Sunday, November 18, 2012

கணவர்களைத் திருத்துங்கள்


தலைவரவர்களே! தாய்மார்களே!
இத்தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட் டில் உங்கள் முன்னால் பேச சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி உண்மையிலேயே பெருமகிழ்ச்சியடைகிறேன். சமுத்திரம் போல் பெண்கள் கூடியுள்ள இக்கூட் டத்தைப் பார்க்க என் மனமே ஒருவித நிலைகொள்ளா மகிழ்ச்சியடைகிறது.
சென்னையைப் பற்றி...
இவ்வளவு பெரிய ஒரு பெண்கள் கூட்டம் சென்னையில் கூடும் என நான் நினைக்கவில்லை. சென்னையைப் பற்றி நான் சில சமயங்களில் பரிகாசமாய் நினைப்பதுண்டு. என்னவென்றால் சென்னை மூடநம்பிக்கைக்கு இருப்பிட மானது என்று நான் சொல்லுவதுண்டு. இதை நான் அடிக்கடி பத்திரிகையிலும் எழுதி வந்திருக்கிறேன். சென்னையி லுள்ள எனது சில தோழர்களுக்கு நீங்கள் மூடநம்பிக்கையை விடுங்கள். பகுத்தறிவுடன் வாழுங்கள் என்று கூறுகின்ற காலத்து அவர்கள், நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்றும், அவற்றை அப்படியே ஒப்புக் கொள்வதாகவும் ஆனால் தங்கள் வீட்டிலுள்ள பெண்கள் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார் களே என்றும், உங்களை இழித்துக் கூறி உங்கள் மீது பழியைப் போட்டதை நான் பலதடவை கேட்டிருக்கிறேன். ஆனதால் தான் வெளி ஜில்லாக்களைப்போல் சென்னையில் பகுத்தறிவியக்கக் கொள் கைகள் அவ்வளவு அதிகமாக பரவ வில்லையோ என்றும் கருதுவதுண்டு. ஆனால், இன்று இப்பெண்கள் மாநாட் டையும் இங்குள்ள உணர்ச்சியையும் ஊக்கத்தையும், இங்கு நடந்த உபன் யாசங்களையும் தீர்மானங்களையும் பார்க்கும்போது எனக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றுகிறது. அதாவது, சென்னை பெண்மக்கள் ஆண்மக்களை விட எந்த வகையிலும் பின்னடைந்தவர் களல்ல என்பதைக் காட்டுகிறது. ஆச்சாரியாருக்கு நன்றி
இங்கு நான் அநேக வயது சென்ற பெண்களைக் காண்கிறேன். அவர்களது ஊக்கம் எனக்குப் பெரியதொரு வெளிச் சத்தையும், தைரியத்தையும் கொடுக் கிறது. சென்னை தாய்மார்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்பட்டதற்கு முக்கிய ஆதாரம் எனது பழம்பெரும் தோழராகிய கனம் ஆச்சாரியாருடைய பெருங் கருணையேதான். இதற்காக அவருக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி செலுத்துகிறேன். பின்னும் இக்கிளர்ச் சியும் உணர்ச்சியும் மேலும் மேலும் வளர வேண்டுமானால், இன்றைய அடக்கு முறை ஆட்சியை இதுபோலவே குறைந் தது இன்னும் ஒரு வருஷத்திற்காகவது நடத்தி உதவ வேண்டுமென்று எனது அருமைத் தோழர் ஆச்சாரியாரை மற்று மொருமுறை வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
உண்மையில் இன்றைய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் பெண்கள் பிரதிநிதித்துவம் வழிந்தோடுகின்றது. அநேக பிரபல பெண்கள் கூடியிருக்கிறீர்கள். பல அருமையான தீர்மானங்களையும் செய்தீர்கள்.
