக் கொடுப்பதைப் பார்க்கலாம்.  அரசியல் ஞானமும், மற்றும் ஊர்ப் பொது விஷயமும் ஒவ்வொரு வருக்கும் தெரியும்.  ஒருவரை ஒருவர் ஏமாற்றமுடியாது.  இவற்றிற்கெல்லாம் காரணம் அந்த நாடுகளில் படித்த மக்கள் 100க்கு 100 பேர்களாக இருப்பதே ஆகும்.
நம் நாட்டில் 100க்கு 8 பேர் 10 பேரே படித்திருக்கிறார்கள்.  பெண்கள் 1000க்கு 8 பேர் 10 பேரே படித்திருக் கிறார்கள். இதனால் அதிக வாசக சாலை ஏற்படவோ அதிக புத்தகசாலை ஏற்படவோ இடமில்லாமல் போனதோடு, ஏற்பட்டாலும் பயன்படவோ, நிலை பெறவோ முடியாமல் போய்விடுகிறது.  நம்மில் கொஞ்சம் பேரே படித்திருந்தாலும் நமக்குப் படிக்க நல்ல புத்தகங்கள் கிடை யாது.  தமிழ்ப் புத்தகமெல்லாம் புராணங் களும், அவற்றிற்குப் புதுப்புது உரைகளும் கருப்பொருள்களும், நுண்பொருள்களு மாகத்தான் இருக்கிறதே ஒழிய, அறிவுக்கு ஏற்ற புத்தகங்கள் இல்லை.  கதைப் புத்தகம், இலக்கியப் புத்தகம் என்பதும் ஒரு ஊரில் ஒரு ராஜா, அவன் வேட்டைக்குப் போனான்.  அங்கொரு பெண்ணைப் பார்த் தான் காதல் கொண்டான் என்கின்ற துவக்கமும், காதலுக்கு உயிரை விட்டான்; கற்புக்காக உயிரை விட்டான் என்கிற முடிவுமல்லாமல் வேறு விஷயம் காண்பது அரிதாகவே இருக்கும்.  நம் புத்தக வியாபாரிகள், வித்வான்கள், கலைவாணர்கள் எல்லோருடைய யோக்கி யதையும் இப்படித்தான் இருக்கிறது.
இங்கிலீஷின் சிறப்பு
இங்கிலிஷ் பாஷைக்கும், கலைக்கும் மத சம்பந்தமோ, பைபிள் சம்பந்தமோ கிடையாது.  இங்கிலிஷ் பண்டிதர்களுக்கு மத சம்பந்தமான விஷயம் தெரியாது.  ஆனால், தமிழ் பண்டிதனுக்கு மதத்தைவிட வேறொன்றும் தெரியாது.  இதனால் தான் நம் பாஷைகள் உலகில் மதிக்கப்படுவதில்லை.  ஆதிபாஷையாக இருக்கலாம்.  கடவுள் பேசிய பாஷையாக இருக்கலாம்.  அநேக அருள் வாக்கு கொண்ட பாஷையாக இருக்கலாம்.  அது வேறு விஷயம்.  அறிவுக்கு பயன் உண்டா? என்பதற்குப் பதில் வேண்டும். நம் தமிழ் பண்டிதர்கள் 100க்கு 99 பேர்கள் மத பக்தர்களே ஒழிய, அறிவாளிகள் என்று சொல்லத்தக்கவர் கள் மிகச் சிலரேயாவார்கள்.
ஆனால், தமிழ் பாஷை நமக்கு நன்மை அளிக்கவில்லை.  நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்துக்கும், தன்மான உணர்ச் சிக்கும் தமிழ் எவ்வளவோ உதவி புரிந் திருக்கிறது.  அது இல்லாதவரை இவ்வ ளவு தமிழ் மக்களும் நிஜமாய் குரங்கு களாகவே (அனுமார்களாகவே) இருந் திருப்போம்.  ஆனாலும் தமிழைப் போற்ற வேண்டு மானால், பரப்ப வேண்டு மானால் மதத்திலிருந்து பிரிக்க வேண் டும்.  விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும்.  பத்திரிகை களும், வெறும் அரசியலும் மதமுமாகத் தான் இருக்கிறதே தவிர பொது அறிவுக்கு பத்திரிகை இல்லை.
பொது அறிவு பரப்பக்கூடிய பத்திரி கைகள் மலிந்திருக்குமானால் மதத்தி னால் அரசியலில் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள இழிவுகளும் கேடுகளும் ஏற்பட்டிருக்கவே மாட்டா.  ஆதலால் இந்த வாசக சாலை புத்தகசாலை நிர்வாகஸ் தர்கள் இவற்றை கவனிக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். இவ் வாசகசாலைக்குப் பனகல் வாசகசாலை என்று பெயர் வைத்திருப்பதில் நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன்.
