Saturday, March 15, 2014

கம்பனுக்கு சிபார்சா?


கம்பர் பாடிய இராமாயணத்தில் மக்கள் இராமனைக் கடவுளாகக் கருத வேண்டும் என்கின்ற கருத்துடனே வால்மீகி இராமாயணத்தில் வால்மீகி, இராமனைப் பற்றிக் கூறியுள்ள பல ஆபாசங்களையும் அயோக்கியத்தனங் களையும் மறைத்து இராமனையும் அவனுக்கு அனுகூலமாய் இருந்தவர் களையும் மேன்மைப்படுத்தியும் கம்பர் பாடியதன் பயனாகவே ஆரிய இராமனைத் தமிழர்கள் கடவுளாகக் கருதும் படிச் செய்து விட்டார்.

அதனால் தமிழர் ஆரியத் திற்கு அடிமையாக வேண்டியதாக ஏற் பட்டது என்பது சுயமரியாதைக்காரர் கம் பர்மீதும் கம்ப இராமாயணத்தின்மீதும் சுமத்தும் குற்றச்சாட்டாகும்.

அனுபவ அறிவுக்குப் பதில் சொல்லட்டுமே

இதற்குச் சிபார்சுக்கு வரும் சைவப் பண்டிதர்கள் சொல்லும் சமாதானம் பலவற்றுள் தலையாயது என்னவெனில், கம்பன் தமிழ்மகன் ஆனதால் அந்த இராமாயணத்தைத்தமிழ் மக்கள் படிக்க வேண்டும் என்றும் அதிலுள்ள நீதிகள் தமிழருக்குப் பயன்பட வேண்டும் என்றும் கருதி வால்மீகி கூறியவற்றை மாற்றித் தமிழர்களின் கொள்கைகளைப் புகுத்தி அரிய கற்பனைகளுடன் பாடி கம்பராமாயணத்தை அருங்கலையாக ஆக்கியிருக்கிறார் என்பதாகும்.

சுயமரியாதைக் காரர்கள் படித்த பெரிய பண்டிதர்கள் அல்ல என்பதை வாதத்துக்கு ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் அவர்கள் அறிவுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்த பகுத்தறிவுவாதிகள். சகலத்தை யும் நடுநிலை நின்று ஆழமாய்ப் பார்ப் பவர்கள்.

பண்டித அறிவாளிகள், பண்டி தர்கள் முதலிய யாவரையும் பகுத்தறிவு கொண்டு அவர்களது திறனைச் சீர் தூக்கிப் பார்ப்பவர்கள் என்பதோடு அதில் அனுபவம் பெற்று அறிவடைந்தவர்கள் - அந்த அனுபவ அறிவைக் கொண்டே அவர்கள் எதைப்பற்றியும் பேசுகிறார்கள். கம்பருக்கு சிபார்சுக்கு வருகிறவர்கள் எவரும் அந்த அனுபவ அறிவுக்குப் பதில் சொன்னால் போதும்.

கவலையற்ற கம்பன்

கம்பர் தமிழர் நாகரிகத்திற்கேற்ப பல உண்மைகளை வால்மீகியின் கூற்றுக்கு மாறாகத் திருத்தி இருக்கிறார் என்று சிபார்சுக்காரர் செப்புகிறார்கள்.

உதாரணமாக, வால்மீகியானவர், சீதையை இராவணன் தலைமயிரைப் பிடித்துத் தூக்கி மடியில் வைத்து பூமி யோடு, பெயர்த்து கொண்டு போனான் என்று சொல்லி யிருக்கிறார். இதைக் கம்பன் மாற்றி, சீதையைப் பன்னகசாலை யோடு தூக்கிக் கொண்டு போனான் என்று சொல்லு கிறார்.

இப்படிக் கம்பர் சொன்னதற்குக் காரணம் சீதையை கடவுள் தன்மையு டையவளாக ஆக்க வேண்டும் என்கின்ற ஆவலினாலேயே அல்லாமல், தமிழர் நாகரிகத்தை ஒட்டி அல்ல என்பது சுய மரியாதைக்காரரின் கூற்று.

இதற்கு ஆதாரம் வேண்டின் கம்பர் எங்கும் தமிழரைப் பற்றியோ, தமிழர் நாகரிகத்தைப் பற்றியோ கவலை கொண்டி ருக்கவில்லை என்பதோடு ஆரியரைப் புகழ்வதும், அவர்களது எதிரிகளை இகழ்வதுமான கொள்கையுடன் தான் இராமாயணம் முழுதும் பாடி இருக்கிறார்.

கம்பர் தமிழர் நாகரிகத்தைப்பற்றி கவலை கொண்டிருப்பாரானால், சூர்ப் பனகை விஷயத்தில் பாடி இருப்பது நியாயமாகுமா?