சூழ்ச்சி மகாநாடு
ஆனால், நான்கு நாட்களுக்கு முன்பு உலகந்தெரியாத சில பெண்கள் கூடிக் கொண்டு இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு இந்நாட்டு மக்கள் அபிப்ராயத் துக்கு நேர்மாறாக இந்தியை ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக் கின்றனர் என்பதாகத் தெரிகிறது. இதற்கு நமது எதிரிகள் பத்திரிகைகள் பிரமாதமாகப் பெருக்கி விளம்பரப் படுத்தியிருக்கின்றன. அது எதற்காகச் செய்யப்பட்டது என்றால், இம்மாநாடு கூடப்போவது தெரிந்து இம்மாநாட்டுத் தீர்மானங்கள் அரட்டை செய்யச் செய்வதற்காகவும், இங்கு செய்யப்படும் தீர்மானங்கள் சரியான பிரதிதிதித்துவம் பெற்றதல்லவென்று கருதும்படி செய்வதற் காகவும், நமது சுயமரியாதைக்குக் கேடு சூழவும் கூட்டப்பட்ட ஒரு சூழ்ச்சி மாநாடு ஆகும். நம்மிடையில் (தமிழர்களிடத்து) ஒற்றுமை இல்லாததால் அவர்கள் யாரோ அகவிலை அறியாத இரண்டு பெண் களைக் கொண்டு நம்மைக் கேலி செய் யவும், தாழ்வாக நினைக்கவும் இடம் உண்டாக்கப் பார்க்கிறார்கள்.
வடமொழிச் சார்புடையது - ஆரியக் கலைகளுக்காக இருக்கிறது என்றும், அவர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தி என்கின்ற ஒரு மொழியை நம் குழந்தைகளுக்கும் புகட்டி, நம்மக்கள்தம் மானத்தை மாசுபடுத்தும் ஒரு சூழ்ச்சியை எதிர்ப்பதற்காக நாம் இங்கு கூடினோம். நம்மில் பல கருத்துக்காரர்களிருக்கலாம். சைவ, வைணவ மதக்காரர்களிருக்க லாம். முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இருக் கலாம், மேல்ஜாதி கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்களிருக்கலாம். எந்த மதத்தை யும், ஜாதியையும் நம்பாதவர்களுமிருக்க லாம்.
எனவே, நம்மில் ஒருவருக்கும் தீங்கு வராத நிலையில் ஒரு குறிப்பிட்ட கொள் கைக்காக நாம் ஒன்றுசேர்ந்து பாடு படவேண்டுவது இன்றியமையாததாகும். நம் தாய்மொழி மீதுள்ள பற்று காரண மாகவே நம் மானத்துக்கு ஏற்க கலைகள், உணர்ச்சிகள் காரணமாகவே நாம் இன்று ஒன்று கூடியுள்ளோம். உண்மை யிலேயே ஒருவனுக்கு நாட்டுப்பற்று உண்டானால் - மொழிப்பற்று உண்மை யில் ஏற்படுமானால் - அதனை கனம் ஆச்சாரியார் அடக்க நினைப்பாரானால் அது ஒரு நாளும் முடியாத காரியமாகும். அதற்கு மாறாக பற்றும், உணர்ச்சியும் வளரத்தான் செய்யும். மேலும், அவர் கடினமான அடக்கு முறைகளைக் கையாளுவாரானால், அதனால் தமிழர்கள் மனங்கொதிப்படையுமானால் அது எங்குபோய் நிற்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. அது தமிழர்களிடத் திலும் ஏன் இட்லருணர்ச்சியை உண்டாக் காது எனக் கேட்கிறேன். எதற்காக இந்த அடக்குமுறை?
பெண்கள் பாராட்டு
இன்று 400 பேர் சிறை சென்றதைப் பாராட்டி நீங்கள் தீர்மானம் நிறைவேற்றிய போது உண்மையிலேயே எனக்கு பரிகாசமாயிருந்தது. ஆண்கள் சிறை செல்வதில் அதிசயம் ஒன்றும் இல்லையே! ஆண்கள் சென்றதைப் பற்றி நீங்கள் பாராட்டிவிட்டால் நீங்கள் வீரப்பெண்மணிகள் என்று அர்த்தமா? நீங்கள் 400 பேர் சிறைசென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்?  நீங்கள் ஏன் செல்லக் கூடாது? இது கனம் ஆச்சாரியார் கோயில் பிரவேச விஷயத்தில் திருவி தாங்கூர் ராஜாவைப் பாராட்டிவிட்டு, தோழர் எம்.சி.ராஜாவை ஏமாற்றிவிட்டது போலல்லவா இருக்கிறது. (சிரிப்பு) இன்று ஒரு அம்மையார் என்னிடம் வந்து, தான் சிறைக்குப் போகத் தயார் என்றார். அந்தப் பேச்சு எனக்கு மகிழ்ச்சியாயிருந்தது.