பனகல் பெருமை
பனகல் என்று பெயர் வைப்பது பனகல் ராஜாராமராய நிங்காரின் தனிப்பட்ட பெயருக்கு ஆக அல்ல. அது ஒரு புரட்சியின் அறிகுறியைக் காட்டுவ தற்கு ஆகும்.  பனகால் ஒரு புரட்சி வீரர். தியாகராயரையும், மாதவநாயரை யும் லெனினுக்கு ஒப்பிட்டால் பனகால் டாலினுக்கு ஒப்பிடலாம்.  இவர்களு டைய புரட்சி வீரம் தான் தேவர்களாய் இருந்த இந்நாட்டு பார்ப்பனர்களை மனிதர்களாக ஆக்கிற்று. அவர்களது புரட்சித் தன்மைதான் இந்நாட்டு சூத் திரர்களை இழிமக்களை கீழ்ஜாதி யார்களை மனிதர்களாக ஆக்கிற்று.  இக்காரியம் மதங்களையும் கடவுள் களையும் ஒழிப்பதைவிட சொத்துக் களை சமமாக பிரித்துக் கொடுப்பதை விட முக்கியமானதும் பிரயாசையான தும் என்பதை உணருங்கள்.
ஓர் உதாரணம்
இன்றைய சூத்திரர்களுக்கும் பார்ப் பனரல்லாத மக்களுக்கும் சண்டாளர் களுக்கும் தீண்டப் படாத மக்கள் என்பவர்களுக்கும் இதன் அருமையும் பெருமையும் தெரியாது.  ஏனெனில் இப்படிப்பட்டவர்கள், மனிதத்தன்மை சமத்துவ உணர்ச்சி ஏற்பட்டதற்குப் பிறகு அறிவு பெற்றவர்களும் கருப்பந்தரித்த வர்களுமாவார்கள்.  ஆதலால் அவர்கள் பிறக்கும் முன்பு அறிவு பெறுமுன்பு அவர்கள் சமுகத்துக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் என்ன யோக்கியதை இருந்தது என்பது அவர்களுக்குத் தெரி யாது.  ஒரு சிறு உதாரணம் சொல்லு கிறேன்.  சுமார் 30, 35 வருஷங்களுக்கு முன் எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர், பிரபல வியாபாரி, சுமார் 100, 150 ரூபாய் இன்கம்டாக்ஸ் கட்டி வந்தவர்.  அவரை அக்காலத்தில் 12ஙூ ரூ 15 ரூ சம்பளம் உள்ள ஒரு முனிசிபல் பில்கலெக்டர் பார்ப்பனன் வரி விதிப்பு விஷயமான ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்து பைசல் செய்ய மண்டிக் கடைக்கு வந்து கூப்பிடுவான்.  அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து ராவால ராவால தேவடா வரவேணும்  வரவேணும் வாமீ என்று இரு கை கூப்பி (தூக்கி) கும்பிட்டு உட்காரச் சொல்லிவிட்டு நின்று கொண்டே இருப்பார்.  அப்பார்ப்பன பில்கலெக்டர் தலை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டு ஏமிரா வெங்கிட்ட நாயுடு போத்தாமா ஆஇண்டினி சூசே தானிக்கு ஏண்டா வெங்கிட்ட நாயுடு, அந்த வீட்டை பார்க்க போகலாமா? என்று கூப்பிடுவான்.  என் தகப்பனார் ஆ! ஹா என்று சொல்லி வஸ்திரத்தைத் தலையில் கட்டிக் கொண்டு அவன் பின்னால் புறப்பட்டு விடுவார்.  சுற்றி விட்டு வந்தவுடன் மஞ்சள், மிளகாய், கருப்பட்டி வெல்லம், எல்லாம் ஒரு சாக்கில் கட்டி பையனிடம் கொடுத்து சுவாமிகள் வீட்டில் கொடுத்து விட்டுவா என்று சொல்லி வழியனுப்புவார் இதை நான் நேரில் பார்த்ததைச் சொல்லுகிறேன்.
பார்ப்பனத் திமிர்
இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசு தாரரையும், ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனன் நாயிலும் கீழாக மதித்து அடாபுடா என்று பேசுவான்.  இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும்.  இந்த நிலைமைக்கும், இன்றைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்.  ஆகவே எனக்கும் என் போன்றவர் களுக்கும் அல்லவா தெரியும் தியாக ராயருக்கும், நாயருக்கும், பனகாலுக் கும் எவ்வளவு மரியாதை செலுத்த வேண்டும், எவ்வளவு பெருமை அளிக்க வேண்டும் என்பது.
சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பு பார்ப்பனர்கள் நிலைமையும் மத உணர்ச்சியும் எப்படி இருந்தது?  இந்த 10, 15 வருஷத்தில் எவ்வளவு தூரம் மாற்ற மடைந்திருக்கிறது?  என்பவைகளை உணர்ந்தவர்களுக்குத்தான் அவ்வியாதியினால் ஏற்பட்ட பலனும் அதன் அவசியமும் விளங்கும்.  இம் மாதிரியான பெரிய புரட்சிகள் சமுதாய வாழ்வில் உண்டாக்கின  இயக்கங்களுக் கும், புரட்சிக்காரர்களுக்கும் மக்கள் நன்றி செலுத்துவதற்கும், அவற்றை ஞாபகப் படுத்தி மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்குமாகவே அவர்களின் பெயர்களை மக்களுக்கும் இம் மாதிரியான வாசகசாலை முதலியவைகளுக்கும் இடப்பட்டு வருகிறது.
ஒரு வேண்டுகோள்
இவ்வூர் பொதுஜனங்கள் இவ்வாசக சாலையை ஆதரிக்க வேண்டும்.  அங்கத் தினர் களாக வேண்டும்.  தாராளமாக பண உதவி செய்ய வேண்டும்.  பெண்களும், ஆண்களும் அங்கத்தினர்களாக வேண் டும்.  சீர்திருத்த உணர்ச்சியும், பகுத்தறிவு உணர்ச்சியும் பெற வேண்டும். அறிவுக்குப் புறம்பான எதையும் அலட்சியம் செய்ய வேண்டும்.
இந் நிலைமையை நம் மக்கள் அடைந்து விட்டால் சுதந்திரத்துக்கு என்றும், சுயமரியாதைக்கு என்றும் மக்கள் போர் தொடுக்க வேண்டிய அவசியமே ஏற் படாது.  ஏனெனில் இன்று நாம் அறிவில்லாத குறையில் அடிமையாய் சுயமரியாதை அற்றுக் கிடக்கின்றோமே ஒழிய, சுதந்திரமில்லாமல் அல்ல. மனிதனுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ள அறிவில்லை. எப்படி பயன்படுத்துவது?  எது சுதந்திரம்?  என்பது கூட நமக்கு இன்னும் சரியாய் தெரியவில்லை.  சிலர் வெள்ளைக்காரனை விரட்டுவது, சுதந்திரம் என்கிறார். சிலர் பொருள்கள் சமமாய் இருப்பதைச் சுதந்திரம் என்கிறார், சிலர் கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாமல் இருப்பது சுதந்திரம் என்கிறார்.  சிலர் தனது முட்டாள்தனம், பேராசை, அயோக்கியத்தனம், நன்றி கெட்டத்தனம் ஆகியவைகளுக்கு ஏற்ப தன்னிச்சையாய் திரிவது சுதந்திரமென்கிறார். சிலர் பாடுபடாமல் ஊரார் உழைப்பால் வாழ்ந்து திரிவது சுதந்திரம் என்கிறார். எது சுதந்திரம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாய் இருக்கிறது.
ஆகவே, மக்கள் யாவரும் கல்விபெற்று உலக விவகாரமுணர்ந்து, தன்னைப் போல் அந்நியர் என்பதை உணர்ந்து அன்புடனும் பரோபகார உணர்ச்சியுடனும் இருந்து வாழ ஆசைப்பட வேண்டியது மனிதனுக்கு அவசியமாகும். அதற்கு இப்படிப்பட்ட வாசகசாலை அறிவு வளர்ச்சிப் புத்தகம் சமத்துவ உணர்ச்சி சம்பாஷணைக் கூடம் ஆகியவை அவசியம் என்று சொல்லு கிறேன். தோழர்களே!
(01.03.1938-இல் காஞ்சிபுரம் பனகல் அரசர் வாசக சாலை ஆண்டு விழாவில்  பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் உரை)
                                                                                                                                            குடிஅரசு - சொற்பொழிவு - 06.03.1938

Saturday, June 23, 2012

பெண்கள் விடுதலை


இராஜன்: ஏண்டா, டேய்! இராமா! பெண்கள் விடுதலை, பெண்கள் விடுதலை என்று பேசுகிறார்களே, அதென்ன விடுதலை? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?
இராமன்: உனக்கெப்படியப்பா புரியும்? உனக்கு கால் டஜன் பெண் டாட்டிகள் இருக்கிறார்கள்; அரை டஜன் வைப்பாட்டிகள் இருக்கிறார்கள்; அதோடு நிறையப் பணமும் இருக்கிறதே?
இராஜன்: நான் சொல்லுவது உனக்குக் கேலியாக இருக்கிறது. இந்தப் பெண்களிடமிருந்து எனக்கு (ஆண் களுக்கு) விடுதலை கிடைப்பதுதான் பெரிய கஷ்டமாயிருக்கிறது? ஒருத்தி விட்டால் மற்றொருத்தி இழுக்கிறாள். இவர்களைவிட்டு நான் எப்படி விடுதலை அடைகிறது?