வால்மீகியும் கம்பனும்

வால்மீகி சூர்ப்பனகையை இராமன் உத்திரவுப்படி இலக்குவன் மூக்கையும் காதையும் அறுத்தான். என்று சொல்லி இருக்கிறார். ஆனால் கம்பரோ இலக்குவன் தானாகவே ஓடிப் போய்,

சூர்ப்பனகையின் தலை மயிரைப் பிடித்து, கையில் சுற்றுப் போட்டு இழுத்து வயிற்றுக்குக் கீழே எட்டி உதைத்து, உடை வாளை உருவி காது, மூக்கு, இரு முலை களின்

நுனிக் காம்புகள் ஆகியவைகளை அறுத்துச் சினம் ஆறி மயிரை விட்டான்.

அதாவது, சில்லோதியைச் செங்கை யிற்றிரு குறப்பற்றி.. ஒல்வயிற்றுதைத் தொளி கிளர் சுற்றுவாளுருவி என்றும்,

மூக்குங்காதும் வெம் முரண்முலைக் கண்களு முறையாற் போக்கி போக்கிய சினத்தொடும் புரி குழல் விட்டான் என்றும் பாடியிருக்கிறார்.

இதுதான் தமிழர் நாகரிகமா? இதுதான் தமிழர் ஒழுக்கம் வழக்கம் ஆகியவை களுக்கு ஏற்ற வண்ணம் பாடினதா? என்று கேட்கிறேன்.

இதுவா நாகரிகம்?

மற்றும் ஆரம்பத்தில் இராமன் இலக் குவனை அழைத்து,
லக்ஷ்மணா துஷ்டர்களோடு விளை யாட வேண்டாம். சூர்ப்பனகையை அங்க பங்கம் செய்துவிடு என்று சொன் னான் என்றும் அதன்மீது இலக்ஷ்மணன் அவளு டைய மூக்கினையும் காதுகளையும் அறுத் தான் என்றும் வால்மீகியில் இருக்கிறது.

கம்பர் இராமன் சொன்னதை மறைத்து சூர்ப்பனகையை இழிவுபடுத்த எண்ணி, இலக்ஷ்மணன் அவளது மயிரைப் பிடித்து கையில் சுற்றுப் போட்டு இழுத்து வயிற்றுக்குக் கீழே (அதாவது பெண் குறியில்) எட்டி உதைத்து சுருள் வாளை உருவி காதுகளையும் மூக்கினையும், மூலைக் கண்களையும் ஒழுங்காக அறுத் தான். அறுத்த பிறகே இலக்ஷ்மணனுக்குக் கோபந் தணிந்து அவளது மயிரை விட்டான் என்று கூறி இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு இருக்கிறது பாருங்கள்.

இதற்குப் பெயர் தமிழர் நாகரிகமா? சிந்தித்துப் பாருங்கள்.

பொருத்தமற்ற பொருள்
மேலும் இந்தக் கவியினால் கம்பருக்கு பொருள் பொருந்தப் பாடும் ஆற்றலில் குற்றம் சேருவதையும் பாருங்கள். கம்ப சித்திரம் என்னும் பேரால் இப்போது பலர் நமக்கு எதிர்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களது அபூர்வமதியை என்ன வென்பது?

கம்பனது கவிகளில் அநேக குற்றம் குறைகள் இருக்கின்றன. அவைகளைப் பின்னால் விளக்குவோம். ஆனால் மேற் கண்ட கவியில் உள்ள குற்றம் என்ன வெனில்,
சூர்ப்பனகையின் தலை மயிரைக் கையில் (திருகுற) சுற்றுப் போட்டுப் பிடித்து உதைத்து பிறகு சுருள் வாளை உருவிய போது, சூர்ப்பனகை துடிக்கா மலும் திமிறாமலும் பிணம் போல் இருந்திருப்பாளா? அப்படி இருக்க.

அடுத்த கவியில்,

ஊக்கித் தாங்கிவிண்படர் வெம்மென்றுருத் தெழு வாளை

மூக்கையும் காதையும் முலைக் கண் களையும் முறையாக போக்க முடியுமா? என்பது யோசிக்கத் தக்கதாகும்.

இலக்குவனுக்கு ஒரு கையில் சுற்றுப் போட்ட அவளது மயிர், மற்ற ஒரு கையில் சுருள் வாள். அது சமயம் சூர்ப்பனகை தள்ளி எழும்பிக் கொண்டு இருக்கிறாள். இந்த அவசரத்தில் முரண் முலைக் கண்களை குறிபார்த்து முறையாக அறுக்க முடியுமா?

எனவே இது ஆத்திரத்தில் புத்தி சுவாதீனமில்லாமல் பாடியதே அல்லாமல் பொருந்தபாடியதல்ல என்பது எவருக்கும் விளங்கும்.

கவிக் குற்றம் பற்றி நமக்குக் கவலை யில்லை. அதைப் பற்றிப் பேச நமக்குத் தகுதியும் இல்லை. ஆகவே அதை கம்பசித்திரக் காரருக்கு விட்டு விடுவோம்.

தமிழர் நாகரிகம் பொருந்தக் கம்பர் பாடினார் என்கிறவர்களுக்கு இந்த சவாலை விடுகிறோம்.

                                                                                                                      உண்மை 14.2.1973



No comments:

Post a Comment