ஆனால், அது நாளைக்குத் தெரியப் போகிறது. அக்காலம் - அதாவது தமிழ்ப் பெண்களை சிறை செய்யும் காலம் வந்தால்தான் நமக்கு நன்மையுண்டாகும். மாநாட்டுத் திறப்பாளர் முற்காலப் பெண்களின் வீரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். நான்கூட அப் போது அக்காலத்தில் ஒரு பெண்ணாய்ப் பிறந்திருந்தோமா என்றுகூட நினைத்தேன். அவ்வளவு பெருமையாய்ப் பேசினார். ஆனால், பழம் பெருமைப் பேசிப் பயனென்ன? இது பார்ப்பனர் பேசுவது போல்தானே இருக்கிறது. இன்றைய பெண்களைப் பற்றியும் அவர் கள் கடமையைப் பற்றியும் பேசினால் தானே நீங்கள் உரிமை பெறலாம் - நன்மை யடையலாம். பெரியவர்கள் தேடிவைத்த சொத்தைக் கொண்டு எவ்வளவு நாளைக்குப் பிழைக்கலாம்? நமது வாழ்வுக்கு வகை என்ன? இவை கட்கெல்லாம் - பெண்கள் முன்னேற்றத் திற்கும் வீரத்திற்கும் - இம்மாநாடு ஒரு வழிகாட்டிவிட்டது.
பார்ப்பனர்கள், ஊர் பெயர் தெரியாத பெண்களைப் பிடித்து, தங்களைப் பற்றியே தங்களுக்குத் தெரியாத பெண்களைப் பிடித்தும் படம்போட்டு விளம்பரப்படுத்தி பட்டம், பதவி வாங்கிக் கொடுக்கின்றனர். உண்மையாக எத்தகைய கஷ்டங்களையும் அனுபவிக் கத் தயாராக உள்ள, நாட்டு நலனுக்குப் பாடுபடக்கூடிய பல பெண்கள் நம்மில் இருக்கின்றார்கள். ஆனால், நம் ஆண்கள் அவர்களை வெளியில் விடாது வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கின் றனர்.
நமது நண்பர்கள் கனம் ராமநாதனுக் கும், கனம் சுப்பராயனுக்கும் பல ஊர் களில் எத்தனையோ பார்ப்பனப் பெண் கள் கார் ஓட்டினர். அதற்காக எந்தப் பெண்ணை அவர்கள் தள்ளிவிட்டனர்? யார் மீது அவர்கள் குறை கூறினார்கள்? பெண்களாகிய நீங்கள் தலைநிமிர்ந்து எங்கள் உரிமையில் தலையிட்டால் நாங்கள் சும்மாயிரோம் என்றால் என்ன? இதைவிட்டு அல்லிராணி, கண்ணகி, மாதவி முதலிய நமது பாட்டிமார்களைப் பற்றிப் பெருமை பேசுவதில் என்ன பலன் இருக்கிறது? ஆணுடன், பெண்களும் ஒத்துழைத்துப் போராட முன்வரவேண்டும். போராட் டத்தில் ஆணுக்கு ஒரு வேலை பெண்ணுக்கு ஒரு வேலை என்று இல்லை. இருவரும் சமமே. ஆகவே, ஆண்களைப்போல் பெண்களும் தமிழ்ப் போராட்டத்தில் இறங்கினால் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு தமிழனுக்கே ஆகிவிடும்.