இராமன்: சரிதான்; இப்போது புரிந்தது. நீ அந்தப் பெண்களிடம் கஷ்டப்படுவதினால் உனக்குத்தான் விடுதலை வேண்டும் என்கிறாய். உனக்கு 9 பெண்கள் எதற்கு? ஒரு பெண் இருந்தால் போதாதோ? ஒரு பெண் 9 கணவனை மணம் செய்து கொண்டும் காதலனாக வைத்துக் கொண்டும் இருந்தால் நீ அந்த ஒன்பதில் ஒருவனாக இருக்க சம்மதிப்பாயா?
இராஜன்: ஒரு பெண்ணுக்கு 9 புருஷன் என்றால் அது என்ன மிருகமா? நாமென்ன மிருக சாதியா? நன்றாய்ச் சொல்லுகின்றாய் நாக்கு கூசாமல்!
இராமன்: பெண்கள் விடுதலை என்றால் இப்போது உனக்கு அருத்தமாச்சுதா? நீ ஒன்பது பெண்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய இயற்கை உணர்ச்சிக்கு உன்னை வலிய இழுக்க வேண்டிய மாதிரிக்கு அவர் களை அடைத்து வைக்கலாம்.அது மனுஷத்தன்மை என்கிறாய். ஒரு பெண் 9 கணவனை வைத்துக் கொண்டி ருந்தால் அது மிருகத்தனம் என்கிறாய், இந்தக் கொள்கை போக வேண்டு மென்பதைத் தான் பெண்கள் விடுதலை என்று சொல்லுவது. புரிந்ததா?
இராஜன்: புரிந்தது. நன்றாய்ப் புரிந்தது. நான் அவசரப்பட்டு மிருகத் தன்மை என்று சொல்லிவிட்டேன். ஒரு பெண்ணுக்கு 9 பேர் என்பது இன்றும் தாராளமாய் நடக்கின்றதே. நம்ம தேவதாசிகளைப் பாரேன். நம்ம விலைமாதர்களைப் பாரேன். 9 தானா 90ம், 900-மும்கூட இருக்கும் போலிருக் கின்றதே.
மக்கள் அங்கு போவ தில்லையா? அவர்களுக்கு மரியாதை செய்வதில்லையா? அந்தப் பெண் களுக்குச் சுதந்திரமில்லையா? தங்கள் இஷ்டம் போல் பணம் கேட்பதும் தங்கள் இஷ்டம் போல் ஒருவனை நீ வேண்டாம் வெளியில் போ என்பதும் நாம் தினமும் பார்க்கவில்லையா? ஆகவே அவர்களுக்குச் சுதந்திரமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
இராமன்: பொறு, பொறு அவசரப்படாதே. சுதந்திரம் இருப்பதாக நீ சொல்லும் பெண்கள் யார் என் பதைத் தெரிந்து கொண்டாயா? தேவதாசிகளுக்கும் விலைமாதர் களுக்கும் சுதந்திரம் இருப்பதாகச் சொன்னாய். நீ சொல்கிறபடி பார்த்தால் ஒரு பெண் சுதந்திரமாக இருக்க வேண் டுமானால் ஒன்று தேவதாசியாகப் போய்விட வேண்டும்.
அல்லது விலைமாதாகப் போய்விட வேண்டும். வெள்ளைத் தமிழில் சொல்ல வேண் டுமானால் தேவடியாளாக அல்லது குச்சுக்காரியாகப் போய்விட வேண்டும் என்கிறாய். ஒருவனையே கணவனாகக் கொண்டு திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிற பெண்களுக்கு விடுதலை என்பது ஒரு ஆணுக்குப் பல பெண்களில் ஒருத்தியாய் இருந்து அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதான் கடமைபோல் இருக்கிறது.
இராஜன்: ஒரு பெண் தனிமையில் இருந்து வாழ்க்கை நடத்திக் கொள்ளட்டுமே, யார் வேண்டாம் என் கின்றார்கள்? பெண்கள் தாங் களாகத்தானே யாருக்காவது ஒருவ னுக்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்று துடிக்கிறார்கள். அவர்கள் பெற் றோர்களும் வயது வந்துவிட்டதே என்ன செய்வது? யார் தலையிலாவது கட்டிவிட வேண்டுமே, இல்லா விட்டால் கெட்ட பெயர் வந்து விடுமே என்று கவலைப்படுகிறார்கள். அதற்கேற்றபடியே கல்வி இல்லாமலும் தொழிலில் பழக்காமலும் வளர்க் கிறார்கள்.