கணவர்களைத் திருத்துங்கள்
நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் சிறையை நிரப்பக்கூடாது? சிறை என்றால் பயமா? அதற்காக யாரையாவது அடிக்கவோ வையவோ வேண்டுவதில்லை. எந்தச் சட்டத்தையும் மீறவேண்டியதில்லை. காங்கிரஸ் பேரால் சட்டம் மீறியவர்கள் பிரதிநிதிகளாக சட்டப் பாதுகாப்பாளர்களாகி விட்டார்கள். ராஜத்துவேஷம் எனது மதம் என்றவர்கள் மகாத்மாக்களாகி விட்டார்கள். நாம் அப்படிக் கூடச் செய்ய வேண்டியதில்லை. தமிழ் வாழ்க! என்றால் சிறை பிடிப் பார்கள். இந்தி வீழ்க! தமிழ் வாழ்க! என்றால் போதும். உடனே ஆச்சாரியார், சிறைக்கு வா என அழைத்துக்கொள் வார். (கைத்தட்டல்) எனக்கு ஒரு பயம்! என்னவென்றால், எங்கே அவர் பின்வாங்கி விடுவாரோ என்று. முதலில் நான்கு பேர் போனால் பின்னால் அவர் பிடிக்கிறாரா என்று பார்த்து பிறகு 8, 10, 100, 1000 என்று போகவேண்டும். நமக்கு ஏற்படும் வேதனைக்கோ, தொல்லைக்கோ எல்லையில்லை. இந்நிலையில் நீங்கள் சொல்வதைக் கேட்காது - நாட் டுக்குப் பாடுபடாது ஆண்கள் உங்கள் கிட்ட வருவார்களானால் ரோஷம் இருக்கும் இடம் பார்த்து அவர்களைக் குத்தவேண்டும். வீட்டிற்குள்ளே அனு மதிக்கக் கூடாது. கதவை மூடிவிட வேண்டும். இதேபோல் அநேக நாடு களில் பெண்கள் தங்கள் கணவர்களை இடித்துத் திருத்தியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அனேக ஆண்கள் நீங்கள் சிறைக்குப் போவதைக் காண பயப்படுகிறார்களாம். அவர்களைத் திருத்த வேண்டுமானால் நீங்கள் ஏதாவதொரு ஊருக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு அவர்கட்குத் தெரியாது சிறைக்குப் போய்விட வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் பின்வந்து விடுவார்கள். நம்மில் ஜாதிமத உயர்வு களையும், சுயநலத்தையும், மறக்க வேண்டும்.
இங்கு ஒரு தோழர் (பெயர் கூற ஆசைப்படவில்லை), ராமசாமி நாஸ்திகன் அவரோடு சேரலாமா என்று ஒருவரிடம் கூறினாராம். ராமசாமி எப்படிப் பட்டவனாயிருந்தாலென்ன? அவன் கூறுவது சரியா, தப்பா என்பதைத்தானே நீங்கள் ஆலோசிக்க வேண்டும். இப்பொழுது இங்கு நான் ஒரு கடை வைத்தால், நாஸ்திகன் என்று சாமான் வாங்க மாட்டீர்களா? அன்றி நான் ஏறின ரயில் வண்டியில் ஏறமாட்டீர்களா? அல்லது உங்கள் வண்டியில்தான் எனக்கு இடம் கொடுக்க மாட்டீர்களா? நான் நாஸ்திகனா அல்லவா என்று உங்களிடம் விளக்க வேண்டியதில்லை. ஏனெனில், இது சில காங்கிரஸ் பார்ப்பனர்களின் சூழ்ச்சி. அதைக் கேட்டு சில சோணகிரிகள் ஏமாறலாம்.
இழி குணமில்லை
இன்று தேசிய மகாசபை என்று கூறப்படும் காங்கிரஸ் தலைவராக, ராஷ்டிரபதி என்னும் பேரால் தோழர் ஜவகர்லால் தலைவராயிருந்தார். அவர் தன்னை நாஸ்திகன் என்று சொல்லிக்கொள்கிற முறையில் எனக்குச் சத்தியத்தில் - கடவுள் மீது நம்பிக்கையில்லையென்பதாகக் கூறி, கோர்ட்டில் சத்தியப் பிரமாணம் கூற மறுத்திருக்கிறார். இன்று அவருடைய வீரத்தைப் பற்றி சூரர், தீரர் என்று பாராட்டுகிறார் களே ஒழிய, எந்தப் பார்ப்பனராவது பண்டித ஜவகர்லால் நாஸ்திகர் என்பதற்காக அவரை வெறுத்தார்களா? ஆனால், எங்களிடத்து இவ்விழிகுணம் கிடையாது.
ஜஸ்டிஸ், சுயமரியாதை முதலிய கட்சிகளிருந்தாலும் நாம் என்ன செய்தால் வாழமுடியும் என்பதை யோசிக்க வேண்டும். காடு வா வா என்கிறது. எனக்கு மட்டிலும் இதி லென்ன அத்துணை அக்கறை? சென்ற 25 ஆண்டுகளாகப் பார்க்கிறேன்; பார்ப்பனர்கள் நாள்தோறும் நம்மைப் பற்றி கேவலமாக - அகங்காரமாகப் பேசுகிறார்கள் - எழுதுகிறார்கள். ஒரு குரங்குப் பத்திரிகை, தோழர் சண்முகம் செட்டியாரைப் பற்றி செக்கு போட்டு - செக்கு ஆட்டுகிற மாதிரி படம்போட்டு இழிவுபடுத்திற்று.