அப்படிப்பட்ட பெண்ணைக் கட்டிக் கொள்ள வருபவனும் தனக்கு அடிமைத் தொழில் செய்ய ஒரு ஜீவன் வேண்டும் என்று கருதியே பெண்ணைத் தேடுகிறான். அதோடு இவள் பெறுகின்ற குழந்தைகளுக்கும் இவளுக்கும் வாழ்விற்கு வேண்டியதை எல்லாம் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு செய்கிறான்.
இதற்கு மேல் அடிமை புகுந்தவளுக்கு எஜமானன் வேறு என்ன செய்ய முடியும்? தான் தேடிய சொத்துக்களையும் அடிமை பெற்ற குழந்தைகளுக்கே வைத்து விட்டுப் போகிறான். இன்னும் என்ன தான் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறாய்?
இராமன்: நீ சொல்லுவதைப் பார்த்தால் பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்கிறாய் போல் இருக்கிறது. கல்யாணம் செய்து கொண்டால் அடிமையாகத்தான் இருக்க வேண்டும் என்கின்றாயாக்கும்?
இராஜன்: நான் அப்படிச் சொல்லவில்லை; இயற்கை அது. கொடுப்பவன் கை மேலாகவும்,  வாங்குபவன் கை கீழாகவும்தான் இருக்கும். கல்யாணம் இல்லாமல் இருந்தால் என்ன முழுகிப்போய் விடும்? மலையாளத்தில் சில இராணிகளும் ஜமீன்தாரணிகளும் சம்பளம் கொடுத்து புருஷன்மார்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் கவுரவம் குறைந்துபோய் விட்டதா? அல்லது சமுதாயத்தில் குறை கூறுகிறார்களா?
அவ்வளவு தூரம் போக உன்னால் முடியாவிட்டால் பெண்களை நன்றாய்ப் படிக்க வைத்து அல்லது ஏதாவது ஒரு தொழிலில் அமர்த்தி, 25 வருடம் வரை கல்யாணப் பேச்சு பேசாமல் 25 முதல் 30 வயதிற்குள் அந்தப் பெண்ணையே தனக்குப் பிடித்தவனை ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துகொள்ளும்படிச் செய். வாழ்க்கைக்கு (அன்னவஸ்திரத்துக்கு) புருஷன் கையை எதிர்பார்க்காமல் செய். அப்போது பெண் விடுதலை வேண்டி இருக்குமா அல்லது ஆண் விடுதலை வேண்டியிருக்குமா அல்லது இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் கட்டுப் படுத்திக் கொள்வார்களா என்று பார்!
குடிஅரசு 27.9.1945
                                                    (சித்திரபுத்திரன்  என்ற புனைபெயரில் தந்தை பெரியாரால் எழுதப்பட்டது)

பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்


பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற் கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறான வைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது.
மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கள் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் அப்படியே ஒருவித மாற்றமும், முன்னேற்றமும் இன்றி இருப்பதைக் கொண்டு அறிகிறோம். ஆனால், மனிதன் அப்படி இல்லை. 10, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட இன்று ஒவ்வொரு துறையிலும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளான். நாளுக்கு நாள் மனித வாழ்க்கை பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டே போகிறது. இவ்வுண்மை நம் நாட்டை விட மேல்நாடுகளில் மிக விரைவில் செல்லுகிறது. சரியான முறையில் பகுத்தறிவின் மேன்மை தெரிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்நாடுகளில் அதற்கேற்றவண்ணம் நாகரிக வாழ்க்கையைப் பின்பற்றி அதிசயிக்கத்தக்க அற்புதங்களும் கண்டுபிடிக்கப்படுகிறது.
ஆனால், இந்த நாட்டிலே காட்டுமிராண்டி வாழ்க்கை இன்னும் அழிந்தும் போகவில்லை. பழக்க வழக்கம், முன்னோர் கள் கூறியவை, சாஸ்திர - புராணங்கள் கூறியவை, முனிவர்கள் - ரிஷிகள் கூறியவை, கடவுள் அவதாரங் களும், கடவுள்களும் கூறியவை என்பதின் பேரால் எதையும் கண்மூடித்தனமாக ஆராய்ந்து பார்க்காமல் ஒப்புக் கொண்டு அதன்படி நடந்து வருகின்றனர். எனவே, பகுத்தறிவுக்குப் போதிய இடமின்றிப்போய் அநாகரிக வாழ்க்கை வாழுகிறார்கள்.
மற்ற நாடுகளைப் போன்று இங்கும் நாகரிகமும், விஞ்ஞானமும், ஆராய்ச்சியும் விளங்க வேண்டுமென்றால், பகுத்தறிவுக்குப் புறம்பானவை அத்தனையும் அழிக்கப்பட வேண்டும் என்பதாகத் தெரிவித்து இந்துக் கடவுள்களின் அநாகரிக அமைப்பு முறைகளைப் பற்றியும், கடவுள்களின் காட்டுமிராண்டி வாழ்க்கையின் கதைகளைப் பற்றியும் விளக்கினார். இறுதியில் வால்மீகி இராமா யண சம்பந்தப்பட்ட ஊழல்களையும் எடுத்துக் கூறி இரவு 10 மணி வரை பேசினார்.
(10.1.1956 அன்று மீனாட்சிபுரம் படிப்பக 5ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - விடுதலை 15.1.1956)

பகுத்தறிவே முக்கியம்!


தந்தை பெரியார் அவர்கள் தமது அறிவுரையில், பெண்கள் எவ்விதத்திலும் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல. அவர்களும் மனித ஜீவன்கள் என்றும் அவர் களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்பதை எடுத்துக்காட்டவே இம்மாதிரியான திருமண மாகும். எங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வேலை இல்லை என்றாலும் இம்மாதிரியான நிகழ்ச்சியின் காரணங்கள் தேவைகள் ஆகியவற்றை எடுத்துச் சொல்லவே யாகும்.
இந்த நாட்டில் படித்தவன் பணக்காரன் என்பவன் எல்லாம் பகுத்தறிவு பற்றி கவலைப்படாதவர்கள். படிப்பாளிகள், அறி வாளிகள் என்பவர்கள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காகப் படித்தவர்களேயாவர். இந்த நாட்டு மக்களின் சமுதாய இழிவுகள் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. எனவே தான் நாங்கள் தான் எங்கள் கழகந்தான் இந்தத் துறையில் ஈடுபட்டு உழைக்கின்றோம். எங்கள் கருத்தில் மக்கள் மானமற்ற வர்களாக மனிதத் தன்மையற்ற காட்டுமிராண்டிகளாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையிலுள்ள மக்களை சீர்திருத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கழகத்தின் குறிக்கோளாகும்.
தோழர்களே, மனிதன் என்றால் ஓர் பெண் துணையும் பெண் என்றால் ஓர் ஆண் துணையும் இருக்க வேண்டும் என்பது இயற்கை. இது மிருகங்கள், புழு பூச்சிகள், மரங்கள், பூ பிஞ்சுகள் எல்லாவற்றிலும் ஆண், பெண் இருக்கின்றன. இது இயற்கை.
இதுவரை நம்மில் ஆணும், பெண்ணும் கூடி வாழ்வதற்காக நடத்தப்பட்ட கலியாணம் என்னும் நிகழ்ச்சி மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்தே சில மாறுதல்கள் ஏற்படுத்த இம்மாதிரி காரியம் செய்கின்றோம்.
இதுவரையில் இருந்து வந்த கருத்து ஓர் ஆணும், பெண்ணும் கூடி வாழ வேண்டும் என்ற கருத்தால் அல்ல, ஓர் ஆணுக்கு ஓர் பெண் சம்பளமில்லாத வெறும் சோற்றுக்காக வேலை செய்யும் அடிமை என்ற கருத்தில்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. நாங்கள்தான் இப்போது அந்தக் கருத்தை மாற்றி ஆணும், பெண்ணும் சரிசமம் உடையவர்கள் என்ற கருத்தில் மாற்றியிருக்கின்றோம். ஆண், பெண் சம உரிமையுடையவர்கள், பகுத்தறிவு உடைய வர்கள், மானம் உடையவர்கள் என்பதை உணர்த்தவேயாகும். மனிதன் என்ற சொல்லே மானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுந் திருக்க வேண்டும்.
கலியாணம் என்ற பெயரால் நடத்தப் பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் மனிதன் மடையனாக கீழ்ஜாதியாக, சூத்திரனாக, இழிபிறவியாக, காட்டுமிராண்டியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்துத்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. எவனுக்கு நடந்த திருமணமாக இருந்தாலும் சரி, ராஜா வாகவோ, பிரபுக்களாகவோ, படிப்பாளியாகவோ யாராய் இருந்தாலும் இந்த அடிப்படையில்தான் இருந்து வந்திருக் கின்றது. இந்த சீர்திருத்த முறையில் மடமைக்கோ, காட்டு மிராண்டித் தனத்துக்கோ, இழிவுக்கோ வகை இல்லை. நாம் மானமற்ற இழிபிறவிகள் என்பதன் அறிகுறியாகவே பார்ப்பானை அழைத்துத் திருமணம் நடத்துவது ஆகும். நாம் கூப்பிடுவதே அவனை பெரிய ஜாதி என்ற கருத்தில்தான் ஆகும். அதன் காரணமாக அவன் உயர்ந்தவன் நம் வீட்டில் சாப்பிட மாட்டான் என்பதற்கு அறிகுறியாகவே அவனுக்கு அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றை பச்சையாகவே மூட்டை கட்டி அவன் வீட்டில் கொண்டுபோய் வைக்கின்றோம். நாம் நம் அறிவைப் பயன்படுத்தாமல் அவன் மேல் ஜாதி என்று ஒத்துக் கொண்டு அதன்மூலம் நாம் இழிமக்கள் என்பதை ஒத்துக் கொள் கின்றோம் என்பதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்?