நம்மைக் கழுதை என்றும், நாய் என்றும் வயிற்றுச் சோற்றுக்காரர்களென்றும் கூறி வருகிறது. இதைப் பார்த்து உங்கள் ரத்தங் கொதிப்பதில்லை; கண் சிவப்பதில்லை. இந் நிலையில் வீணே தமிழ்நாடு தமிழ னுக்கு என்று கூற உங்கட்கு யோக்கியதை உண்டா? தமிழ்மொழி, கலை, நாகரிகம், காப்பாற்றப்பட - நாடு வளர வேண்டுமானால் பெண்மணிகளாகிய நீங்கள் துணிந்து முன்வரவேண்டும். இதைக்கருதியே இம்மாநாட்டைக் கூட்டினீர்கள், பல தீர்மானங்கள் நிறைவேற்றினீர்கள். பெண்கள் உண்மை யில் வீரமுடையவர்கள்தான். நினைத்ததை முடிக்கும் ஆற்றலுடையவர்கள் தான் என்பதை செயலில் காட்ட வேண்டும். ஆனால், சிறைக்குச் செல்லும் ஆண்களை மட்டும் பாராட்டுவதுடன் நில்லாது, நீங்கள் செல்வதைப் பார்த்து ஆண்கள் பாராட்ட வேண்டிய நிலையை உண்டாக்க வேண்டும். இதற்குச் சிறிதும் பின்னிடலாகாது. (நீண்ட கைத்தட்டல்)
13-11-1938 ஆம் தேதி அன்று சென்னையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் தலைவர் ஈ.வெ.ரா. பேசியது.
குடிஅரசு - சொற்பொழிவு - 27-11-1938

Tuesday, November 13, 2012

வருகுதப்பா தீபாவளி - வழமை போல். நீ என்ன செய்யப் போகிறாய்.



தம்பீ! பழையகால சாஸ்திரம் இன்றைக்கு உதவாது இன்றைக்கு ஏற்றபடி அது மாறவும் மாறாது. அதை ஒருத்தன் எடுத்து வைத்தால்தான் அல்லது அது அசைக்கப்பட்டால் தான் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்திற்கு மாறும் அல்லது அதை ஒருவன் எடுத்து நமக்கு வேண்டாததை அடித்து வேண்டியதை எழுதினால் தான் திருந்தும்.
ஏன் அப்படிச் சொல்லுகிறேன்? அதற்கு உயிரில்லை; அது ஏடு; காகிதம் போன்ற அசேதன வஸ்து; சிந்திக்கும் தன்மை அற்றது. ஆதலால், சாஸ்திரம் சொல்லுகிறது அந்தப்படி செய்கிறேன் என்று நீ சொல்லுவாயானால் நீ சேதன (சிந்திக்கும் சக்தி உள்ள) வஸ்து ஆகிய மனிதனென்றோ, அறிவுள்ளவன் என்றோ சொல்லிக் கொள்ள உனக்கு சிறிதுகூட யோக்கியதை கிடையாது.
சாஸ்திரம் பெரியவாள் எழுதினது என்று சொல்லுவாயானால், நீ யாரு? சிறியவாளா? எந்தப் பெரியவாள்? அந்தப் பெரியவாள் காலத்தைவிட முட்டாள்தனமான காட்டு மிராண்டித்தனமான காலத்திலா நீ பிறந்தாய்? போக்குவரத்து சாதனமில்லாத, விஷயஞானம் பெற வாய்ப்பும் சாதனமும் இல்லாத நல்லாயுத காலத்திலா இருந்து வாழ்ந்து வருகிறாய்? ஆகவே, அந்தக் காலத்தை விட அந்தக் காலத்து பெரியாரைவிட நீ எந்த விதத்திலும் தாழ்ந்தவனாக இருக்க முடியாது. ஆதலால் சாஸ்திரம், பெரியவாள், வெகுகாலத்திற்கு முன் ஏற்பட்டது என்கின்ற முட்டாள் தனத்துக்குத் தாயகமாக இருக்கும் பித்தலாட்டத்தில் இருந்து முதலாவதாக நீ வெளியில் வா!