ஆதியில் பார்ப்பானைக் கூப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் கூட பெருமையெனக் கருதி சமீபகாலமாக பார்ப்பானை கூப்பிட ஆரம்பித்து இருக்கிறான். ஆணும், பெண்ணும் திரு மணம் செய்து கொண்டு வாழும் உரிமை, சாஸ்திரத்தில் சூத்தி ரர்களாகிய நமக்கில்லை. நாளாவட்டத்தில் பார்ப்பானுடைய முறையானது எல்லா வகுப்பாரிடையேயும் வந்துவிட்டது. இதன் காரணமாக நாம் அறிவு, மானம் இல்லாதவர்களாக, காட்டுமிராண்டிகளாக, இழிமக்களாக ஆக்கப்பட்டு விட்டோம்.
எங்களுடைய முயற்சியால் இப்படி நடைபெறும் திருமண முறையால் நாங்கள் மட்டும் பயன் அடையவில்லை. நாங்கள் மட்டும் செய்யவில்லை - ஆனால், எங்களின் எதிரிகளான காங்கிரஸ், கண்ணீர்த்துளி, கம்யூனிஸ்டு ஆகிய கட்சிக்காரர்கள் கூட செய்து வருகின்றனர் என்று எடுத்துரைத்தார்.
மேலும் பேசுகையில், கடவுள், மதம், ஜாதி ஆகியவைகள் நீக்கப்பட வேண்டிய  அவசியம் பற்றியும், மணமக்கள் சிக்கன மாகவும், பகுத்தறிவுடனும் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கி அறிவுரையாற்றினார்.
(விடுதலை 6.9.1960)

Sunday, June 17, 2012

மதமும் - மனித சமதர்மமும்


உலகத்தில் உள்ள மக்கள் அனை வரையும் பீடித்திருக்கும் ஒரு பெரும் வியாதி கடவுள்கள், மதங்கள் என்னும் இரு தொத்து நோய்களேயாகும். இவற்றுள் கடவுள்கள் நோயைவிட மதங் கள் நோய் என்பது மிகமிகக் கொடிய தாகும்.
உண்மை கடவுள் என்கின்ற தத்துவத் தால் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை; ஆனால் எப்படிப்பட்ட மதத்தாலேயும் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இப்படிச் சொல்லுகிறோம் என்றால் கடவுளைப் பற்றிய ஒரு கருத்துள்ளவரும், மதத்தால் வேறுபட்டவராகப் பிரிக்கப்பட்ட வராக இருந்து வருகிறார்கள். ஆனால் கட வுளைப் பற்றிய வேறு வேறு கருத் துள்ளவர்களும் மதத்தால் ஒன்று பட்டிருக்கிறார்கள்.
உதாரணமாக, ஒரே கடவுள். அதுவும் உருவமற்ற கடவுள் என்கின்ற எண்ண முள்ள முஸ்லிம், கிறித்துவர், பிரம்ம சமாஜத்தார் முதலிய ஏகதெய்வக் கொள்கைக்காரர்களும் மதம் காரணமாக வேறுபட்டிருக்கிறார்கள். பலவிதமான கடவுள் தன்மை கொண்டவர்களும் கடவுளே இல்லை என்பவர்கள் மாயாவதி, சூனியவாதி, உலகாயதவாதி, இயற்கை வாதி, சார்வாகன், வேதாந்தி முதலிய பலரும் மதம் காரணமாக இந்துக்களாகவே இருந்து வருகிறார்கள். எனவே மக்களைப் பிரித்து வைத்திருப்பதற்குக் கடவுளைவிட மதமே முக்கிய காரண மாக இருந்து வருகிறது.
கடவுள் உணர்ச்சி வேறு பல காரணங் களுக்குக் கேட்டை விளைவிப்பதாக இருந்தாலும் உலக பொது நலனுக்கும் ஒற்றுமைக்கும் கேடு உண்டாக இடம் தந்து மக்களுக்கு ஒன்றுபோல் கேடு செய்து வருவது மதங்களேயாகும்.
கடவுள்கள் திருத்தத்திற்கு உட்பட்ட வையாகலாம். ஆனால் மதம் திருத்தப் பாட்டுக்கு இடம் கொடுப்பதில்லை. மதத்தின் அழிவுதான் திருத்தம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது.
மதம் பெரிதும் சடங்கையும், காரி யத்தையுமே அடிப்படையாகக் கொண்டி ருக்கிறது. ஆதலால் மதம் என்பது ஒரு மனிதனின் செய்கை, நடப்பு ஆக இருக்க வேண்டி இருப்பதால் வெளிப்படையாக பிரிந்திருக்க வேண்டியதாகிறது.