சாஸ்திரத்தைப் பற்றிக் கவலை இல்லை, பெரியவாளைப் பற்றிக் கவலை இல்லை, ஆனால் அந்த சாஸ்திரங்கள் கடவுள்களால் சொல்லப்பட்டது; உண்டாக்கப்பட்டது என்று சொல்லுகிறாயோ? அப்படியானால் இப்படிச் சொல்லுகிறவனைப் போல் முட்டாள் மனித வர்க்கத்தில் ஒருவருமே இருக்க முடியாது என்பதோடு இதைக் கேட்டு நம்பி நடக்க ஆரம்பிக்கிறானே அவனைப் போல் அடிமடையனும் வேறு இருக்க முடியாது என்று சொல்லுவதற்கு தம்பி, நீ மன்னிக்க வேண்டும்.
கடவுள் இருக்கிறார் என்று வைத்துக் கொள். கடவுள் சொன்னார் என்று வைத்துக் கொள். யாருக்குச் சொன்னார்? உனக்கா சொன்னார்? மனிதனுக்குச் சொன்னார் என்பாய். அப்படியானால், கிறிஸ்துவருக்குச் சொன்னாரா? முஸ்லிமுக்குச் சொன்னாரா? பார்சிகளுக்குச் சொன்னாரா? அவற்றை நம்பாத நாஸ்தி னுக்கு சொன்னாரா? யாருக்குச் சொன்னார்? எப்பொழுது சொன்னார்? அந்தக் காலத்தில் நீ இருந்தாயா? நீ பார்த்தாயா? அல்லது யார் பார்த்தது? கடவுள் சொன்னார் என்று இன்று உனக்குச் சொன்ன வர்கள் யார்? சொன்னவர்களுக்குச் சொன்னவர்கள் யார்? சாஸ்திரம் கடவுளால் சொல்லப்பட்டது என்பதை சாஸ்திரமே சொன்னால் போதுமா? அதற்கு அடையாளமே வேண்டாமா? அச்சுப் புத்தகமும் அய்யர் பேச்சும், கிருபானந்தவாரி, பண்டிதமணிகள் பிரசங்கங்களுமே போதுமா?
இவைகளையெல்லாம் யோசித்த பிறகல்லவா சாஸ்திரம் சொல்லுகிறது என்பதையும், சாஸ்திரத்தை கடவுள் சொன்னார் என்பதையும் நீ மனிதனாய் இருந்தால் நம்ப வேண்டும். மாடாயிருந்தால் அல்லவா யோசியாமல் ஆம் என்று தலையாட்ட வேண்டும்? இந்த இருபதாம் நூற்றாண்டில் உனக்கு இதுகூடவா தம்பி தெரிய வில்லை? சாஸ்திர காலத்தைவிட இன்று கடவுள்கள் அருமை என்று நினைக் கிறாயா? எண்ணி முடியாத கடவுள்கள் தோன்றி இருப்பதோடு, தோன்றிய வண்ணம்தானே இருக்கின்றன கடவுள்களுடைய அற்புதங்கள் இக்காலத்தில் நடக்காத நாள் ஏது? மனிதர்களிடத்தில் கடவுள்கள் பேசாத நாள் ஏது? பெசண் டம்மை இடம் பேசினார்; காந்தியாரிடம் பேசுகிறார்.
அசரீரியும், சோதனைகளும் நடக்காத நாள் ஏது? இப்படி எல்லாம் இருக்கும் போது இக்காலத்தில் கடவுள் நேரில் வந்து உன்னையோ அல்லது என்னையோ கூப்பிட்டு நேரில் அடே, மக்களா! நான்தாண்டா சாஸ்திரம் சொன்னேன்; சந்தேகப்படாதீர்கள்! என்று சொல்லித் தொலைத்தால் பிறகு உலகில் ஏதாவது கலவரம் இருக்க முடியுமா?
அல்லது ரமணரிஷிகள் என்ன, சாயிபாபாக்கள் என்ன, மகாத்மாக்கள் என்ன, மற்றும் தெய்வீக சக்தி பெற்றவர்கள் என்று சொல்லப்படும் மகான்கள் என்ன - இத்தனை பேர்களில் யாரிடமா வது ஒரு வார்த்தை சொல்லித் தொலைக்கக் கூடாதா?
இவ்வளவு தகராறு, வர்க்கம், கலகம் கடந்து ஒருத்தன்மேல் ஒருத்தன் கல்லு, சாணி, செருப்பு எறிந்து, அடிதடி நடந்து, போலிஸ் வந்து மக்கள் சீரழிகின்ற காலத்தில் தைரியமாய் அல்லது கருணை வைத்து வெளிவந்து நிலைமையை விளக்க முடியாத சுவாமிகள் இனி வேறு எந்தக் காலத்திற்குப் பயன்படப் போகிறார்கள்?
ஆகையால், கடவுள் சொன்னது - சாஸ்திரம் என்பதை கட்டி வைத்து விட்டு உன் அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி தீபாவளியைப் பற்றி யோசித்துப்பார் அப்பா - தயவு செய்து கோபியாதே தம்பீ!
கோபம் செய்தாலெமன் கொண்டோடிப் போவான் என்று சொன்னது சரியல்ல; கோபம் செய்தால் நீ ஏமாந்து போவாய் என்று நான் கூறுகிறேன். ஆகவே அறிவுக் கண்ணுடன் நாடு, இனம், மானம் ஆகியவைகளின்மீது பற்று வைத்து தீபாவளிபற்றி சிறிது சிந்தித்துப் பார்! தீபாவளிகதை பற்றி சுமார் 10 வருடங் களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை. என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.
இது தீபாவளி கதை. மிகவும் அதிசய மானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.
மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் சாபத்தால் இரணியன், இரணியாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டு விட்டதற் கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத் திற்குள் நுழைந்து கொண்டான். தேவர் கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து கொன்று விட்டார். இளையவனான இரண்யாட் சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து வந்து சமுத் திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.
இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில்ஆபாசமில்லை. இனிமேல் நடப்பதுதான் ஆபாசம்.
என்னவென்றால் விஷ்ணு பல அவதாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும் பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.
விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதார மெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத் தின்மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கி விட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.
மற்றொரு சமயம் சிவன் பத்மா சூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணுவைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந் தானாம். அப்போது அய்யனார் பிறந்தார். இப்படியுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட் சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானா லும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?
இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம். அதோடு தேவர் களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?
இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?
பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண் டல்லவா போயிருக்க வேண்டும்?
அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந் தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும் தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திர மிருந்திருந்தால் அது எதன்மீது இருந் திருக்கும்?
அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அது வும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.
இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக் கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை? திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதின தல்லாமல் வேறு என்ன இது? வங்காளத் தில் ஆரியர் வருமுன்பு திராவிடர்கள் தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், திராவிடர் களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங்களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?
ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லாவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?
நம் தலைவனை கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிட ரல்லவா?
நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண் டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங் கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.
                                                                                                                                                  "குடிஅரசு" -கட்டுரை - 07.10.1944

Monday, November 12, 2012

தீ நாள்!


என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை - பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத் தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.
செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண் டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம். ஆகவேதான் தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடு கிறோம்; கொண்டாட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு ஆதாரமான இந்தக் கதையின் பொய்த் தன்மையையும், இதனால் இந்த நாட்டு மக்களுடைய மானம் -  சுயமரியாதை எவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றன என்பதையும், இந்த அர்த்தமற்ற பண்டிகையால்  நாட்டுக்கு எவ்வளவு பொருளாதாரக்கேடும் சுகாதாரக்கேடும் உண்டாகிறது என்பதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளிலிருந்தே விளக்கப்பட்டு வருகிறது.
சுயமரியாதைக்காரர்கள் - திராவிடர் கழகத்தார்களுடைய இந்த விளக்கம், தவறானது என்றோ, நியாயமற்றதென்றோ, உண்மைக்கு அப்பாற்றட்ட தென்றோ எப்படிப்பட்ட ஒரு பார்ப்பனன் கூட இன்றுவரை மறுத்தது கிடையாது. ஆனால் எல்லாப் பார்ப்பனர்களும் கொண்டாடத்தான் செய்கிறார் கள். பார்ப்பனர் அல்லாதவர் களிலும் பலர் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஏன்?