கடவுளைப் பற்றிய கருத்து இரகசி யமாக வேறு யாருக்கும் தெரியாததாக இருக்கலாம். ஆதலால் கடவுளைப் பற்றி ஒருவருக் கொருவர் மாற்று அபிப்பிராயம் கொண்ட வர்கள் ஒன்றாக இருக்கலாம். அதனால்தான் மனிதன் கடவுளை ஏமாற் றுகிறான். ஆனால் மதம் வெளிப்படையாய் வேஷம் போட்டு நடித்துத் தீர வேண்டி யதாகவே இருக்கிறது. ஆதலால் ஒரு மனிதன் மதத்தை ஏமாற்ற முடியாது; ஏமாற்றினால் தெரிந்துவிடும்.
ஆகவே, மனித சமுதாயத்தை ஒன்றுபடுத்தவும், சமதர்மம் தழைத்து ஓங்கவும் மதங்களே முதலில் அழிக் கப்பட வேண்டும். ஏனெனில் கடவுள் முன்னி லையில் மக்கள் யாவரும் ஒன்று என்று சொல்லி எந்தக்காரியத்தையும் துவக்கலாம். ஆனால் மதங்களின் முன் னிலையில் எல்லா மதமக்களும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. மதங்களாலேயே மக்கள் வேறு படுத்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே மக்கள் யாவரும் ஒன்று. சரிசமம் என்றால் மதங்கள் அழிய வேண்டி வந்து விடுமாதலால் மதங்கள் மக்களை ஒன்றுபடுத்தச் சம்மதியா.
இந்தியாவில் அநேக மதங்கள் இருக் கின்றன. அநேகமாக இந்தியாவின் பூர்வ குடிகளே இன்று எல்லா மதக் காரர்களாகவும் இருந்து வருகிறார்கள். ஆரியர்களும், மங்கோலியர்களும் சில மதங்களில் கலந்து இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் மிகக் குறைந்த எண் ணிக்கையுடை யவர்களாகத்தான் இருக்கக் கூடும். ஆனாலும், இந்தியப் பூர்வகுடிகளுக்கு என்ன மதம்? என்ன கொள்கை? இருந்தது என்று காட்டும் ஆதாரம் எதுவுமே காணக் கிடைப்பதில்லை. விளக்கமாகச் சொல்ல வேண்டு மானால் ஆரியர் இந் நாட்டிற்கு வருவதற்கு முன் இங்கு என்ன மதம் இருந்தது என்பது இதுவரை யாரா லும் தெளிவாக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆரியர் இந் நாட்டுக்கு வரும் முன் நிலம், நீர், இடம் காரணமாக மக்கள் பழக்க வழக்க இயற்கைத் தன்மைகளில் பேதம் இருந்ததாகக் காணப்படுவதல்லாமல் மதம், மதத்தின் பயனால் ஏற்பட்ட வேஷம், சடங்கு ஜாதி என்பவை காரணமாகப் பேதம் பிரிவு இருந்ததாகச் சொல்லுவதற்கு அறிகுறி களைக் காண முடியவில்லை.
மதங்கள் பிரிவினைக்கும், பேதத் திற்கும் காரணமாய் இருப்பது மாத்திர மல்லாமல் மடமைக்கும், மூடநம்பிக்கைக் கும் காரணமாக இருக்கின்றன. பயத்தின் அதிவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும் மூடநம்பிக்கை, மடமை என்கின்ற அதி வாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. இம்மாதிரி மதங்களே தான் கடவுளையும் சிறுமைப்படுத்திவிட்டன என்பது மாத்திரம் அல்லாமல், எதற்கு ஆகக் கடவுள் தேவை என்றும் சொல்லப்படுகின்றதோ, எதற்கு ஆகக் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று எண்ண மக்கள் செய்யப்படுகின்றார்களோ அதற்கு மாறாகப் பலன் உண்டாகும்படி மதங்கள் செய்துவிடுகின்றன.
மற்றும், எந்த மதமும் மக்களுடைய இயற்கைக் குறைபாடுகளைப் பரிகாரம் செய்யவில்லை என்பது மாத்திரமல்லாமல் மதங்களால் மக்களுக்குப் பல செயற்கைக் குறைபாடுகளும் உண்டு பண்ணப் படுகின்றன. எனவே, மனித தர்மவாதி, மனித சமதர்மவாதி, (மனித) ஜீவ காருண்யவாதி, மதங்களால் பாதிக்கப்படாதவனாகி மதங் களில் இருந்து வெளிவந்து அல்லது மதங்களுக்கெல்லாம் மேம்பட்டவனாக இருந்து கொண்டு தொண்டாற்ற வேண்டியவனாகிறான்.
                                                                                                                                                                       குடிஅரசு 27.07.1946