பூமியைப் பாயைப்போல் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் ஒருவன் நுழைந்துகொள்ள முடியும் என்பதை எந்தப் பஞ்சாங்கப் புரோகிதன்கூட ஏற்றுக்கொள்ளமாட்டான். ஆனால் பஞ்சாங்க நம்பிக்கையுடையவன் மட்டுமல்ல, பஞ்சாங் கத்தையே பார்க்காத - நம்பாத பார்ப்பனரிலிருந்து பூகோளத்தைப் பற்றிப் போதனைசெய்யும் பேரா சிரியர்கள் வரை கொண்டாடி வருகிறார்களே ஏன்?
மகாவிஷ்ணு (?) பன்றியாக வேஷம் போட்டுக் கொண்டுதான் கடலுக்குள் நுழைய முடியும்! சுருட்டியிருந்த பூமியை அணைத்து தூக்கிவரும் போதே மகாவிஷ்ணுக்கு காமவெறி தலைக்கேறி விடும்! அதன் பலனாக ஒரு குழந்தையும் தோன்றிவிடும்! அப்படிப் பிறந்த குழந்தை ஒரு கொடிய அசுரனாக விளங்கும்! என்கிற கதையை நம் இந்துஸ்தானத்தின் மூல விக்கிரகமான ஆச்சாரியாரிலிருந்து ஒரு புளியோதரைப் பெருமாள் வரை யாருமே நம்பமாட்டார்கள் - நம்ப முடியாது.
ஆனால் இப்படி நம்பாத விஷ்ணு பக்தர்கள் முதல், விஷ்ணுவுக்கு எதிர் முகாமிலுள்ளவர்கள் வரை இந்த நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். ஏன்? சுயமரியாதை இயக்கத்தின் தீவிரப் பிரசாரத்தினால், இன்று திராவிட நாட்டிலுள்ள பல ஆயிரக்கணக்கான திராவிடத் தோழர்கள் இந்த மானமொழிப்புப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்றாலும், படித்தவன் - பட்டதாரி - அரசியல் தந்திரி - மேடைச் சீர்திருத்தவாதி என்பவர்களிலேயே மிகப் பலபேர் தீபாவளியைக் கொண்டாடி வருகின் றார்கள் என்றால்.
இந்த அறிவுக்குப் பொருத்தமற்ற கதையை ஆதாரமாகக் கொள்கிறார்கள் என்றால் இவர்களுடைய அறிவுக்கும் அனுபவத்துக்கும் யார்தான் வயிற்றெரிச்சல்படாமல் இருக்கமுடியும்? ஆரியப் பார்ப்பனர்கள், தங்களுக்கு விரோத மான இந்நாட்டுப் பழங்குடி மக்களை - மக்களின் தலைவர்களை அசுரர்கள் - அரக்கர்கள் என்கிற சொற்களால் குறிப்பிட்டார்கள் என்பதையும், அப்படிப்பட்ட தலைவர்களுடைய பிறப்புகளை மிக மிக ஆபாசமாக இருக்கவேண்டும் என்கிற ஒன்றையே கருத்தில் கொண்டு புழுத்துப்போன போக்கினின்றெல்லாம் எழுதிவைத்தார்கள் என்பதையும், இந்த நாட்டுச் சரித்திரத்தை எழுதிவந்த பேராசிரியர்களில் பெரும்பாலோரால் நல்ல முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருந்தும் அந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுப்போக, இந்த நாட்டு அரசாங்கமும் - அதன் பாதுகாவலரான தேசியப் பார்ப்பனர்களும் இன்றைக்கும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள் என்றால் அதை எப்படித் தவறு என்று சொல்லிவிட முடியும்? திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.
இதை மறைக்கவோ மறுக்கவோ எவரும் முன்வரமுடியாது. திராவிட முன்னோர்களில் ஒருவன், ஆரியப் பகைவனால் அழிக்கப்பட்டதை, அதுவும் விடியற்காலை 4 மணி அளவுக்கு நடந்த போரில் (!) கொல்லப்பட்டதை அவன் வம்சத்தில் தோன்றிய மற்றவர்கள் கொண்டாடுவதா? அதற்காக துக்கப் படுவதா?
திராவிடர் இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை நம்பிக்கொண்டு, இன்றைக்கும் நம்மைத் தேவடியாள் பிள்ளைகள் எனக் கருதும் பார்ப் பனர்கள் கொண்டாடுவதிலாவது ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், மானமுள்ள திராவிடன் எவனாவது இந்த பண்டி கையைக் கொண்டாடலாமா? என்று கேட்கிறோம்.
தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்!
குடிஅரசு - தலையங்கம் - 15.10.1949